Features நாடுவது நலம்

சந்தர்ப்பவாத அரசியலை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்

Written by Administrator

– இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் –

இன்றைய உலகின் அரசியல் பொருளாதார நிலைமைகள் தெளிவற்றதும், கொந்தளிப்பான நிலைமையிலும் உள்ளதை கண்டுகொள்ள முடிகின்றது. இது கடந்த காலப்பகுதியில் காணப்பட்ட நிலைமையையும் விட வித்தியாசமானது. அன்று நாம் கொள்கை அடிப்படையில் பிரிந்து காணப்பட்ட உலகை நோக்கினோம். முன்பு நாம் கிறிஸ்தவ நாடுகள் என்றும் இஸ்லாமிய நாடுகள் என்றும் இந்து மற்றும் பௌத்த நாடுகள் என்பதாகவும் நோக்கினோம். பிற்பட்ட காலத்தில் நாம் சோசலிஸ முகாம், ஜனநாயக முகாம் என்பதாக பிரிந்த நாடுகளை நோக்கினோம். இன்று அரசியல் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக அல்லது கொள்கை ரீதியாக பிளவுபட்டுள்ள நாடுகளை காண முடியாது. எமது நாட்டில் இன்று காண முடிகின்ற சந்தர்ப்பவாத அரசியலையே உலகிலும் காண முடிகின்றது.

அன்று திறந்த பொருளாதாரம் குறித்துப் பேசிய அமெரிக்கா இன்று அதற்கு முற்றிலும் மாற்றமான வகையில் மூடிய பொருளாதாரக் கொள்கையை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரியை விதித்து வருகின்றது. உலகின் ஏனைய நாடுகளுடன் முகம்கொடுப்பது எவ்வாறு என்பது பற்றிச் சிந்திக்காமல் கடுமையான முறையில் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விதித்து வருகின்றது. இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 200 மில்லியனுக்கு அதிக பெருமதியில் அமெரிக்காவை வந்தடையும் சீன உற்பத்திகளுக்கு இன்று அமெரிக்கா வரி விதிப்புச் செய்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனா 110 டொலர்கள் பெறுமதிமிக்க அமெரிக்க உற்பத்திப்பொருட்களுக்கு வரிவிதித்துள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ‘கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வோம்’ எனக் குறிப்பிட்டு கடந்த தினம் சீனாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்குச் சீனா ‘கலந்துரையாடலுக்கு நாம் தயார், ஆனால் எல்லோரும் ஒருவரை ஒருவர் மதித்து சமமான முறையில் நடந்துகொள்ளும் பின்னணியிலேயே நாம் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வோம். அதுவல்லாமல் களுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு கலந்துரையாடலுக்கு அழைத்தால் நாம் அதில் பங்குபற்றத் தயாரில்லை’ என தெரிவித்திருந்தது.

மாவோ சேதுங்கின் சிந்தனையின் பிரகாரம் இலாபம் பெறுவது ஒரு சூதாகும் என சீனா அன்று கூறியது. ஆனால் சீனா இன்று அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா போன்ற கண்டங்களில் இலாபத்தை எதிர்பார்த்து பொருளாதாரச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இன்று உலகம் மிகவும் கொந்தளிப்பான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனா தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதுகின்ற தாய்வானுக்கு அமெரிக்கா 300 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவத் தளபாடங்களை வழங்கியது. இது சீனாவை கோபப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தில் ரஷ்யாவிடமிருந்து சீனா ஜெட் விமானங்களை கொள்வனவு செய்யும் போது அமெரிக்கா அதற்கு ஆவேசமாக பதிலளிக்கிறது. ரஷ்யாவுக்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளை கூட முன்னெடுக்கின்றது. இதற்கிடையில் அமெரிக்கா எண்ணெய் உற்பத்திகளை அதிகரிக்குமாறு ஒபெக் நாடுகளுக்கு அறிவிக்கிறது. சவூதி அறேபிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் ‘நாம் எண்ணெய் விலையை குறைப்பதற்கு அழுத்தம் கொடுக்கப்போவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் அமெரிக்கா ‘பிராந்தியத்திற்கு அமெரிக்கா வழங்கி வரும் பாதுகாப்பை கவனத்திற்கொண்டு எண்ணெய் விலையை குறைக்க வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளுக்கு நாம் பாதுகாப்பு வழங்காவிட்டால் அங்கு பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. எனினும் அவர்கள் தொடர்ந்தும் எண்ணெய் விலையை அதிகரித்து வருகின்றார்கள். ஒபெக் ஏகாதிபத்தியவாதிகள் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும்’ என கடுமையான தொனியில் குறிப்பிட்டுள்ளது.

மறுபுறத்தில் ரஷ்யா சிரியாவின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றது. இது அமெரிக்க ரஷ்ய உறவில் இன்னும் விரிசலை தோற்றுவிப்பதாக உள்ளது. இந்நிலையில் இலங்கைக்கும் இந்தத் தாக்கத்திலிருந்து விடுபட முடியாத நிலையேற்பட்டுள்ளது. இலங்கையின் பிரதமர் சர்வதேச காரணங்களின் அடிப்படையிலேயே இலங்கையின் ரூபா வீழ்ச்சியடைந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்கக் கொள்கைகளும் இதற்குக் காரணம் என்கின்ற விடயமும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய உலகம் இந்நிலைமைக்கு முகம்கொடுப்பதற்கு ஓரணியாக திகழ வேண்டியுள்ளது.

இஸ்லாமிய நாடுகளுக்கிடையில் ஒரே நாணய அலகு பரிவர்த்தனை செய்யும் முறை உருப்பெற வேண்டும். வீசா இல்லாமல் இஸ்லாமிய நாடுகளுக்கிடையில் சுதந்திரமாக பயணிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். ஐரோப்பிய சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுக்கு அப்படி முடியும் என்றிருந்தால் இஸ்லாமிய நாடுகளால் ஏன் முடியாது என்கின்ற குரல் மெலெழுப்பப்பட்டுள்ளது. உலக அரசியலில் மிகவும் சுவாரஷியமான நிலைமைகள் உருவாகிக்கொண்டுள்ளது. இன்று கொள்கைகளற்ற சந்தர்ப்பவாத அரசியல் நகர்ந்துகொண்டிருப்பதனை காண முடிகின்றது. இதற்குள் இலங்கையின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் போது இந்நிலைமையை நாம் நன்றாக புரிந்துகொண்டு கவனமாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment