Features ஷரீஆ

முஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கும்

Written by Administrator

 – முஹம்மத் பகீஹுத்தீன் –

அல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். தான் நாடியதை சிறப்புக்குரியதாக தெரிவு செய்கின்றான். அவனது நாட்டத்தில் யாரும் தலையிட முடியாது. அந்த வகையில் வானவர்களில் ஜிப்ரீல் (அலை) சிறுப்புக்குரியவர். நபிமார்களில் எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் சிறப்புக்குரியவர்கள். மர்யம் (அலை) அவர்களை அல்லாலஹ் உலகில் சிறந்த பெண்மணியாக தெரிவு செய்தான்; மக்கா, மதீனா, பாலஸ்தீன் போன்ற இடங்கள் அல்லாஹ் தெரிவு செய்த புனித இடங்களாகும். காலங்களில் சிறந்தது புனிதமான நான்கு மாதங்கள். மாதங்களில் சிறந்தது ரமழான் மாதம். நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை. நேரங்களில் சிறந்தது ஸஹர் வேளை. இவை இறைவன் தெரிவு செய்து தந்துள்ள சிறப்புக்குரிய காலங்களாகும். அல்குர்ஆன் கூறும் புனித மாதாங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். முஹர்ரம் இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதம். அது சாந்தி சமாதானத்தின் அடையாளம். அமைதி என்ற சுப செய்தியோடு இஸ்லாமிய புத்தாண்டு பிறக்கிறது. அதன் சிறப்புக்களையும், அது ஏன் புனிதம் பெற்றுள்ளது, அந்த மாதங்களை கௌரவிப்பது எவ்வாறு என்பதையும் விளக்குவதே இந்த ஆக்கம்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்புக்கள்:

அல்குர்ஆன் சூரா தௌபாவில் மாதங்கள் குறித்து பின்வருமாறு கூறுகிறது. ‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என அவனது பதிவுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. அந்த நான்கு மாதங்களில் மோதல்களை ஹராமாக்கிய இந்த தீனுல் இஸ்லாம் தான் சீரான, நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்பவர்கள் புனித மாதங்களை கண்ணியப்படுத்தாது உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறைபயம் கொண்ட தக்வா உள்ளவர்களுடனே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ (9:36)

நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜுப் பேருரையில் பின்வருமாறு கூறியதாக அபூபக்கர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாள் முதல் அவனது விதிப்படியே காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. மூன்று மாதங்கள் தொடராகவும் ஒன்று இடையில் தனியாகவும் அமைந்துள்ளது. தொடராக வரும் மாதங்கள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் என்பனவாகும். தனியாக வருவது ரஜப் மாதம் ஆகும். அது ஜமாதுல்ஆகிர் மாதத்திற்கும் ஷஃபான் மாதத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது’. (புகாரி, முஸ்லிம்).
கண்ணியமிக்க இக்காலப்பகுதியை உரியமுறையில் பயன்படுத்தி இறை திருப்தியை பெற முயற்சிக்காமலிருப்பது மிகப் பெரும் அநியாயமும் கைசேதமும் ஆகும் என அல்குர்ஆன் சூறா தவ்பா 36ம் வசனத்தில் குறிப்பிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நீங்கள் நோன்பு நோற்பதற்கு ரமழான் மாதத்தை அடுத்து மிகச் சிறந்த மாதம் முஹர்ரம் மாதமாகும். தொழுகையில் பர்ழான தொழுகையை அடுத்து மிகச் சிறந்த தொழுகை இரவு நேர (கியாமுல்லைல்) தொழுகையாகும்’. (முஸ்லிம்)

புனித மாதங்கள்; ஏன்? எதற்கு?

இனி, ஏன் இந்த நான்கு மாதங்களும் கண்ணியப்படுத்தப் பட்டுள்ளன? அதற்கான காரணங்கள் யாது என்பதை பின்வருமாறு சுருக்கமாக விளக்கலாம்.

