Features உலக செய்திகள் சர்வதேசம்

சவூதி அறேபியா: திசை மாறும் பயணம்

Written by Administrator

– முஷாஹித் அஹ்மத் –

இஸ்லாமிய வரலாற்றில் சவூதி அறேபியா வகிக்கும் இடம் முக்கியமானது. இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவும் மதீனாவும் அந்த மண்ணில் அமைந்திருப்பது அதற்கான முதல் காரணமாகும். இஸ்லாம் தளைத்தோங்கிய மக்கா நகரிலேயே இறைதூதர் (ஸல்) அவர்கள் பிறந்தார் என்பதும், இஸ்லாமியத் தூது வஹியின் மூலம் அந்த மண்ணிலேயே உதித்தது என்பதும் இம்மண்ணுக்கு முக்கியத்துவமளிக்கின்றது.

பல ஸஹாபாக்களின் இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் இஸ்லாம் எனும் விருட்சம் வளர்ந்தோங்குவதற்கு உரமாக்கப்பட்ட மண் அது. அவர்கள் தமது எளிமையான வாழ்க்கை மூலம் இஸ்லாத்தின் உண்மையான பிரதிநிதிகளாய் விளங்கினர். உலகம் அவர்களைக் கண்டு வியந்தது.

எவ்வாறாயினும், மக்காவையும் மதீனாவையும் தமது ஆட்சிப் பிரதேசத் தின் கீழ் கொண்டு வந்த இன்றைய ஆட்சியாளர்கள் அந்த ஸலபுஸ் ஸாலிஹீன்களின் எளிமையான இஸ்லாமிய வாழ்வியலிலிருந்து விலகி, எதிரிகளோடு கைகோர்த்து இஸ்லாமிய உலகை காட்டிக் கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சஊத் என்ற கோத்திரம் அறேபியாவின் மத்திய பகுதியான நஜ்தை ஆட்சி செய்து வந்தது. அவர்களது ஆட்சி திரஇய்யா எனப்படும் சிறியதோர் பகுதியிலிருந்தே தொடங்கியது. இந்த ஆட்சிக்கு முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் கருத்து நிலை சார்ந்த பின்புலம் ஒன்றை வழங்கினார். படிப்படியாக இந்த ஆட்சிப் பிரதேசம் விஸ்தரிக்கப்பட்டு வந்தது உஸ்மானியரின் கீழிலிருந்த அறேபியாவின் பிற பகுதிகளை மெது மெதுவாக விழுங்கி வந்த சஊத் குடும்பம் அடுத்த 150 ஆண்டுகளில் நஜ்தை முழுமையாகவும் அதனோடு ஹிஜாஸையும் கட்டுப்படுத்தியது.

இதன் உச்சகட்ட நில அபகரிப்புப் போர் 1902-1927 இடைப்பட்ட 25 ஆண்டுகளில் தீவிரமாக இடம்பெற்றது. அப்துல் அஸீஸ் பின் சஊத் இந்த நில ஆக்கிரமிப்புப் போரை முன்னெடுத்தார். அதன் பேறாக 1930 இல் மம்லகது அஸ் ஸஊதிய்யது அல் அறபிய்யா எனப்படும் ஒரு ஆட்சிப் பிரதேசம் பிரகடனம் செய்யப்பட்டது. 1930-1953 வரை அப்துல் அஸீஸ் அதன் ஆட்சியாளராக இருந்தார்.

தீவிர மன்னராட்சி முன்னெடுக்கப் பட்டது. அவரது இறப்புக்குப் பின்னர் அவரது ஐந்து மகன்மார்கள் சவூதியை ஆண்டுள்ளனர். அப்துல் அஸீஸுக்குப் பின்னர் 1953 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியவர் சஊத். அவருக்குப் பின்னர் 1964 இல் மன்னர் பைஸல். 1979 இல் காலித் என்பவரும் 1982 இல் மன்னர் பஹ்தும், 2005 இல் அப்துல்லாஹ்வும் அரியணை ஏறினர். அப்துல்லாஹ்வின் மரணத்தைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்தவர்தான் சல்மான் பின் அப்துல் அஸீஸ்.

ஒவ்வொரு மன்னரும் அரியணை ஏறும்போது இஸ்லாமிய உலகில் அவர் பற்றிய பாரிய எதிர்பார்ப்பு வளர்வதும், காலப்போக்கில் எதிர்பார்ப்புக்குப் புறம்பாக ஏமாற்றமும் வெறுப்பும் எஞ்சுவதுமே நவீன சவூதியின் வரலாறாகிப் போயுள்ளது. சல்மானின் தொடக்க உரை அறபு-இஸ்லாமிய உலகிற்கு நம்பிக்கையூட்டுவதாய் இருந்தது.

ஆனால், பட்டத்துக்குரிய இளவரசர் நாஇபை பதவி விலக்கி விட்டு, தனது மகன் முஹம்மதை பட்டத்துக்குரிய இளவரசராய் நியமித்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேலின் போர் விமானங்கள் ரியாதின் வான் பரப்பில் ஆதரவுச் சமிக்ஞையை அறிவித்தபோது இஸ்லாமிய உலகமே அதிர்ந்து போனது.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையாளர் அடூஞுதுடிண் சொல்வதுபோல் சவூதியில் ஒருவர் பட்டத்துக்குரிய இளவரசராக மாற வேண்டுமாயின் அதனை முதலில் தீர்மானிப்பது அமெரிக்காதான். மத்திய கிழக்கு குறித்த அமெரிக்காவின் ராஜ தந்திர முடிவுகளைத் தீர்மானிப்பது சியோனிஸ இஸ்ரேல். முஹம்மத் பின் சல்மான் இஸ்ரேலின் தெரிவு. அவர் இளவரசராய் மாறியபோது அடுத்தடுத்து அறிவித்த ஒவ்வொரு மாற்றமும் சவூதி யர்களை மட்டுமன்றி, முழு அறபுலகை யும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பலஸ்தீன் தொடர்பில் இஸ்ரேலுடன் முஹம்மத் பின் சல்மான் மேற்கொண்ட ‘நூற்றாண்டின் ஒப்பந்தம்’ எனப்படும் துரோக உடன்படிக்கை பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது. யெமனில் இலட்சக் கணக்கானோரை அகதிகளாக்கி, பல்லாயிரக்கணக்கானோரை பலிகொண்ட யுத்தத்தை வெளியேறும் வழியின்றி தொடர்கிறது ரியாத்.

சமீபத்தில் தூனிசிய இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் சிரேஷ்ட முப்திகளுள் ஒருவரான பாழில் ஆஷூர், 2018 இல் தூனிசியாவிலிருந்து ஹஜ் செய்வதற்குச் செல்லும் பயணிகளை    சவூதி அறேபியாவுக்குச் செல்ல வேண்டாம் என்றும், அவ்வாறு செல்வதன் மூலம் சவூதி அரசுக்கு வழங்கப்படும் பணத்தை முஸ்லிம் நாடுகளில் போர் செய்வதற்கு சவூதி பயன்படுத்துகிறது என்றும் பத்வா வழங்கியிருந்தார்.

வருடாந்தம் பத்தாயிரத்திற்கும் அதிகமான தூனிசியர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை யெமனை யும் சிரியாவையும் ஆக்கிரமித்து முஸ்லிம்களைக் கொலைசெய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. சவூதி  அரசு இது ஷரீஆவுக்குப் புறம்பானது என இமாம் பாழில் ஆஷூர் உள்நாட்டு ஊடகமொன்றிடம் தெரிவித்திருந்தார்.

முஹம்மத் பின் சல்மானின் வருகைக்குப் பின்னரான சவூதி யின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் இஸ்லாமிய ஆய்வாளர்களால் மிக உன்னிப்பாக அவதானிக்கப் படுகின்றது. குறிப்பாக, இஸ்ரேலுடனான உறவை சுமூகமாக்குவதற்கும் அப்பால் சென்று தமது அறபு சகோதரர்களைக் கொன்று குவிக்கும் சியோனிஸ்டுகளோடு கொஞ்சிக் குலாவும் நிலைக்கு சவூதி ஆட்சியாளர்கள் வந்துள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக வருடாந்தம் ஹஜ் யாத்திரை செல்லும் சுமார் 1.5 மில்லியன் ஹாஜிகளுக்கு பாதுகாப்பளிக்கும் எ4கு கம்பனி யூதர் களுடையது. இன்று சவூதியில் சினிமாப் படங்களைத் திரையிடும் கம்பனிகளும் அமெரிக்க யூதர்களுக்குச் சொந்தமானது. சமீபத்தில் இஸ்ரேல் கடற்படை நடாத்திய மிகப் பெரிய கடற் பயிற்சி முகாம்களில் சவூதி வீரர்கள் கலந்து கொண்டதை இஸ்ரேலில் இருந்து வெளிவரும் ஹாரட்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியிருந்தது. சவூதியின் நகர அபிவிருத்தியில் இஸ்ரேல் முதலீடு செய்யவுள்ளதாகவும் அதே பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இதுவரை காலமும் பலஸ்தீன் – இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளில் கொள்கையளவிலேனும் உடன்பட்டிருந்த ஒரே விடயம் இரு நாட்டுத் தீர்வாகும். இப்போது இரு நாட்டுத் தீர்வுத் திட்டம் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு, இருக்கின்ற இஸ்ரேல் மாத்திரமே ஒரே நாடு, பலஸ்தீனர்கள் அமைதியாக அதை ஏற்றுக் கொள்ளுங் கள். இல்லையென்றால் வாய் மூடி இருங்கள் என்கிறார் முஹம்மத் பின் சல்மான்.

