ஷரீஆ

ஸூரா யூஸுபும் அதனை சூழ்ந்துள்ள போதனைகளும்

Written by Web Writer

பெயரைப்போலவே அத்தியாயத்தின் உள்ளடக்கமும் பேசுபொருள்களும் அழகானவை ஆரோக்கியமானவை. அர்த்தங்கள் நிறைந்தவை. அற்புதமானவை. ஆன்மாவை ஊடுறுவிச்செல்பவை.

ஓர் அழைப்பாளன் அவன் அன்றாடம் எதிர் கொள்கின்ற அளவில் சிறியதும் பெரியதுமான அனைத்து வகையான சவால்களினதும் அரங்கை ஸூரா யூஸூப் மேடையைற்றி விடுகிறது.

அது பார்ப்பதற்கும் பகிர்வதற்கும் பக்குவமான காட்சிகள். கோலங்கள்.

அழைப்பாளன் ஆரம்பம் தொட்டு இறுதி வரை அவனது பாதையில், பயணத்தில், பணியில், தொனியில், பேணவேண்டிய பண்பாடுகள் இங்கு நிழற்படங்களாகவும் நீங்காத பாடங்களாகவுமே அமைந்துள்ளன.

சோதனைகளால் வாழ்க்கை சூழப்பட்டது என்ற யதார்த்தம் அனைவருக்கும் பொருந்தினாலும் அவற்றை துணிவுடன் எதிர்கொள்வது தைரியத்துடன் எதிர்நீச்சலடிப்பது எதிரிகளோடும்
கனிவோடும் பணிவோடும் உரையாடி உறவாடி வெற்றி பெறுவது என்பது தான் போராட்ட வாழ்வின் பெருமையானதும் பெறுமதியானதுமான அம்சங்களாகும்.

அன்றாட அரங்கேற்றங்களில் அலங்கோலங்களில் அவதியுறும் அவற்றையே அடங்காமல் ஆசைவைக்கும் ஆன்மாவை அவற்றில் காவுகொடுக்காமல் பலியிடாமல் பக்குவமாய் பக்திபூர்வமாய் பயணத்தை மேற்கொள்ள ஆன்மீக பலம் தேவை. அதனோடு சேர்த்து அழுகாத மனம் தேவை

கொண்ட கொள்கையில் கொதித்தெழவேண்டும்.
இலக்கு மறந்து இன்பங்கண்டு இமாலய சாதனைகளை இடைநடுவில் விடும்படி விதி விளையாடினாலும் வினயமாய் விவரமாய் விவேகமாய் விடை காணவேண்டும்.

நிராசை கதவுகளில் சிக்குண்டு சீர்கெடாமல் திறந்துள்ள சாளரம் வழியே மெல்லியதாய் வீசும் நம்பிக்கையை துணைக்கழைத்து
தாண்டிச்செல்லவேண்டும்

தரணியில் தடம் பதிக்க வேண்டும்.

-அஷ்ஷெய்க் பிஸ்தாமி

About the author

Web Writer

Leave a Comment