  • பாதுகாப்பு

மனித வாழ்வின் அடிப்படை தேவையாகும். வாழும் இடம், பயணிக்கும் பாதை, தங்குமிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை போலவ அவனது உயிர் உடமைகள் பாதுகாப்பாக இருப்பது அவசியத் தேவையாகும். மனித வாழ்வின் பாதுகாப்பிற்கும், இஸ்திரத்தன்மைக்கும் உத்தரவாதமளிக்கப்படுவது இன்றியமையாததாகும்.

அந்த வகையில்தான் புனித மக்கா நகர் பாதுகாப்பு வலயமாகவும், ஒரு வருடத்தின் மூன்றிலொரு பகுதி பதுகாப்பு உத்தரவாதம் மிக்க புனித காலப்பகுதியாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அதாவது நான்கு மாதங்கள் யுத்ததங்கள் இல்லாத சமாதான காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதில் எந்தவிதமான சண்டடைகளும் கிடையாது. முஹர்ரம் வருடத்தின் முதல் மாதம்;. ஆதன் பொருள் உலக சமாதானத்தின் அடையாளமாக இஸ்லாமிய புத்தாண்டு பிறக்கிறது.

  • உலகில் பரந்து வாழும் மனிதர்கள்

தூரப்பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பாக இறையில்லத்தை நோக்கி வந்து ஹஜ், உம்ரா கடமைகளை நிறைவேற்றிவிட்டுச் செல்வதற்கான உத்தரவாதம் வழங்கும் நோக்கில் இந்த நான்கு மாதங்களிலும் மோதல் தவிர்ப்பு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் துல்கஃதாவில் போராட்டங்கள், வன்முறைகள், அத்துமீரல்கள், அநீதிகள், பாவச்செயல்கள் போன்றவற்றிலிருந்து முற்றாக விலகி விடுபடுவதன் மூலம் மனிதர்கள் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் இறையில்லத்தை நோக்கி வர முடியும். அவ்வாரே துல்ஹஜ் மாதத்தில் அதே பாதுகாப்பு உணர்வுடன் ஹஜ் கடமைகளை நிறைவேற்றவும் பின்னர் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் முஹர்ரம் மாதம் முழுவதும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லவும் முடிகிறது. இங்கு இறை அடியார்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக காலமும் இடமும் முழுப்பாதுகாப்பு உள்ளவைகளாக உத்தரவாதப்படுத்தப்படுகின்றன. அவ்வாறே இடைப்பட்ட காலப்பகுதியில் உம்றா கடமையை நிறைவேற்ற வருவோருக்கு பாதுகாப்பு உத்தரவாதமாக ரஜப் மாதம் புனிதமாதமாக ஆக்கப்படடிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

  • மேலும் சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு

மட்டும் உரியதாகும். அவன் நாடியதை ஹலாலாக்குகிறான், நாடியதை ஹராமாக்குகிறான். மேலும் தான் நாடியதை கண்ணியப்படுத்துகிறான், இவ்வதிகாரத்தில் வேறு யாருக்கும் பங்கு கிடையாது. இறைச்சட்டங்களில் மறைந்திருக்கும் ஞானம் சிலபோது மனித அறிவுக்குப் புரியலாம் அல்லது புரியாமலிருக்கலாம். ஆனால் அச்சட்டங்களில் கைவைக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது. குறித்த இந்த நான்கு மாதங்களையும் புனிதமாக தந்திருப்பது இறை நாட்டமாகும். அதை யாராலும் மாற்ற முடியாது. எனவே தான் அல்லாஹுத்தஆலா கண்ணியப்படுத்திய மாதங்களை அவர்கள் தங்களினிஷ்டப்படி மாற்றிக் கொண்டமை குப்ராகும் என சூறா தவ்பா 37 ம் வசனம் குறிப்பிடுகிறது. இறை நாட்டம் என்பது முழுமையான சுதந்திரம் கொண்டது. அடியார்கள் இறை கட்டளைக்கு அடிபனிந்து செயற்படுவதே இங்கு நோக்கமாக அமைகிறது.

