Features அரசியல்

எல்லை நிர்ணயமும் முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலமும்

Written by Administrator

– தோப்பூர் – எஸ்.ஏ.எம்.அஸ்மி –

தற்போது சூடு பிடித்துள்ள எமது நாட்டின் அரசியல் களத்தின் பேசுபொருள் தோற்கடிக்கப்பட்ட மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையாகும். இவ் அறிக்கையானது கடந்த (24) அன்று மாகாண சபைகள் உள்ளூராட்சி, விளையாட்டுத் துறை அமைச்சினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாதப்பிரதிவாதங்களின் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன் போது அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டது. ஆதரவாக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. ஐக்கிய தேசிய முன்னணி, சிறிலங்கா சுதந்திர முன்னணி, கூட்டு எதிர்கட்சி , மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்மைப்பு ஆகியன இவ் அறிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ள அதேவேளை, மக்கள்விடுதலை முன்னணியானது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

புதிய முறையில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கான சட்டம் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அமைவாகவே எல்லை நிர்ணய ஆணைக்குழுவானது எல்லைகளை நிர்ணயம் செய்து அதன் அறிக்கை கடந்த வாரம் பாராளு மன்றத்தில் சமர்ப்பித்தது. இவ் அறிக்கையானது சிறு பான்மை இனத்திற்கு அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனாலேயே சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் விடாப்பிடியாக நின்று இவ் அறிக்கையினை தோல்வியடையச் செய்துள்ளன. அதிலும் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் நின்றமை வரவேற்கத்தக்கது.

அதே வேளை கடந்த வருடம் புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான பிரேரனை முன்வைக்கப்பட்ட போது அதனை பரிசீலனை செய்வதற்கான கால அவகாசத்தைக் கோரி ஆழமாக பரிசீலனை செய்து அதன் சாதக, பாதக விளைவுகளை கலந்துரையாடி காத்திரமானதொரு முடிவினை எட்டுவதற்கு எந்தவொரு முஸ்லிம் கட்சிகளும் முயற்சித்தது குறைவு .அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களின் வாய்ப்பேச்சினை மாத்திரம் நம்பி கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாகவே புதிய முறையில் மாகாண சபைத்தேர்தலை நடாத்துவதற்கான சட்ட மூலத்திற்கு ஆதரவளித்தார்கள் எனலாம்.

ஆனால் மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட வேளை கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் யாவும் செல்லாக் காசாக்கப்பட்டுள்ளதுடன், ஆதரவு கொடுத்தவர்களே எதிர்த்து வாக்களிக்கும் நிலையை தோற்று வித்துள்ளது.இவ் அறிக்கையானது சட்டமாக்கப்பட்டிருந்தால் எமது நாட்டின் பல பாகங்களிலும் சிதறி வாழ்கின்ற சிறுபான்னை சமூகத்தினர்  வெகுவாக பாதிக்கப் பட்டிருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமுகமானது தற்போது கிடைக்கின்ற 43 பிரதிநிதித்துவத்தில் 13 பேரையே பெறும் நிலை ஏற்பட்டிருக்கும். இதன் மூலம் முஸ்லிம் பிரதிநிதிகள் 30 பேரை இழக்க நேரிட்டிருக்கும்.

இவ்வாறு முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக் கும் ஒரு அறக்கையே தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இதனால் இன்று அனைத்து முஸ்லிம் தலைமைகளும் இணைந்து எதிராக வாக்களித்துள்ளன. இதில் வினோதம் என்னவெனில் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி,சிறுபான்மை கட்சிகள் என்ற பேதமின்றி, இவ் அறிக்கைக்கு பொறுப்பான அமைச்சின் அமைச்சரும் கூட இதற்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.

இது இவ்வாறிருக்க இவ் அறிக்கை யின் அடுத்த கட்ட நகர்வினை நோக்கும் போது தோற்கடிக்கப்பட்ட மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையினை மீளாய்வு செய்வதற்காக பிரதமர் தலைமையிலான 05 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படும். இக்குழுவினால் மீளாய்வு செய்து திருத்தப்பட்ட அறிக்கையானது இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படும். சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஜனாதிபதியின் பிரகடனத்தின் மூலம் தேர்தல் தொகுதிகள் வெளியிடப்படும். பின்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் புதிய முறையில் தேர்தலை நடாத்த முடியும்.

அதே நேரம் பிரதமர் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவானது தொகுதிகளின் பெயர்களை திருத்துதல் அல்லது மாற்றுதல், தொகுதி ஒன்றுக்கு வழங்கப்பட்ட இலக்கத்தை மாற்றுதல் அல்லது திருத்துதல், தொகுதி எல்லைகளை மாற்றுதல் போன்ற வரையறுக்கப் பட்ட விடயங்களை மாத்திரமே செய்வதற்கு அதிகாரம் பெற்றுள்ள தே தவிர மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அதிகாரம் மீளாய்வுக் குழுவுக்கு இல்லை. இவ்வாறு இருக்கையில் மீளாய்வுக் குழுவின் திருத்தத்தில் சிதறி வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு எந்தளவு விமோசனம் கிடைக்கும் என்பது இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் இருக்கின்ற எச்சசொச்ச அரசியல் பலமும் கைநழுவிப் போய்விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதே வேளை கடந்த வருடம் மாகாண சபைத் தேர்தல் திருத்தல் சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் ஒவ்வொரு மாவட்டத்தியிருந்தும் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களில் 60 வீதமானவர்கள் தொகுதி மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த மும்மொழி வினை, எமது சமூகத்திற்கு நலவு செய்கின்றோம் என நினைத்து, முன் பின் விளைவுகளை சிந்திக்காத தலைமைகள் 60 வீதத்தினை 50 வீதமாக குறைத்து விட்டன. இதனால் சிதறி வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பும் கை நழுவிப் போயுள்ளது.
>
> மொத்த தொகுதிகளினுடைய எண்ணிக்கை அதிமாக இருக்கும் போது சிதறி வாழ்கின்ற முஸ்லிம்களின் பரம்பலுக்கு அமைய தேவையான தொகுதிகளை உருவாக்கிக் கொள்ள முடியும். தொகுதிகளின்
> எண்ணிக்கை குறைவடையும்போது முஸ்லிம்களின் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைவடையும். இதனை தூர நோக்குடன் சிந்திக்க தவறியதன் காரணமாக இன்று பலதொகுதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கும் எமது தலைமைகள் என்ன காரணங்களை கூறப்போகின்றதோ தெரிய வில்லை.

பிரதமர் தலைமையில் நியமிக்கப்படும் மீளாய்வுக் குழுவானது திருத்தப்பட்ட தமது அறிக்கையினை நேரடியாக ஜனாதிபதிக்கே சமர்ப்பிக்கப் போகின்றது. அதனை மீண்டும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கோ, விவாதம் செய்து வாக்கெடுப்புக்கு விடுவதற்கோ எந்தவொரு ஏற்பாடுகளும் இல்லை’ இதனால் தனிப்பட்ட ஒருவரின் கைகளுக்ழுக்கு முடிவுகள் செல்லப் போகின்றது. அவரின் முடிவுகளே சட்டமாகப் போகின்றது.

அதே வேளை இவ்வாறு பாதகமான விளைவுகளைக் கொண்டுள்ள புதிய முறையினை இல்லாமல் செய்து பழைய முறையில் தேர்தலை நடாத்த வேண்டுமானால் திருத்தச் சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 2/3 பெரும்பான்மை பெற வேண்டும். அது அவ்வளவு சுலபமானதல்ல சிறுபான்மையினத்திற்கு சாதகமான அல்லது நன்மை பயக்கும் வகையிலான ஒரு திருத்தச் சட்டமூலத்திற்கு பெரும்பான்மைக் கட்சிகள் ஆதரவளிக்குமா? என்பது கேள்விக்குறியாகும்.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் இவ் அறிக்கைக்கு எதிராக எதிர்வினையாற்றுகின்ற எமது தலைமைகளின் அறிவு காலங்கடந்த ஞானமே யாரும். இவர்கள் அரசியல் தலைமைகளின் வார்த்தைகளின் மீது கொண்ட அதீத நம்பிக்கை, முன் பின் ஆய்வுகள் இல்லாத முடிவு, தனிப்பட்ட றீதியான அரசியல் ஆதாயம், நீயா?நானா? என்ற போட்டித் தன்மை இவைகளே இன்று எம் சமூகத்தின் அரசியல் ஸ்தீரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே இனி வருகின்ற காலங்களிலாவது ஒவ்வொரு விடயங்களையும் நுணுகி ஆராய்ந்து,கட்சி பேதங்களை மறந்து சமுக அக்கறையுள்ள முடிவுகளை எடுப்பதற்கு எமது அரசியல் தலைமைகள் ஒன்றுபட வேண்டும். இதுவே தலைமைகளிடம் எம் சமூகம் எதிர்பார்க்கும் பிரதி உபகாரமாகும்.

About the author

Administrator

Leave a Comment