Features உலக செய்திகள் சர்வதேசம்

சிரியா: இறுக்கமடைந்து வரும் வல்லரசுகளின் ஆடுகளம்

Written by Administrator

 – ரவூப் ஸய்ன் –

2011 இல் சிரியாவில் பொங்கி எழுத்த மக்கள் போராட்டம் வெளிப்படையாக குரல் வளை நசுக்கப்பட்டு அதன் இறுதி மூச்சை உள்ளெடுத்து வருகின்றது. மக்கள் எழுச்சிப் போராட்டத்தை கவனமாகக் காயடித்ததில் சிரிய அரசாங்கத்தை விட ரஷ்யாவின் பங்கே முதன்மையானது. அதற்கடுத்த நிலையிலேயே சிரிய அரச படையினரும் ஈரானிய புரட்சிகரப் படையினரும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ்வும் இயங்கி வருகின்றன.

பொங்கி எழுந்த மக்களின் பிரதிநிதிகளான கிளர்ச்சியாளர்களின் இறுதிக் கோட்டை எனக் கருதப்படும் இத்லிப் மீது போர் மூட்டம் சூழ்ந்த நிலையில் ரஷ்யா மற்றும் இஸ்ரேலிடையே கடும் ராஜதந்திர முறுகல் நிலை தோன்றியுள்ளது.

செப்டம்பர் 17 இல் ரஷ்யாவின் போர் விமானமொன்றை இஸ்ரேலிய வான் படையினர் சுட்டு வீழ்த்தியதில் 15 பேர் உயிரிழந்தனர். தற்போது ரஷ்யா சிரியாவின் வான் படையைப் பலப்படுத்தும் நோக்கில் கு300 எனப்படும் பாதுகாப்பு ஏவுகணைகளை சிரியாவுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஜனாதிபதி விளாடிமர் புட்டின் அங்கீகரித்துள்ளார்.

ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு சில நாட்களிலேயே இப்பாரிய தீர்மானத்தை ரஷ்யா நிறைவேற்றியுள்ளது. தீர்மானத்தை அறிவித்தபோது, சிரிய வான் எல்லையை ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்டமை இஸ்ரேலின் திட்டமிட்ட செயல் என்று ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சாட்டியதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு இது பங்கம் விளைவிக்கும் எனவும் எச்சரித்திருந்தனர்.

மத்திய தரைக் கடலின் கிழக்குப் பிராந்தியத்தில் சிரியாவின் எல்லைப் புறமாக செயல்பட்டு வரும் ரஷ்ய பாதுகாப்புப் படையினர் கடந்த காலங்களில் சிரியாவை நோக்கி இஸ்ரேல் நகர்த்திய வான் தாக்குதல்கள் குறித்து கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையில் காணப்பட்ட இராணுவ மற்றும் ராஜதந்திர உறவுகளை இரண்டும் பேணி வந்தன.

ஆயினும், 15 பேர் கொல்லப்படக் காரணமான விமானத் தாக்குதலை முன்னிறுத்தியே கு300 ரக போர் முனை ஏவுகணைகளை ரஷ்யா வழங்குகின்றது. இது ரஷ்யப் பாதுகாப்புப் படையை பலப்படுத்துவதற்கே எனவும் மூன்றாவது நாடு தமது இலக்கல்ல எனவும் கிரம்ளின் அதிகாரிகள் கூறுகின்றபோதும், பிராந்தியத்தில் இஸ்ரேலின் வான் வழி ஊடுருவலை ரஷ்யாவின் இப்புதிய நகர்வு கட்டுப்படுத்தும் என்றே அவதானிகள் கூறுகின்றனர்.

2015 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யா சிரியாவின் உள்நாட்டுப் போரில் சிரிய அரசாங்கப் படையுடன் இணைந்து கிளர்ச்சியாளர்களைத் தாக்கி வருகின்றது. சிரிய அரசாங்கப் படையினரை இலக்கு வைத்து இஸ்ரேலிய இராணுவம் இதுவரை 200 தாக்குதல்களை நடத்தியுள்ளது. ரஷ்யா, சிரியா, ஈரான் ஆகிய நாடுகளின் கூட்டணி இஸ்ரேலின் நலன்களுக்கு எதிரானது. ஆனால், பிராந்தியத்தில் தமக்குள் மோதிக்கொள்ள விரும்பாத ரஷ்யாவும் இஸ்ரேலும் உணர்ச்சிகரமான சிரியாவின் உள்நாட்டுப் போரை தமது ராஜதந்திர உறவுகள் பாதிக்காத நிலையிலேயே கையாண்டு வந்தன. சடுதியாக ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாகவே கு300 விமானப் படைத் தொழில்நுட்ப ஏவுகணைகள் சிரியாவுக்கு வழங்கப்படுகின்றது. இது பிராந்தியத்தின் அரசியல், இராணுவ சூழ்நிலையை சடுதியாக மாற்றி விடலாம். குறிப்பாக சிரிய வான் பரப்பில் இஸ்ரேலின வான்படையினர் நகர்வதற்கான சுதந்திரம் இனி இருக்கமாட்டாது என்கிறார் இராணுவத் துறை ஆய்வாளரும் ஓய்வு பெற்ற லெபனான் இராணுவ ஜெனரலுமான இல்யாஸ் பர்ஹத்.

ஏனெனில், கு300 ஏவுகணைகளை இயக்கும் பயிற்சியை கடந்து சில ஆண்டுகளுக்கு முன்னரேயே சிரிய அரச இராணுவம் பெற்றுவிட்டது. இவ்வகை ஏவுகணைகளை இயக்கும் பயிற்சியைப் பெற சிரிய அதிகாரிகள் ரஷ்யாவுக்குச் சென்றதை இல்யாஸ் பத்ஹத் லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் நினைவுகூர்ந்தார்.

நவீன ஏவுகணைத் தொழில்நட்பத்தில் கு300 மிகத் தாக்கம் கொண்டது. ஏவுகணைகளை எதிர்த்துத் தாக்கம் ஆற்றல் கொண்டது இதனை இஸ்ரேல் நன்கு அறியும் எனவும்  இல்யாஸ் பர்ஹத் குறிப்பிட்டார்.

பிராந்தியத்தில் ஒன்றுக்கு ஒன்று முரணான நலன்களைக் கொண்ட சக்திகள் போரினால் சிதைந்து போயுள்ள சிரியாவை தமது ஆடுகளமாகப் பயன்படுத்தி வருகின்றது. 2015 இல் இராணுவத் தலையீடு செய்த மொஸ்கோ, எதிர்கால சிரியாவில் மிகப் பெரும் முதலீட்டுத் திட்டங்களை இலக்கு வைக்கின்றது. சிரியாவின் ஆட்சிபீடத்தைப் பலப்படுத்தி வரும் ஈரானுடனும் மொஸ்கோ வலுவான உறவுகளைப் பேணி வருகின்றது.

சுன்னி கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையை முடக்குவதில் இம்மூன்று சக்திகளும் கருத்தொருமிக்கின்றன. ரஷ்யத் தலையீட்டுக்குப் பின்னர் சிரியாவின் மிகப் பாரிய மனிதாபிமான நெருக்கடிகள் கூர்மையடைந்தன. போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், கூட்டுப் படுகொலைகள் நிகழ்ந்தேறுவதற்கு மொஸ்கோவின் இராணுவத் தலையீடுதான் முக்கிய காரணமாகியது. ஆயினும், அமெரிக்கா பிரிட்டன் வல்லரசுகள் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை.

ஈரான், சிரியா அரச படை, லெபனானிய ஷீஆ குழுமமான ஹிஸ்புல்லாஹ் போன்ற சக்திகளுக்குத் தேவை பஷ்ஷார் அல் அஸதின் நீடித்த ஆட்சி. அதனை இலக்கு வைத்தே அவை போரில் குதித்துள்ளன. இத்லிபில் மேற்கொள்ளப்படும் எந்த இராணுவ நடவடிக்கையும் பாரிய மனி உரிமை அழிவுகளை உருவாக்கும் என்று எச்சரித்த ட்ரம்பிற்கு இப்பிராந்தியத்தில் இராணுவதத் தலையீடு செய்வதனால் எந்தப் பயனும் இல்லை எனும் கணக்கின் அடிப்படையில் அமெரிக்கா தள்ளி நின்றது.

சிரிய-இஸ்ரேல் எல்லைப் பிராந்தியத்தில் ஈரான் தனது படைப் பலத்தை குவிப்பதாகவும் யுரேனிய  செறிவாக்கத் திட்டத்தைத் தொடர்வதாவும் இஸ்ரேல் சந்தேகிக்கின்றது. இதனால் குதிப்பான நிலையிலுள்ள சிரிய, இஸ்ரேல் எல்லைப் புறத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மாத்திரம் 200 தாக்குதல்களை நடத்தியுள்ளது. ரஷ்யா இவற்றை கண்டுகொள்ளவில்லை.

