Features கல்வி மாணவர் பகுதி

ஐ.நா தினம்

Written by Web Writer

ஐக்கிய நாடுகள் தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. U.N.O. (United Nations Organization) என்பதன் தமிழாக்கம் ஐக்கிய நாடுகள் சபை என்பதாகும். ஐக்கிய நாடுகள் என்பதைத்தான் சுருக்கமாக ஐ.நா. என்பார்கள்.

1945 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1948 ம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் தினம்
ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளுமே அதாவது 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இன்று உலகமட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை, அணிசேரா இயக்கம், பொதுநலவாய நாடுகளின் கூட்டு என பல நாடுகள் அங்கம் வகிக்கும் பல்தரப்பு அமைப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஐக்கிய நாடுகள் சபையே மிகப்பிரதான உலக அமைப்பாகும். சகல நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமாகும். ஐ.நா. அமைப்புக்கு முன்னமே இது போன்ற பல சர்வதேச அமைப்புகள் உருவாகியிருந்தன. அவற்றுள் முக்கியமானது முதல் உலகப் போருக்குப் பின் 1919ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சங்கம் (League of Nations) ஆகும். இந்த அமைப்பும் உலக சமாதானத்தைப் பேணுதல் என்ற பிரதான நோக்கத்தை கொண்டிருந்தது. இருப்பினும் அதனால் தனது செயல்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் இதில் அனைத்து நாடுகளும் அங்கம் வகிக்கவில்லை.
இதில் ஏற்பட்ட தோல்வியே இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தது. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலகத் தலைவர்கள் ஒன்று கூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும். ஐ.நா. என்பது அதில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு.
ஐ.நா.வின் பணிகளை நெறிப்படுத்தும் விதிகளையும் கோட்பாடுகளையும் கொண்ட ஆவணமே ஐக்கிய நாடுகள் சாசனம் (UN Charter) என்றழைக்கப்படுகிறது. உறுப்பு நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் பொது லட்சியங்களை எட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தெரிவிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் அதில் அடங்கி உள்ளன. ஒரு நாடு ஐ.நா.வில் உறுப்பினராக சேரும்போது இச்சாசனத்தின் விதிகளை ஏற்று கையொப்பமிட வேண்டும்.

1945 ம் ஆண்டு ஜுன் மாதம் 26 ம் தேதி ஐ.நா.சாசனம் உருவாக்கப்பட்டு 51 நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின்படி ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும். ஐ.நா.வின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு.

1. உலக நாடுகளில் அமைதியை நிலை நிறுத்துவது,
2. நாடுகளிடையே நல்லுறவை வளர்ப்பது,
3. ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும், பசி, பிணி, கல்லாமை ஆகியவற்றை ஒழிக்கவும் கூட்டாக முயற்சி செய்தல்
4. இந்தக் குறிக்கோள்களை எய்துவதில் உலக நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஒரு பொது அரங்கமாக செயல்படுதல்.

‘ஐக்கிய நாடுகள்’ என்றபெயரை முன்மொழிந்தவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் ஆவார். ஐ.நா. சாசனம் கையெழுத்திடப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக ரூஸ்வெல்ட் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் முன்மொழிந்த ‘ஐக்கிய நாடுகள்’ என்ற பெயரையே ஏற்றுக்கொள்ள சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் பங்குபெற்ற அனைத்து நாடுகளும் சம்மதித்தன.

இதன் தலைமையகம் அமெரிக்கா நாட்டில் நியுயார்க் நகரில் உள்ளது. தலைமையகத்தில் 39 மாடிகளைக் கொண்ட செயலகக் கட்டிடம், உறுப்பு நாடுகள் கூடுகின்ற பொதுச்சபை கட்டிடம் மற்றும் டாக்ஹாமர்ஷீல்ட் நூலக கட்டிடம் என்று மூன்று முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. இந்தத் தலைமையக கட்டிடத் தொகுதி 1949, 1950 ம் ஆண்டுகளில் ஜோன் டி, ராக்பெல்லர் ஜுனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு
ஐ.நா.சபையின் சின்னத்தில் வெளிர்நீல நிற பின்னணியில் வெள்ளைநிறத்தில் ஐக்கிய நாடுகள் இடம் பெற்றிருக்கும். போரைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்திற்கு எதிராக நீல நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெள்ளையும் நீலமும் ஐ.நா. அமைப்பின் அலுவல்சார் வண்ணங்களாக உள்ளன. ஐ.நா.வின் அலுவலக மொழிகளாக அரபிக், சைனிஸ், ஆங்கிலம், பிரென்ச், ருஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் உள்ளன. தலைமையகத்தில் செயல் மொழிகளாக ஆங்கிலமும், பிரென்ச் மொழியும் உள்ளன.
ஐ.நா.சபை சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது. சிறுவர்களை பராமரிக்கும் யுனிசெப் நிறுவனம் (UNICEF)
அகதிகளை பராமரிக்கும் UNHCR நிறுவனம்,
மேம்பாட்டு திட்டங்களுக்கான UNPF நிறுவனம்,
மக்கள் தொகை நிதியம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஐ.நா. அமைப்பின் முக்கியமான ஏஜென்சி நிறுவனங்களாக:
IMF எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம்,
World Bank எனப்படும் உலக வங்கி,
ILO எனப்படும சர்வதேச தொழிலாளர் கழகம்,
WHO எனப்படும உலக சுகாதார நிறுவனம்,
கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான ‘யுனெஸ்கோ’ நிறுவனம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலக மக்கள் தொகை தினம், உலக சுற்றுச்சூழல் தினம் போன்ற சர்வதேச தினங்களை அறிவிப்பதும் இதன் பணிகளில் ஒன்றாகும். ஐ.நா. அறிவித்த முதல் சர்வதேச தினம் எதுவென்றால் ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் தேதி கொண்டாடப்படும் ‘மனித உரிமை தினம்’ ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபை 6 முக்கிய அமைப்புகளைக் கொண்டது. இதில் சர்வதேச நீதி மன்றம் நீங்கலாக ஏனைய ஐந்து அமைப்புகளும் நியுயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்திலிருந்தே இயங்கி வருகின்றன.

(1) ஐ.நா. பொதுச்சபை (General Assembly)
(2) ஐ.நா. பாதுகாப்பு மன்றம் (Security Council)
(3) ஐ.நா. பொருளாதார சமூக மன்றம் (Economic and Social Council)
(4) ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம் (Trusteeship Council)
(5) ஐ.நா. செயலகம் (Secretariat)
(6) சர்வதேச நீதி மன்றம் (International Court of Justice)

1. ஐ.நா. பொதுச்சபை: ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தின் பிரதிநிதிகளின் பேரவை இது. இது ஐக்கிய நாடுகளின் முக்கியமானதொரு அங்கமாகும். இதில் எல்லா நாடுகளுக்கும் சம உரிமை அளிக்கப்படும். இது நியூயார்க்கில் உள்ளது. ஒவ்வொரு நாடும் 5 பிரதிநிதிகள் வரை அனுப்பலாம். ஆனால் ஒரு நாடு ஒரே ஒரு வாக்குதான் அளிக்க முடியும். ஆண்டுக்கு ஒருமுறை செப்டம்பர் மாதத்தில் கூடும். ஆனால் பாதுகாப்பு அவையின் வேண்டுகோளின்படி அவசரக் கூட்டங்களையும் கூட்டலாம். தலைவர்: மொஜின்ஸ் லைக்கெட்டாஃப், பெல்ஜியம்.
இச்சபையினால் ஐ.நா. சபையின் சட்டங்களை உருவாக்கவும், சபையின் சாசனத்தில் திருத்தங்கள் செய்யவும் முடியும். ஆண்டறிக்கை ஆய்வு, பிற அங்கங்களில் ஆய்வுகளை நடத்தும்.
ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதும், பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் முக்கிய கடமைகளாகும்.
பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர்கள், பொருளாதார மற்றும் சமூகக் குழு உறுப்பினர்கள், அறங்காவல் அவை உறுப்பினர்கள், பன்னாட்டு நீதிமன்ற நீதிபதிகள், இவர்களை பாதுகாப்பு அவையுடன் கூடித் தேர்ந்தெடுக்கும்.
முக்கிய பிரச்சினைகளில் முடிவெடுக்க 2/3 பேர் ஆதரவு தேவை.

2. ஐ.நா. பாதுகாப்பு மன்றம்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பினைப் பராமரிப்பது இதன் முக்கிய கடமையாகும். ஐ.நா. சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டு பொருளாதார தடைகளை விதித்தல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் எடுத்தல் போன்றஅதிகாரங்கள் இதற்கு வழங்கப்பட்டுள்ளன..

3. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக சபை: பொருளாதார மற்றும் சமூக தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய அமைப்பாகும். உலக பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை விவாதித்து உறுப்பு நாடுகளுக்கும், ஐ.நா. அமைப்பிலுள்ள ஏஜென்சி நிறுவனங்களுக்கும் ஓர் செயலாக்கத் திட்டத்தை வகுப்பது இதன் முக்கிய நோக்கமாகும். இதில் 54 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவை பொதுப் பேரவையின் 2/3 உறுப்பினர்களின் வாக்கைப் பெற்று தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பதவிக் காலம் 3 ஆண்டுகள். மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வோர் ஆண்டும் பதவி விலகுவர்.

இது 3 ஆண்டுக்கு ஒருமுறை பிரான்சின் தலைநகரான பாரீஸில் கூடும். இது, ஐரோப்பிய பொருளாதாரக் குழு (ECE), ஆசியா, பசிபிக் பகுதிகளுக்கான பொருளாதார சமூகக்குழு (ESCAP), இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பொருளாதாரக் குழு (ECLA), ஆப்பிரிக்கா பொருளாதாரக்குழு (ECA), மேற்கு ஆசிய நாடுகளுக்கான பொருளாதாரக் குழு (ECWA) முதலிய வட்டார குழுக்களாகப் பிரிந்து செயல்படும். இக்குழு பொதுப் பேரவையின்கீழ் இயங்குகிறது.

4. ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம்: இது ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் விடப்பட்ட நாடுகள் மற்றும் பகுதிகளை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். பெரும்பாலான நாடுகள் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட நாடுகளாகும். இவற்றில் சில நாடுகள் விடுதலை பெற்றுள்ளன. சில நாடுகள் தன்னாட்சி அடைந்து விட்டன. சில நாடுகள் அண்டை நாடுகளுடன் இணைந்து கொண்டன.
இதன் உறுப்பினர்கள் பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படுவர். பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுப்படி அலுவல்கள் நடக்கும். இக்குழுவில் ஒப்படைக்கப்பட்ட 11 நாடுகள் 7 உறுப்பு நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. ஒப்படைக்கப்பட்ட காலனி நாடுகளின் எல்லைகளை வகுத்து அவற்றின் சுயாட்சி மற்றும் சுதந்திரத்துக்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதே இக்குழுவின் நோக்கம்.
1994-ஆம் ஆண்டுக்குள் இந்த 11 ஒப்படைப்பு நாடுகள் அனைத்தும் சுயாட்சி/சுதந்திரம் பெற்றதால் இக்குழுவின் செயல்பாடு முடிவுக்கு வந்தது. தேவைப்படும்போது இக்குழு மீண்டும் கூடுவது என்று இதன் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

5. ஐ.நா. செயலகம்: இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்கு வேண்டிய ஆய்வுகள், தகவல்கள் மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மேலும் ஐ.நா. நிறுவனத்தின் பிற அமைப்புகள் இடுகின்ற பணிகளையும் நிறைவேற்றுகிறது. இதன் ஊழியர்கள் செயல்திறன் மற்றும் நேர்மையின் அடிப்படையில் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இதன் சாசனம் வலியுறுத்துகிறது.
ஐ.நா.சபையின் முக்கிய உறுப்பு, இதுதான் ஐ.நா.வை நிர்வாகம் செய்கிறது. இதன் அலுவலகம் நியூயார்க் நகரில் உள்ளது. ஐ.நா. சபையின் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளை இணைப்பதுடன் அவற்றை மேற்பார்வையிடுவதும் இதுவே. இதன் தலைமை நிர்வாக அலுவலர் ஐ.நா.வின் தலைமைச் செயலர் (Secretary General) ஆவார். இவர் ஐ.நா. பாதுகாப்பு அவையின் பரிந்துரைப்படி பொதுப் பேரவையால் நியமிக்கப்படுகிறார். இவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள்.

ஐ.நா. சபையின் தலைமைச் செயலாளர்கள்
பதவிக்காலம் தலைமைச் செயலர்
1946-53 டிரிக்வீ லை (நார்வே)
1953-61 டேக் ஹேமர்ஷோல்டு (ஸ்வீடன்)
1961-71 ஊ தாண்ட் (பர்மா)
1972-81 குர்ட் வால்தீம் (ஆஸ்திரியா)
1982-91 ஜேவியர் பெரஸ் டி கொய்லர் (பெரு)
1992-97 புட்ரோஸ் புட்ரோஸ் காலி (எகிப்து)
1997-02 கோஃபி அன்னான் (கானா)
2002-07 கோஃபி அன்னான் (கானா)
2007-12 பான் கீ-மூன் (தென் கொரியா)
2012- 2016 டிசம்பர் 31 வரை பான் கீ-மூன் (தென் கொரியா) (இரண்டாவது முறையாக)
2017 ஜனவரி 1 முதல் அந்தோணியோ குத்தெரஸ் (போர்ச்சுகல்)

6. சர்வதேச நீதிமன்றம் : என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மையான அமைப்பாகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான தி ஹேக்கில் உள்ளது. உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், அனைத்துலக அமைப்புகள் முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதி மன்றத்தின் முக்கிய பணிகளாகும். இந்த நீதிமன்றத்தில் நாடுகள் மட்டுமே வழக்கு தாக்கல் செய்ய முடியும். தனிப்பட்டவர்கள் வழக்காட முடியாது. ஒரு நாடு இந்த நீதிமன்றத்தை அணுகும்போது இந்த நீதி மன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்குப் பணிந்து நடப்பதாகவும் அந்த நாடு உறுதியளிக்க வேண்டும். 15 நீதிபதிகள் இந்த நீதிமன்றத்தில் இடம் பெறுவார்கள். ஒரே நாட்டைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகள் ஒரே சமயத்தில் இடம்பெறமாட்டார்கள். நீதிபதிகளின் பதவிக்காலம் ஒன்பது ஆண்டுகள்.

ஐ.நா.சபைக்கு வருமானம் என்பது அதன் உறுப்பு நாடுகள் செலுத்தும் தொகைதான். அதற்கு வேறு வருமானம் கிடையாது. அனைத்து உறுப்பு நாடுகளும் தமக்கு விதிக்கப்பட்ட தொகையைச் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தொகையின் அளவு அந்த நாட்டின் பொருளாதார பின்னணி, தேசிய வருமானம், மக்கள் தொகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

ஐ.நா.வின் ஆண்டு வருமானத்தில் ஐக்கிய அமெரிக்கா 22%, ஜப்பான் 19.6%. ஜெர்மனி 9.8%, பிரான்சு 6.5% தொகையைச் செலுத்துகின்றன.

ஐ.நா. சபையின் முகமைகள்
உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO – Food and Agricultural Organization):
உணவு மற்றும் வேளாண் அமைப்பு 1945, அக்டோபரில் நிறுவப்பட்டது. 194 உறுப்பு நாடுகளைக் கொண்டது. உலக உணவு நிலைமையை இவ்வமைப்பு மேற்பார்வையிடுகிறது. உணவு உற்பத்திப் பெருக்கத்திற்குத் தேவையான சில வழிமுறைகளையும் உறுப்பு நாடுகளின் அரசுகளுக்குப் பரிந்துரை செய்கிறது. இதனைத் தனிக்குழு நிர்வாகம் செய்கிறது. இவ்வமைப்பு ஒரு பொது இயக்குநரின் தலைமையின்கீழ் செயல்படுகிறது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோஸ் க்ராஸியானோ டா சில்வா பொது இயக்குநராவார். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் இதன் தலைமையிடம் உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் (WHO – World Health Organization):
உலக சுகாதார நிறுவனம் 1947, ஏப்ரல் 7-இல் ஏற்படுத்தப்பட்டது. உலக மக்களுக்கு நோய்த் தடுப்பையும், உடல் நலமிக்க வாழ்க்கை அமையவும் இவ்வமைப்பு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படுகிறது. தற்போதைய பொது இயக்குனர்: டாக்டர் மார்க்ரெட் சான் ஆவார்.

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (ILO – International Labor Organization):
1919 ஏப்ரல் 11-இல் உருவானது. இவ்வமைபில் உறுப்பு நாடுகளின் நான்கு பிரதிநிதிகள் பங்கேற்பர். உலகத் தொழிலாளர்களின் நலனைக்காத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஒரு பொது இயக்குனரின் தலைமையின்கீழ் செயல்படும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் தற்போதைய பொது இயக்குநர்: கே ரைடர் (பிரிட்டன்). தலைமையகம்: சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா.

ஐ.நா. கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு (UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization):
உலக நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு முதலியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும், ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு அக்கறை செலுத்தவும் நீதி, சட்டம், மனித உரிமை இவற்றுக்கு உலகம் தழுவிய மதிப்பைப் பெற்றுத் தரவும், உலகின் பல நாடுகளிடையே எழுத்தறிவின்மையைப் போக்கவும், வளர்ச்சியுறாத நாடுகளுக்கு தொழில் நுட்ப அறிவை அளிக்கவும், தொழில்நுட்ப வல்லுநர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் யுனெஸ்கோ 1946, நவம்பர் 4-இல் ஏற்படுத்தப்பட்டது. தலைமையிடம் பிரான்சில் உள்ள பாரீஸ் நகரில் உள்ளது. பொது இயக்குநர்: ஐரினா பொகோவா (பல்கேரியா).

ஐ.நா. பன்னாட்டுக் குழந்தைகள் அவசர நலநிதி (UNICEF – United Nations International Children’s Emergency Fund):
1946, டிசம்பர் 11-இல் அமைக்கப்பட்டது. உலகக் குழந்தைகளின் உடல்நலம், சத்துணவு, சமூகநலம், கல்வி, தொழிற்பயிற்சி முதலிய துறைகளில் அனைத்து நாடுகளுக்கும் இது உதவுகிறது. பன்னாட்டு அரசுகள் தங்கள் நாட்டுக் குழந்தைகளின் முக்கியத் தேவைகளை மதிப்பீடு செய்யவும், அவற்றை நிறைவேற்றவும் விரிவான திட்டங்களைத் தயாரிக்க இவ்வமைப்பு உதவுகிறது. தலைமையிடம்: அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ளது. தற்போதைய செயல் இயக்குநர்: அந்தோனி லேக் (UK).

