செய்னுலாப்தீன் நிஹாஸ் – ஆய்வுக்கும் உரையாடலுக்குமான நிலையத்தின் (CDR) மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர்
செய்னுலாப்தீன் நிஹாஸ் அவர்கள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை திரு/பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலையிலும் இரண்டாம் நிலைக் கல்வியை திரு/கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கற்றுள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டத்தையும் (B.A), இந்திய மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் முதுமானிப்பட்டத்தையும் (M.A) பூர்த்தி செய்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாடசாலை ஆசிரியராக கடமையாற்றியுள்ள இவர், தற்போது ஆய்வுக்கும் உரையாடலுக்குமான நிலையத்தின் (CDR) மக்கள் தொடர்பாடல் பணிப்பாளராகவும், கல்வித்துறை சார்ந்த வளவாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார். செய்னுலாப்தீன் நிஹாஸ் அவர்கள் மீள்பார்வை பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இங்கு தரப்படுகிறது.
நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி
ஆய்வுக்கும் உரையாடலுக்குமான நிலையம் CENTRE FOR DIALOGUE AND RESEARCH (CDR) உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை சற்று தெளிவுபடுத்த முடியுமா?
இது எமது சமூகத்தில் காணப்படும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இலங்கை 30 வருடகாலமாக இனப்பிரச்சினையை எதிர்கொண்டு வந்தது என்ற வகையில் மக்கள் மத்தியில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளை பேசித்தீர்ப்பதற்கான வழிமுறையாகவும், தங்களது பிரச்சினைகளை நேருக்கு நேராக நின்று உரையாடும் கலாசாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் அடுத்தவர்களது பிரச்சினைகளுக்கான நியாயங்களை உணர்ந்துகொள்ளும் வகையில் இந்தக் கலாசாரத்தை இந்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் ஆய்வுக்கும் உரையாடலுக்குமான நிலையம் CENTRE FOR DIALOGUE AND RESEARCH (CDR) உருவாக்கப்பட்டது.
ஆய்வுக் கலாசாரம் என்பது இன்று அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படும் முக்கியமானதொரு செயற்பாடாக காணப்படுகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் ஆய்வுக் கலாசாரம் என்பது மிகவும் பலவீனமான பகுதியாக காணப்படுகின்றது. எனவே இவ்விரண்டு அடிப்படைகளையும் மிக முக்கியமாக கொண்டு இந்நிலையம் செயற்பட்டு வருகிறது.
ஆய்வுக்கும் உரையாடலுக்குமான நிலையத்தின் CENTRE FOR DIALOGUE AND RESEARCH (CDR) பணிகளை சற்று குறிப்பிடுங்கள்…
எமது நாட்டை பொறுத்தவரையிலும் முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையிலும் ஆய்வுக் கலாசாரம் என்பது மிகவும் பலவீனமான பகுதியாகவே காணப்படுகின்றது. பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆய்வுக் கலாசாரத்தை ஒரு வழிமுறையாகக் கொள்ள வேண்டும் என்ற நோக்கினையும் இந்நிறுவனம் கொண்டிருக்கிறது.
ஆய்வுக்கும் உரையாடலுக்குமான நிலையத்தின் பணிகளை குறிப்பிடுங்கள்…
இந்நிறுவனம் உருவாக்கப்பட்ட காலம் முதல் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் தேசியப் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் துறைசார்ந்த அறிஞர்களை அழைத்து பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக சமூகப் பிரச்சினைகளை நாம் எவ்வாறு தீர்த்துக்கொள்வது? என்பது தொடர்பாகவும், முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம், எல்லை நிர்ணய விவகாரம் பற்றிய பல்வேறு விடயங்களை கலந்துரையாடியுள்ளோம். இவ்வாறு குறிப்பிட்ட காலப்பகுதிகளில் மேலெழுகின்ற பிரச்சினைகள் குறித்து நாட்டில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அவற்றை எப்படிப் பார்க்கிறார்கள்? நாம் எப்படி அவற்றை அணுக வேண்டும்? போன்ற வழிகாட்டல்களை நாம் வழங்கியுள்ளோம்.
இதேபோன்று மாற்றுக் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளுக்கு இடம்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நூல்களையும் வெளியிட்டுள்ளோம். மறைந்த முன்னாள் அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் பாராளுமன்றில் ஆற்றிய உரைகளை தொகுத்து ஆங்கில மொழியில் ஒரு நூலை வெளியிட்டோம். வடகிழக்கு இணைப்பு, தமிழ் முஸ்லிம் உறவுகள் போன்ற விடயங்கள் அவதானிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஸ்டாலின் அவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை தொகுத்து கிழக்கின் சுயநிர்ணயம் என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டோம். இஸ்லாமிய அரசியல் பரப்பில் இன்று அவசியமாக உள்ள, மாறுபட்ட அரசியல் விடயங்களை எவ்வாறு வித்தியாசமான கோணங்களில் பார்க்க வேண்டும் என்பது தொடர்பாக சகோதரர் ஸகீ பௌஸ் எழுதிய இஸ்லாமிய சிந்தனையின் அண்மைக்காலப் போக்குகள் என்ற நூலையும் வெளியிட்டு வைத்தோம்.
