Features சமூகம்

சலீம் மர்ஸூப் தரப்பு அறிக்கை ஷரீஆவுக்கு முரணானதா? சமூகத்தைப் பிழையாக வழிநடத்துபவர்கள் யார்?

Written by Administrator

 – அபூ அர்ஸலான் –

கடந்த வியாழன் (09-08-2018) கொழும்பு அல் ஹிதாயா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஐக்கிய குரல் அமைப்பு என்ற பெயரில் அ.இ.ஜ.உ.ச. நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பாயிஸ் முஸ்தபா தரப்பு அறிக்கையை உள்வாங்குமாறும் அதுவே ஷரீஅத்திற்கு உட்பட்டது எனவும் நடைமுறைச் சாத்தியமானது எனவும் தெரிவித்திருந்தது. அதேவேளை, நீதியரசர் சலீம் மர்ஸூபின் தலைமையிலான அணியினர் தயாரித்து சமர்ப்பித்துள்ள அறிக்கை 10 விடயங்களில் ஷரீஆவுடன் முரண்படுவதாக அங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய குரல் அமைப்பில் அங்கத்துவம் பெறும் நிறுவனங்கள் அனைத்துமே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் உள்ளவை என்பது கவனிக்கத்தக்கது. ஊடகவியலாளர்களின் சந்தேகங்களுக்கு உரிய தெளிவினை வழங்க போதுமான வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதும் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் தரப்பட்டது என்பதும் அங்கு வந்திருந்த பலரின் அதிருப்தியாக இருந்தது.

அ.இ.ஜ.உ.ச. தற்போது சலீம் மர்ஸூப் தரப்பின் அறிக்கை ஷரீஆவுக்கு முரணானது என்று வெளிப்படையாகவே கூறத் தொடங்கியுள்ளது. இன்னொரு புறம், தப்லீக் இயக்கம் சார்ந்த சில மௌலவிமார்கள் வெள்ளி மேடைகளில் சலீம் மர்ஸூப் போன்றவர்கள் ஷீஆ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஷரீஆவுக்கு விரோதமானவர்கள் எனவும் அவரது அறிக்கைக்குப் பின்னால் இஸ்லாம் விரோத சக்திகள் இருப்பதாகவும் பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போலிப் பிரச்சாரம் பிரச்சினையின் அடிப்படைகளைக் காணத் தவறுகின்றன. மட்டுமன்றி, சமூகத்தைப் பிழையாக வழிநடாத்த முயல்கின்றன.

சலீம் மர்ஸூபின் அறிக்கையை ஆழ்ந்து படிக்கும் ஒருவர் அது ஷரீஆவின் வரையறைகளுக்கு உட்பட்டது எனவும் ஷரீஆவுக்கு முரணான எந்தவொரு அம்சமும் அதில் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்வார். இதற்கும் மேலாக, கடந்த கால் நூற்றாண்டையும் தாண்டி முஸ்லிம் சமூகம் விவாகம்-விவாகரத்து தொடர்பில் எதிர்கொண்டு வரும் பிரச்சினைக்குத் தீர்வாகவும் அறிக்கை அமைந்துள்ளதை உணர்வார்.

மர்ஸூபின் அறிக்கை ஷரீஆவின் விரிந்த குறிக்கோள்களையும் சமூகத்தின் நலன்களையும் காலத்தின் தேவையையும் கவனத்திற் கொண்டு முற்போக்கான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் எந்த ஐயமும் இல்லை.

அந்த வகையில் சலீம் மர்ஸூப் தரப்பு அறிக்கையின் திருத்தங்கள் குறித்து ஷரீஆவின் கண்ணோட்டத்தில் ஒரு தெளிவை மக்களுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் முன்வைப்பது இந்நாட்டின் மார்க்க அறிஞர்களது பொறுப்பாகும். அ.இ.உலமா என்பது குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்ட விடயங்களுக்கு வழிகாட்டும் ஒரு நிறுவனம்.

இலங்கையில் வஸதிய்யா சிந்தனையைப் பிரதிபலிக்கும் ஜாமிஆ நளீமிய்யா பட்டதாரிகள், தேசிய ஷூறா சபை, இந்நாட்டிலுள்ள இஸ்லாமிய இயக்கங்கள், இயக்கம் சாரா அறிஞர்கள், அனைவரும் ஒன்றிணைந்து அறிக்கைகள் குறித்த தெளிவை வழங்குவது அவர்கள் சுமந்துள்ள மிகப் பெரிய பொறுப்பாகும்.

இனி, சலீம் மர்ஸூப் திருத்த அறிக்கையின் பிரமாணங்களை மிகச் சுருக்கமாக நோக்கலாம்.

  1. மத்ஹப் (குஞுஞிt) எனும் சொல் நீக்கப்பட வேண்டும் என மர்ஸூப் அறிக்கை பரிந்துரைக்கின்றது. அதற்கான நியாயங்களையும் அது முன்வைக்கின்றது. ஏற்கனவே உள்ள முஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட்டத்தில் மத்ஹப் என்பது ஷாபிஈ மத்ஹபையே குறிக்கின்றது. ஏனெனில், இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் அம்மத்ஹபையே பின்பற்றுவதாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே பொருள் கோடல் செய்துள்ளது.

இச்சொல் நீக்கப்பட வேண்டும் என்பதற்கு முன்வைக்கப்படும் நியாயம் முக்கியமானது. நேரடியாகச் சட்டம் இயற்றப்படாத பகுதிகளிலும் கருத்து முரண்பாட்டுக்கு உட்பட்ட சட்ட வசனங்களிலும் இமாம்களால் மேற்கொள்ளப்பட்ட இஜ்திஹாதின் விளைபொருளே மத்ஹப் எனப்படுகின்றது. காலம், இடம் ஆகிய காரணிகள் இந்த இஜ்திஹாதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால்தான் இமாம் ஷாபிஈ அவர்களுக்கே கெய்ரோவில் ஒரு அணுகுமுறையும் பக்தாதில் இன்னொரு அணுகுமுறையும் இருந்தது.

மத்ஹப் என்பது ஷரீஆ அல்ல. அது ஷரீஆ குறித்த மனிதப் புரிதலின் விளைவு. வேறு வகையில் சொல்வதானால் கிளை அம்சங்களில் தோன்றிய சட்ட மரபு. இஸ்லாம் நெகிழ்ச்சியானதும் விரிவானதுமான மார்க்கம் என்பது போல் பின்பற்றுவதற்கு இலகுவானது. அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு மத்ஹப் எல்லைக்குள் நாம் சுருங்கும் போது கால, இட மாற்றங்களால் வேறுபட்டுச் செல்லும் பிரச்சினைகளுக்கு ஷரீஆவின் நோக்கங்கள் மற்றும் சமூக நலன் என்பவற்றின் அடிப்படையில் தீர்வு காண முடியாமல் போகும்.

எனவேதான், குறிப்பிட்ட மத்ஹப் எனும் சொல் நீக்கப்பட வேண்டும் என அறிக்கை பரிந்துரைக்கின்றது. இது ஷரீஆவுக்கு ஒன்றும் முரண்பட்டதல்ல.

  1. திருமணப் பதிவை கட்டாயமாக்குகின்றது. அதாவது பதிவுசெய்யப்படாத திருமணம் செல்லுபடியாகாது என மர்ஸூபின் அறிக்கை பரிந்துரைக்கின்றது. இது ஷரீஆவுக்கு முரண்பட்டதல்ல. மட்டுமன்றி ஷரீஆ வலியுறுத்தும் ஓர் அம்சமுமாகும். இஸ்லாமிய சட்டத்தில் ‘சியாஸதுஷ் ஷரஇய்யா’ எனும் பகுதியில் இது போன்ற விவகாரங்கள் உள்ளடங்குகின்றன.

சட்ட அறிஞர் முஸ்தபா அஹ்மத் ஸர்கா, ஷெய்க் கர்ளாவி, ஷெய்க் ரைஸூனி போன்றவர்கள் இதனை தனியாக விளக்கியுள்ளனர். திருமணப் பதிவு ஏன் அவசியம் என்பதை கடந்த காலங்களில் இடம்பெற்ற பதிவு செய்யப்படாத திருமணங்களால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை ஆராய்வதன் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

நிலத்தைக் கொள்வனவு செய்யும்போது பதிவு செய்கிறோம். வாகனங்களை வாங்கும்போதும் பதிவு செய்கிறோம். வாழ்க்கைத் துணையொன்றை தேடும் போது மாத்திரம் பதிவு செய்ய வேண்டியதில்லை என வாதிப்பது இன்றைய காலத்திற்கு எந்த வகையில் பொருந்தும்?