  • மற்றொரு கோணத்தில், இது அல்லாஹ்வின்

சோதனையாக இருக்கலாம். அதாவது தனது அடியார்களில் தனது கட்டளைக்கு முற்றிலும் வழிப்பட்டு தான் விதித்த வரம்புகளை மீறாது, அவற்றின் கண்ணியத்தைப் பேணி நடக்கக்கூடிய உண்மையான விசுவாசிகள் யார்? என்பதை பரீட்சித்துப் பார்ப்பதற்காக இருக்கலாம். மறைவானவற்றை நம்பக்கூடிய, இறைவனுக்கு அஞ்சக் கூடிய ஓர் உண்மையான விசுவாசியால் மட்டுமே இறை வரம்புகளை மீராமல் அவற்றின் கண்ணியத்தைப் பேணி நடக்க முடியும். அதுவே மிகச் சிறந்தது என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது: ‘….மேலும், எவரேனும் அல்லாஹ்வினால் புனிதமானவை என்று நிர்ணயிக்கப்பட்டவைக்கு கண்ணியம் அளித்தால், அது அவருடைய அதிபதியிடத்தில் அவருக்கே பலனளிக்கத்தக்கதாகும்’ (சூரதுல் ஹஜ்:30)

இஸ்லாமிய புத்தாண்டின் நுளைவாயிலினிலே

தற்போது ஹிஜ்ரி 1440ம் ஆண்டு மலர்கிறது. கடந்த ஆண்டை மீளாய்வு செய்து இந்த ஆண்டிற்காக திட்டமிட பெருத்தமான நேரம் இது.

அழிந்து போகும் வாழ்விற்கு திட்டமா? என்ன இது என எமது உள்ளம் கேள்வி எழுப்பும். ஆனால் வாழ்கையில் இலக்கு நோக்கி பயணிக்க திட்டம் போடுவது ஒரு கட்டாயக் கடமை என்பதை வாழ்வியல் நியதி வேண்டி நிற்கின்றது. இறைவேதம் அல்குர்ஆன் திட்டமிட்ட வாழ்வே அர்த்தமுள்ளதாக அமையும் என அழுத்தமாக கூறுகிறது.

வாழ்கை ஒரு சோதனைக் களம் என்பதே இஸ்லாம் கற்றுத்தரும் தெளிவான செய்தி. பரீட்சை முடிய முன்பு திட்டமிட்டு மிகச்சரியாகவும் மிக அழகாகவும் செயற்பட அது தூண்டுகிறது. ஓவ்வொரு ஆத்தமாவும் நாளைய நிரந்தர வாழ்விற்காக முன்கூட்டியே என்ன சமர்ப்பித்துள்ளது என்பதை நோக்கட்டும் என இறை மறை அல்குர்ஆன் போதிக்கின்றது. உலகில் வாழும்போது நிஜமான மறுமை வாழ்விற்காக மிக நல்ல அமல்களை, மரணித்த பின்னரும் நன்மை தரும் ஸதகா ஜாரியா எனப்படும் நிலையான தர்மங்களை அனுப்பிவைக்கவேண்டியுள்ளது. இது திட்டமிடலை வேண்டி நிற்கின்ற ஒரு விடயம். இறை தூதரின் ஒவ்வொரு நகர்வும் திட்டமிட்ட இலக்கு நோக்கிய பயணமாகவே காணப்பட்டது. எனவே எமது மறுமை வாழ்வுக்காக திட்டமிட்டு செயற்படுவோம்.
வாழ்கை என்பது சில நாட்கள். ஒரு நாள் கழியும்போது உன்னில் ஒரு பகுதி நீங்கிவிடுகிறது. நீ ஒரு எட்டு முன்னெடுத்து வைக்கும்போது புதைகுழியை நோக்கி நெருங்குகிறாய். இந்த ஆண்டின் இறுதி நாட்கள் நற்செயல்களுடன் முடிவடைவது எவ்வளவு நல்லது! அடுத்த ஆண்டின் ஆரம்பம் இறைவழிபாடுகளுடன் துவங்குவது எவ்வளவு அழகானது!

மலர்ந்தும் மலராத இந்த வாழ்வு நிறைவேறாத ஆசைகளுடன் பாதியிலே வாடிவிடும். ஆனால் ஆன்மா மரணிப்பதில்லை. அது மீண்டும் மண்ணறையில் இருந்து எழுந்து வரும். விடிந்தும் விடியாத ஒரு காலைப் பொழுது அல்லது மறைந்தும் மறையாத ஒரு மாலைப் பொழுது தான் வாழ்ந்தோம் என்று கூறும். இது தான் சத்தியம். இந்த குறுகிய உலக வாழ்வு சோசம் நிறைந்ததாகவே இருக்கும். இந்த உண்மையை புரிந்து கொள்வோம். அதில் வசந்தத்திற்கான பாதையை அமைத்துக் கொள்வதே மனித வாழ்வின் திட்டமாக அமைய வேண்டும்.

சுய விசாரணை

1. கடமையான வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்துவோம். தொழுகை, நோன்பு, போன்ற கடமைகளில் குறை இருக்கிறதா எனப்பார்ப்போம். முதலில் அதனை சீர்செய்து கொள்வோம்.

2. பாவங்கள் வாழ்வின் கறைபடிந்த பக்ககங்கள். அதை தௌபாவின் மூலம் அகற்றிவிடுவோம். நன்மைகள் அதிகம் செய்து தீமைகளை நீக்கி விடுவோம்.

3. அவையவங்களை விசாரனை செய்வோம். கை, கால், கண், காது, வாய், வயிறு என அனைத்து உறுப்புக்களையும் விசாரிப்போம். யார் விருப்பத்திற்காக செயற்படுகறது என்பதை அவதானிப்போம். இறை திருப்தியை அடிப்படியாக கொண்டுள்ளதா என்பதை உன்னிப்பாக கவனிப்போம்.

4. பொடுபோக்கு, அலட்சியமாக வாழ்வது பெருந் தவறு என்பதை உணர்வோம். அதிகமாக திக்ர் செய்வதன் மூலம் உள்ளத்தை நிறப்புவோம்.

5. ஒவ்வொரு செயலுக்கு முன்பும் பின்பும் விசாரனை செய்யும் பழக்கத்தை உருவாக்குவோம். யாருக்காக செய்கிறோம். ஏன் செய்கிறோம். மறுமையில் இதற்கு எப்படி பதில் சொல்லப் போகின்றோம் என யோசிப்போம்.

6. மலரவிருக்கும் புத்தாண்டு இலக்கு நோக்கிய பயணமாக அமையட்டும். இந்த ஆண்டின் இலக்கு உயர்ந்த சுவர்க்கமாக ஏன் இருக்கக் கூடாது? ஜன்னதுல் பிர்தௌஸை அடைவது தான் இந்த வருட உயர்ந்த ஆசை என்ற கனவுடன் வாழ முற்படுவோம்.

7. குடும்பம் சமூகக் கட்டமைப்பில் மிக முக்கிய ஒரு அலகு. அதன் பாதுகாப்பு அமைதி பேணப்படுவது கட்டாயக் கடமை. எனவே குடும்ப உறவுகளைப் பேணி, கசப்புணர்வுகளை மறந்து, சமாதானமாகி வாழ்வதற்கு சிறந்த காலப்பகுதியாக இந்த மாதங்களை அமைத்துக் கொள்வோம்.

புத்தாண்டுக்கான கொண்டாடங்கள்

எமது நாட்டுச் சூழலில் சாந்தி சமதானம் பற்றிய எண்ணக்கருவை சுமந்து வரும் புத்தாண்டை எப்படி நடைமுறைக்கு கொண்டு வராலாம் என்று சிந்திப்பது காலத்தின் தேவையாகும். நாட்டில் சமாதானத்தை வலியுறுத்தும் பாடல்கள், நாடகங்கள், கவிதை அரங்குகள், பட்டிமன்றங்கள் போன்ற கலை கலாச்சா நிகழ்ச்சிகளை படைப்பதன் ஊடாக இஸ்லாமிய புத்தாண்டின் மகிமையை வெளிக்ககொணர முடியும். உண்மையில் அவை தாக்கமிக்கதாகவும் அமையும்.