ஆய்வுக்கும் உரையாடலுக்குமான நிலையத்தின் எதிர்காலத் திட்டங்களை சுருக்கமாக குறிப்பிட முடியுமா?
CDR நிறுவனத்தை பொறுத்தவரையில் ஏலவே குறிப்பிட்டது போன்று தேசம் சம்பந்தப்பட்ட மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து கூடுதல் அவதானம்செலுத்தவுள்ளது. அண்மைக்காலமாக எமது நாட்டில் இனங்களுக்கிடையில் வித்தியாசமான முறுகல் நிலை காணப்படுகிறது. சிங்கள முஸ்லிம் உறவுகளை பாதிக்கும் வகையிலான கருத்துப்பறிமாற்றங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல்களை தோற்றுவிப்பதற்கான முஸ்தீபுகளாகவே நாம் இவற்றை பார்க்கின்றோம். எனவே சமூகங்களுக்கிடையில் உறவாடல் நிகழ்ச்சிகளை அதிகரித்து, அரசியல் தலைமைள் மற்றும் துறைசார்ந்த கல்விமான்கள் இந்த விடயத்தில் கவனம்செலுத்த வேண்டும் என்பதற்கான உரையாடல்களை இன்னும் அதிகரிக்கவுள்ளோம். ஆய்வுக் கலாசாரத்தை எல்லா சமூக மட்டத்திலும் கொண்டு வருவது தொடர்பில் எமது நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் வெளிநாடுகளின் உதவிகளை பெற்று இலங்கையை அபிவிருத்திசெய்ய வேண்டும் என்ற கருத்துப்போக்கில் செயற்பட்டு வந்துள்ளன. அண்மைக்காலமாக எமது நாட்டின் அரசியல் தலைமைகள் எந்தவிதமான ஆய்வுநோக்களும் இன்றி தாண்தோற்றித்தனமான முறையில் கட்சிகளையும் தங்களையும் முதன்மைப்படுத்தி அபிவிருத்தி என்ற மாயையில் அதிகளவில் கடன்பெற்றுள்ளனர். இதனால் நாடு மிகப்பெரும் கடன் சுமையில் தள்ளப்பட்டுள்ளது. இன்று எமது நாடு வருமானத்தில் 80 வீதமான பகுதியை கடனை திருப்பிச்செலுத்த பயன்படுத்துகிறது. இது மிகவும் துர்ப்பாக்கிய நிலையாகும். சரியான ஆய்வு முயற்சிகளும் திட்டமிடலும் இல்லாத ஒரு நிலைமையின் காரணமாக ஏற்பட்ட விடயமாகவே இதனை நோக்குகிறோம்.
நாடு மிகப்பெரும் கடன் சுமையில் தள்ளப்பட்டுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு நீங்கள் எவ்வாறான வழிமுறைகளை முன்வைக்கின்றீர்கள்?
எந்தவொரு நாடும் சரியான முறையில் ஆட்சிசெய்யப்படுகின்ற போது இன்னுமொரு நாட்டிடம் தங்கியிருக்கக்கூடிய, மந்தநிலையடையக்கூடிய நிலைமைகள் காணப்படாது. பிரதானமாக ஊழலற்றதொரு அரசாங்கத்தில் பொருளாதார ரீதியான அபிவிருத்திகளை எதிர்பார்க்க முடியும். எமது நாட்டுக்கு தேவையான வகையில் இந்நாட்டின் வளங்களை அடிப்படையாக வைத்து நீண்ட திட்டமிடல்களையும் வருமானம் தரக்கூடிய செயற்திட்டங்களையும் செயற்படு;துகின்ற போது எமது நாட்டிலிருந்து மிகப்பெரிய அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியும். இதேபோன்று கடன்பெறுவதாக இருந்தாலும் திருப்பிச் செலுத்தும் இயலுமைகளை கருத்திற்கொண்டு, அபிவிருத்தித் திட்டங்களின் வருமானங்களை கவனத்திற்கொண்டும் கடன்களை பெறுவதாக இருந்தால் சிறந்ததாக இருக்கும்.
எமது சொந்த வளங்களையும் உழைப்பையும் கொண்டு, எமது நாடு விவசாய நாடு என்ற வகையில் விவசாயத்தையும், கைத்தொழிலையும் தொழில்நுட்பத்தையும் எம்மைச் சூழவுள்ள கடல்வளத்தைம், அதிலுள்ள கனிய வளங்களையும் பெற்றுக்கொள்வதினூடாக நாட்டையும் மக்களையும் கடன் சுமையிலிருந்து மீட்க முடியும். கல்விமான்கள் என்ற வகையில் அதிகாரிகளும், துறைசார்ந்த நிபுணர்களும் மக்களும் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எமது நாட்டை கடன் சுமையிலிருந்து மீட்கலாம்.
