Features கல்வி சமூகம்

நவ உலகின் அறிவுப்பிரவாகத்தில் நீச்சலடிக்க உதவும் வாசிப்புப்பண்பாடு

Written by Web Writer

உலக வரலாற்றில் தனக்கென தனியிடம் பிடித்த நூற்றாண்டாக இருபத்தோராம் நூற்றாண்டை அடையாளப்படுத்தி விடலாம். காரணம் முன்னெப்போதும் இல்லாத அளவு அறிவுப்பெருவெளியில் பலத்த மாற்றங்கள் இந்த நூற்றாண்டில் தான் நிகழ்ந்து சாதனை படைத்தன. மனித குல மேம்பாடும் நீட்சியும் இந்த நூற்றாண்டில் என்றுமில்லாதவாறு பலரதும் கவனயீர்ப்பை பெற்றுள்ளமையும் குறிப்பிட்டே ஆகவேண்டிய ஒரு விடயம்.மனித குல முன்னேற்றம் தற்போது அறிவில் தான் தங்கியுள்ளது. மட்டுமன்றி உந்துசக்தியாகவும் ஊக்கியாகவும் தொழிற்படுகிறது.

21ம் நூற்றாண்டு அறிவு மைய நூற்றாண்டாக பரிணமித்துள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ளது. அறிவும் தகவலும் எண்ணற்ற வகையிலும் எல்லையற்ற விதத்திலும் பெருகி பிரவாகித்து ஊற்றெடுத்து வெடித்துச்சிதருகிறது. அறிவு புதிது புதிதாக உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்படுகிறது. புத்தம்புது சித்தாந்தங்கள் கோட்பாடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இன்னும் சில கட்டுடைக்கப்படுகின்றன. விமர்சிக்கப்படுகின்றன. இன்னும் பல சிந்தனைகள் மீளுருவாக்கம் பெற்று புது வடிவம் பெற்று மனித வாழ்வை வளமூட்டி விடுகின்றன.

பிராந்திய சிந்திப்பிலிருந்து விடுபட்டு உலகளாவிய சிந்திப்பின் அலையின் ஓட்டத்தில் மிகவேகமாக ஓடியாக வேண்டிய கடப்பாடு கொண்டவனாக மனிதன் வாழ்கின்றான். இணையம் இத்தனைக்குமான வசதிகளை அவனுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

அறிவார்ந்த knowledge based அடிப்படையில் தான் அனைத்தும் கட்டி எழுப்பப்படுகின்றன. ஆளப்படுகின்றன. அறிவுமையப்பட்டதாக மையப்படுத்தியதாக அனைத்தும் தம்மை ஆக்கிக்கொண்டுள்ளன. அறிவற்ற பூச்சியங்களால் அறிவார்ந்த தளத்தில் இயங்கமுடியாதபடி அனைத்தையுமே அறிவு ஆட்கொண்டுள்ளது. கல்விசார் உயர் நிறுவனங்கள் கூட தம்மை இன்னுமின்னும் அறிவுமையப்படுத்தியுள்ளன. பழமைசார் சிந்தனைகளிலிருந்து விடுபட்டு புதியனவற்றை உள்வாங்கியாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையை பிரதிபலிக்கும் வகயில் தான் நிமிடத்துக்கு நிமிடம் பத்திரிகைகளும் புதினங்களும் ஆய்வுகளும் சஞ்சிகைகளும் நூல்களும் அனைத்து வகையான அச்சுகளும் இணையத்தில் அடிக்கடி தரவேற்றப்படுகின்றன. நிமிடத்துக்கு நிமிடம் அறிவு மாற்றம் காண்கின்றது.

அறிவுப்பிரவாகத்தின் வேகம் முன்னெப்போதும் இல்லாதளவு இரட்டிப்பாக பெருக்கெடுத்து வருகிறது. மனித ஆயுள் இத்துணை அறிவுதொகிதிகள் குறித்த குறைந்த பட்ச அறிமுகத்தையாவது பெற முடியாத அளவு இவை அதிகமாக உள்ளன. அறிவு உருவாக்கப்படும் அதே நேரத்தில் வேகத்தில் கதியில் இணைய வாயிலாக பரிமாற்றப்பட்டு பரிவர்த்தனை நிகழ்ந்து பரவலாக்கப்படுகிறது.

தொடர்பாடலை மிகவுமே இலகுபடுத்தி எளிமைப்படுத்தியுள்ள தொழில்நுட்பம் 21ம் நூற்றாண்டு மனிதனுக்கு வாசிப்பையும் இலகு படுத்தியுள்ளது. இந்நிலையில் நாம் எமது ஊடகங்களை சமூக இன்னுமின்னும் செறிவாகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்த வேண்டும். இணைய வசதிகளை பயன்படுத்தி வாசிக்கும் பண்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறுகிய கால ஆயுளை பயன் தரும் வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வலவு வசதிகள் கிடைத்தும் வாசிப்பை விட்டும் தொலை தூரம் நகர்ந்தவர்களாக வாழ்ந்து கேளிக்கைக்கும் விநோதத்துக்கும் மாத்திரம் இணையத்தை பாவித்தவர்களாக நாம் மரணிக்ககூடாது.

இவை குறித்தும் நாம் விசாரிக்கப்படுவோம். எதுவுமே இல்லாத நிலையில் எமது முன்னையோர் எத்தனை விடயங்களை எழுதி பாதுகாத்தார்கள். பயன்படுத்தினார்கள் என்பது இந்த நூற்றாண்டில் வாழும் அனைவரும் சிந்திக்க வேண்டிய அம்சமாகும்.

M.M.A.Bisthamy Ahamed
3/9/2018

About the author

Web Writer

Leave a Comment