Features இலக்கியம்

நூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்கள்

Written by Administrator

2030 வரை நடைமுறைப்படுத்துவதற்கு உலகம் ஏற்றுக் கொண்டுள்ள நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் 17 அபிவிருத்தி இலக்குகளில் (SDG) நான்காவதாக தரமான கல்வி (quality education) அமைந்துள்ளது. நிலைபேறான இந்த அபிவிருத்தித் திட்டங்களை இலங்கையில் அமுலாக்கும் அலகாக ஜனாதிபதி அலுவலகத்தின் அபிவிருத்தி மற்றும் விஷேட கருத்திட்டப் பிரிவு காணப்படுகிறது. இதில் கல்விக்குரிய நிகழ்ச்சித் திட்டங்கள் நிலைபேறான பாடசாலை நிகழ்ச்சித் திட்டங்களாக கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின்படி திறனாய்வு மற்றும் புத்தாக்கச் சிந்தனைகள் மேலோங்கும் வகையில் அறிவையும் தொழில்நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்ட சுற்றாடல், தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்பு பற்றிய திறமைகளைப் பயன்படுத்தி அச்சு மற்றும் அச்சுசாரா கற்றல் வளங்களை உபயோகிப்பதற்கு மாணவர்களை ஈடுபடுத்தும் வகையிலான பாரிய கடமைகள் பாடசாலை நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்தோடு அறிவையும் தொழில்நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்ட உலகில் வாழ்வதற்கும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அவசியமான மென்மைத் தேர்ச்சிகளைப் (Soft Skills) பெற்ற பிள்ளைகளை கல்வியின் ஊடாக உருவாக்கும் பொறுப்பும் பாடசாலை நூல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த வகையில், மாணவர்களின் மூளையை சமநிலைப்படுத்துகின்ற வேலை நூலகங்களின் தலையாய பணியாகின்றது. பொதுவாக மூளையின் இடது அரைப்பகுதி அறிவை மையப்படுத்தியும் வலது அரைப்பகுதி சிந்தனை அல்லது ரசனையை மையப்படுத்தியும் அமைகிறது.  இலங்கையின் கல்விக் கட்டமைப்பில் தற்போது நிலவும் பரீட்சைகளை மையப்படுத்திய கற்றல் கலாசாரத்தின் மூலம் மாணவர்கள் தமது மூளையின் இடது பக்கத்தையே நிரப்பி வருகிறார்கள். இதனால் மூளையின் பயன்பாட்டில் சமநிலையற்ற தன்மை காணப்படுகிறது.

சிந்தனை, ரசனை, விழுமியங்கள், அழகுணர்ச்சி, அன்பு, நெறிமுறைகள் போன்றவற்றை இயக்கும் மூளையின் வலது அரைப்பகுதியையும் வளர்த்துக் கொண்ட சமநிலையான மாணவர் சமூகத்தை உருவாக்கிக் கொள்வதற்கான முறைசார் நிகழ்ச்சித் திட்டமொன்றின் அவசியம் தற்போது கல்வி முறையில் தோன்றியுள்ளது. இதற்கமைய 2017 ஆண்டிலிருந்து கல்வி அமைச்சின் பாடசாலை நூலக அபிவிருத்திக் கிளை, ஜனாதிபதி செயலணி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நூலக மற்றும் தகவல் அறிவியலுக்கான தேசிய நிறுவனம் என்பன ஒன்றிணைந்து பாடசாலைகளில் தரம் 6-13 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு ” நூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்கள்” என்ற பெயரில் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பூராவும் ஒரு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு 2017.11.27 ஆம் திகதியிட்ட 44/2017 இலக்க சுற்றறிக்கையினூடாக சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. வாசிப்பை மேம்படுத்தும் இந்த நிகழ்ச்சித் திட்டம் நான்கு மட்டங்களில் செயற்படுத்தப்படுகின்றது. இதில் முதலாவது மட்டம் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 06 முதல் 13 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகளில் இது நடைமுறைப்படுத்தப்படும்.  தரம் 6 – 9 வரை கனிஷ்ட பிரிவாகவும் தரம் 10 – 13  வரை சிரேஷ்ட பிரிவாகவும் கொள்ளப்படும். இந்த இரண்டு பிரிவுகளையும் உடைய சகல மாணவர்களும் தமது வகுப்பு மட்டத்தில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்ற முடியும்.