ஐ.நா. வளர்ச்சி திட்டம் (UNDP – United Nations Development Program):
உலகின் பல்வகைத் தொழில்நுட்ப மற்றும் முன்முதலீட்டுக் கூட்டுறவின் மிகப்பெரிய அமைப்பு. இது பல்வேறு தொழில்நுட்ப உதவித் திட்டங்களுக்கு நிதி உதவும் அமைப்பாகும். தற்போதைய நிர்வாகி மற்றும் பொது இயக்குநர்: நியூசிலாந்தைச் சேர்ந்த ஹெலன் கிளார்க். தலைமையகம்: நியூயார்க்.

ஐ.நா. மக்கள் தொகை செயற்பாட்டு நிதி (UNFPA – The U.N. Fund for Population Activities):
தனது திட்டத்தை 130 நாடுகளிலும், பிரதேசங்களிலும் நிறைவேற்றுகிறது. குடும்ப நலத்திட்டம் மற்றும் மக்கள் தேவைக்கேற்பச் செயல்புரிவதே இதன் நோக்கம். மக்கள் தொகைப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இதைத் தீர்க்க வழிமுறைகளைக் கண்டறிதல், இதன் பணி. உலகில் 25% மேற்பட்ட பன்னாட்டு மக்கள் தொகை உதவி இதன் மூலம் வளர்ந்துவரும் நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. செயல் இயக்குநர்: நைஜீரியாவைச் சேர்ந்த பாபாடுன்டே ஓஸோடிமெஹின். தலைமையகம்: நியூயார்க்.

பன்னாட்டு அணுசக்தி நிறுவனம் (IAEA – International Atomic Energy Agency):
1957, ஜூலை 29-இல் ஏற்படுத்தப்பட்டது. உறுப்பு நாடுகள் 150. சர்வதேச அளவில் அணுசக்திக் குறித்த வரைமுறைகளை வரையறுத்து நெறிமுறைப்படுத்துகிறது தலைமையகம்: வியன்னா. பொது இயக்குநர்: யூகியா அமனோ (ஜப்பான்). கடந்த 2005-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. தொழில் வளர்ச்சி அமைப்பு (UNIDO – United Nations Industrial Development Organization):
வளரும் மற்றும் வளரா நாடுகளுக்கு இடையே தொழில் வளர்ச்சிக்கு, தொழிற்கொள்கைக்கு வேண்டிய பரிந்துரைகள் செய்யப் பயன்படுகின்றது.
1985-இல் இது ஐ.நாவின் ஒரு சிறப்பு அமைப்பாக்கப்பட்டது. தலைமையிடம் : வியன்னா. பொது இயக்குநர்: லீ யாங் (சீனா).

பன்னாட்டு நிதியம் (IMF – International Monetary Fund):
தன்னுரிமை பெற்ற பன்னாட்டு நிறுவனமாக இது 1945, டிசம்பர் 27-இல் தொடங்கப்பட்டது. உலக பொருளாதாரத்தினையும் கரன்சி மதிப்புகளையும் ஸ்திரத்தன்மையுடையாதாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நெருக்கடி காலங்களில் உலக நாடுகளுக்கு கடன் உதவி அளிக்கிறது. தலைமையிடம்: வாஷிங்டன்; பாரீசிலும், ஜெனிவாவிலும் கிளைகள் உள்ளன. தலைமை இயக்குநர்: திருமதி கிறிஸ்டினா லகார்ட் (பிரான்ஸ்).

பன்னாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO – International Civil Aviation Organization):
1944-இல் சிகாகோ நகரில் நடைபெற்ற பன்னாட்டு சிவில் விமானப் போக்குவரத்து மாநாட்டில் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் கனடா நாட்டின் மாண்ட்ரீலில் உள்ளது. தலைவர்: ராபர்டோ கோபே கான்ஸலஸ் ; பொதுச்செயலர்: ரேமண்ட் பெஞ்ஜமின் (பிரான்ஸ்).

பன்னாட்டு தபால் ஒன்றியம் (UPU – Universal Postal Union):
ஜூலை 1, 1875-ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு தபால் மாநாட்டில் நிறுவப்பட்டது. தலைமையிடம் சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் (Berne). பொது இயக்குநர்: பிஷார் ஏ. உசைன் (கென்யா)

பன்னாட்டு தொலைச் செய்தித் தொடர்பு ஒன்றியம் (ITU – International Telecommunication Union):
1865-இல் பாரீஸ் நகரில் பன்னாட்டுத் தந்தி ஒன்றியம் நிறுவப்பட்டது.
1906-இல் பன்னாட்டு ரேடியோ தந்தி ஒன்றியம் பெர்லினில் நிறுவப்பட்டது.
1932, மாட்ரிட் மாநாட்டில் இவை இரண்டும் இணைந்து இந்நிறுவனம் உண்டாயிற்று. தலைமையிடம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா. தற்போதைய பொதுச் செயலர்: ஹமடவுன் தூரி (Hamadoun Toure) (மாலி).

உலக வர்த்தக நிறுவனம்
1995 ஆம் ஆண்டில் GATT அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மராக்கேஷ் ஒப்பந்தத்தின்படி GATT ஒப்பந்தத்தின் பொறுப்புகள் புதிதாகத் துவங்கப்பட்ட உலக வர்த்தக நிறுவனத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வமைப்பின் நோக்கம் சர்வதேச அளவிலான வர்த்தகத்திற்கு தடையாக விளங்கும் வரி மற்றும் இறக்குமதிக் கொள்கைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் சரிசெய்வதாகும். இவ்வமைப்பில் தற்பொழுது 163 நாடுகள் உள்ளன.

வர்த்தகம் மற்றும் வரிக்கான பொது ஒப்பந்தம் (GATT – General Agreement on Tariffs and Trade):
1947-இல் நடைபெற்ற சர்வதேசப் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1948-இல் அமல்படுத்தப்பட்டது.
வீதப்பட்டியினால் ஏற்படும் வர்த்தகத் தடைகளைத் தவிர்த்து, முறையான சர்வதேச நடைமுறை சட்டங்களையும், விதிமுறைகளையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியது, ஆனால் வீதப்பட்டி சாராத வேறு சில தடைகளைத் தவிர்க்க இயலவில்லை. இந்த ஒப்பந்தம் ஜெனீவாவில் தொடங்கப்பட்டது. 1994-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 125 உறுப்பினர்கள் இதில் சேர்ந்திருந்தனர். 1995-ஆம் ஆண்டு உலக வாணிபக் கழகம் (WTO) இதன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டது.

கடல்சார் செயல்பாடுகளுக்கான பன்னாட்டு அமைப்பு (IMO – International Maritime Organization):
ஜெனீவாவில் நடந்த சர்வதேச மாநாட்டையொட்டி, 1958-ஆம் ஆண்டு மார்ச் மாதம், இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் நோக்கம், கப்பல் பயணிகளின் உயிர் பாதுகாப்பு, வெவ்வேறு அரசாங்கங்களுக்கிடையே ஒத்துழைப்பு, மேலும் கடல் சார்ந்த முறையான செயல்பாடுகளுக்கு இடையூறாக உள்ள தேவையற்ற சட்டதிட்டங்களை அகற்றுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை இவ்வமைப்பு கூடுகிறது. இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. 1983-இல் உலக கடல்சார் பல்கலைக்கழகம் ஸ்வீடனில் துவங்கப்பட்டது.

வேளாண்மை வளர்ச்சிக்கான பன்னாட்டு நிதியம் (IFAD – International Fund for Agricultural Development):
1974 உலக உணவு மாநாட்டில் இதற்கு ஆணை வெளியிடப்பட்டது. 1977-இல் இத்தாலியில் உள்ள ரோம் நகரில் தொடங்கப்பட்டது. தற்போதைய தலைவர்: கனாயோ கு. நவான்ஸி (நைஜீரியா).

பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்கள் (Brettenwoods Institutions)
உலகப் போரினால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சர்வதேச நாணயப் பரிமாற்ற விகித குழப்பத்தினால் அப்போது பயன்பாட்டிலிருந்த தங்கத்துடன் சர்வதேச கரன்சிகளை ஒப்பிடும் முறை நம்பிக்கையற்றதாக மாறியது. இந்நிலையை மாற்ற 1944 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிரெட்டன்வுட்ஸ் எனுமிடத்தில் 44 நாடுகளைச் சார்ந்த பொருளாதார அறிஞர்கள் கலந்து ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தின் முடிவில் சர்வதேச நாணய மதிப்பு நிர்ணய முறையில் உலக நாடுகளின் கரன்சிகள் நேரடியாகத் தங்கத்துடன் ஒப்பிடப்படுவது தவிர்க்கப்பட்டு அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் முறை அமலுக்கு வந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு தங்கத்துடன் ஒப்பிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டது. இம்முறையை செயல்படுத்தவும் நிர்வகிக்கவும் சர்வதேச செலாவணி நிதியம் (IMF) மற்றும் சர்வதேச மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி (IBRD) ஆகிய அமைப்புகள் துவங்கப்பட்டன.

