ஆசிரியர் கருத்து

கமரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும்

Written by Administrator
Editorial | 402

இலங்கைக்கு சர்வதேச நாடுகள் விடுத்த அழுத்தங்களின் பின்னணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) வீரியம் போதாது என்பதனை எடுத்துக் காட்டியே புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சட்டத்தின்படி பயங்கரவாதச் செயல் எனக் கருதப்படுகின்ற எந்தச் செயலுடனும் சம்பந்தப்பட்ட எவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவதற்கான அவகாசம் இருக்கின்றது. இது வகை தொகையின்றி யாரும் கைது செய்யப்படுவதற்கும் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. யாரையும் கைது செய்வதற்கு குறித்த நபர் தாம் பயங்கரவாதச் செயல் எனக் கருதுகின்ற எந்தச் செயற்பாட்டுடனும் தொடர்புடையவர் என நிரூபித்தல் போதுமானது. அந்த வகையில் எவரதும் சமய ரீதியான செயற்பாடுகள், சமூக ரீதியான செயற்பாடுகள் அனைத்துமே சந்தேகத்துக்கு உள்ளாக்கப்பட்டு, அது பயங்கரவாத நடவடிக்கையாக உருமாற்றப்பட்டு, பயங்கரவாதத்தைத் தடுத்தல் என்ற பெயரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட முடியும்.

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட கமர் நிஸாம்தீனின் நிலைமை இதற்கு நல்ல சான்று. தனது நோட்புக்கில் சிட்னி நகரின் அழகிய புகைப்படங்களை வைத்திருந்தமைக்காகவும், ”ஏனைய பகுதிகளுக்கு” விஜயம் செய்தமைக்காகவும் அவரை ஒரு ஐ.எஸ் தீவிரவாதி என்ற கருத்தில் அவுஸ்திரேலியாவின் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிசார் அவரைக் கைது செய்திருக்கிறார்கள். அவர்களது சந்தேகத்துக்குட்பட்ட வகையில் அவர் சில மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்துள்ளமை அவர் மீது சந்தேகம் வருவதற்கான காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கிடமானதாகக் கருதப்படுகின்ற சிரியா கூட அவரது பயணப்பட்டியலில் இருக்கவில்லை என்பதோடு சந்தேகத்துக்கு இடமே இல்லாத அமெரிக்காவுக்கும் அவர் பயணித்திருக்கிறார். இருந்த போதிலும் அவரது வெளிநாட்டுப் பயணங்களைக் காரணம் காட்டி அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் ஒரு முஸ்லிமாக இருந்தமை இந்தச் சந்தேகத்துக்கு மேலும் எண்ணெய் வார்த்திருக்கிறது.

இப்படி தனக்கு வேண்டாத எவர் மீதும் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வழியமைக்கிறது. கமருடைய நிலைமையைப் பார்த்தால் போர்ட் சிட்டிக்கு முன்னால் நின்று எடுக்கப்படுகின்ற புகைப்படங்கள் கூட ஒருவரை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்குப் போதுமான சான்றுகளாக அமைய முடியும். இலங்கையிலிருந்து அரபு நாடுகளுக்குப் பயணிக்கின்ற எவரையும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான நடவடிக்கை எனக் கூறி கைது செய்ய முடியும்.

இத்தகையதொரு அபாயமான நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதனைக் கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கான எதிர்ப்பு பல்வேறு தரப்புக்களில் இருந்தும் கிளம்பியிருந்தது. இனவாத உணர்வுகள் மேலோங்கியுள்ள தற்போதைய சூழலில் இந்தச் சட்டம் குறித்த இனமொன்றை ஒடுக்குவதற்காகவும் பயன்படுத்தப்பட முடியும் என்ற அச்சம் பரவலாக நிலவியது. தமக்கு இசைவாகாத நபர்களை அல்லது சமூகத்தை அல்லது குழுக்களை பணிய வைப்பதற்காகவும், தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காகவும் கூட இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட முடியும். ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்வதற்காக அந்தச் சமூகத்தை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புபடுத்தி அவர்களுக்கெதிராக வெறுப்பை விதைக்கின்ற இலங்கைச் சூழலில் இந்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது கவனமாகக் கையாளப்பட வேண்டிய விடயமாகும்.

பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் எந்தத் தரப்பிலிருந்து வந்தாலும் நிச்சயமாக அது முறியடிக்கப்பட்டே ஆக வேண்டும். அதற்காக நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் ஒத்துழைத்தே ஆக வேண்டும். ஆனால் இந்தச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து யாருக்கும் அநீதி நடக்காமல் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலில் இருந்த வேளையிலேயே அநியாயமான கைதுகளும் காணமலாக்கப்படுதல்களும் கொலைகளும் நடந்தேறியிருக்கின்றன. அந்தச் சட்டம் போதாதென்று தான் புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வரவிருக்கிறது. பழைய சட்டத்திலேயே நிறைய அநியாயங்களும் அநீதிகளும் நடந்திருக்கின்ற நிலையில் புதிய சட்டம் பற்றி மக்களிடையே இருக்கின்ற அச்சத்துக்கு அரசாங்கம் தெளிவுவழங்க வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment