Features அரசியல் சமூகம்

பயிர்களைக் காக்கும் வேலிகள்

Written by Administrator

எழுவாய் பயமிலை | அபூ ஷாமில்

போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான முஸ்லிம் கிராமங்கள் இந்த வேலைத் திட்டத்தை சிரமேற்கொண்டு செயற்படுத்தி வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. ஆரம்பக் கட்டமான போதைப் பொருள் பாவனைக்கு எதிரான பிரச்சாரங்கள் என்ற கட்டத்தைத் தாண்டி சில இடங்களில் செயற்பாட்டு வடிவத்தினைப் பெறும் அளவுக்கு முன்னேறியிருக்கின்றது.

நாட்டுக்குப் பெரும் தொல்லையாக அமைந்திருக்கின்ற இந்தப் போதைப் பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்வதில் பள்ளிவாசல்கள் பெரும் பங்காற்ற முடியும். போதனை நிலையிலிருந்து தீமையைத் தடுக்கும் செயற்பாட்டுக்கு அடுத்த கட்டமாக பள்ளிவாசல்கள் நகர முடியும். இனி அடுத்த கட்ட செயற்பாடுகளில் பள்ளிவாசல்கள் களமிறங்க வேண்டும் என இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இதற்கேற்றாற்போல பல பள்ளிவாசல்கள் தமது செயற்பாடுகளை எமக்கு அறிவித்திருந்தன. “போதையற்ற ஆரோக்கியமான கிண்ணியா” செயற்றிட்டத்தின் செயற்பாடுகள் குறிஞ்சாக்கேணியில் நடைபெற்றுள்ளன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கிண்ணியாக்கிளை, பள்ளிவாயல்கள் ஒன்றியம், பிரதேச மஸ்ஜித்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முதற்கட்டமாக போதை வஸ்துக்களின் விற்பனை, விநியோகத்தை தடுப்பதற்கான முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். சிகரட், பீடி, புகையிலை, மது, கஞ்சா உள்ளிட்ட எந்தவிதப் போதைப் பொருளையும் விற்பனை செய்யும் 36 பேர் இனங்காணப்பட்டு அவர்களை நேரடியாகச் சந்தித்து அவர்கள் இனி போதைப் பொருட்களை விற்பதில்லை என அல்லாஹ்வின் பேரால் சத்தியமும் வாங்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக போதைப் பொருள் பாவனையாளர்களை அணுகுவதற்கு இவர்கள் திட்டமிட்டிருக்கின்றார்கள்.

அதேபோல காங்கேயனோடை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், தாங்கள் யாரும் போதைப் பொருள் பாவிப்பதில்லை என்ற உறுதிமொழியை ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் மக்களின் முன் வழங்கியிருக்கிறார்கள். இதுவும் போதைப் பொருள் மட்டுமல்ல, எந்த விதத் தீமைகளை ஒழிப்பதிலும் முக்கியமானது. பல இடங்களில் தீமைகளை ஒழிக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம், பள்ளிவாசல் நிர்வாகத்தில் உள்ளவர்கள் குறித்த தீமைகளில் ஈடுபடுவோராயிருக்கிறார்கள். இதனால் பள்ளிவாசல் நிர்வாகங்கள் முன்வந்து தீமைகளை ஒழிப்பதற்குத் தயங்குகின்றன.  கொழும்பிலுள்ள ஒரு பள்ளிவாசல் நிர்வாகிகளில் அனேகர் போதைப் பொருள் விற்பனையாளர்கள் என்பதனால் அந்தப் பள்ளிவாசலில் போதைப் பொருள் சம்பந்தமான குத்பாக்கள் கூட ஓதப்படுவதில்லை என்பதை ஒரு முறை இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இவ்வாறானதொரு நிலையில் காங்கேயனோடை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் இந்தச் செயற்பாடு முன்மாதிரியானது தான். தீய பழக்க வழக்கங்களை முதலில் தன்னிடமிருந்து களையும் போது தான் அடுத்தவர்களிடம் இருந்து அவற்றைக் களைவதற்கு நாம் தகுதி பெறுவோம். இந்த ஒழுங்குமுறையைத் தான் அவர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள்.

படிப்படியாக பள்ளிவாசல்கள் தமது பணியை உணர்ந்து செயற்படத் தொடங்கியிருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. தீமைகளைத் தடுத்தல் என்பது நிறுவனமயமாகச் செயற்பட வேண்டியது என்பது போலவே தீமைகளைப் பரப்புதல் என்பதும் நிறுமனமயப்பட்டுச் செயற்படுகின்றன என்ற கள யதார்த்தத்தையும் உணர்ந்து பள்ளிவாசல்கள செயற்படுமானால் ஒரு சிறந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புதற்கு நாட்டுக்குப் பங்களித்த பெருமையை பள்ளிவாசல்கள் பெற்றுக் கொள்ள முடியும். தொழுகையை நிலைநாட்டுதல் என்ற தலையாய பணிக்கே பொறிமுறை வகுத்துக் கொள்ளாத பள்ளிவாசல்களுக்கு மத்தியில், தீமையைத் தடுத்தல் எனும் சமூகச் செயற்பாட்டுக்கு விரைந்து கொண்டிருக்கின்ற பள்ளிவாசல்களுக்கு நாடும் நாமும் பாராட்டிப் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment