அரசியல்

ஜனாதிபதியின் மனிதாபிமானத்துக்கு வரவேற்பு

Written by Administrator

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி பலஸ்தீன மக்களின் பிரச்சினையை மனிதாபிமான ரீதியில் நோக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜனாதிபதி இங்கு உரையாற்றும் போது, சர்வதேச அரசியலில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் பற்றி கதைக்கின்றபோது, குறிப்பாக பலஸ்தீன மக்களின் பிரச்சினை பற்றி கதைக்கின்ற போது, ஐநா சபையும் உலக பலசாலிகளும் தற்போது பின்பற்றும் கொள்கையில், அதைவிட புரிந்துணர்வுடன் கூடிய பரந்துபட்ட நோக்குடன் செயற்பட வேண்டுமென்பதே எனது நம்பிக்கையாகும். பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இலங்கை என்றும் ஆதரவளித்து வந்தது என்பதையும் இங்கே நான் குறிப்பிட்டு கூற விரும்புகிறேன். ஆகவே பலஸ்தீனம் தொடர்பில் ஏற்படுகின்ற பல்வேறு மனிதநேயமற்ற செயற்பாடுகளை கருத்திற்கொண்டு பலஸ்தீன மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு ஐநா சபையும் அனைத்து உறுப்பு நாடுகளும் மனிதநேயம் மிக்க பாரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை மனிதாபிமானம் தொடர்பில் கொண்டிருந்த நிலைப்பாட்டிலான மாற்றமாகக் கொள்ளப்படுகின்றது. பலஸ்தீனில் நடைபெறும் மனித அவலங்களுக்கும் அவர்களுக்கெதிரான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கும்  எதிராக குரல் கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருந்தது. பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிலேச்சத்தனமானது எனக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது இலங்கை அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. அதேபோல இஸ்ரேலின் தலைநகரை ஜெரூஸலத்துக்கு மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இலங்கையின் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர அதற்கு எதிராக வாக்களிக்காமல் தவிர்ந்து கொண்டார். இந்த நிலைமையிலேயே பலஸ்தீன் விவகாரத்தை மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாடு இலங்கையிலுள்ள மனிதாபிமானிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜனாதிபதி ஐ.நா வின் பொதுச் சபையில் உரையாற்றச் செல்லு முன்னர் இலங்கை பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் பலஸ்தீன் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தது. இந்த வேண்டுகோளில் 35 க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர்.

About the author

Administrator

Leave a Comment