Features சமூகம்

ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு ஒரு திறந்த மடல்

Written by Administrator

அஷ்ஷெய்ஹ் M.H. ஹனஸ் மொஹிதீன் (நளீமி, B.A. Dip.in Edu)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை முஸ்லிம்களுக்காக வழிகாட்டல் தலைமைபீடம் என்பதில் ஐயமில்லை என்ற நிலையில், அது தனது கொள்கைகளையும், அணுகுமுறைகளையும் மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டும் என்ற வகையில் இதனை சமர்ப்பிக்கிறேன்.

புத்தளம் பிரதேசம் உப்பு, தென்னை, இரால், மீன், கஜீ, மரக்கறி, முதலான பொருளாதார வளங்களைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு நிரந்தர குடிமக்கள் உட்பட வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களும் வசித்து வருகின்றனர். இங்கு செல்வந்தர்கள் வாழ்ந்தாழும் கூட ஏழைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக வாழ்கின்றனர்.

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் புத்தளத்தை பொருளாதார ரீதியாக வளப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் புத்தளம் பெரிய பள்ளி, அ.இ.ஜ.உ. புத்தளம் கிளை, சமய சமூக நல இயக்கங்கள், தனிநபர்களின் ஒத்துழைப்புடனும் அக்குரைண, காத்தான்குடி முதலான பைத்துஸ்ஸகாத் அமைப்புகளின் ஆலோசனைக்கிணங்கவும் புத்தளம் பெரிய பள்ளியை மையமாகக்கொண்டு பைத்துஸ்ஸகாத் நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்நிறுவனம் புத்தளத்தின் சமூக பொருளாதார விடங்களில் மிகத்திறம்பட இயங்கி வருகின்றது. அல்ஹம்துலில்லதஹ்!

எமது அமைப்பு ஸலபுகளான ஆரம்பகால இமாம்கள், நவீனகால இஸ்லாமிய அறிஞர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எமது பிரதேச வளங்களான உப்பு, தென்னை, இரால், காய்கறிகள் போன்றன விவசாய விளை பொருட்களாகவே கருதப்பட வேண்டும் என்ற வகையில் மக்களுக்கு அறிவூட்டி ஸகாத் சேகரிப்புப் பணியை வெற்றிகரமாக செயற்பட்டு வந்த வேளையில், மிக அண்மைக்காலமாக சில ஆலிம்கள் ஜம்இய்யாவின் தலைமையக பத்வாவிற்கு இணங்க இவை விவசாய விளை பொருட்கள் அல்ல, எனவே இவற்றிற்கு ஸகாத் கடமையாகாது எனும் விசமக் கருத்தைப் பரப்பி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பைத்துஸ்ஸகாதின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆள்பேர் இல்லாத ஒரு நோடிஸ் 2016 ஜுன் வெளிவந்தது.

பின்னர் ரமலான் நெருங்கிய போது 2018.05.28ல் அதே நோடிஸ் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முன்னால் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எச்.எம். நாஸர் அவர்களின் முதன்மைக் கையொப்பத்துடன் பல மௌலவிகளின் கையொப்பத்துடனும் ஒரு நோடிஸ் வெளியானது. அதில் காணப்படும் பல கையொப்பங்கள் குறிப்பிட்ட மௌலவிகளின் சம்மதமின்றி பொய்யான காரணங்களைக் கூறி பெறப்பட்டது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதான் அந்த ஆலிம்களின் அமானிதம். இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்து இதுவரை மேற்படி பொருட்களுக்கு ஸகாத் வழங்கி வந்தவர்கள் கூட தங்களது ஸகாத் பங்களிப்பை தவிர்த்து வருகின்றனர். இது விடயமாக தலைமையக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு புத்தளம் நகரக்கிளை சார்பாக தலைமையக பத்வா குழுவுடன் ஒரு சந்திப்பிற்கு வாய்ப்புக்கிட்டியது. அச்சந்தப்பத்தில் என்னுடன் புத்தளம் நகரக்கிளை சார்பாக அஷ்.யு.ழு. அப்துல் கஹ்ஹார் (காஸிமி, மதனி, புத்தளம் பைத்துஸ்ஸகாத் ஷரீஆக்குழு செயலாளர்) அவர்களும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யாவின் உப கிளைகளின் ஏனைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டோம்.

15.11.2017ம் திகதி தலைமையகத்தில் நடைபெற்ற அச்சந்திபில் தலைமையகம் சார்பாக மௌலவி இல்யாஸ், மௌலவி ஹாசிம் (மதனி) உட்பட பல உலமாக்கள் பங்கு கொண்டனர். அங்கு நாம் முன்வைத்த விடயங்கள் மூலமும் ஜம்இய்யாவின் பணிகள், கால மாற்றத்திற்கேற்ப தனது கருத்துக்களையும் செயற்பாடுகளையும் மாற்றியமைத்து எதிர்காலத்தில் சகலரதும் மதிப்பை அபற்ற நிறுவனமாக மாற வேண்டும் என்பதே எனது வேணவாவாகும்.

ஜம்இய்யா ஆரம்ப காலங்களை போன்று ஒரு தனி மதுஹபு கருத்துக்களை மட்டும் அனுசரித்து நடப்பது நவீன காலத்திற்கேற்ற நடைமுறையல்ல. அன்று எமது மதுரசாக்களில் ஷாபிஈ மதுகபு கருத்துக்களை போதித்து, அம்மதுகபு சார்ந்த நூல்களை மட்டுமே தமது பாட நூல்களாக அறிமுகப்படுத்தியிருந்தனர். அவற்றை மட்டும் கற்ற ஆலிம்கள் இன்று ஏனைய மதுகபுகளின் இன்றைய காலத்திற்கு பொருத்தமான கருத்துக்களை முன்வைத்தால் அவையாவும் ஷரீஅத்திற்கு அப்பாற்பட்டது பிழையானது எனக்கூறி ஏனைய இமாம்களையும் அறிஞர்களையும் வழிகேடர்களாக அறிமுகப்படுத்துகின்றனர்.

உதாரணமாக MMDA (முஸ்லிம் விவாகம், விவாகரத்து சட்டம்) பற்றிய கருத்து முரண்பாட்டில் வலி, காழி, மாதா விடயங்களில் அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு மாற்றமான கருத்தை கூறியவர்களை மிப்பரில், கருத்தரங்குகளில், சந்திப்புக்களில் உங்களது கருத்துக்களுக்கு முரண்பட்டவர்கள் ஷீஆக்கள், ஹவாரிஜிகள், வழிகேடர்கள் எனக் கூறுகின்றீர்கள். இதுதான் உலமா தலைமைத்துவத்தின் ஜனநாயகம், கருத்துச்சுதந்திரம்?? உலமா சபையின் தலைமைத்துவங்களே சிறிது சிந்தியுங்கள். இன்று இன்டர்நெட் யுகம் ஏனைய இமாம்கள் அறிஞர்களின் கருத்துக்களை பாமரர்களும் கூட அறிந்து கொள்வதற்கான வாய்ப்புள்ளது.

இந்நிலையில் நாம் ஷாபி மதுகபுடன் மட்டுத்தான் எனக் தம்பட்டம் அடிப்பது எந்த வகையில் நியாயம்? ஸலபுஸ்ஸாலிஹீன்கள் என்ன கூறினார்கள். ஞாபகமில்லையா, “ஆதாரபூர்வமானவையே எனது மதுகபு ஆகும்.” சரி விடயத்திற்கு வருகின்றேன். அன்றைய எமது கலந்துரையாடலில் ‘நாம் எமது பத்வாக்களை ஷாபி மத்கபின் கருத்து, அதனைத் தொடர்ந்து குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை குறிப்பிடுவோம்’ என மௌலவி இல்யாஸ் அழுத்தமாக கூறினார். இது சரியா? இதுதான் ‘தஅஸ்ஸுபுல் மத்கப்’ (மத்கப் பிடிவாதம்) இன் அஸல் வடிவம். நஸ்ஸைக் கூறி உங்களது பத்வாக்களை முன் வையுங்கள். இதுவே, ஒழுங்கும் கூட. முப்திகளுக்கு இது பற்றிய விளக்கங்கள் தெரிந்திருக்கும் தானே.

