அரசியல் உள்நாட்டு செய்திகள்

நோன்பு கால ஈத்தம்பழத்துக்கு 10 கோடி

Written by Administrator

ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு விநியோகிப்பதற்காக சவூதி அரசாங்கம் இலவசமாக வழங்கும் ஈத்தம்பழம் இம்முறை விளைச்சல் குறைவு என்பதனால் இலங்கைக்கு வழங்கப்படவில்லை என்று காரணம் காட்டி சதொச விலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இதற்கென கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திலிருந்து 250 மெட்ரிக் டொன் ஈத்தம்பழம் எட்டு கோடி 25 இலட்சங்களுக்கு (82,500,000) கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சவூதி அரசாங்கம் இம்முறை இலவசமாக வழங்கிய 150 மெட்ரிக் டொன் ஈத்தம்பழம் ஒரு கோடி 50 இலட்சம் (15,009,184) ரூபா வரியாகக் கொடுத்துப் பெறப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சிலிருந்து தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தின் மூலமாக இந்தத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

பெறப்பட்ட இந்த 400 மெட்ரிக் டொன் ஈத்தம்பழங்களும் 25 மாவட்டங்களிலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சவூதியிலிருந்து கிடைத்த 150 மெட்ரிக் டொன்னில் 148 மெட்ரிக் டொன் விநியோகிக்கப்பட்டுள்ளன. சதொசவிடமிருந்து பெறப்பட்ட 250 மெட்ரிக் டொன் ஈத்தம்பழங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கண்டி மாவட்டத்துக்கு 61.000 மெட்ரிக் டொன்களும், கொழும்பு மாவட்டத்துக்கு 48.200 மெட்ரிக் டொன்களும், திருகோணமலை மாவட்டத்துக்கு 38.360 மெட்ரிக் டொன்களும், களுத்தறை மாவட்டத்துக்கு 32.050 மெ.டொன்களும், திருகோணமலை மாவட்டத்துக்கு 21.740 மெ.டொன்களும், குருநாகலை மாவட்டத்துக்கு 25.470 மெ.டொன்களும், புத்தளம் மாவட்டத்துக்கு 25.120 மெ.டொன்களும், கம்பஹா மாவட்டத்துக்கு 21.900 மெ.டொன்களும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment