– Fazhan Nawas –
மனிதனின் வாழ்க்கை வட்டம் மிகவும் குறுகியது. குழந்தை, சிறுவன், இளைஞன், முதியவன் என்று அவனது வாழ்கைப் பரிணாமம் ஒரு முடிவடைகிறது. முதுமை என்பது ஒரு மனிதனின் வாழ்வின் இறுதிக் கட்டம். அதாவது இந்த உலகத்துடனான தொடர்புகளை விட்டு மெல்ல மெல்ல தூரமாகிவிடுகிறான். அதாவது மரணத்தை நெருங்கிவிடுகிறான் என்பது இதன் அர்த்தம். மனிதனின் வாழ்வில் அரவணைப்பும், அன்பும் தேவைப்படும் நேரம் முதுமை எனலாம். முதுமை என்பது மனிதனின் குழந்தை காலத்தைப் போன்றது என்பார்கள். அதாவது அவர்கள் குழந்தைகளைப் போன்று செயற்பட ஆரம்பிப்பார்கள்.
பெரும்பாலான வயது முதிர்ந்த பெற்றோர்கள் அவர்களின் இறுதிக்காலத்தை அவர்களின் பிள்ளைகளுடன் கழிப்பார்கள். எமது மரபார்ந்த சமூகக் கட்டமைப்பும் அவ்வாறே இருந்து வருகிறது. அதிகமான பிள்ளைகள், பெற்றோர் தம்முடன் இருப்பதை சுமையாகவே கருதுகிறார்கள். ஒரு முதியோர் இல்லத்தின் பொறுப்பதிகாரியை சில நாட்களுக்கு முன் சந்தித்தேன். இல்லத்தில் நடக்கும் பல கதைகளை சொன்னார். ஒரு சம்பவம் என்னை அதிகமாகவே பாதித்துவிட்டது.
‘ ஒரு மனிதர் எமது முதியோர் இல்லத்திற்கு வருகை தந்தார். சுமார் 60 வயது இருக்கும். என்னுடன் ஸலாம் சொல்லி உரையாடினார். ஹாஜி எனது பெயரையும் உங்கள் இல்லத்தில் பதிவுசெய்துகொள்ளுங்கள். அடுத்தவாரம் வருகிறேன் என்றார். திடகாத்திரமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன நடந்து என்று கேட்டேன். நான் முக்கிய அரசாங்க உத்தியோகத்தில் இருந்தேன். மனைவி ஏற்கனவே மௌத்தாகிவிட்டார். விசாலமான வீடு எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். மருகனும் நல்ல தொழிலில் இருக்கிறார். ஒரு நாள் மகள் என்னிடம் வந்து ‘வாப்பா, எங்களுக்கு உங்கள கவனிக்கிறது கஷ்டம், நீங்களும் வயசாகிட்டீங்க’ என்றதும் தலையில் கடப்பாறையால் அடிப்பதைப் போன்று இருந்தது. உடனடியாக நான் கட்டிக்கொடுத்த வீட்டிலிருந்து வெளியேறி உங்கள் இடத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கு பென்ஷன் கிடைக்கிறது. அதிலிருந்து உங்களின் கட்டணத்தை செலுத்துகிறேன்’ என்று அந்த மனிதர் தனக்கு நடந்து முடிந்ததைச் சொல்லிக்காட்டினார். இவரைப் போல் நிறைய வாப்பாக்கள் இன்று முதியோர் இல்லங்களின் அழுதுகொண்டிருக்கிறார்கள்.
கேட்டால் குர்ஆன் ஹதீஸ் பேசுவார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் மூத்தவர்களுக்கு உரிமை கொடுத்திருக்கிறது என்று கத்திக் கத்திப் சொல்லிக்காட்டுவார்கள். அப்படியானால் நூற்றுக்கு நூறுவீதம் முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடியில் எப்படி முதியோர் இலங்கள் இருக்க முடியும். குர்ஆன் ஹதீஸை கடைபிடித்து நடந்திருந்தால் கொழும்பு கண்டி வீதியின் கிரிபத்கொட நகருக்கு அருகாமையில் உள்ள ‘மாகொல ‘Lady Fareed Home for Elders’ முதியோர் இல்லத்தில், நாளாந்தம் மலத்தை கைகளால் சுத்தம் செய்துவிட்ட பெற்றோரை தனியாக விட்டுவிட்டுப் செல்ல எப்படி மனது வந்திருக்கும். ஆனால் அதே பெற்றோர் அவர்களை சிறுவயதில் கைவிட்டிருந்தால் அவர்கள் அவர்கள் ‘அனாதை இல்லங்களில்’ வசித்திருப்பார்கள்.
ஓரு மனிதனன் இருந்தான். தனது வயது முதிர்ந்த தந்தையை கூட்டில் அடைந்து வைத்திருந்தான். வயோதிப மனிதனின் தொல்லை தாங்காமல் அவரை பக்கதில் உள்ள ஆற்றில் வீசிவிடத் தீர்மானித்தான். ஒரு பெரிய பையில் அவரை கட்டி சுமந்துகொண்ட நடக்க ஆரம்பித்தான். மகனே எங்கே நீ என்னை சுமந்துசெல்கிறான் என்று கேட்டார். அதற்கு அவன் உனது தொல்லை தாங்க முடியவில்லை. உன்னை ஆற்றில் வீசிவிடப் போகிறேன்’ என்றான். மகன் ஆற்றை சென்றடைந்தான். தந்தையை ஆற்றில் வீசிவிட முனைந்த போது ‘மகனே இன்னும் கொஞ்சம் தூரத்திற்கு சென்று என்னை வீசிவிடு என்றார். மகன் ஏன் என்று கேட்டான்? இல்லை ஐம்பது வருடங்களுக்கு முன் இந்த இடத்தில் தான் எனது தந்தையும் வீசினேன். அதை உனக்கு ஞாபகமூட்டினேன்’ என்றார்.