உப்பு, தேங்காய் போன்றவற்றிற்கு நேரடியான நஸ் உள்ளதா என உரத்துப் பேசினர். எமது கேள்வி அப்படியாயின் நெல்லுக்கு ஸகாத் கடமை என்பதற்கு நஸ் உள்ளதா? பண நாணயங்கள் நோட்டுகளுக்கு நஸ் உள்ளதா என்ற கேள்விகளுக்கு ஜம்இய்யா பதில் கூறுமா?

‘உப்பு விவசாய விளைபொருளா?’ என கேள்வி எழுப்பினர். அங்கியிருந்த பெரும்பாலானவர்களுக்கு உப்பு உற்பத்தி முறைமைபற்றி எந்த அறிவும் கிடையாது. ஒரு விடயம் பற்றி இஜ்திஹாத், பத்வா கூறும்போது அவ்விடயம் பற்றி பூரண விளக்கம் பெற்றிருத்தல் வேண்டும். உப்பு உற்பத்தியை Salt Cultivation என்றும் உப்பு விளையும் இடம் ‘உப்பு முளைக்கும் வயல்’ என்றே அழைக்கின்றனர். என்பதே சர்வதேச பிரயோகம் என்பதுடன் உப்பும் விவசாய உற்பத்தி நடைமுறைகளைப் போன்றே கைக்கொள்ளப்படுகின்றது என விளக்கமளித்தபோது ஆச்சரியப்பட்டனர்.

கிதாபை ஆதாரமாக காட்டியபோது அது ஷீஆ கிதாபு எனத்தட்டிக் கழித்தனர். அப்படியாயின் ஏன் நீங்கள்  நூல்களை மேற்கோள்களாக குறிப்பிடுகின்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலில்லை. மாறாக எம்மை வழிகெட்ட ஷீஆக்கள் என பெயர் சூட்டுகின்றனர். இது தேர்தல் காலங்களில் எமது அரசியல் வாதிகள் இனவாதத்தை தூக்கிப் பிடிப்பது போன்றதல்லவா. இதுதான் பிறை, MMDA பிரச்சினைகளிலும் உலமா தலைமைத்துத்தின் போக்கு.

ஷாபி மதுஹபில் தகாபுல் (காப்புறுதி) நடைமுறைக்கு அனுமதியில்லை என்ற நிலையிலும் கூட நாட்டில் தற்போதைய முஸ்லிம் சமூகத்தின் நிலையையும், முஸ்லிம்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்க வேண்டிய நிலையில் அவசியமாயின் ஒரு மதுகபில் இருந்து மற்றொரு மதுஹபுக்கு மாறலாம் என்ற கருத்தின் அடிப்படையில் மற்ற மதுகபின் படி இன்சூரன்ஸை கூடும் எனக்கூறும் உலமா சபை குறிப்பா சில முக்கிய ஆலிம்கள்; ஏன் தேங்காய், உப்பு, தேயிலை, கராம்பு போன்றவற்றை விவசாய விளை பொருளாகக் கருதுமு; இமாம் அபூஹனிபா (ரஹ்) போன்ற இமாம்களின் கருத்துக்களை அங்கீகரிக்கக் கூடாது.

