Features Youth சமூகம்

தீக்கு இரையான திகனையில் இருந்து சூரிய அடைப்பொறி கண்டுபிடிப்பு

Written by Administrator

 – அனஸ் அப்பாஸ் –

எஸ்.எச். ரஹ்மாத்தும்மா – என்.எஸ்.எம். சரீப்தீன் தம்பதிகளின் அன்புப் புதல்வர் எம்.எஸ்.எம். சப்ரீன் கண்டி மாவட்டத்தின் திகனை, தியபுபுல பிரதேசத்தை சேர்ந்தவர். 13 வயதான இவர் சூரிய சக்தியில் இயங்கும் அடைப்பொறியை (Solar Power Incubator) கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

இக்கருவி சூரிய படலின் மூலம் மின்னைப் பெற்று அதை மின்கலத்தில் சேமிக்கின்றது. மின்கலத்தினால் இப்பொறிக்கு மின் கிடைக்கப்பெற்று அது இயங்க ஆரம்பிக்கும். சாதாரண அடைப்பொறிக்கு செலவாகும் மின் அதிகம் என்பதால் மின்சார செலவும் அதிகமாக இருக்கும். அதனை நிவர்த்திக்கும் வகையில் இக்கருவி சூரிய சக்தியில் இயங்குகின்றது. இவ் அடப்பொறியின் மூலம் ஒரே தடவையில் 30 முட்டைகளை ஆடை காக்க முடியும்.

ராஜவெல்ல, கும்புக்கந்துர அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்போது தரம்-8 இல் கற்கும் மாணவரான சப்ரீன், கழிவுப் பொருட்களால் புதிய ஆக்கங்களை வித்தியாசமாக அமைப்பதிலும், வீட்டுத் தோட்ட பராமரிப்பிலும் இயல்பிலேயே அதிக ஈடுபாடு கொண்டவர்.

சித்திரப் போட்டிகள், தமிழ், சிங்கள, ஆங்கில தினப் போட்டிகளிலும் சான்றிதழ்களை குவித்துள்ள சப்ரீன், மத்திய மாகாண சபையுடன், பேராதனை பல்கலைக்கழகம் இணைந்து நடாத்திய புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான e-INNO 2016 – 2017 போட்டிகளிலும் சிறப்புப் பரிசு வென்றவர். கணித்தல் தேர்ச்சி “எபகஸ்” பயிற்சிநெறியில் தங்கப்பதக்கம் வென்றவர். தற்போது மாகாண மட்ட சிங்கள தினப் போட்டிக்கு தயாராகி வருகின்றார்.

“அதிக மின் விரயமின்றி இயங்கும் மின் பாரம் தூக்கி”, “சூழல் மாசடைவதை குறைக்கும் வாகனம்” ஆகியவற்றை கண்டுபிடிக்கும் எதிர்கால இலக்குடன் பயணிக்கும் சப்ரீன், இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பீ.ஜே. அப்துல் கலாமை தனக்கான முன்மாதிரியாக குறிப்பிடுகின்றார்.

வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு துணிவிருந்தால் அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது என்றே அர்த்தம்” – டாக்டர் ஏ.பீ.ஜே. அப்துல் கலாம்

அல்ஹம்துலில்லாஹ்! எல்லாம் வல்ல இறைவனுக்கும், பெற்றோர், உறவினர்கள், பாடசாலை அதிபர் அஷ்-ஷெய்க் ரஷாட் (நளீமி), விஞ்ஞான பாட ஆசிரியை திருமதி. ராகினி, வகுப்பாசிரியைகளான திருமதி. லோகினி, திருமதி. ரிபாயா, ஆசிரியை திருமதி ஹசீமா, குறிப்பாக முட்டைகளை அடைகாக்கும் சந்தர்ப்பத்தில் தேவையான மேலதிக அறிவுரைகளை பெறுவதற்கு புத்தகமொன்றை பரிசாக வழங்கிய ஆசிரியை திருமதி. நிஹாரா, தேவையான உதவிகளை செய்து தந்த ஆசிரியை திருமதி. ரத்னாவதி, ஆசிரியர் இம்தியாஸ், அடைகாத்தல் தொடர்பாக அனுபவ அறிவுரைகளை வழங்கிய சகோதரர் ரிம்சான், வழிகாட்டல்களைத் தந்த பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்துறை விரிவுரையாளர் விஜெகுலசூரிய ஆகிய பலருக்கும் இவரது நன்றிகள் நீள்கின்றன.

எதிர்காலத்தில் தான் ஒரு மின் பொறியியலாளராக வர வேண்டும் என்ற இலட்சியத்துடன் பயணிக்கும் சப்ரீன், அதற்காக தன்னை கல்வி ரீதியாக பலப்படுத்தி வருகின்றார்.

“நான் முதலாவது முறையாக பரிசோதனைக்காக அடைகாக்க வைத்த முட்டைகளில் குஞ்சுகளை பெற முடியாமல் போனது. தொடர்ந்து மனம் தளராமல் முயற்சித்ததன் விளைவையே இன்று சாதனையாக கண்டுகொண்டேன்” என்று முயற்சியாளர்களுக்கு வலு சேர்க்கும் அறிவுரை ஒன்றையும் அவர் குறிப்பிட்டார்.

அழிவில், ஆக்கம் ஒன்றைக் கண்டறியும் முயற்சி இது. அண்மையில் இனவாதிகளால் குறி வைக்கப்பட்டு அழிவை எதிர்நோக்கிய திகனை பிரதேசத்தில் இருந்து ஒரு கண்டுபிடிப்பை ஒரு பாடசாலை மாணவனால் உருவாக்க முடிந்திருக்கின்றது என்பது மகிழ்ச்சியுடன் கூடிய உத்வேகத்தைத் தரும் ஒரு செய்தியே. கடினமான சூழ்நிலைகளிலும் கவனமாக அடைகாக்கப்பட்டு இன்று சமூகத்தின் ஒரு சாதனையாக குஞ்சு பொறித்துள்ளார் திகனை சப்ரீன். கண்டுபிடிப்புகள் மக்களைச் சென்றடைந்தால் மட்டுமே வளர்ச்சி என்பது வேகமெடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அதுவே அந்த கண்டுபிடிப்புக்கான உண்மையான அங்கீகாரம். இந்தப் பிஞ்சின் முயற்சிகள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் பயன்தர ஆவண செய்ய வேண்டியது பொறுப்புதாரிகளின் கடமை.

About the author

Administrator

Leave a Comment