1948 இல் பலஸ்தீன் ஆக்கிரமிக்கப்பட்டு 70 ஆண்டுகள் கடந்து விட்டன. இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிர மிப்பை சட்டபூர்வமாக்கிய 1993 இன் ஒஸ்லோ ஒப்பந்தத்திற்கு இந்த மாதத் துடன் கால் நூற்றாண்டு ஆகிறது. சொந்த மண்ணிலேயே பலஸ்தீனர்களை அகதிகளாக்கி, அக்கிரமங்களையும் அநியாயங்களையும் கட்டவிழ்த்து அவர்களை அபலைகளாக மாற்றி வரும் யூத சியோனிஸ்டுகளோடு சவூதி ஆட்சியாளர்கள் கொஞ்சிக் குலாவுவதன் பின்னணி என்ன?

ஆகஸ்ட் 22 இல் இஸ்லாமிய விவகாரங்கள், வழிகாட்டல் மற்றும் தஃவாவுக்கான அமைச்சர் ஷெய்க் அப்துல் லதீப் பின் அப்துல் அஸீஸ் சில முஸ்லிம் நாடுகளோடு ஒப்பிடும் பொழுது ஹஜ் யாத்திரைக்கு முஸ்லிம் களை அனுமதிக்கும் நாடுகளில் இஸ்ரேல் மிகச் சிறந்த நாடு என மெச்சியுள் ளார். இதேவேளை, கட்டார் முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக வருகை தரும் போது சவூதி அதிகாரிகள் பல்வேறு இடையூறுகளை விளைவித்து வருவதாக கட்டார் அரசாங்கம் தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருகின்றது.

இஸ்லாமிய உலகின் தலைவர்கள் என்றும் இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர்கள் என்றும் சுய தம்பட்ட மடிக்கும் இந்தக் கொடுங்கோலர்கள் எங்கே செல்கிறார்கள்? முஹம்மத் பின் சல்மானின் வருகைக்குப் பின்னர் நடுநிலை இஸ்லாமிய அறிஞர்கள் மீதும் தஃவா செயற்பாட்டாளர்கள் மீதும் கட்டவிழ்க்கப்பட்டு வரும் கெடுபிடிகளும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளும்  சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றவை நடுநிலை இஸ்லாமிய அறிஞர் களை ரியாத் கையாண்டு வரும் முறைமை குறித்து தமது கடும் விமர் சனங்களையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளன.

Image result for salman al awdah saudi arrests

இஸ்ரேலுடனான ரியாதின் உறவுகளை இந்த அறிஞர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தமது டுவிட்டர் பக்கங்களிலோ இணையங்களிலோ முகநூல் பக்கங்களிலோ பின் சல்மானினால் அறிவிக்கப்படும் மாற்றங்கள் மற்றும் யூதர்களுடனான உறவுகள் குறித்து விமர்சனம் வெளியிடுகின்ற அறிஞர்கள், உளவுத்துறையினரால் தேடப்படுகின்றனர். பலர் கைதுசெய்யப்பட்பட்டுள்ளனர். சிலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட போது கொல்லப்பட்டுள்ளனர்.

