அரசியல்

மகாசங்கத்தினருக்கான தனியான நீதிமன்றுக்கு அரச அதிகாரம் வழங்கப்பட வேண்டும்

Written by Administrator

மகாசங்கத்தினருக்கான தனியான நீதமன்றத்துக்கு அரச மட்டத்திலான அதிகாரத்தைக் கோரி இலங்கை ராமான்ய பீடத்தின் மகாநாயக்கர் நாபான பேமசிரி ஹிமி உள்ளிட்ட பல பௌத்த பிக்குமார் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 250 பௌத்த பிக்குகள் பாதயாத்திரையில் வந்து இந்த வேண்டுகோளைச் சமர்ப்பித்துள்ளனர். இவர்களை தனது இல்லத்தில் உபசரித்து வரவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, 20 நிமிடங்கள் இவர்களுடன் உரையாடினார்.

நெறிமுறைக்கு மாற்றமாக நடந்து கொள்ளும் பிக்குகளுக்கு எதிராக மகாசங்க நீதிமன்றம் எடுக்கின்ற தீர்மானங்களை நீதிமன்றத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் இதன்போது ஜனாதிபதியிடம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவர்கள் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் உரியவர்களைச் சந்தித்து முடிவொன்றை எடுப்பதாக ஜனாதிபதி இவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஓமல்பே சோபித ஹிமி, அரச நீதிமன்றங்கள் காலம் கடத்துபவை. இந்த நீதிமன்றங்கள் குற்றவாளி செத்ததன் பின்னரே தீர்ப்பு வழங்குகின்றன. எங்களுக்கு எங்களது நீதிமன்றத்துக்குள்ளால் இயங்குவதற்கு இடமளியுங்கள். சங்கநீதிமன்றம் மன்னர்கள் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. சங்க நீதிமன்றில் சங்கநாயக்கர்கள் சரியான தீர்வுகளையே வழங்குவார்கள். பிக்குகள் தொடர்பில் சங்க நீதிமன்றம் எடுக்கும் தீர்மானங்களை அரசாங்கம் நிறைவேற்றினால் போதும். அரசாங்கத்தின் நீதிமன்ற ஒழுங்குகள் மனித இனத்துக்கே இழுக்கானவை. இலங்கையில் இருக்கின்ற நீதிமன்ற முறைகள் மிகவும் இழிவானவை எனத் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment