இலக்கியம் உள்நாட்டு செய்திகள் சமூகம்

அறிவு ஜீவிகளின் நந்தவனம் நாளை களைகட்டவிருக்கிறது.

Written by Web Writer

அறிவு ஜீவிகளின் நந்தவனம் நாளை களைகட்டவிருக்கிறது. கொழும்பு புத்தகக் கண்காட்சி நாளை 21 காலை 09 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. நானூறுக்கும் மேற்பட்ட புத்தகக் கொட்டில்களில் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிப் புத்தகங்கள் இதழ்விரிக்கவிருக்கின்றன.

ஒப்பிடக் கூடாது என்றாலும் சரிந்து விழுந்த குப்பை மேட்டின் அளவுக்கு புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன. 400 க்கும் மேற்பட்ட புதிய நூல்கள் கண்காட்சியை கவர்ச்சியாக்கப் போகின்றன.

எல்லாவித சுவை நாடிகளுக்குமான புத்தகங்கள் இங்கு உண்டு. இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கம் இம்முறை இருபதாவது வருடமாக இந்த கண்காட்சியை நடத்துகிறது. 20 வருடங்களுக்கு முன்னர் கலாபவனத்தில் ஒரு சிறிய இடப்பரப்பில் இது ஆரம்பித்து வைக்கப்பட்டது. அடுத்த வருடமே இந்தக் கண்காட்சிக்கு அந்த இடம் போதாமல் போகுமளவுக்கு மக்களின் ஆதரவு திரண்டது. அதிலிருந்து கொழும்பில் மிகவும் இடம்பாடான BMICH இல் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

காட்சிக்கு வைக்கப்படும் புத்தகங்கள், வருகைதருபவர்கள், புத்தகக் கொட்டில்கள் எல்லாமே ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருவதாக இலங்கை நூல் வெளியீட்டுச் சங்கம் தெரிவிக்கிறது. வசதிகளும் புதிய பல விடயங்களும் ஒவ்வொரு முறையும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இம்முறைய புத்தகக் கண்காட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.

நூல் வெளியீடுகள் நடைபெறவுள்ளன. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொள்ள முடியும். அதேபோல அறிவு ரீதியான பட்டிமன்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புத்தகம் வாங்க வருபவர்கள் தமது அறிவை விருத்தி செய்து கொள்வதற்காக இந்த ஏற்பாடு என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள். புதிய தகவல்களைத் தரக் கூடிய தெரு நாடகங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. புத்தகங்களுக்குள் சுழியோடிக் களைத்துப் போனவர்களுக்கு பின்னேரம் 04 மணி முதல் இரவு 09 மணி வரை கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வருகைதருபவர்களது உள்ளக் கிடக்கைகளை வெளியிடுவதற்கான சுவர்ச் சஞ்சிகை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்களது கவிதைகளையும் ஆக்கங்களையும் இதில் வடிக்கலாம். அனைத்தையும் சேகரித்து இது ஒரு நினைவு மலராக வெளியிடப்படும் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.
இந்த ஏற்பாடுகளுக்கு மத்தியில் புத்தகம் ஒன்றை புதிதாக வாங்குவதற்கும் மறக்க வேண்டாம். கடந்த வருடத்தை ஏற்பாடுகள் எல்லாமே உயர்ந்ததாக இருப்பது போலவே புத்தகங்களின் விலையும் உயர்வாகத் தான் இருக்கப் போகிறது. ஆனாலும் இந்த வாய்ப்பை ஒருவருடமாக எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு இது ஒரு பொருட்டல்ல.

புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கையில் வளர்ச்சியும் வீழ்ச்சியும் சமூகத்தின் வாசிக்கும் ஆர்வத்தைக் காட்டுகிறதா, அல்லது பொருளாதார நிலையைக் காட்டுகிறதா என்பதை புத்தகக் கண்காட்சி முடிந்த கையோடு ஆய்வது பொருத்தம்.

About the author

Web Writer

Leave a Comment