பாடசாலை நூல் நிலையத்தில் உள்ள நூல்களுக்கிடையில் அல்லது கல்வி அமைச்சின் மூலம் பாடசாலைகளில் பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள நூல்களுக்கிடையில் மாணவர்கள் தெரிவு செய்கின்ற தகுதியான இலக்கிய நூலை வாசித்து அதற்கு ஏற்புடைய செயற்திறன் குறிப்புப் பத்திரக்கோவையை (இந்தக் கோவையின் மாதிரி ஒன்று பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது) பூரணப்படுத்தி வகுப்பாசிரியர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். வகுப்பின் பொறுப்பாசிரியரால் வகுப்பு மட்டத்தில் சிறந்த 5 குறிப்புப் பத்திரக் கோவைகளைத் தேர்ந்தெடுத்து பாடசாலையின் போட்டிக்கான செயற்குழுவிடம் ஒப்படைத்தல் வேண்டும். பின்னர் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் தெரிவான  குறிப்பேடுகளை வைத்து கனிஷ்ட பிரிவிலிருந்து 03 குறிப்பேடுகளும் சிரேஷ்ட பிரிவிலிருந்து 02 குறிப்பேடுகளுமாக மொத்தமாக 05 குறிப்பேடுகள் ஒரு பாடசாலையிலிருந்து வலய மட்டத் தெரிவுக்காக அனுப்பப்படல் வேண்டும்.

பாடசாலையில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் செயற்திறன் குறிப்புப் புத்தகங்கள் வலயக் கல்வி அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்ட பின்னரும் அவர்கள் தமது வாசிப்புத் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் தொடரந்து கலந்து கொள்ள முடியும். இதற்கமைவாக பாடசாலை நூல்நிலையத்தின் ஊடாக நூல்களை வாசித்தல் மற்றும் செயற்றிறன் குறிப்புக்களைப் பதிவு செய்தல் என்பன தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு 50 க்கு மேற்பட்ட வெற்றிகரமான செயற்திறன் குறிப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். 50 செயற்திறன் குறிப்புகளைப் பூர்த்தி செய்து 50 வீதத்துக்கும் அதிகமான புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்படும். 75 செயற்திறன் குறிப்புகளைப் பூர்த்தி செய்து 50 வீதத்துக்கும் அதிகமான புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். 100 செயற்திறன் குறிப்புக்களைப் பூரணப்படுத்தி 50 வீதத்துக்கும் அதிகமான புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு பிளாட்டினம் விருது வழங்கப்படும். நவம்பர் மாதம் முடிவடைவதற்குள் பாடசாலைகள் இவர்களின் பெயர்களை வலயத்தின் பாடசாலை நூல்நிலையப் பணிப்பாளரிடம் அறிவிக்க வேண்டும்.

பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும் சிறந்த வாசகர்களுக்கிடையில் இருந்து வலய மட்டத்தில் சிறந்த 20 பேர் (கனிஷ்ட பிரிவு 10, சிரேஷ்ட பிரிவு 10) தெரிவு செய்யப்படுவர். வலய மட்டத்தில் தெரிவு செய்யப்படும் சிறந்த வாசகர்களில் 10 பேர் மாகாண மட்டத்துக்குத் தெரிவு செய்யப்படுவர். மாகாண மட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டோரைத் தெரிவு செய்ததன் பின்னர் அவர்கள் தொலைக்காட்சியில் ரியலிட்டி வினாவிடை நிகழ்ச்சியொன்றில் பங்குகொள்வர்.

வாசிப்பை மேம்படுத்தும் அரசாங்கத்தின் இந்த நிலைபேறான நிகழ்ச்சித் திட்டம் பற்றிய அறிவுறுத்தல்கள் 2017 நவம்பரிலேயே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன. அதற்குரிய தமிழ்க் கையேடு 2018 இலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் தற்பொழுது தான் இந்தக் கையேடுகள் முஸ்லிம் பாடசாலைகளுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில பாடசாலைகள் கிடைத்தும் கவனிக்காதிருக்கின்றன.

About the author

Administrator

Leave a Comment