அரசியல் சமூகம் பெண்கள்

பெண் காதி நியமனத்துக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம்

Written by Administrator

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தின் போது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின்படி உரிய வயதையடைந்த தகுதியான பெண் காதிகளை நியமிப்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

தகுதி என்பது ஷரீஆவிலும் பிக்ஹிலும் உயர்ந்த கல்விப் பின்புலத்தைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. அவர் சட்டத்தரணியாக இருப்பது கட்டாயமல்ல என்றாலும் அவ்வாறிருப்பது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவரும் அவருக்கு இஸ்லாமிய பிக்ஹ் தொடர்பில் போதுமான அறிவிருந்தால் அவரும் விண்ணப்பிக்க முடியும். உரிய வயது என்பது 40 – 60 வருடங்களுக்குட்பட்டதாகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும் என தேசிய சகவாழ்வு நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்ததாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16 ஆகவும் ஆண்களின் திருமண வயது 18 ஆகவும் அமைவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியிருக்கின்றனர். நீதியமைச்சர் தலதா அதுகோரள தலைமையில் கடந்த வாரம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய போதே இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

காதிகளின் பதவி ஒரு பொறுப்பான பதவி நிலையாகும். வழமையான நீதிமன்ற ஒழுங்குகளுக்கு ஏற்றவாறு இந்த நீதிமன்றமும் அமைய வேண்டும். அதனால் திறமையும் தகுதியுமுள்ளவர்களே இதற்கு நியமிக்கப்பட வேண்டும். இதில் பால்நிலைகள் முக்கியமில்லை. காதிகளாக பெண்கள் நியமிக்கப்படவதனால் பெண்கள் அதிக நன்மையடைவார்கள். ஆனால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இது தொடர்பில் இறுக்கமானதொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த விடயத்தில் நான்கு பிரதான மத்ஹபுகளினதும் வித்தியாசமான நிலைப்பாடுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான இந்தச் சந்திப்பில்  அமைச்சர் பௌஸி, அமைச்சர் ஹக்கீம், பா.உ.எம்.ஏ.எம்.மஹ்ரூப், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவருடைய கருத்துக்களை பா.உ. கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், அமைச்சர் அமீர் அலி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர் எனவும் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் நீதியரசர் சலீம் மர்சூபின் அறிக்கையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய பரிந்துரைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாட்டுக்குரிய விடயங்களில் பொதுவான இணக்கப்பாடொன்றுக்கு வருவதற்காக குழுவின் அங்கத்தவர்களான நீதியரசர் சலீம் மர்சூப், நீதியரசர் ஸலாம் அவர்களையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவையும் பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அழைத்து நீதியமைச்சர் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருடன் ஒரு கலந்துரையாடலை ஒக்டோபர் 11 அல்லது 23 ஆம் திகதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

About the author

Administrator

Leave a Comment