உலக வங்கி (World Bank):
மறு சீரமைப்புக்கும் வளர்ச்சிக்குமான பன்னாட்டு வங்கி (IBRD), பன்னாட்டு நிதியுதவி நிறுவனம் (IFC), பன்னாட்டு வளர்ச்சிக் கழகம் (IDA), பன்முனை முதலீட்டு உத்தரவாதச் செயலகம் (MIGA) ஆகியவற்றை உள்ளடக்கியதே உலக வங்கியாகும். இருப்பினும், இவை நான்கினுள் முதலில் நிறுவப்பட்ட IBRD பொதுவாக உலக வங்கி என அழைக்கப்படுகிறது. IBRD 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி நிறுவப்பெற்று 25, ஜூன் 1946-இல் தன் அலுவல்களைத் தொடங்கியது. பின்னர் 20, ஜூலை 1956-இல் IFC-யும், 24, செப்டம்பர் 1960-இல் IDAவும், 1988-ஆம் ஆண்டு ஏப்ரலில் MIGAவும் அமைக்கப்பெற்றன. இப்போது இதில் 188 உறுப்பு நாடுகள் உள்ளன. தற்போதைய தலைவர்: ஜிம் யாங் கிம் (கொரிய அமெரிக்கர்).

மறு சீரமைப்புக்கும் வளர்ச்சிக்குமான பன்னாட்டு வங்கி (IBRD – International Bank for Reconstruction and Development):
ஜூலை 1944-இல் தீர்மானிக்கப்பட்டு 1946-இல் இருந்து செயல்படத் தொடங்கியது. உலக வங்கியின் ஓர் உறுப்பாக உள்ளது. தலைமையகம்: வாஷிங்டன், தலைவர்: ஜிம் யாங் கிம் (கொரிய அமெரிக்கர்).

பன்னாட்டு வளர்ச்சிக் கழகம் (IDA – International Development Association):
உலக வங்கியால் நிர்வகிக்கப்படும் முக்கிய அமைப்பு. 1960, செப்டம்பர் 24-இல் ஏற்பட்டது. வங்கி உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவானது. தலைவர்: ஜிம் யாங் கிம் (கொரிய அமெரிக்கர்).

பன்னாட்டு நிதி நிறுவனம் (IFC – International Finance Corporation):
உலக வங்கியின் ஓர் உறுப்பாக 1956-இல் நிறுவப்பட்டது. தலைமையகம்: வாஷிங்டன். தலைவர்: ஜிம் யாங் கிம் (கொரிய அமெரிக்கர்).

பன்முனை முதலீட்டு உத்தரவாதச் செயலகம் (MIGA – Multilateral Investment Guarantee Agency):
ஐ.நா. சபையின் இச்செயலகம் 1988-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுவப்பெற்றது. இது உலக வங்கியின் ஓர் உறுப்பாகும். தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் வளரும் நாடுகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும். வளரும் நாடுகளில் முதலீடு செய்வோருக்கு இது காப்புறுதி அளிக்கிறது; இதன் மூலம் முதலீட்டை அதிகரிக்க உதவுகிறது. போர், கலவரம் போன்றவற்றால் தன் செயல்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முயல்கிறது. தற்போது 179 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

உலக மதிநுட்ப சொத்து சார்ந்த அமைப்பு (WIPO – World Intellectual Property Organization):
1967-இல் 51 நாடுகள் சேர்ந்து, ஸ்டாக்ஹோமில் இவ்வமைப்பை ஏற்படுத்தின. 1970-இல் இவ்வமைப்பு செயல்படத் தொடங்கியது. பின்னர் 1974-இல் ஐ.நா. சபையின் சிறப்புச் செயலகங்களில் (specialized agency) ஒன்றாக அங்கீகாரம் பெற்றது. உலகெங்கும் உள்ள மதிநுட்பச் சொத்துக்களைப் (intellectual properties) பாதுகாப்பதும், அதற்காக பன்னாட்டு ஒத்துழைப்பைப் பெறுவதும் இதன் முக்கிய நோக்கங்களாகும். இவ்வமைப்பு சட்ட அடிப்படையிலான உதவியும், தொழில்நுட்ப உதவியும் அளிக்கிறது. ஐ.நா. சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இவ்வமைப்பிலும் உறுப்பினராகும் உரிமை உண்டு. மேலும் ஐ.நா. சபை பொதுப் பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படும். 184 உறுப்பினர்களைக் கொண்ட WIPO ஒரு பொது இயக்குனரின்கீழ் செயலாற்றுகிறது. ஜெனீவாவில் தன் தலைமையகத்தைக் கொண்ட இவ்வமைப்பின் தற்போதைய பொது இயக்குநர்: ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ் குரி.

ஐக்கிய நாடுகள் சுற்றுப்புறச் செயல்முறைத் திட்டம் (UNEP – United Nations Environment Program):
இத்திட்டம் 1972-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்துவதேயாகும். சுகாதாரமான, திறன்மிக்க சுற்றுப்புறச்சூழலுக்கான கோட்பாடுகளை வலியுறுத்துவதுடன், மனித சுற்றுப்புறம் சம்பந்தப்பட்ட அலுவல்களில் பன்னாட்டு ஒத்துழைப்பையும் இத்திட்டம் நாடுகிறது. இதன் தலைமையகம்: கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ளது. தற்போதைய செயல் இயக்குநர்: அகீம் ஸ்டீனர் (ஜெர்மனி).