காரணம், இஸ்லாமியவாதிகள் இல்லாத இடது சாரி ஷீஆ ஆட்சிபீடத்தைக் கொண்ட சிரியா அதற்குத் தேவை என்பது போல் இஸ்ரேலுடனான ராஜ தந்திர உறவுகளும் மொஸ்கோவுக்கு அவசியமாகின்றது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய வல்லரசுகள் போன்று சிரியாவின் இராணுவத் தலையீட்டிலும் ரஷ்யா இரட்டை நிலைப்பாட்டையே அனுசவரித்து வருகின்றது.

சிரிய வான்பரப்பில் ரஷ்ய இஸ்ரேலிய விமானங்கள் மோதாமல் தடுப்பதற்கு விசேட தொலைத் தொடர்பு பொறிமுறையொன்றை இரு நாடுகளும் பின்பற்றி வந்தன. தற்போதைய ரஷ்யாவின் நகர்வு இஸ்ரேலுக்கு ஒரு பாதுகாப்பு அச்சுறுத்லை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பஷ்ஷார் அல் அஸதின் விமானப் படையினர் கு300 ரக அதி நவீன ஏவுகணைகளை தம் வசம் எடுத்துக் கொள்ளப் போகின்றனர் என்பது மட்டுமல்ல. அவற்றை இயக்கும் பயிற்சியையும் அவர் ஏற்கனவே பெற்று விட்டனர்.

இதனால் ரஷ்யாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ராஜதந்திர முறுகலானது இஸ்ரேல் தரப்புக்கே பாரிய அடியாக விழுந்துள்ளது. ஈரானின் ஆயுதப் படையான ஹிஸ்புல்லா இயக்கம் ஏற்கனவே சிரிய இஸ்ரேல் எல்லைப் புறத்தில் தனது படைக் கலன்களை குவித்து வருகின்றது. இதனால் ரஸ்வுடனான முறுகல் நிலையைத் தணிப்பதற்கு இஸ்ரேல் விரைந்து செயற்படுகின்றது.

மொஸ்கோவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள டெல் அவிப், தனது வான்படையினரின் தவறினால் ரஷ்ய விமானம் சுட்டுவீழ்த்தப்படவில்லை என்பதை சில ஆதாரங்களோடு தெளிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேலின் விசேட தூதுக் குழுவொன்று மொஸ்கோவுக்குப் பயணமாகியபோது இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. ஆயினும், செப்.24 இல் நவீன கு300 ஏவுகணைப் பாதுகாப்பு முறையினை சிரியாவுக்கு வழங்கப் போவதாக மொஸ்கோ திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சிரியா இஸ்ரேலின் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் என்பதோடு ரஷ்ய-இஸ்ரேல் உறவுகளைப் பாதிக்கும் என்று இராணுவத்துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

2015 செப். இல் சிரியாவில் மொஸ்கோவின் இராணுவத் தலையீட்டை இஸ்ரேல் வரவேற்றது. இதன் மூலம் மூன்று நன்மைகள் விளையும் என்று இஸ்ரேல் எதிர்பார்த்தது. சிரியாவில் ஈரானின் நேரடி இராணுவத் தலையீட்டை இல்லாமலாக்கும் என்பது இஸ்ரேலின் முதல் எதிர்பார்ப்பு.

கிளர்ச்சியாளர்களை மொஸ்கோ தலையீடு முழு மொத்தமாக அழித்து விடும் என்பது இரண்டாவது எதிர்பார்ப்பு

போரினால் குழம்பிப் போயுள்ள சிரியாவில் ஈரானிய மற்றும் ஹிஸ்புல்லாஹ்வின் படைக் கலன்களை ரஷ்ய ஆதரவோடு அழித்தொழிக்கலாம் என்பது இஸ்ரேலின் மூன்றாவது எதிர்பார்ப்பு. இதை அடிப்படையாகக் கொண்டே இரு நாடுகளும் தமது சிவப்புக் கோட்டை தாண்டுவதில்லை என்று உடன்படிக்கை கண்டிருந்தன. அதேவேளை, மொஸ்கோ இஸ்ரேலிய எல்லைப் புறத்தில் ஈரானிய இராணுவம் நிலைகொள்வதைத் தடுத்து வந்தது. ஏனெனில், சிரிய யுத்தத்தில் இஸ்ரேல் உள்ளிழுக்கப்படுவதை ரஷ்யா விரும்பவில்லை.

