உள்நாட்டு செய்திகள் சமூகம்

புகையும் புதிய புகையிரதக் கட்டணம்

Written by Web Writer

2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்ததன்படி அரசாங்கம் புகையிரதக் கட்டணங்களை அதிகரித்துள்ளது. கடைசியாக 2008 ஆம் ஆண்டில் புகையிரதக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் எரிபொருள் விலைகள் பல தடவைகள் மாற்றம் அடைந்தாலும் புகையிரதக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை. ஆனாலும் இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ள புகையிரதக் கட்டணங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ள அசாதாரணமான ஒரு பின்னல் கணக்கு பயணிகளிடம் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

இம்முறை 15 வீத கட்டண அதிகரிப்பு அறிவிக்கப்பட்ட போதிலும் புகையிரத டிக்கட்டின் விலை அதைவிட அதிகமாகக் காணப்படுவதாக பயணிகள் பலரும் புகார் செய்துள்ளனர். 15 வீத அதிகரிப்பு என்பது தற்போதைய கட்டணத்தை வைத்துக் கணிப்பிடப்பட்டதல்ல. ஒவ்வொரு கிலோமீட்டருக்குமான புகையிரதக் கட்டணத்திலேயே அது கணிப்பிடப்பட்டுள்ளது என்கிறார் புகையிரதப் பகுதியின் பிரதி வர்த்தக சுப்ரிண்டன் இந்திபொல.

ஒரு கிலோமீட்டருக்கான ஆகக் குறைந்த மூன்றாம் வகுப்புக் கட்டணம் ரூபா 1.30 ஆகும். கணக்கிடும் போது கட்டணம் கிட்டிய பெறுமானத்துக்கு மாற்றப்படுகிறது. உதாரணமாக கணிப்பிடப்பட்ட கட்டணம் 10.50 க்கும் 14.50 க்கும் இடையில் வந்தால் கட்டணம் 15 ரூபாவாகத் தீர்மானிக்கப்படுகிறது.
தனியார் துறையினரின் சீசன் டிக்கட் அவர்களது சாதாரண பயணக் கட்டணத்தை 24 இனால் பெருக்குவதனால் பெறப்படுகிறது. (கட்டணம் 35 ரூபாவென்றால் 35×24=840). இது அரச ஊழியர்களுக்கு 09 இனாலும் மாணவர்களுக்கு 06 இனாலும் பெருக்கிக் கணக்கிடப்படுகிறது.
ஒவ்வொரு கிலோமீட்டரையும் அளவிடுவதற்கான வலய ஒழுங்கொன்று உள்ளது. 00 – 10 கி.மீ வரை 1.30 சதமும், 11-50 கி.மீ வரை 1.20 உம், 51 இலிருந்து 100 வரை 1.00 உம், 100-200 வரை 0.80 உம், 200 க்கு மேல் 0.60 உம் அறவிடப்படுகின்றன.
இந்தக் கணிப்பீட்டில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டணங்கள் பொருந்துவதாக இல்லை எனப் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறேனும் குறைந்த கட்டணமான 10 ரூபாவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆனாலும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடியுமான தூரம் 9 கிலோ மீட்டரிலிருந்து 07 கிலோ மீட்டர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

About the author

Web Writer

Leave a Comment