  1. பெண்ணின் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என மர்ஸூபின் அறிக்கை பரிந்துரைக்கின்றது. இதுவும் முற்போக்கானது என்றே கொள்ள வேண்டும். இதனை விடக் குறைந்த வயதில் ஒருவர் தனது மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாயின் காழி நீதிபதியிடம் அதற்குரிய அனுமதியைப் பெற வேண்டும் என பரிந்துரையில் விலக்களிக்கப்படுகின்றது.

இஸ்லாமிய ஷரீஆவில் பெண்ணின் திருமண வயது இதுதான் என்று திட்டவட்டமாக வரையறுக்கப்படவில்லை. அதேவேளை, ஒரு பெண் பருவமடைந்து விட்டாள் என்பது மாத்திரமே திருமணத்திற்கான ஒரே தகுதி என்று கருதிவிடவும் முடியாது. ஆண்-பெண் இரு தரப்பினரதும் மனமுதிர்ச்சி, மனவெழுச்சி முதிர்ச்சி, அறிவு முதிர்ச்சி என பல்வேறு வகையான முதிர்ச்சி திருமண வாழ்க்கைக்கு அவசியம். ஏனெனில், அதன் கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாக நிறைவேற்றுவதற்கு இந்த முதிர்ச்சி அவசியமாகும். எனவே வயதை 18 ஆக வரையறுப்பது ஷரீஆவுக்கு முரண்பட முடியாது.

  1. பலதார மணத்திற்கு நிபந்தனை விதித்தல். ஏற்கனவெ உள்ள சட்டத்தின்படி இரண்டாவது மணமுடிக்க விரும்பும் ஒரு ஆண் தனது காழிக்கு இது குறித்து அறிவிப்பதும் பள்ளிவாயலில் இது குறித்த விளம்பரத்தை மக்கள் பார்வைக்கு முன்வைப்பதுமே போதுமானது.

குறிப்பிட்ட நபரின் உடற் பலம், பொருளாதாரப் பலம், அனைத்து மனைவிமார்களையும் சமத்துவமாக நடாத்தும் பக்குவம் இது போன்ற எந்தத் தகுதியும் சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை. குர்ஆன் வழங்கியிருப்பது அனுமதியே அன்றி கடமையல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட்டத்திலுள்ள உள்ள இந்த ஓட்டையைப் பயன்படுத்தும் பலர் முதல் மனைவியும் பிள்ளைகளும் அறியாத நிலையில் இரண்டாவது மணம் செய்து முதல் மனைவியையும் பிள்ளைகளையும் நடுத்தெருவில் விட்ட சம்பவங்கள் எத்தனையோ நிகழ்ந்தேறியுள்ளன. அவற்றைத் தடுக்கும் நோக்கிலும் பலதார மணத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கிலுமே அதற்கு சில நிபந்தனைகளை சலீம் மர்ஸூபின் திருத்த அறிக்கை பரிந்துரைக்கின்றது.

மொரோக்கோ, தூனீசியா, எகிப்து போன்ற பல நாடுகளில் இத்தகைய நிபந்தனைகள் தனியார் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்த வகையில் சமூகத் தீமையொன்றைக் களைவதற்கு பலதார மணத்திற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றதே ஒழிய அது தடுக்கப்படவில்லை. ஷரீஆவின் வரையறைக்குள் இரண்டாம் மணம் செய்வதற்கான தகுதியுள்ளவரா என்பதைப் பரிசீலிக்கும் அதிகாரம் காழி நீதிபதிகளுக்கோ காழி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கோ வழங்கப்பட வேண்டும் என்றே சலீம் மர்ஸூபின் அறிக்கை பரிந்துரை செய்கின்றது. இது ஷரீஆவுக்கு எங்ஙனம் முரணாகும்?

  1. பெண்கள் காழி நீதிபதிகளா நியமிக்கப்படல். ஏற்கனவே உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் காழி நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்கள் ஆண்களாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மர்ஸூபின் திருத்த அறிக்கை ஆண் என்ற சொல்லை நீக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றது. அதேவேளை, காழி நியமனம் பெறுவோர் சட்டத்தரணிகளாக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றது.

