Features நேர்காணல்

ஷரீஆ சட்டத்தை மாற்றுவதற்கான சிபாரிசுகள் முன்வைக்கப்படவில்லை – சட்டத்தரணி ஸபானா குல் பேகம்

Written by Administrator

சட்டத்தரணி ஸபானா குல் பேகம் கிழக்கு மாகாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக்கல்வியை கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியிலும் கற்றுள்ளார். 1997ஆம் ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரிக்கு தெரிவான இவர், 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ‘நீதியைத் தேடும் பயணம், ஐள நுஙரயட துரளவiஉந Pழளளiடிடந?’ அதன் தமிழாக்கம் ‘சமநீதி சாத்தியமா?’ ஆகிய நூல்களை எழுதியது மாத்திரமல்லாமல் நீதியரசர் சலீம் மர்சூப் எழுதிய ‘வுhந ஞரயணi ஊழரசவ ளுலளவநஅ in ளுசi டுயமெய யனெ வைள ஐஅpயஉவ ழn ஆரளடiஅ றுழஅநn’ நூலை ‘இலங்கையின் காதி நீதிமன்ற முறைமையும் முஸ்லிம் பெண்கள் மீதான அதன் தாக்கமும்’ என்ற பெயரிலும், சூலனி கொடிகார எழுதிய ‘ஆரளடiஅ குயஅடைல டுயற ஐn ளுசi டுயமெய’ எனும் நூலை ‘இலங்கையின் முஸ்லிம் குடும்பச் சட்டம்’ என்ற பெயரிலும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். ‘டீழயசன ழக ஞரயணளை டுயற சுநிழசவ’ என்ற பெயரில் காதிகள் சபையினால் தீர்க்கப்பட்ட வழக்குத் தீர்ப்புகளை சட்ட அறிக்கைகளாக 5 நூல்களாக கோவைப்படுத்தியுள்ளார். இவர் காதிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிநெறிகளின் வளவாளராக கடமையாற்றியுள்ளார். இவர் முஸ்லிம் விவாக, விவாகரத்து தொடர்பிலான அதிக வழக்குகளை கையாண்டுள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக சட்டத்துறையில் அனுபவம் மிக்க ஸபானா குல் பேகம் அவர்கள் முஸ்லிம் விவாக, விவகாகரத்து சட்டம் தொடர்பில் காதி நீதிமன்றுக்கு செல்பவர்களுக்கு ஆலோசணை வழங்குவது முதல் காதிகள் சபையில் சட்டத்தரணியாக தோன்றுதல், நீதவான் நீதிமன்றம் , மாவட்ட நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போன்றவற்றில் சட்டத்தரணியாக தோன்றுதல் மற்றும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் பல ஆயிரக்கணக்கான வழக்குகளை 2003ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் மேற்கொண்டு வருகின்றார். அவர் மீள்பார்வைக்கு வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

முஸ்லிம் தனியாள் சட்டத்தில் என்னென்ன பகுதிகள் திருத்தப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

2009ஆம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த கௌரவ மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்ட கௌரவ உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட சீர்திருத்தக் குழுவில் 9 வருட காலமாக உறுப்பினராக செயற்பட்டுள்ளேன். இச்சட்டத்தில் நிறைய விடயங்கள் திருத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு நாம் எமது அறிக்கையை முன்வைத்துள்ளோம். இந்தச் சட்டம் எந்தெந்த விடயங்களில் திருத்தப்பட வேண்டும் என்கின்ற அம்சத்தை பின்வருமாறு குறிப்பிட முடியும். நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் எல்லையும் ஏற்புடமையும். அதாவது யார் யாருக்கு இந்தச் சட்டம் ஏற்புடைத்தானது. இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு மாத்திரமா? அல்லது வேறு நாடுகளில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம்களுக்கும் ஏற்புடைத்தானதா? என்கின்ற விடயமாகும். தற்போதைய சட்டத்தை பார்க்கும் போது இலங்கையில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு மாத்திரமே ஏற்புடைத்தானது என்பதாகவே உள்ளது. இதனால் ஏற்புடைமை தொடர்பில் நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன.

இரண்டாவது இந்தச் சட்டத்தினுடைய எல்லை. முஸ்லிம் சட்டத்தை மத்ஹபுகளுக்கூடாக மட்டுப்படுத்துவதா? அல்லது பரந்த அளவில் முஸ்லிம் சட்டத்தோடு நோக்குவதா என்ற விடயமாகும். மற்றது காதி நீதிமன்றத்தினதும் காதிமார்களினதும் தரத்தை உயர்த்த வேண்டும். தற்போதுள்ள சட்டத்தில் காதிகளுக்கு எவ்வித தகைமைகளும் விதிக்கப்படவில்லை. காதி நீதிமன்றம் என்ற பெயர் தானே ஒழிய அங்கு நீதிமன்றத்திற்குரிய கட்டமைப்புகளும் நடவடிக்கைகளும் ஒரு சீரற்ற நிலைமையிலேயே காணப்படுகின்றன. எனவே இதன் தரம் உயர்த்தப்பட வேண்டும். அடுத்தது, முஸ்லிம் விவாக, விவாகரத்து ஆலோசணை சபையை மீள ஒழுங்கமைக்க வேண்டும். இது தவிர காதிகள் சபையை (டீழயசன ழக ஞரயணளை) பிராந்திய மயப்படுத்த வேண்டும். தற்போது காதிகள் சபையின் அமர்வுகள் கொழும்பிலும் கல்முனையிலும் மாத்திரமே நடைபெறுகின்றன. பொத்துவில் தொட்டு பொலன்னறுவை வரையிலுமுள்ள காதி நீதிமன்றங்களின் மேன்முறையீடுகள், மீளாய்வுகள் கல்முனை அமர்விற்கும் அது தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கான மேன்முறையீடுகளும் மீளாய்வுகளும் கொழும்புக்கும் வருகின்றன. எனவே தூர இடங்களில் உள்ள மக்களுக்கு இந்த சபையை நாடி வர வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதனால் இன்னும் சில மாகாணங்களில் காதிகள் சபையின் அமர்வுகளை நடாத்த வேண்டும்.

அடுத்தது, முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் காணப்படுகின்ற ஆண் – பெண் பாரபட்சத்தை நீக்க வேண்டும். தற்போதைய சட்டத்தில் பதிவாளர்களாகவும், காதிகளாகவும், நியாயசகாயர்களாகவும் முஸ்லிம்; ஆண்கள் மாத்திரமே காணப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது. எனவே இப்பாரபட்சம் இல்லாமல் ஆக்கப்பட வேண்டும். மற்றது திருமணப்பதிவை கட்டாயப்படுத்த வேண்டும். தற்போதுள்ள சட்டத்தில் பதிவு கட்டாயமில்லை என்கின்ற நிலையுள்ளது. இதனால் பல பாதிப்புக்கள் இடம்பெறுகின்றன. மற்றது திருமணத்துக்கான ஆகக்குறைந்த வயதெல்லை தீர்மானிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டத்தை பொருள்கோடல் செய்தால் பதிவுசெய்யாமல் பிறந்த பெண்குழந்தைக்கும் உடனடியாக திருமணம் செய்து வைக்க முடியும். மற்றது பலதார மணம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும். தற்போதைய சட்டத்தில் பலதார மணத்திற்கு எவ்வித கட்டுப்பாடுகளுமில்லை. காதிக்கு பல்தார மணம் தொடர்பான நிர்வாக அதிகாரங்கள் மாத்திரமே உள்ளன. நீதித்துறை அதிகாரங்கள் எதுவும் இல்லை. இதனால் பல்தார மணம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சமூகத்தில் பல பாதிப்புகள் இடம்பெறுகின்றன.

அடுத்து, விவாகரத்து தொடர்பான சட்ட நடவடிக்கைகளை ஆண் பெண் இருதரப்பினருக்கும் பாதகம் இல்லாதவாறு சீர்திருத்த வேண்டும். அழைப்பாணைகள் பிறப்பித்தல், வலியுறுத்தற் கட்டளை மீதான நடவடிக்கைகள், மேன்முறையீட்டு நடவடிக்கைகள் என்பவற்றிலும் தற்போது உள்ள சட்டத்தில் திருத்தங்கள் தேவைப்படுகின்றன. தாபரிப்பு, மதா, மஹர், கைக்கூலி தொடர்பான சட்டங்கள் விரிவாக்கப்பட்டு சீரமைக்கப்பட வேண்டும். காதி நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள் மூலம் ஆஜராக விரும்புகின்ற தரப்பினருக்கு அதற்குரிய தேர்வுரிமை வழங்கப்பட வேண்டும். குற்றங்களுக்கான தண்டனைகளையும் தண்டப் பணங்களையும் அதிகரிக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் 99 வீதம் இந்தச் சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும். இது 1951ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த சட்டம். 1975 வரையில் சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 43 வருடங்களுக்கு மேலாக எவ்விதத் திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 43 வருடங்களுக்கு முந்தைய சமூக அமைப்பு இப்போது இல்லை. இலங்கையில் நடைமுறையில் உள்ள முஸ்லிம் தனியாள்; சட்டம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டமாகும். பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தில் தான் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளதே ஒழிய ஷரீஆ சட்டத்தை மாற்றுவதற்கோ அல்குர்ஆனிய சட்டத்தை மாற்றுவதற்கோ எந்தவிதமான சிபாரிசுகளும் இங்கு முன்வைக்கப்படவில்லை. அதற்கான கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை.

ஏனென்றால் ஷரீஆ சட்டத்தை மாற்றுவதற்கோ அல்குர்ஆனிய சட்டத்தை மாற்றுவதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை. ஷரீஆ சட்டத்திற்கும் 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க இலங்கையின் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை மக்கள் உணர வேண்டும். 1951ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் 1975 ஆம் ஆண்டு வரைக்கும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருந்தால் தொடர்ந்தும் ஏன் திருத்தங்கள் ஷரீஆவுக்கு முரண்படாத விதத்தில் கொண்டுவரப்பட முடியாது? இலங்கையிலுள்ள முஸ்லிம் தனியாள் சட்டமானது இந்தோனேஷியாவின் படேவியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சட்டமே. இதில் மக்கள் தெளிவுகாண வேண்டும்.

முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இது தனியாள் சட்டத்தின் மூலமாகவா? இஸ்லாத்தின் மூலமா?

இஸ்லாத்தின் மூலமாக யாருக்கும் எந்த அநியாயமும் இழைக்கப்படவில்லை. இஸ்லாத்தை தவறுதலாக விளங்கி தவறுதலாக பொருள்கோடல் செய்வதன் மூலமும் அந்தத் தவறான பொருள்கோடல்களை சுய கொள்கைகளுக்காக உபயோகிப்பதன் மூலமும் சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்ற தெளிவின்மை புரிந்துணர்வின்மை காரணமாகவுமே பாதிப்பு ஏற்படுகின்றது. முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டத்தின் மூலமும், சட்டத்தில் உள்ள இடைவெளிகள் மூலமும் சட்ட அமுலாக்கத்தில் உள்ள இடைவெளிகள்; மூலமுமே பாதிப்பு ஏற்படுகின்றது. முஸ்லிம் பெண்களுக்கு பாதிப்பு என்பதை விட குடும்பப் பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சட்ட நிவாரணம் கிடைக்காமையினால் பாதிப்பு ஏற்படுகின்றது என்றே சொல்ல வேண்டும். இதில் 95 வீதத்திற்கு அதிகமாக பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. பெண்களும் சமூகத்தில் ஒரு தரப்பு. இது பெண்களுக்கு பாதிப்பு என்பதை விட சமூகத்திற்கு பாதிப்பு என்றே கூற வேண்டும். சமூகத்தில் பெண்ணும் ஒரு பகுதி இதனை பெண்ணிலைவாதம் என்ற பெயருக்குள் உள்ளடக்கி இது தொடர்பாக பேசப்போகின்றவர்களை பெண்ணிலைவாதியென்று முத்திரை குத்தி சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் ஏற்றவொரு பெண்ணல்ல என்று அந்தப் பெண்கள் மீது பழி சுமத்துகின்ற எண்ணப்போக்கு சமூகத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். பெண்களுக்கு உரிய உரிமையையும் சுதந்திரத்தையும் வழங்கி பெண்களை கண்ணியப்படுத்திய ஒரு மார்க்கத்தை பின்பற்றுகின்ற சமூகத்தில் வாழ்கின்ற மக்கள் இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தையும் நபி (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் பெண்களுக்கும் பெண்களின் கருத்துக்களுக்கும் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதனையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

முஸ்லிம் தனியாள் சட்டத்தின் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு எவ்வகையான அநீதிகள் இடம்பெறுகிறது என நீங்கள் கருதுகிறீர்கள்?

பெண்களுக்குரிய பதவிகளில் பாரபட்சம் காணப்படுகிறது. உதாரணமாக காதி, விவாகப் பதிவாளர், நியாய சகாயர்கள் போன்ற பதவி நிலைகள் ஆண்களுக்கு மாத்திரமே உள்ளன. இந்தச் சட்டத்தில் அதற்கான திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். தற்போது நாம் முன்வைத்துள்ள அறிக்கையில் விவாகப் பதிவாளர்கள், நியாய சகாயர்கள், காதிகள் சபையின் உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்கு பெண்கள் நியமிக்கப்படலாம் என்பதில் குழுவின் எல்லா உறுப்பினர்களிடையேயும் ஏகமனதான கருத்து காணப்படுகின்றது. காதி எனும் போது குழு உறுப்பினர்களுக்கிடையில் இரண்டு கருத்துக்கள் உள்ளன. சில உறுப்பினர்கள் பெண்கள் காதிகளாக நியமிக்கப்படக் கூடாது அது ஷரீஆவுக்கு முரணானது என்றும் இன்னும் சிலர் இது ஷரீஆவுக்கு உட்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது ஷரீஆவுக்கு முரணல்ல, பெண்கள் காதி நீதவான்களாக நியமிக்கப்படலாம் என்பதே எனது கருத்தாகும். காதிகள் சபையில் பெண்கள் நியமிக்கப்படலாம் என்றால் காதிகளாக பெண்கள் நியமிக்கப்படக்கூடாது என்பதில் என்ன நியாயம்? இது ஷரீஆவுக்கு முரண் எனக் குறிப்பிடுகிறார்கள். எவ்விடத்தில் ஷரீஆவுக்கு முரணாகிறது என்பதை காண்பிக்க வேண்டும். காதி என்பது நீதிபதி, நீதிபதியாக ஏன் பெண்களை நியமிக்க முடியாது. தற்போதைய சட்டத்தின் படி முஸ்லிம் விவாக, விவாகரத்து சம்பந்தப்பட்ட விடயங்கள் காதிகள் சபைகளுக்கு பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றன.

அதனை அடுத்து உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதேபோன்று வலியுறுத்தற் கட்டளைகளுக்குரிய விடயங்கள் நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதேபோன்று பிள்ளைகளது கட்டுக்காப்பு உரிமை விடயங்கள் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்கின்றன. முஸ்லிம் மரண சாசனமில்லா வழியுரிமை சட்டங்கள் தொடர்பான வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களுக்கு செல்கின்றன. இந்நீதிமன்றங்களில் பெண்கள் நீதிபதிகளாக இருந்து தீர்ப்பு வழங்குகிறார்கள். ஆனால் காதி நீதிமன்றில் மாத்திரம் பெண்கள் நீதிபதியாக இருக்க முடியாது என்றால் இதனை எவ்வாறு நியாயப்படுத்துவது? முஸ்லிம்களின் ஏனைய விடயங்களுடன் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு பெண் நீதிபதிகளினால் வழங்கப்படுகின்ற தீர்ப்புகள் செல்லுபடியாகுமாக இருந்தால் விவாக விவாகரத்து தொடர்பான விடயங்களில் மாத்திரம் பெண்கள் காதி நீதிபதியாக இருந்து வழங்குகின்ற தீர்ப்பு எவ்வாறு செல்லுபடியற்றுப்போகும்?

ஷாபி மத்ஹபில் பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட முடியாது என்று கூறுகிறார்கள். இதனால் காதிகளாக பெண்களை நியமிக்கக் கூடாது என்றும் கூறுகிறார்கள். மலேஷியாவில் ஷரீஆ நீதிமன்றத்தில் கூட பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு நியமிக்கப்பட முடியுமாக இருந்தால் ஏன் இங்கு நியமிக்கப்பட முடியாது. காதிகளாக பெண்கள் நியமிக்கப்படக் கூடாது எனக்குறிப்பிட்டு அறிக்கையில் கையொப்பமிட்டவர்கள் ஹனபி மத்ஹப் படி நியமிக்க இடமுள்ளது என குறிப்பிடுகிறார்கள். அப்படியென்றால் ஹனபி இஸ்லாம் இல்லையா? சமூகத்தை அதிகம் முட்டாளாக்கக் கூடாது. ஒரு விடயத்தை கூறும் போது ஏற்றுக்கொள்ளும் விதமாக ஆதாரத்துடன் கூற வேண்டும்.

மற்றது திருமணப்பதிவு. தற்போதைய சட்டத்தை பொறுத்தவரையில் திருமணப்பதிவு கட்டாயமில்லை. நான் 15 வருடங்களுக்கு மேலாக களப்பணிகளில் ஈடுபட்ட அனுபவத்தின் படி, பதிவுசெய்யப்படாத திருமணங்களால் அதிக துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிந்தது. திருமணம் முடித்துவிட்டு கனவன்மார் எங்காவது செல்வார்கள், திரும்ப வரும் போது பிள்ளைகளும் பிறந்திருக்கும். தாபரிப்புச் செலவுக்கான வழக்கும் பதியப்பட்டிருக்கும், நான் அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்று தப்பித்துவிடுவார்கள். அங்கு ஆதாரம் ஒன்றும் இருக்காது. சாட்சிகள் எங்கிருக்கிறார்கள் என்றும் தெரியாத நிலை தோன்றும். இப்படியான சந்தர்ப்பத்தில் திருமணத்தை எப்படி நிரூபிப்பது? நாட்டில் நாம் பல்லின சமூகத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் போது இந்தச் சட்டங்கள் தவிர பொதுவாக எல்லாச் சட்டங்களிலும் நாம் நாட்டின் பொதுச் சட்டத்தால் ஆளப்படுகின்றோம். இந்நேரத்தில் திருமணச் சான்றிதழ் தேவைப்படும் போது அங்கு அத்தேவைப்பாட்டை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது. நிகாஹ் கட்டாயம். ஆனால் அதனோடு சேர்த்து திருமணத்தை கட்டாயப் பதிவு செய்வதனால் என்ன நட்டம் ஏற்பட்டுவிடப்போகின்றது?

முஸ்லிம் பெண்களது இளவயதுத் திருமணம் தொடர்பாக பேசப்படுகின்றது. பெண்களின் திருமண வயது எப்படி அமைய வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

தற்போதைய சட்டத்தில் 12 வயதுக்கு உட்பட்ட பெண்பிள்ளைகளின் திருமணம் காதியின் அனுமதியில்லாமல் பதிவுசெய்யப்பட முடியாது. இதே சட்டம் தான் பதிவு கட்டாயமில்லை எனவும் கூறுகிறது. பதிவு கட்டாயமில்லை என்றால் 12 வயதுக்கு உட்பட்ட பெண்பிள்ளைகளுக்கும் பதிவில்லாமல் திருமணம் முடிக்க முடியும். தற்போதைய சட்டத்தின் படி மருத்துவமனையில் பிறந்த ஆண் பெண் என இரண்டு பிள்ளைகளுக்கு திருமணத்தை முடித்துவைத்து வீட்டிற்கு கூட்டி வர முடியும். எனவே பிள்ளையின் கல்வி உரிமை பாதிக்கப்படுகிறது. உடல், உள ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அந்தக்காலத்தில் 10 வயதில் பிள்ளைகள் திருமணம் செய்வதற்குரிய மனப்பக்குவமடைந்திருப்பார்கள். ஆனால் இன்று 20 வயதிலும் அப்பக்குவம் ஏற்படுவது அரிது. ஏனெனில் அந்த காலத்து சமூக அமைப்பிற்கும் இக்காலத்து சமூக அமைப்பிற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. குறைந்தது பாடசாலைக் கல்வியாவது ஒரு பிள்ளையின் 18 வயதில் தான் பூரணமடைகின்றது. ஆகவே அந்தப் பதினெட்டு வயதை திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயதெல்லையாக நிர்ணயிப்பதில் தவறுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. சிறு வயது திருமணத்தின் மூலம் ஏற்படுகின்ற உள, உடல் பாதிப்புகளும் அதேபோன்று திருமணத்திற்கான பக்குவமின்மையினால் அந்த வாழ்க்கையே பாழாகிப்போன சரித்திரங்களும் அடிமட்ட சமூகத்தினுள் ஊடுறுவிச் சென்று பார்த்தால் மாத்திரமே உணரக்கூடியதாக அமையும்.

முஸ்லிம் தனியாள் சட்டத்திலுள்ள விவாகரத்து, கைக்கூலி போன்ற விடயங்களை குறிப்பிடுவதாயின்..

விவாகரத்து முறையை நோக்குவோமாயின், தலாக்கினை ஆண்களுக்கு மிக இலகுவாகவும் பெண்களுக்கு விவாகரத்துக்கான வழிமுறையை மிக இறுக்கமாகவும் சட்டம் ஆக்கியுள்ளது. அதனை சரியான விதத்தில் ஷரீஆவிற்கு ஏற்றவாறு ஒழுங்கமைக்க வேண்டும். தாபரிப்புச் செலவை நோக்கினால், தேவைக்கு ஏற்றவகையில் தாபரிப்புத் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போதைய சட்டத்தின் பிரகாரம் விண்ணப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து மாத்திரமே தாபரிப்பு கடமையாகின்றது. பிரிந்த காலத்தை சரியாக நிரூபித்தால் பிரிந்த காலத்திலிருந்து தாபரிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற ஏற்பாட்டை கொண்டு வர வேண்டும்.