முன்னால் குறிப்பிடப்பட்ட விதிக்கேற்பதானே ஹஜ்ஜில் தவாபின் போது அண்ணிய பெண் அல்லது ஆணின் உடல் பட்டால் வுழு முறியாது, அச்சந்தர்ப்பத்தில் ஹனபி மத்ஹபிற்கு மாறிக்கொள்ள முடியும் என வழிகாட்டுகின்றனர். ஏன் இந்த அனுமதி தாம் ஹஜ் ட்ரவல்ஸ் உரிமையாளர்கள் அல்லது ஹஜ் வழிகாட்டிகள் என்பதனாலா? தமது கதுகபில் இன்ஸுரன்ஸ் அனுமதிக்கப்படாவிட்டாலும் கூட, தாம் அந்நிறுவனங்களின் உயர்மட்ட ஆலோசகர்களாக செயற்பட்டு இலட்சம் இலட்சமாக மாதாந்த சம்பளம் பெறுவதும் ஓலை குடிசைகளை ஆடம்பர வீடுகளாக அமைப்பதற்கும் சொகுசு வாகனங்களின் உரிமையாளர்கள் ஆகுவதற்கும், பெரும் தோட்டம் துரவுகளை கொள்வனவு செய்வதற்கும் பெரும் கட்டிடங்களுக்கான உரிமையாளர்களாக மாறுவதற்கும் இந்த பத்வா தமக்கு உதவுகிறது அல்லவா. துனிமனிதர்கள் வயிறு வளர்த்து செல்லும் போது மேற்படி தேங்காய் உப்பு போன்றவற்றை விவசாய பொருளாக பிரகடனப்படுத்தி பல்லாயிரக்கணக்கான பரம ஏழைகளின் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைகளின் வாழ்வில் மனமகிழ்வை ஏற்படுத்தலாம் அல்லவா?

என்ன நியாயம் உங்களது கருத்துப்படி. புத்தளம் மன்னார் வீதியில் இடதுபக்கம் பாரிய உப்பு வயல்கள் பெருமளவு உப்புக்குயியல்கள் ஸகாத் கடமையில்லை வலது பக்கம் சிறுவயலில் நெல் உற்பத்தி. அதற்கு ஸகாத் கடமை. சிந்திப்பீர்களா?

அன்றைய சந்திப்பில் அந்த மூத்த உலமா எமது கடுமையான தர்க்கங்களுக்கு பிறகு இப்படி ஒரு ஐடியாவை முன்வைத்தார். அதாவது ‘எமது பத்வாவில் ஷாபி மதுகப்பில் இப்போருட்களுக்கு ஸகாத் கடமையில்லை. ஹனபி மதுகபுப்படி ஸகாத் கடமை எனக் குறிப்பிட்டால் என்ன என்ற கருத்தை எம்மிடம் முன்வைத்தார்.’ அதற்கு பதிலாக ரஸுல் (ஸல்) அவர்கள் வபாத்தின் சில மாதங்களுக்கு இடையில் நபியின் பாசறையிலிருந்த ஸஹாபாக்களைச் சேர்ந்த சிலர் நாம் தொழுகிறோம், நோன்பு பிடிக்கிறோம், ஹஜ்ஜும் செய்கின்றோம். ஸகாத் கொடுக்க மாட்டோம் எனக் கூறவில்லையா? உங்களது பத்வாவை வைத்துக்கொண்டு எந்த தனவந்தர்கள் ஸகாத் கொடுப்பார்கள். என்ன இந்த உலமா சபையின் புத்திசாலித்தனம்.

மற்றொரு விடயம் உங்களது கருத்துக்கள் சரியாகத்தான் உள்ளது. எனினும் எம்மால் அங்கு இவற்றை அழுத்திக் கூறமுடியாதுள்ளது. தலைமத்துவத்தின் முன்னால் நாம் வாய்மூடி மௌனியாகி விடுகின்றோம் என கூறுகின்றனர். என்ன இந்த ஆலிம்கள், கலீபா உமர் (ரலி) க்கு முன்னால் ஒரு பெண்மணி எழுந்து நிற்கவில்லையா, குறைந்த வயது அப்துல்லாஹ் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களின் வாரத்தைகள் ஞாபகமில்லையா? மற்றொரு ஸஹாபி உமரே இந்த வாள் உம்மை சீர்படுத்தும் என்று கூறவில்லையா? இவற்றை எல்லாம் கிதாபுகளில் நாளாந்தம் வாசிப்பது மட்டும்தானா? சிந்தனைக்கு எடுப்பதில்லையா? ஆளை, ஆடையை, சமூக அந்தஸ்த்தைப் பார்த்து, உண்மையைக் கூற தயக்கமா? எங்கே இஸ்லாம் கூறும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்? இதனை மீள்பார்வை 396 (22.06.2018) ல் ‘ஜம்இய்யதுல் உலமாவின் தலைமை ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி (சர்வதிகாரி) போன்று செயற்பட்டு வருவதை அவதானிக்கலாம்’ ‘நிகாப் வாஜிப்’ இதுவே ஜம்இய்யாவின் நிலைப்பாடு எனது தனது சொந்த முடிவை வெளியிட்ட போது எதிர்த்துக் கேட்காமல் வாய்மூடி விசுவாசமான அதன் அங்கத்தவர்கள் இருந்தமை இதற்கான முக்கியமான எடுத்துக்காட்டாகும்.’

‘இப் பொருட்களுக்கு ஸகாத் உடமையில்லை. எனவே, இவற்றின் உரிமையாளர்களை ஸதகா கொடுக்கத் தூண்டுங்களேன்…’ என அந்த மூத்த உலமா எம்மிடம் கூறியபோது, இது என்ன மடத்தனமான கூற்று. வாஜிபான ஸகாத்தைக் கொடுக்க பின் வாங்குபவர்கள் கடமையில்லாத ஸதகாவை கொடுப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். களநிலவரம் பற்றித் தெரியாமல் கோட்டைக் கட்டுபவர்கள்.

ஜம்இய்யா இன்னும் தஅஸ்ஸுபுல் மத்ஹபில் (மத்கபு வெறி) தான் உள்ளதா? எமது பத்வா நடைமுறை ஷாபியி மதுகப் கருத்தைக்கூறி அதற்கு ஆதாரமான ‘நஸ்’களைத்தான் முன்வைப்போம். ஏனெனில், ஷாபி மத்ஹப் கருத்துக்கள் யாவும் குர்ஆன், ஹதீஸ்களுக்கு உடன் பாடானவை. எந்த முடிவும்; இவ்விரண்டிற்கு என்றுமே முரண்படுவதில்லை. அப்படியாயின் மற்ற மதுகபுக்களின் கருத்துக்கள் குர்ஆன், ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளவதில்லையா? இன்னும் இந்த பத்வாக்குழு 50-60 வருடங்களுக்கு முன்புதான் உள்ளதா? காலமாற்றங்களை சூழல் மாற்றங்களை பற்றி சிந்திக்க மாட்டார்களா? தமது வயிற்றை வளர்ப்பதற்கும் வசதி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்கும் தவாபில் ஆண்-பெண்கள் பட்டால் வுழு முறியாது இன்ஷுரன்ஸ் கூடும் எனும் பத்வாவைக் கூறுகின்றீர்களே. ஸகாத்தின் மூலம் ஏழைகளை நிம்மதிப் பெருமூச்சு விட வழிவகுத்தால் உங்களுக்கு என்ன குறைந்துவிடும். அங்கு தலைமை வகித்த அந்த ஆலிம் ஷாபி மத்கப்க்கு முரணின்றி நாம் ‘கீரீமை’ செல்லி, அதற்கான ஆதாரங்களை கூறுவோம். இதுதான் எமது பாரம்பரியம் என அடித்துக் கூறினார். நான் கூறுகின்றேன். அந்த கிரீமிற்கு அடிப்படையான நஸ்ஸுகளைக் கூறிவிட்டு கிரீமை கூறுங்கள்.

