Features சமூகம்

கொழும்பு கோட்டைப் பள்ளிவாசல் வக்பு சொத்து மோசடி

Written by Administrator

நியாயம் எப்போது கிடைக்கும்?

-ஹெட்டி ரம்ஸி-

இலங்கையைப் பொறுத்தவரையில் கொழும்பு கோட்டைப் பகுதி வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நகரங்களில் ஒன்று. இது கொழும்பின் மையவணிக நகர்ப்பகுதியாகவும் கொழும்பின் நிதி மாவட்டமாகவும் விளங்குகிறது. சமூகத்தில் நன்கு படித்த மக்கள் பணியாற்றும் இடமாகத் காணப்படுகிறது. கொழும்பு பங்குச்சந்தையும் அது இயங்கும் கொழும்பு உலக வர்த்தக மையமும் இங்கு அமைந்துள்ளது. இது தவிர வெளிவிவகார அமைச்சு, மத்திய வங்கி, கொழும்பு துறைமுகம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ஏனைய அமைச்சுக்களை உள்ளடக்கிய பகுதியாகவும் காணப்படுகின்றது. காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு போர்ட் சிட்டி இப்பள்ளிவாசலுக்கு அருகிலேயே உள்ளது.

சம்மான்கோட்டைப் ஜூம்ஆ பள்ளிவாசல், கொம்பனித்தெரு ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு இடைப்பட்ட எல்லையிலும் கொள்ளுபிட்டிய ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு போகும் வரையான பகுதிக்கும் இடைப்பட்ட எல்லையிலும் உள்ள மக்கள் மற்றும் அரசாங்கத் திணைக்களங்களில் பணியாற்றக்கூடியவர்கள் கோட்டைப் பள்ளிவாசலையையே தொழுகையிடமாகக் கொண்டுள்ளனர். சாதாரண தொழுகை நேரங்களில் சுமார் 200 பேர் இங்கு வந்து போகின்றனர். ஜூம்ஆ தொழுகைக்கு சுமார் 2000 பேர் வருகை தருகின்றனர். போர்ட் சிட்டியின் நிர்மாணப் பணிகள் நிறைவுறும் பட்சத்தில்; சுமார் 4000 பேர் இப்பள்ளிக்கு வந்துபோவார்கள் என மதிப்பிடப்படுகிறது.

இல 87, சதம் வீதி, கொழும்பு 01 எனும் முகவரியில் அமைந்துள்ள கோட்டைப் பள்ளிவாசல் 36 பர்சஸ் நிலப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது. இலங்கையில் 100 கோடி ரூபா பெறுமதியான சொத்து மதிப்புடன் மிக முக்கிய மையப்பகுதியில் முஸ்லிம்களின் அடையாளத்தை உரத்துச் சொல்லும் தளமாக இது அமையப்பெற்றுள்ளது. இத்தனை மதிப்பும் செல்வாக்கும் நிறைந்த முஸ்லிம்களின் அடையாளமாகத் திகழும் இப்பள்ளிவாசலின் வக்பு சொத்துக்களை நிர்வாகிகளே துஷ்பிரயோகம் செய்திருப்பது மிகுந்த மனவேதனையும் கவலையையும் அளிக்கிறது. இது வேலியே பயிரை மேய்ந்ததற்கு ஒப்பான செயல்.

ஒரு பள்ளிவாசலை பரிபாலனம் செய்யும் கால எல்லையும் மீறப்பட்டு தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக பள்ளிவாசலை நிர்வகித்துள்ளார்கள். பள்ளிவாசலுக்கு சொந்தமான 72 மில்லியன் ரூபா சொத்துக்கான கணக்கு விபரங்கள் இல்லை. பள்ளிக்குச் சொந்தமான 40 இற்கு மேற்பட்ட கடைகள் 4000 ரூபா என்ற மிகக்குறைந்த தொகைக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது. கடைகளை 4000 ரூபாய்க்கு பெற்றுக்கொண்டவர்கள் 30 வரை வாடகைக்கு விட்டுள்ளனர். இத்தனைக்கும் இவ்விடயம் 20 வருடங்களுக்கு பிறகே மக்களுக்கு தெரியவந்திருப்பது துரதிஷ்டமே. முஸ்லிம் சமூக அரசியல் தலைமைகளின் பலத்தை பிரயோகித்து கோட்டைப் பள்ளிவாசலின் கடந்த நிர்வாக சபை ஊழல் புரிந்திருப்பதானது முஸ்லிம் சமூகத்தின் பொதுச்சொத்துக்கள் குறித்த நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

பள்ளிவாசல் வரலாறு

1860ஆம் ஆண்டளவில் 87ஆம் இலக்கத்தில் அமைந்திருந்த ஒரு சிறிய கட்டடத்துடன் கூடிய ஏறக்குறைய 18 பேர்சஸ் விஸ்தீரமான ஒரு இடம் ஏல விற்பனைக்கு வந்தபோது அவ்வழியாக தனது குதிரை வண்டியில் சவாரி வந்த காஸிம் லெப்பை மரிக்கார் என்பவர் அவ்விடத்தை 70 டீசவைiளா Pழரனௌ க்கு வாங்கியுள்ளார். கொழும்பு கொள்ளுபிட்டி 27ஆம் நம்பர் 17ஆவது ஒழுங்கையில் வசித்து வந்த இவர் ஆரம்பத்திலிருந்தே இவ்விடத்தை பள்ளிவாசலாக பயன்படுத்த அனுமதியளித்துள்ளார். இவ்விடத்தை கோட்டைப் பகுதி வியாபாரிகள் மாத்திரமன்றி அங்கு உத்தியோகபூர்வ வேலைகளுக்காக வரக்கூடியவர்கள், வங்கிகளிலும், அரசாங்கத் திணைக்களங்களிலும் வேலை பார்க்கக்கூடியவர்கள், குறிப்பாக துறைமுகத் தொழிலாளர்கள், வெளிநாட்டுக் கப்பல்களில் வரக்கூடிய முஸ்லிம்கள் ஐவேளைத் தொழுகைக்காக வேண்டி பயன்படுத்தி வந்துள்ளனர். ஜூம்ஆ தொழுகைக்கு சம்மான்கோட்டை பள்ளிக்கு போகக்கூடிவர்களாக இருந்துள்ளனர். காஸிம் லெப்பை மரிக்காருக்குப் பின்னர் இப்பள்ளிவாசல் அவரது புதழ்வர் சலீம் ஹாஜியாரினால் நிர்வகிக்கப்பட்டு, அவரது வபாத்துக்கு பிறகு அவரது குடும்பம் பராமரித்து வந்துள்ளது.

பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த கடையில் வாடகைக் கட்டண அடிப்படையில் வியாபாரம் செய்து வந்த சலீம் ஹாஜியாரின் மருமகன் காலஞ்சென்ற நூர் ஹமீம் ஹாஜியார் அவர்களுக்கு அவர் வியாபாரம் செய்து வந்த இடத்தை கொள்வனவு செய்து பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனினும் அவரது ஆயுட்காலத்தில் அவ்விடயத்தை செய்ய முடியாமல் போக 1978ஆம் ஆண்டளவில் அதற்கான வாய்ப்பு கிட்டியபொழுது அவரது மருமகனான காலஞ்சென்ற உவைஸ் ஹாஜியார், காலம்சென்ற யூசுப் மற்றும் அலி ஹாஜியார் ஆகியோரது விருப்பத்துடன் தங்களது கடையின் பிற்பகுதியை பள்ளிவாசலுடன் இணைக்க அனுமதித்ததோடு மாத்திரமல்லாமல், அவர்களே முன்னின்று பிற்பகுதியை உடைத்தும் கொடுத்தார்கள். பள்ளிவாசலுடன் வியாபாரஸ்தலம் இணைக்கப்பட்டு பெரியதோர் ஜூம்ஆ பள்ளியாக அமைக்கப்பட்டது. மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் தலைமையில் ஜூம்ஆ தொழுகையும் ஆரம்பிக்கப்பட்டது.

1994ஆம் ஆண்டளவில் பள்ளிவாசலுக்கு பக்கத்தில் 83ஆம் இலக்கத்தில் பழைய சிங்கர் நிறுவனம் அமைக்கப்பட்டிருந்த, போரா சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான 18 பர்சஸ் காணி 25 மில்லியன் ரூபாவுக்கு வாங்கப்பட்டது. இதற்கு முற்பணமாக 77 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. மிகுதித் தொகையை செலுத்துவதற்குரிய காலக்கெடுவும் அப்போதைய நிர்வாக சபையினால் பெறப்பட்டிருந்தது. இக்காணியை கொள்வனவு செய்ய நிதியுதவி வழங்கியவர்கள் இந்தக் காணியில் பள்ளிவாசலே கட்டப்பட வேண்டும் என்றும் வர்த்தக நிலையங்ளுக்கோ அல்லது வேறு ஏதும் திட்டங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது என்றும் நிபந்தனையிட்டிருந்தனர்.

இப்படியிருக்கும் போது பள்ளிவாசலுக்கு இடைக்கால நிர்வாக சபையொன்று நியமிக்கப்பட்டது. காணிக்கு செலுத்த வேண்டிய குறிப்பிட்ட தொகையை இவர்களால் செலுத்த முடியாமல் போன சமயத்தில் அந்தக் காணியை திருப்பிக்கொடுக்க முயற்சித்துள்ளனர். ஏற்கனவே காணிக்கு செலுத்தப்பட்ட முற்பணத்தொகையில் சிறுதொகையை கழித்துக்கொண்டு மிகுதித் தொகையை தரும் படி வேண்டியுள்ளனர். இந்தநேரத்தில் காலஞ்சென்ற ரபீக் ஹாஜியார், சௌகத் ஹாஜியார், நதீர் ஹாஜியார் போன்றோர் முன்வந்து கிட்டத்தட்ட 2 மாத காலத்திற்குள் காணிக்கு செலுத்த வேண்டியிருந்த பணத்தை சேகரித்து பள்ளிக்காக வேண்டி அந்தக் காணி வாங்கப்பட்டது.

கடந்த நிர்வாக சபையின் உதாசீனமான செயற்பாடுகள்

இந்தப்பள்ளிக்குரிய காணியை எந்தக் காரணம் கொண்டும் வர்த்தக நிலையங்கள் அமைப்பதற்கு வழங்க வேண்டாம் என இக்காணியை வாங்கியவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்நிர்வாக சபையினர் 10 வருடங்களின் பின்னர் அதாவது 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் பள்ளிவாசல் விஸ்தரிப்புக்காக பக்கத்துக் காணியை வாங்க பணஉதவி செய்தவர்களின் வேண்டுகோளுக்கு முரணாக சுமார் 41 கடைகளை நிர்மாணித்தது மாத்திரமல்லாமல் அக்கடைகளை 4000, 5000, 8000 என்ற அடிப்படையில் குறைந்த கூலிக்குக் கொடுத்துள்ளனர்.

கொழும்பு கோட்டையை பொறுத்தமட்டில் ஒரு சதுர அடிக்கு 250 ரூபா கூலியை பெறுகிறார்கள். இப்படியான நிலையில் 250 சதுர அடி கொண்ட வர்த்தக நிலையமொன்றுக்கு 4000 ரூபா கூலி பெறுவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததொரு விடயமாகும். இதுமாத்திரமன்றி அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை பள்ளிவாசல் சொத்துக்கள் எவ்வாறு கூலிக்கு விடப்பட வேண்டும்? எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும்? என்பது தொடர்பில் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. அதற்கிணங்க பள்ளிவாசல் சொத்துக்கள் அநாதைகளுடைய சொத்துக்கள் போன்று மிகவும் கவனத்தோடும், இறையச்சத்தோடும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அவை கூலிக்கு விடப்படும் பொழுது பக்கத்திலுள்ள கடைகளின் கூலி, குத்தகை முதலானவை கருத்துக்கு எடுக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள பெறுமதிக்கேற்ப கொடுக்கப்பட வேண்டும் என்றும் மூன்று வருடங்களுக்கு மேல் கொடுக்கப்படக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

ஆனால் முன்னைய நிர்வாகிகள் இதை உதாசீனம் செய்துவிட்டு மிகக்குறைந்த கூலிக்கும், 25 வருடங்களுக்கும் கொடுத்துள்ளார்கள். இது வக்பு சட்டத்தை மீறிய செயல் மட்டுமன்றி ஜம்மிய்யதுல் உலமா சபையின் மார்க்கத் தீர்ப்புக்கும் முரணானதாகும். வியாபாரிகள் என்ற முறையில் துரதிஷ்டமாக தங்களது சொந்த நலனையும், பலனையும் பார்த்துள்ளார்களே தவிர, மார்க்கச் சட்டத்தை பார்ப்பதற்கு தவறியுள்ளார்கள் என்பது மிகவும் கவலைக்குரியது.

தற்போதைய நிர்வாகத்தில் உள்ளவர்கள் கடந்த நிர்வாக சபையின் செயற்பாடுகள் குறித்து வக்பு சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்றவற்றில் முறையிட்டும் அவற்றுக்கு எவ்வித பலனும் கிட்டவில்லை. புதிய நிர்வாக சபையை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பை நடாத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்து வந்த வேண்டுகோள்களை புறக்கணித்துவிட்டு 1996ஆம் ஆண்டு காலம் முதல் 2017 டிசம்பர் வரையில் 20 வருடங்களுக்கும் அதிகமாக பள்ளி நிர்வாகத்தை செய்து வந்துள்ளார்கள். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபையினால் பள்ளிவாசலுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு முறையான பதிலளிப்புக்கள் வழங்கப்படவில்லை.

அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கடந்த நிர்வாக சபையினர் 20 வருட காலமாக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். வக்பு சட்டத்தின் படி பள்ளி நிர்வாகம் 6 மாதங்களுக்கு ஒரு தடவை கணக்கு விபரங்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும். 20 வருடங்களுக்கு சுமார் 40 கணக்கறிக்கைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு விடயம் நடைபெறவில்லையென தற்போதைய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

புதிய நிர்வாக சபையின் முற்போக்கான செயற்பாடுகள்

கடந்த நிர்வாக சபையின் காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகளை சீர்செய்து அவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக வேண்டி வக்பு சபையினால் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 மாதங்களுக்காக வேண்டி 9 பேர் கொண்ட சபையை நியமித்தது. 2017 டிசம்பர் மாதம் 08ஆம் திகதி கடந்த நிர்வாக சபை தற்போதைய சபையிடம் பள்ளி நிர்வாகப் பொறுப்புக்களை எழுத்து மூலமாக ஒப்படைத்தது. அதன் பின்னர் கடந்த நிர்வாகத்தில் ஊழலுடன் சம்பந்தப்பட்ட இருவர் இந்த நியமனம் சட்டத்துக்கு முரணானது எனத் தெரிவித்து வக்பு நியாய சபையில் முறையிட்டுள்ளனர். இதன் படி 6 மாத காலமாக வழக்கு விசாரிக்கப்பட்டு முடிவில் பள்ளிவாசலுக்கு சொந்தமான 72 மில்லியன் ரூபா பணத்துக்கான கணக்கு விபரத்தை காண்பிக்க வேண்டும் என கடந்த நிர்வாக சபைக்கு அறிவிக்கப்பட்டது.

வக்கு நியாய சபையின் கணிப்பின் படி பள்ளிவாசலுக்கு உட்பட்ட கடைகளிலிருந்து 72 மில்லியன் ரூபா நிதி மீளச்செலுத்தும் வைப்புப் பணமாக (சுநகரனெரடிடந னுநிழளவைந) பெறப்பட்டுள்ளது. இந்தப் பணம் கணக்கில் காணப்பட வேண்டும். எந்தக் காரணத்தின் அடிப்படையிலும் சட்டரீதியாக இந்தப் பணத்தை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது. இப்பணத்தை திருப்பப் பெறுவதற்கும், அவர்களது முறைகேடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் வக்பு நியாய சபை வக்பு சபைக்கு வேண்டுகோள் விடுத்துவிட்டு இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதன் பிற்பாடு வக்பு சபை மீண்டும் அல்ஹாஜ் எம். முஹினுதீன் தலைமையில் சட்டத்தரணி எம்.ஐ.எம். ரபீக், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். அலி ஹஸன், வர்த்தகர்களான எம். இஸட். நஸீர் அஹமட், ஏ. சுபியான் முஹிதீன், எம்.டி. மீரா ஸாஹிப், ஜி.எம். நஸார் ஆகியோரை உள்ளடக்கிய ஏழு பேரை கொண்ட குழுவை கோட்டைப் பள்ளிவாசலை நிர்வகிப்பதற்கு கடந்த 09.06.2018 அன்று எதிர்வரும் 3 வருட காலத்திற்கு 08.06.2018 வரையில் நம்பிக்கையாளர்களாக நியமனம் செய்தது.

சவால்கள்

பள்ளி வாசலுக்கு சொந்தமான நிறைய கட்டிடங்களுக்கு உரிய அனுமதிகள் (ருn ழரவாநசளைந) பெற்றதாக இல்லை. இந்த விடயங்களை அரசாங்கத்துடன் இணைந்து எப்படி முறைப்படுத்துவது? என்பதும் தேவையற்ற கட்டிடங்களை எப்படி உடைப்பது? என்பதும் புதிய நிர்வாக சபைக்கு முன்னால் மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. அத்துடன் மின் இணைப்புக்களும் அதிகமாக காணப்படுகிறது. பள்ளிவாசலின் மீற்றலிருந்து 24 கடைகளுக்கு மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கென சேகரிக்கப்பட்ட பணம் உரியவர்களுக்கு சென்றடையவில்லை என்ற முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டிய பொறுப்புள்ளது. அத்துடன் பெண்களுக்கான தொழுகையறை இதுவரையில் உருவாக்கப்படவில்லை. பிரத்தியேக தொழுகையறை அமைக்க வேண்டிய தேவையும் இவர்களுக்கு உள்ளது.

முடிவாக

பள்ளி நிர்வாக சபை வக்பு சொத்தை 3 வருடங்களுக்கு மேல் கூலிக்கு வழங்கக் கூடாது என உலமா சபையின் தீர்ப்பொன்று உள்ளது. 3 வருடங்களுக்கு அதிக காலம் கொடுப்பதாக இருந்தால் நடைமுறையிலுள்ள கூலித்தொகை கருத்திற்கொள்ளப்பட்டே அச்சொத்துக்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த நிர்வாக சபை இவ்விதிமுறையை கவனத்திற்கொள்ளாமல் தம் இஷ்டப்படி 25 வருட காலத்திற்கு குறைந்த கூலிக்கு கடைகளை வழங்கியுள்ளனர். இது குறித்து தற்போதைய நிர்வாக சபை வக்பு நியாய சபையில் முறையிட்டதன் விளைவாக சகல வியாபார நிலையங்களும் பள்ளிவாசலுடன் மேற்கொண்டிருந்த உடன்படிக்கைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் சில கடைகள் உடைக்கப்பட்டு பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு இணைக்கும் திட்டமும் உள்ளதாக புதிய நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

கோட்டைப் பள்ளிவாசலில் இடம்பெற்றிருக்கும் வக்பு சொத்து மோசடி குறித்து வக்பு சபை மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. வக்பு சபை இந்த விவகாரத்தை முனைப்புடன் கையிலெடுத்து செயற்பட்டாலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் காட்டி வரும் தாமதமும் அவர்களது அசிரத்தையான போக்கும் இன்னும் இவ்விடயத்தை தாமதப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் அதுசார்ந்த அமைச்சும் கோட்டை பள்ளிவாசலின் வக்பு சொத்து மோசடி குறித்த விசாரணை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. நாட்டின் அதியுச்ச பாதுகாப்பு வலயத்தில் அமையப்பெற்றுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிவாசலொன்றின் சொத்துக்கள் பட்டப்பகலில் மோசடி செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்கே இவற்றை மூடி மறைத்திருக்கிறது. இதுபோன்று இலங்கையில் பல பள்ளிவாசல்களின் சொத்து விபரங்கள் பற்றிய கணக்கறிக்கைகள் தெளிவில்லாமல் உள்ளன.

அல்-ஹாஜ் எஸ்.எம்.எம். யாசீன் தலைமையிலான வக்பு சபை நிர்வாகிகளது அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக இன்று பல பள்ளிவாசல்களின் வக்பு சொத்து மோசடி குறித்த விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. கொழும்பு பெரிய பள்ளிவாசல், புத்தளம் பெரிய பள்ளிவாசல் போன்ற வற்றில் இடம்பெற்ற வக்பு சொத்து மோசடிகளையும் இதற்கு உதாரணமாக குறிப்பிட முடியும். இதுபோன்று நாட்டில் இன்னும் பல பள்ளிவாசல்களின் சொத்து விபரங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட வேண்யுள்ளதுடன், அவை முறையாக நிர்வகிப்படுகின்றதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்கள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தராதரம் பாராது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிவாசல்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமய விவகார அமைச்சு இவ்விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இன்றேல் அமைச்சின் செயற்பாடுகள் குறித்து மக்கள் கேள்வியெழுப்பும் காலம் வெகுதொலைவில் இருக்காது.

About the author

Administrator

Leave a Comment