முஸ்லிம் சமூக அரசியல் குறித்த உங்களது பார்வை என்ன?
சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதி முதல் முஸ்லிம் சமூக அரசியல் பெரும்பான்மைக் கட்சிகளுடனும், வடகிழக்கில் தமிழ் மக்களுடனும் இணைந்ததாக காணப்பட்டது. ஆனால் பெரும்பான்மைக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட பிளவுகள், இனரீதியான கட்சிகளின் தோற்றங்களுக்கு பின்னர் இலங்கையில் முஸ்லிம் அரசியலில் 90 களுக்கு பிறகு தனியான அரசியல் பயணம் ஆரம்பிக்கப்பட்டதை காண முடிகின்றது. முஸ்லிம்களுக்கான அரசியல் பயணம் என்பது வெறுமனே முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமான ஒரு அரசியல் பயணமாக ஆரம்பிக்கப்பட்டதனாலும், தேச நலனும் ஏனைய சமூகங்களுடனான உறவாடலும் இரண்டாம் தரத்துக்கு தள்ளப்பட்டதனாலும் இலங்கை முஸ்லிம் தனிக் கட்சிகளை ஏனைய சமூகங்கள் வித்தியாசாமான பாணியில் நோக்கும் போக்கினை அண்மைக்காலமாக காணமுடிகின்றது.
தேச நலனோடு இணைந்த வகையில் அடுத்த சமூகங்களுடன் உறவாடுவதன் மூலம் முஸ்லிம் கட்சி அரசியலை நாம் வழிநடத்தவில்லை என்ற குறைபாடு காணப்படுகின்றது. எனவே அடுத்த சமூகங்களின் கருத்துக்களையும் உள்வாங்கும் சமநிலையான போக்கும் எமது முஸ்லிம் அரசியலில் உருவாக வேண்டும் என்ற கருத்தை கூற விரும்புகின்றேன்.
இலங்கை அரசியலை நீங்கள் எப்படிப்பார்க்கின்றீர்கள்?
சுதந்திரத்திற்கு பின்னரான காலம் முதல் இன்று வரை கட்சி நலன் சார்ந்ததாகவும், அடுத்த தேர்தலில் வெல்வதற்கான வழிமுறைகளை கொண்டதாகவுமே அரசியல் யாப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த இடத்திலிருந்து விடுபடாத வரை இலங்கைக்கு அரசியல் விமோசனம் இல்லை. எனவே ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகள் சிந்திப்பது போல நாட்டு மக்களின் கல்வி, பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது? என்பது பற்றி சிந்திக்கக் கூடிய விடயங்களில் அரசியல்வாதிகள் கவனம்செலுத்த வேண்டும். உதாரணமாக 4 பக்கங்களும் கடலால் சூழப்பட்ட எமது நாடு இன்றுவரைக்கும் வெளிநாடுகளிலிருந்து மீன் இறக்குமதி செய்கிறது. எமது வளம் பற்றி எவ்வித கரிசனையும் இல்லாமல் தன்னுடைய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்கிறது. எனவே அரசியல்வாதிகள் நாட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
இறுதியாக இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு கூற வரும் விடயங்கள் என்ன?
முக்கியமாக இரண்டு விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன். ஓன்று முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஓவ்வொரு பிரச்சினைகளையும் ஆய்வுநோக்கில் அணுகி அதற்கான தீர்வுகளை காண்பதற்கான வழிமுறைகளை முஸ்லிம் சமூகமும் நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் ஆரம்பித்து செயற்பட வேண்டும். எமது சமூகம் பின்தங்கிய சமூகமாக உள்ளது. குறிப்பிட்ட பிரச்சினைக்கு சரியாக தீர்வாக ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் கலாசாரம் பின்பற்றப்பட வேண்டும். இரண்டாவது, நாங்கள் சிறுபான்மையாக வாழுகின்றோம் என்ற வகையில் அடுத்த சமூகங்களொடு உறவாடுவதற்கும், நாட்டின் தேசிய பிரச்சினைகளில் எம்மை முதன்மைப்படுத்தியவர்களாக அடுத்த சமூகங்களோடு சமாந்தரமாக பயணிக்கின்ற கலாசாரத்திற்கும் நாம் மாற வேண்டும் என்ற விடயத்தை குறிப்பிடுகின்றேன். நாம் கல்வி ரீதியிலும் பின்தங்கிய சமூகமாக உள்ளோம். இதனையும் முதன்மைப்படுத்திச் செயலாற்ற வேண்டும் என்ற விடயத்தையும் குறிப்பிட விரும்புகின்றேன்.