இவ்விரண்டு அம்சங்களும் ஷரீஆவுக்கு முரண்பட்டது அன்று. இஸ்லாமிய ஷரீஆவில் பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்குத் தடைவிதிக்கும் தெளிவான சட்ட வசனம் எதுவும் இல்லை. ஆண்கள் பெண்களின் நிருவாகிகள் எனும் குர்ஆன் வசனத்திற்கும், தமது ஆட்சியதிகார விடயத்தை பெண்ணிடம் ஒப்படைக்கும் சமுதாயம் வெற்றிபெறாது என்ற ஹதீஸுக்கும் பெண்கள் நீதிபதிகளாக அமர்வதற்கும் இடையில் எந்தத் தொடர்புமில்லை.

இவ்வசனங்களை வைத்து நீதிபதிப் பதவிக்கு பெண்கள் வரக் கூடாது என்று வாதிப்பவர்கள் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முனைகிறார்கள். ஷாபிஈ மத்ஹபின்படி பெண்கள் நீதிபதியாக அமரக் கூடாது எனக் கூறும் இவர்கள், உலகின் மிகப் பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் ஷாபிஈ மத்ஹபே நடைமுறையில் உள்ளது என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

  1. காழி நீதிமன்ற நடைமுறைகள் குறித்தும் சலீம் மர்ஸூபின் திருத்த அறிக்கை காலத்திற்குத் தேவையான முன்னேற்றகரமான பல பரிந்துரைகளை உள்ளடக்கியிருக்கின்றது. குறிப்பாக, நீதிமன்றம் என்ற வகையில் காழி நீதிமன்றங்களின் நீதிப் பரிபால நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும். நீதிபதிகளின் தகுதிகள், தீர்ப்பளிக்கும் நடைமுறைகள் குறித்து பல முற்போக்கான ஆலோசனைகளை சலீம் மர்ஸூபின் அறிக்கை பரிந்துரைக்கின்றது.

அது போன்று பொருண்மைச் சட்டம் தொடர்பிலும் மிக விரிவானதும் ஆழமானதுமான விளக்கங்களையும் பொருள்கோடல்களையும் சலீம் மர்ஸூபின் அறிக்கை உள்ளடக்கியிருக்கின்றது.

முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்ட நீதியரசர் சலீம் மர்ஸூப் தலைமையிலான குழு கடந்த 9 ஆண்டு கால இடைவெளியில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்தாலோசித்து, பொது உடன்பாடுகளை எட்டிவந்த நிலையில் இறுதித் தருணங்களிலேயே பிளவுபட்டது.

பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஓர் அணி பிரிந்து சென்றது. இப்போது இரண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜம்இய்யதுல் உலமா சார்ந்திருக்கும் பாயிஸ் முஸ்தபா தரப்பு அறிக்கையே சரியானது எனவும் ஷரீஆவுக்கு உட்பட்டது எனவும் பிரச்சாரம் செய்துவரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, அதன் கீழுள்ள சில கிளை நிறுவனங்களையும் தப்லீக் இயக்கம் சார்ந்த அமைப்புகளையும் ஐக்கியக் குரலாகக் காட்ட முனைவது வினோதமானது.

ஷாபிஈ மத்ஹபுக்குள் மட்டும் நின்றுகொண்டு இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் அனைத்து வகையான மார்க்கப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முயல்வது காலத்திற்குப் பொருத்தமற்ற வாதமாகும். ஷாபிஈ மத்ஹபிலிருந்து வெளியேறுவதை ஷரீஆவிலிருந்து வெளியேறுவதாகப் பொருள்கோடல் செய்வது அதை விட ஆபத்தானதாகும்.

பிளவுகளும் பிரிவுகளும் நமது முன்னேற்றத்தையே முடங்கச் செய்கின்றன. பொய்யா பிரச்சாரங்கள் மூலம் தனிநபர்களை இலக்கு வைத்து சமூகத்தைப் பிழையாக வழிநடத்தும் தவறிலிருந்து மார்க்கத் தலைமைகள் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பாடத்தையே இந்தத் தருணத்தில் நாம் கற்க வேண்டியுள்ளது.

About the author

Administrator

Leave a Comment