Features ஆசிரியர் கருத்து

மத அடிப்படைவாதத்தை வளர விடக் கூடாது

Written by Administrator
Editorial | 403

இந்தியாவின் வார இதழொன்றுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கிய பேட்டியில் இலங்கைக்குள் இந்துத்துவாவின் கொள்கைகள் இறக்குமதி செய்யப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். நாடு கடந்த ரீதியில் இந்துத்துவாவின் தீவிரக் கொள்கைகளை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதற்கு ஒரு சில இயக்கங்கள் முற்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ள அவர், மத அடிப்படைவாதம் என்பது எந்த நாட்டில் இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டாமல் அரசாங்கங்கள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பது தீர்வாகாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்துத்துவாக் கொள்கையின் இறக்குமதி தொடர்பான அவரது கருத்துக்கள் கவனம் செலுத்தத்தக்கவை. மத அடிப்படைவாதம் என்பது அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மதத்தையும் அரசியலையும் பிணைத்து உருவாக்கும் புதிய அரசியல் சித்தாந்தம். மத அடிப்படைவாதத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அதனைத் தமது அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்கின்ற தந்திரத்தை அரசியலை வியாபாரமாகச் செய்து வரும் பண முதலைகள் சுவைபடச் செய்து வருகின்றன. இதனால் மக்கள் தமக்குள்ளே சர்ச்சைப்பட்டு நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைகிறது. வெளியில் வாயைப் பிளந்து காத்திருக்கும் அந்நியச் சக்திகள் நாட்டுக்குள் ஊடுருவுவதற்கு அது வாய்ப்பளிக்கிறது.

இந்த வகையிலேயே அமைச்சரின் இந்துத்துவா இறக்குமதி செய்யப்படுகிறது என்ற கருத்தை நோக்க வேண்டும். எமது நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து அதனூடாக நாட்டில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் வல்லரசுகள் பற்றி நாடு எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியமாகிறது. இதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கான அமைதிச் சூழலைப் பேணுவது பொறுப்புள்ள அரசாங்கமொன்றின் கடமையாகிறது.

ஏற்கனவே பௌத்த மதத் தீவிரவாதம் நாட்டில் தலைவிரித்தாடியபோது அரசாங்கம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்ததன் விளைவை நாடு அனுபவித்துள்ளது. இப்பொழுது இந்து மதத் தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் நாடு மீண்டும் அழிவை நோக்கியே தள்ளப்படப் போகிறது. இந்த நிலைமையில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு பலமான அரசாங்கத்தினாலேயே முடியும். எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும்.

உலகின் நாற்பெரும் மதங்களும் தொன்று தொட்டு தமது சாத்வீகமான செயற்பாடுகள் மூலம் இலங்கையில் அமைதி பேணுவதற்கு உதவி வருகின்றன. மதங்கள் அனைத்துமே அமைதியையும் சமாதான சக வாழ்வையுமே போதிக்கின்றன. இந்த மதங்கள் மனிதர்களுக்கிடையில் குரோதத்தை வளர்த்து வன்முறைகளைத் திணிக்கின்ற அளவுக்கு மாற விடாமல் மதங்களின் புனிதத்தைக் காப்பது மதத் தலைவர்களின் கடமையாகும். அந்த வகையில் தமது மதம் மத அடிப்படைவாதிகளால் அரசியலுக்குப் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பது மதத் தலைவர்களின் பொறுப்பாகும்.

About the author

Administrator

Leave a Comment