ஆஷூரா நோன்பின் சிறப்புக்கள்

முஹர்ரம் மாதம் 10 ம் நாள் ஆஷுரா தினம் என அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் நோன்பு நோற்பது முக்கியமான சுன்னாவாகும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்றிருந்ததைக் கண்டார்கள். நீங்கள் ஏன் நோன்பு நோற்கிறீர்கள்? என அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இது ஒரு மகத்தான நாளாகும். நபி மூஸாவையும் அவர்களுடைய சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனது பட்டாளத்தையும் அழித்த நாளாகும். அதற்காக நபி மூஸா (அலை) நோன்பு நோற்றார்கள், எனவே நாங்களும் நோற்கிறோம் எனக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: அப்படியெனில் மூஸா (அலை) அவர்களுக்கு உங்களை விட நாம் அதிகம் அருகதையுடையவர்கள் எனக் கூறி விட்டு தானும் நோன்பிருந்ததுடன் தனது தோழர்களையும் நோன்பிருக்குமாறு ஏவினார்கள்’. (புகாரி, முஸ்லிம்)
மேலும் அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள் ‘நபி (ஸல்) அவர்களிடம் ஆஷுரா நோன்பு பற்றிக் கேற்கப்பட்டது, அது கடந்த வருடத்தில் இடம்பெற்ற (சிறு) பாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமையும் என குறிப்பிட்டார்கள்’. நூல் : முஸ்லிம்

ஆஷுரா நோன்பின் வரலாறு:

ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது மாத்திரம் கடமையானது.

ஆஷுரா நோன்பு மக்கா காலப் பிரிவில் நபிகளாருக்கு மாத்திரம் கடமையாக இருந்தது. அத்தினத்தில் நபி (ஸல்) அவர்கள் தனியாக தான் மாத்திரம் நோன்பு வைப்பார்கள். வேறு யாருக்கும் அந்த நோன்பை நோற்குமாறு கட்டளையிடவில்லை. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘ நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தை மிகுந்த ஆசையுடன் எதிர்பார்த்து அத்தினத்தில் நோன்பு வைப்பார்கள். நபிகளார் வேறு எந்த நாட்களுக்கும் அவ்வாறான முக்கியத்துவத்தை கொடுத்ததில்லை’. (புகாரி) ஆனால் குறைஷிகளிடம் இந்த நாளில் நோன்பு பிடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகிய இரண்டு கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது.

இரண்டாம் கட்டமாக மக்கள் மீதும் விதியாகியது.

இறை தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு புலம் பெயர்ந்து வந்த போது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பதை அவதானித்தார்கள். அந்த நாள் நோன்பு வைப்பதற்கு அவர்களை விட நாம் அருகதையுள்ளவர்கள் என்ற வகையில் நோன்பு இருக்குமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள். அவ்வேளை யார் உணவை உட்கொண்டிருந்தார்களோ அவர்களுக்கு அந்த நாளின் எஞ்சியிருந்த பகுதியில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரபீஃ பின்த் முஅவ்வித் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஆஷுரா நாள் காலைப் பொழுதில் நபி (ஸல்) அவர்கள் மதீனா நகரை சூழவுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு என்னை அனுப்பி, யார் நோன்பு நோற்றார்களோ அவர்கள் தங்களது நோன்பை பூரணமாக நிறைவேற்றும் படியும், யார் நோன்பு வைக்கவில்லையோ அவர்கள் இந்த நாளின் எஞ்சிய பகுதிகளில் நோன்பு பிடிக்கட்டும்.’ என அறிவிக்குமாறு பணித்தார்கள். அதன் பிறகு நாம் ஆஷுரா தினத்தில் கட்டாயமாக நோன்பு வைப்பவர்களாக இருந்தோம். எமது சிறார்களுக்கும் ஆஷுரா நோன்பை நோற்க வைத்தோம். அவர்கள் பசிக்குது என்று சாப்பாடு கேட்டால் பருத்திப் பஞ்சால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை கொண்டு பராக்குக் காட்டி நோன்பை முழுமையாக நோற்பதற்கு பயிற்சியளித்தோம் என அறிவித்துள்ளார்கள். (ஆதராம் புகாரி)

மூன்றாவது கட்டமாக ஆஷுரா நோன்பு சுன்னத்தாக்கப்பட்டது.