டமஸ்கஸில் ஆட்சி மாற்றம் உருவாவதை இஸ்ரேலா ரஷ்யாவோ விரும்பவில்லை. ஆயினும், சிரியாவில் ரஷ்யப் படையினரின் தாக்குதலுக்கு ஆதரவளித்து எல்லைப் புறங்களில் ஈரானிய படையினர் குவிக்கப்பட்டதை இஸ்ரேல் சகிப்புடன் அவதானித்து வந்தது. ஈரானியப் படையினரின் எண்ணிக்கை அதிகரித்து ஹிஸ்புல்லாஹ்வின் ஊடுருவலும் பலமடைந்தபோது இஸ்ரேல் உசாரடைந்தது.

2018 இன் ஆரம்பத்திலிருந்து சிரியாவிலுள்ள ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரானிய இலக்குகள் மீது ரஷ்யாவின் வெளிப்படையான ஒப்புதலோடு இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. எனினும், சிரியாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ரஷ்யா தலையிடாமை குறித்த ஒரு தப்பெண்ணமே இஸ்ரேலிடம் இருந்து வந்தது.

இஸ்ரேலுக்கு ஒப்புதலளித்த ரஷ்யா, ஈரானுக்கும் சிரியாவில் படைக் கலன்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கியது. அப்போதிருந்தே ரஷ்ய-இஸ்ரேலிய உறவுகளில் விரிசல் ஏற்படத் துவங்கியது. ரஷ்ய ஜனாதிபதி புட்டின் சிரியாவில் ஈரானின் படைக் கலக் குவிப்பு இஸ்ரேலின் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இருக்காது என்று பகிரங்கமாகவே கூறி வந்தார்.

எவ்வாறாயினும், ஈரானிய படைக் குவிப்பு கடந்த காலங்களில் படிப்படியாக அதிகரித்து வந்தமை மொஸ்கோ மற்றும் டெல்அவிவ்விற்கு இடையிலான பதட்டத்தை அதிகரித்தது. கடந்த பெப்ரவரியில் சிரியாவுக்குச் சொந்தமான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிலுள்ள கோலான் மலைப் பகுதியில் இஸ்ரேலிய விமானமொன்றை சிரியப் படையினர் சுட்டு வீழ்த்தியதை அடுத்து பதட்டம் மேலும் அதிகரித்தது. சிரியாவில் ரஷ்யாவின் சிவப்புக் கோடு (கீஞுஞீ ஃடிணஞு) பற்றிய சவாலொன்றை இது உருவாக்கியது.

கடந்த மே மாதம் இஸ்ரேலுடன் ரஷ்யா புதிய ஒப்பந்தம் செய்தது. அதன்படி சிரிய இராணுவம் தென் மாகாணங்களான தர்ஆ மற்றும் கொனைத்ரா என்பவற்றுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. போரின் தொடக்கத்தில் வொஷிங்டன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து வந்தது. எனினும், வொஷிங்டன் அவர்களை இடையில் கைவிட்ட பின்னர் சிரியப் படை முன்னேறுவதற்குச் சாதகமான சூழல் உருவானது.

எவ்வாறாயினும், தற்போது எழுந்துள்ள பதட்ட நிலை பிராந்தியத்தில் போரை மேலும் கூர்மைப்படுத்தலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. கு300 ஏவுகணைத் தொழில்நுட்பம் டமஸ்கஸுக்கு வழங்கப்பட்டமை ரஷ்யா இழைக்கும் மிகப் பெரும் இராணுவத் தவறு என்று வொஷிங்டன் குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், இதற்கு முந்தைய அமெரிக்காவின் எச்சரிக்கை எதனையும் ரஷ்யா பொருட்படுத்தவில்லை. தற்போதைய மொஸ்கோவின் நகர்வு இஸ்ரேலுக்கு ஒரு வலுவான செய்தியை வழங்கியுள்ளது. ரஷ்யா இஸ்ரேலுடனான உறவு குறித்து சொல்லில் அல்ல, செயலிலேயே மாற்றத்தைக் காண விளைகிறது என்பதற்கு அதன் புதிய நகர்வு எடுத்துக் காட்டாக உள்ளது.

இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை அது எவ்வாறு ஈடுசெய்யப் போகின்றது என்பது சிக்கலான கேள்வியே. அமெரிக்காவைத் தலையிட வைத்து பிராந்தியத்தின் அதிகாரச் சமநிலையை உருவாக்குவதே நெடன் யாஹுவின் முனைப்பாக உள்ளது. அது வெற்றியளிக்குமா என்பதை கிட்டிய எதிர்காலமே தீர்மானிக்கும்.

About the author

Administrator

Leave a Comment