இதுதானே நடந்தது 2018ன் ஷவ்வால் பிறைக்கும். பிறை காண முடியாத நாள் என்ற எடுகோளை மனதில் வைத்துக் கொண்டு நம்பகமானவர்களின் சாட்சிகளை கூட முற்றுமுழுதாக மறுத்து மிம்பரில் பகிரங்கமாக பேசியவர்கள் தானே நீங்கள். இதனால் முழு முஸ்லிம்களும் முழு நாடும் அல்லோலகல்லோலப்பட்டதே! மற்ற சமூகத்தினரின் நக்கல் வார்த்தைகளுக்கு வழிவகுத்தவர்கள் உங்கள் தலைமைத்தானே. ஜம்இய்யாவை துண்டாட வழி வகுத்துவிட்டீர்களே! ஆஆனுயு விவகாரத்தில மாற்றுக் கருத்தைக் கூறியவர்கள் எல்லாம் ஷரீஅத்திற்கு முரணானவர்கள். வழித்தவறியவர்கள், வழிகேடர்கள் என பகிரங்கமாக பேசவில்லையா? அதபுல் இஹ்திலாப் (கருத்து முரண்பாட்டில் பேண வேண்டிய ஒழுக்கங்கள்) பற்றி அறிக்கைகள், மாநாடுகள் நடாத்துபவர்கள் இப்படியா நடந்து கொள்வது ஜம்இய்யாவை துண்டாடிவிட்டார்களே! உதாரணமாக இரண்டு வகையான பிறை கலண்டர்கள் வந்துவிட்டனவே.

பெரும் வர்த்தகர்கள், இலட்சாதிகதிகள், அரசியல் வாதிகள், இயக்கப்பார்வை உடையவர்களை திருப்திப்படுத்த தமது சர்வதேச வர்த்தங்கள், பயணங்களை தொடர்வதற்காக எதையும் பேசலாமா? உண்மையை உரத்துக்கூற இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படும். உண்மையைக் கூறினால் சமூகம் பிளவுபடுமாம். இன்று பிளவுபடவில்லையா? ஒற்றுமையாகவா இருக்கின்றது. நிச்சயமாக சமூகம் ஒற்றுமைப்படும். ஜம்இய்யா மீதும் நம்பிக்கை ஏற்படும். இன்ஷா அல்லாஹ்!

நம் சமூகம் இன்னும் உங்களது பழைய உஸ்தாதுமார்களின் காலத்திலில்லை. அன்று அவர்கள் கூறியதுதான் பிக்ஹும் ஷரீஅத்தும், மார்க்கமும். வாய் திறந்து கேள்வி கேட்கமுடியாது. அந்தக் காலம் மலை ஏறிவிட்டது. இன்று எமது சமூகம் பலமடங்கு அறிவுமயப்படுத்தப்பட்ட சமூகம் என்பதை மறந்து விடாதீர்கள். மதுரஸாவில் ஓதியவர்கள் மட்டும்தான் அறிவு பெற்றவர்களா? நவீன தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் அறிவு பெற்றவர்கள் நிறைய உள்ளனர் என்பது உங்களுக்கு தெரியாதா? கொள்கையையும் போக்கையும் மாறிக் கொள்ளுங்கள். புதிய உலகத்திற்கு திரும்புங்கள். அல்லது தூக்கி வீசப்படுவீர்கள். உடை, தோற்றம், பணத்தால் எதனையும் நீண்ட காலத்திற்கு தொடர முடியாது. இறுதியாக தனிப்பட்ட நலன்களுக்காக மதுகபிற்கு வெளியே சிந்திப்பது போன்று, சமூக நலன், ஏழைகளின் நலனுக்காக ஷாபி மத்ஹபை விட்டும் சிறிது வெளியே வாருங்கள். இதனால் ஷரீஅத்திற்கு முரணானவர்கள், வழிகெட்டவர்கள், அகீதாவிற்கு மாற்றமானர்கள் என யாரும் தூசிக்க மாட்டார்கள். அல்லாஹ் எம்மை குர்ஆன், ஸுன்னா, சமூகநலன் பற்றி சிந்தித்து செயற்படுபவர்களாக ஆக்கிவைப்பானாக!

About the author

Administrator

Leave a Comment