ரமழான் மாத நோன்பு கடமையான போது ஆஷுரா நோன்பு ‘கடமை’ என்ற அந்தஸ்திலிருந்து சுன்னத் என்ற இடத்திற்கு வந்தது. ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ரமழான் மாத நோன்பு கடமையாகுவதற்கு முன்பு நாம் ஆஷுரா நோன்பையே நோற்று வந்தோம். ரமழான் நோன்பு விதியாக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ யார் ஆஷுரா நோன்பை தன்னார்வத்தோடு நோற்பதற்கு விரும்புகிறாரோ அவர் அதனை நோற்கட்டும். யார் விட்டுவிட விரும்புகிறாறோ அவர் அதனை விட்டுவிடட்டும்.’ (ஆதராம் புகாரி) ஆஷுரா நோன்பு ஒரோ ஒரு வருடம் மாத்திரமே மக்கள் மீது கடமையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தாஸுஆ’ நோன்பு

புனித முஹரம் மாதத்தின் 9ம் நாள் ‘தாஸுஆ’ என அழைக்கப்படுகிறது. 9ம் நாள் நோன்பு நோற்பதும் சுன்னத்தாக்கப்பட்டிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் 9ம் நாளும் நோன்பு நோற்பேன்’. (முஸ்லிம்). ஆனால் அடுத்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் வபாதாகி விட்டார்கள்.

‘தாஸுஆ’ எனப்படும் 9ம் நாள் நோன்பு நோற்பதற்கு நபி (ஸல்) ஏன் ஆசைவைத்தார்கள் என்பதற்கு பல நியாயங்களை அறிஞர்கள் முன்வைத்துள்ளனர். அதில் மிகவும் ஏற்புடையாக இருப்பது யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்கு என்தே. இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கின்றார்கள் ‘ஆஷுரா தினத்தில் நோன்புவையுங்கள். அதில் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். எனவே அதற்கு முன்பு ஒரு நாள் அல்லது அதற்கு பின்பு ஒரு நாள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் முஸ்னத் அஹ்மத். இந்த அறிவிப்பு ‘ஹஸன்’ என்ற தரத்தில் உள்ள ஸஹீஹான ஹதீஸ் என ஹதீஸ் துறை வல்லுனரான அஹ்மத் ஷாகிர் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அல்லாமா அல்பானி (ரஹ்) அவர்கள் இது ஒரு பலவீனமான ஹதீஸ் என்றே தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

ஆஷுரா நோன்பை நோற்பதற்கான ஒழுங்குகள்

மேற் கூரிய ஹதீஸ்களில் இருந்து முக்கிய சுன்னத்தாக உள்ள ஆஷுரா நோன்பை நோற்பதற்கான ஷரீஆ சட்டப்பார்வையை இஸ்லாமிய அறிஞர்கள் பின்வருமாறு கூறியுள்ளனர்.

1) தாஸுஆ எனப்படும் 9ம் நாளும் ஆஷுரா என்படும் 10ம் நாளும் நோன்பு பிடிப்பது மிகவும் ஏற்றமானது. பெரும்பாலான இஸ்லாமிய சட்டத்துறை அpறஞர்கள் இந்தக் கருத்தையே வலியுறுத்தியுள்ளார்கள்.

2) ஆஷுரா எனப்படும் 10ம் நாளும் அடுத்து வரக்கூடிய 11ம் நாளும் நோன்பு நோற்பது வரவேற்கத்தக்கது. காரணம் யூதர்களுக்கு மாறு செய்தல் என்ற இலக்கை இது நிறைவேற்றி வைக்கிறது.

3) 10ம் நாளான ஆஷுரா நோன்பை மாத்திரம் நோற்பது. அந்த நாள் மிகவும் மகிமைக்குரியது என்பதை பல ஹதீஸ்கள் மூலம் மேலே அறிந்து கொண்டோம்.