300 நாட்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் சல்மான் அல் அவ்தா விசாரணைகள் எதுவுமில்லாமல் தஃபான் சிறையிலிருந்து ரியாதிலுள்ள அல் கைர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என அவரது மகன் அப்துல்லாஹ் அல் அவ்தா தெரிவிக்கின்றார். கைதுசெய்யப்பட்டதற்கான காரணம் எதனையும் இதுவரை அரசு வெளியிடவில்லை. அவர் மீது இரகசிய விசாரைணைகள் தொடர்வதாகக் கூறப்படுகின்றது. அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரும் சல்மான் அல் அவ்தாவை சந்திக்க முடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட் டுள்ளன. ஜனவரியில் சர்வதேச மன்னிப்புச் சபை அவரை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தும் ரியாத் அரசு அதனை செவியேற்கவில்லை. 2017 செப்டம்பரிலிருந்து ஷெய்க் சல்மான் அல் அவ்தாவின் உடல் நிலை சீர்குலைந்து வருவதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்கா இமாம் ஷெய்க் நாஸிர் அல் உமர் சவூதி அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். இவர் இமாம் முஹம்மத் பின் சவூத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஆவார். அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று ஏற்கனவே அதிகாரிகள் இவரைப் பணித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. எனினும் சவூதியின் சமீபத்திய போக்குகளை ஷெய் நாஸிர் உமர் கடுமையாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசின் போக்குகளை கண்டனம் செய்து, ஷரீஆவின்  அடிப்படையிலான தமது விமர்சனங்களை வெளியிட்டத னால் கைதுசெய்யப்பட்ட மற்றொரு அறிஞர் இமாம் ஷெய்க் ஸாலிஹ் அத்தாலிப். மக்காவிலுள்ள பெரிய பள்ளிவாயலில் முக்கிய தாஇயாக செயற்படும் இவர், ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் கைதுசெய்யப்பட்டார். ஹரம் ஷரீபின் இமாம்களுள் ஒருவரான சாலி அத்தாலிப் ஷரீஆ துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.

அரசியல் தீமைகள் குறித்து கலாநிதி ஸாலிஹ் அத்தாலிப் விரிவுரை ஆற்றியமையே அவர் கைதுசெய்யப்படுவதற்கான காரணம் என்று சவூதியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்ற னர். 2017 இல் முஹம்மத் பின் சல்மான் ஆரம்பித்த கைதுவேட்டையில் பலர் இரையாகியுள்ளனர். பத்திரிகையாளர் கள், மனித உரிமை செயற்பாமட்டாளர்கள் வணிகப் புள்ளிகள் உள்ளிட்டு நடுநிலையான இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் சல்மானின் வேட்டைக்குப் பலியாக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படாத, அடிபணியாத, அவர்களது நிலைப்பாடுகளை ஆதரிக்காமல் விமர்சிக்கின்ற அனைவரும் அரசியல் கைதிகளாகவே பார்க்கப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அறிஞர் களில் சிலர் கடும் சித்திரவதைகளை எதிர்கொண்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கூறுகின்றது. அவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டவர்களில் மிகப் பிரபல்யமான முன்னணி இஸ்லாமிய அறிஞர் ஷெய் சுலைமான் தவீஷ் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தியை கடந்த வாரம் அல் கலீஜ் ஒன்லைன் இணையம் வெளியிட்டிருந்தது.

முஹம்மத் பின் சல்மானின் வருகைக்குப் பின்னர் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட முதல் அறிஞர் சுலைமான்தான் என்று கூற முடியாது. இவருக்கு முன்னரும் இவ்வாறு சிலர் சித்திரவதையினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் உள்ளது. ஷெய்க் சுலைமான் தவீஸ் 2016 ஏப்ரல் 22 இல் கைதுசெய்யப்பட்டார். அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து வெளியான அறிக்கை பல அதிர்ச்சியான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் பட்டத்துக் குரிய இளவரசர் முஹம்மத் பின் சல் மான் குறித்து அவர் விமர்சனம் வெளியிட்டு 24 மணித்தியாலத்தில் கைதுசெய் யப்பட்டார். முஹம்மத் பின் சல்மான் பதவியேற்றதன் பின்னர் நூற்றுக்கணக்கான ஷரீஆ துறை அறிஞர்கள், கல்விமான்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், முன்னணி தாஇகள் என பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட் டுள்ளனர். விசாரணைகள் இன்றி சித்திர வதைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

கருத்துச் சுதந்திரத்தையும் தனிமனித உரிமைகளையும் மறுதலிக்கும் வகையிலேயே சவூதியின் ஆட்சிபீடம் நகர்கின்றது. பிரிட்டிஷ்காரர்களையும் பிரெஞ்சுக்காரர்களையும் ஆலோசகர்களாகக் கொண்ட சல்மானின் ஆட்சி சியோனிஸ்டுகளுக்கு ஆதரவாக இருக்கின்றதே ஒழிய, இஸ்லாமிய உலகத்திற்கு ஆதரவானதாக இல்லை. இஸ்லாமிய அறிஞர்கள் மீதான கைது நடிவடிக்கைகள் இதனையே உணர்த்தி நிற்கின்றன.

ஆட்சியாளர்களின் திசைமாறும் இந்தப் பயணத்தை மௌனமாக அங்கீகரித்துக் கொண்டிருக்கும் அந்நாட்டின் பெரும்பான்மை அறிஞர் குழாம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதுதான் இங்குள்ள முக்கிய கேள்வி.

About the author

Administrator

Leave a Comment