கைக்கூலி எனும் விடயத்தில் கருத்து முரண்பாடு காணப்படுகின்றது. பெண்களுக்கு ஒரு பாதுகாப்பாகவே கைக்கூலி சட்டத்தில் உள்ளது. கைக்கூலியை சட்டத்திலிருந்து அகற்றி விட முடியும் ஆனால் சமூகத்திலிருந்து அகற்றிவிட முடியுமா? கைக்கூலி கொடுக்க வேண்டாம் என்றால் மறைமுகமாக அந்நடைமுறை தொடரும். சட்டத்திலிருந்து இதனை நீக்கினால் கொடுத்ததை திருப்பி எடுக்க முடியாத நிலை ஏற்படும். சமூகம் இதனை அடியோடு நிறுத்தினால் மாத்திரமே சட்டத்திலிருந்து நீக்குவதை பற்றி சிந்திக்கலாம். அடுத்தது மத்தா. விவாகரத்து நடைபெறும் போது ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் நிவாரணமாகும். எமது சட்டத்தில் இதற்குரிய ஏற்பாடு தற்போதில்லை. ஆனால் ஷரீஆ சட்டத்தில் உள்ளது. இதனை நாம் எமது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திற்குள் அறிமுகம் செய்ய வேண்டும். அத்துடன் பெண்ணின் மீது தவறு இல்லாமல் நடைபெறுகின்ற விவாகரத்துக்களின் போது மத்தா கட்டாயமாக்கப்பட வேண்டும்.

வலியுறுத்தற் கட்டளையின் மூலம் கொடுப்பனவுகள் அறவிடப்படுவதில் காணப்படுகின்ற நடைமுறைச் சட்டத்தில உள்ள சிக்கல்கள் நிவர்த்திசெய்யப்பட வேண்டும். காதி நீதிமன்றங்களுக்கு சட்டத்தரணிகள் ஆஜராக முடியாது என்ற ஏற்பாடு தற்போதைய சட்டத்தில் உள்ளது. ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ கட்டாயம் சட்டத்தரணியின் மூலம் ஆஜராக வேண்டும் என்றால் அவர்களுக்கு அத்தேர்வு உரிமை வழங்கப்பட வேண்டும். காதிமார் ஷரீஆ சட்டத்திலும் இலங்கையில் நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திலும் புலமைவாய்ந்த முஸ்லிம் சட்டத்தரணிகளாக இருக்க வேண்டும்.

இது தவிர வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

எந்த விடயத்தையும் யார் சொல்கின்றார்கள் என்பதை நோக்காமல் எதைச் சொல்கின்றார்கள் என்பதை நோக்குவது ஒரு அறிவுசார்ந்த சமூகத்தின் கட்டாயப் பண்பாகும். அதைவிடுத்து விடயங்களினால் ஏற்படுகின்ற சமுதாய நலனைப் பற்றி யோசிக்காமல் சொல்பவரை பற்றி வேண்டாத விமர்சனங்கள் செய்யப்படுவது ஒரு அறிவுசார்ந்த சமூகத்தின் ஒழுங்கான பண்பு அல்ல. இது இஸ்லாத்தினால் மிகவும் வெறுக்கப்பட்ட ஒரு விடயமாகும். அதிலும் விஷேடமாக ஒரு பெண் ஒரு விடயத்தை சொல்கின்ற போது அப்பெண் தொடர்பிலான விமர்சனங்கள் மிகவும் இழிவான வகையில் அமைகின்றன. விடயத்தை மாத்திரம் அவதானித்து கருத்தியலில் கவனம் எடுக்கின்ற மனிதப் பண்பாளர்களை மதிக்கின்ற அதேவேளையில் வேண்டாத விமர்சனங்களின் மூலம் கருத்தியலை இழிவுபடுத்துகின்ற இஸ்லாத்தினால் வெறுக்கப்பட்ட தன்மை வாய்ந்தவர்களை நினைத்து கவலையும் பரிதாபமும் அடைகின்ற அதேவேளையில் அவர்களுக்கு அல்லாஹூத்தஆலா நல்வழிகாட்ட வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கின்றேன்.

About the author

Administrator

Leave a Comment