4) 9ம் நாள், 10ம் நாள், 11ம் நாள் ஆகிய மூன்று தினங்களிலும் நோன்பு வைப்பதும் ஒரு வகையில் அங்கரிக்கப்பட்ட வழிமுறையே என இப்னு உஸைமின் (ரஹ்) அவர்கள் தனது பத்வாவில் விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்கள்.

சத்தியம் வெல்லும்

ஆஷுரா நோன்பு குறித்து வந்துள்ள ஹதீஸ்கள் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சுப செய்தியை சொல்லுகிறது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்றிருந்ததைக் கண்டார்கள். நீங்கள் ஏன் நோன்பு நோற்கிறீர்கள்? என அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இது ஒரு மகத்தான நாளாகும். நபி மூஸாவையும் அவர்களுடைய சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனது பட்டாளத்தையும் அழித்த நாளாகும். அதற்காக நபி மூஸா (அலை) நோன்பு நோற்றார்கள், எனவே நாங்களும் நோற்கிறோம் எனக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அப்படியெனில் மூஸா (அலை) அவார்களுக்கு உங்களைவிட நாம் அதிகம் அருகதையுடையவர்கள் எனக்கூறி விட்டு தானும் நோன்பிருந்ததுடன் தனது தோழர்களையும் நோன்பிருக்குமாறு ஏவினார்கள்’. (புகாரி, முஸ்லிம்)

மேலும் ஒரு ஹதீஸில்: ‘இது ஒரு மகத்தான நாள், அல்லாஹ் மூஸாவையும் அவரது சமூகத்தையும் இந்நாளில் காப்பாற்றினான். பிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா (அலை) அவர்கள் இன்றைய தினம் நோன்பு நோற்றார்கள். நாமும் நோன்பு நோற்கிறோம் என்றார்கள்.

இந்த மாதத்தின் சிறப்பு அமலாக இருக்கும் ஆஷுரா நோன்பு பற்றி குறிப்பிடும் மேற்கூரிய இரண்டு ஹதீஸ்களும் கூட அமைதி, சாந்தி நிலவும் வாழ்வு நிலைத்து நிற்கும் என்ற சுப செய்தியைத்தான் குறிப்பிடுகிறது.

பிர்அவ்ன் உலகில் தோன்றிய மன்னர்களில் மிகக் கொடிய ஒரு சர்வாதிகாரி. மாபெரும் அநியாயக்காரன். அமைதிக்கு பங்கம் செய்த கல்நெஞ்சம் கொண்ட மன்னன். இரத்த வெறி பிடித்த சண்டாளன். கர்வதின் சிகரத்தில் இருந்த பிர்அவ்னின் அழிவை மேற் கூறிய ஹதீஸ் ஞாபகப்படுத்துகிறது. சத்தியம் வெல்லும், அசத்தியம் அழியும். நீதி வெற்றி பெறும், அநீதி மரணித்து விடும். இறுதியில் சாந்தி சமாதானம் எங்கும் என்றும் நிலவும் மார்க்கமாக இஸ்லாம் திகழும் என்ற சுப செய்தியை அது தருகிறது.

இங்கு ஒரு உண்மை புலனாகிறது. இஸ்லாம் ஒரு கொள்கை. அதை பின்பற்றுவதால் கிடைப்பது சாந்தி, அமைதி, நிம்மதியான வாழ்வு. வரலாறு அதற்கு சான்று. மனித நாகரிகங்கள் இந்த உண்மையை கண்கூடாகக் கண்டன. அன்று போன்று இன்றும் சாந்தி வழிக்கு வேராக இருக்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரிகள் இருக்கவே செய்கின்றனர். அவர்கள் இஸ்லாம் என்றால் அதன் மறுபெயர் பயங்கரவாதம் என்று ஊடகங்கள் மூலம் அச்சத்தையும் பயத்தையும் மக்கள் மத்தியில் திணித்துள்ளனர். அது சுத்தப் பொய் என்று பறைசாற்றிக் கெண்டு முஹர்ரம் புத்தாண்டு பிறக்கிறது. ஆம் முஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கும். சாந்தி சமாதானம் நிலவும்.

About the author

Administrator

Leave a Comment