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் மேலாணையர் (UNHCR – United Nations High Commissioner for Refugees):
இப்பதவி 1951-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கப்பட்டது. முதலில் மூன்றாண்டுகளுக்காக மட்டுமே இயற்றப்பெற்ற இந்த ஆணையர் அலுவலகத்தின் காலம் பின்னர் ஐந்து ஆண்டுகளாக மாற்றப் பெற்றது. இவ்வாணையர் பல்வேறு நாடுகளில் உள்ள அகதிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆலோசனைகளை முன் வைப்பார். அகதிகளுக்கு இவ்வாணையர் அலுவலகம் ஆற்றிய சேவையை முன்னிட்டு முதலில் 1954 மற்றும் 1981-ஆம் ஆண்டுகளில் நோபல் பரிசு கிட்டியுள்ளது. தலைமையகம்: ஜெனீவா (சுவிட்சர்லாந்து). தற்போதைய உயர் ஆணையர்: அன்டோனியா கட்ரஸ். (போர்சுகல் – ஐரோப்பிய யூனியன்)

ஆசிய, பசிபிக் பகுதிகளுக்கான பொருளாதார சமூகக்குழு (UN-ESCAP – Economic and Social Commission for Asia and the Pacific):
இது ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூகக் குழுவைச் சேர்ந்த ஒரு வட்டார அமைப்பாகும். ஆசிய மற்றும் கீழை நாடுகளின் பொருளாதார நிலை, கல்வித்தரம், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதன் பொன்விழா மாநாடு, 1994-ஆம் ஆண்டில் இந்திய தலைநகர் டில்லியில் நடைபெற்றது. தலைமையகம்: பாங்காக் (தாய்லாந்து). தற்போதைய நிர்வாகச் செயலாளர்: ஷம்ஷத் அக்தர் (பாகிஸ்தான்).

வர்த்தகம், முன்னேற்றம் மீதான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCTAD – United Nations Conference on Trade and Development):
முதல் மாநாடு 1964-ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்றது. ஐ.நா.வின் பொதுப் பேரவை நடத்திய இம்மாநாட்டில் 100 நாடுகள் பங்கேற்றன. பன்னாட்டு வர்த்தகத்தை வளர்த்தல், உறுப்பு நாடுகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல் (குறிப்பாக வளரும் நாடுகள்) போன்றவை இம்மாநாட்டின் குறிக்கோளாகும். தேவைக்கு ஏற்ப ஆலோசனைக் கூட்டங்கள் கூட்டப்படும். இந்திய தலைநகரில் நடந்த மாநாட்டில் 146 நாடுகள் பங்கேற்றன. இம்மாநாட்டு வரிசையின் 10-ஆவது மாநாடு தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் தலைவராக இருந்தவர் டாக்டர் சப்பாச்சாய் பனிட்பக்டி. ஆனால் இந்த 10-ஆவது மாநாடு, வளரும் நாடுகளுக்குப் போதிய முன்னேற்றத்திற்கான வாய்ப்பினைத் தர தவறிவிட்டதாக வல்லுனர்களால் கருதப்பட்டது. தற்போதைய பொதுச் செயலர்: முகிஸா கிடூயி (கென்யா).
மனித உரிமைகள்
1945-இல் மனித உரிமைகள் பற்றிய ஐ.நா. சபை ஆணையம் ஒன்று நிறுவப்பட்டது. மனித உரிமைகள் மண்மூடிப் போகாமல் தழைத்து வேரூன்றவே இது அமைக்கப்பட்டது. உயர்ந்தவன், தாழ்ந்தவன், தீண்டத்தகாதவன், பாவப்பட்டவன், பழிகாரன், தண்டிக்கப்பட வேண்டியவன், அடிமையாக இருக்க வேண்டியவன் என்று பிற, மத, இன, வண்ண பேதமற்ற சமுதாயத்தை சகல உரிமைகளுடன் ஏற்படுத்துவதே இதன் குறிக்கோள். 1976-இல் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்து மக்களுக்கும் அவரவருடைய உரிமைகளை அளிக்க உறுதி கூறியது.
வாழ உரிமை, சித்திரவதையிலிருந்தும் கொடிய மனிதாபிமானமற்ற இழிவு படுத்தி நடத்துவதினின்று பாதுகாப்புக்கு உரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, வாக்களிக்கும் மற்றும் அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் உரிமை, நியாயமான நீதி விசாரணைக்கு உரிமை, சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை.

ஐக்கிய நாடுகள் சபை தனது உறுப்பு நாடுகளின் ஐக்கியத்தையே முதன்மையாகக் கொண்டது. உறுப்பு நாடுகளின் பெரும்பான்மையான ஆதரவின்றி எதையும் செய்ய இயலாது. குறிப்பாக பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவர் எதிர்த்தாலும் அந்த விஷயம் ஐ.நா.வினால் மேற்கொள்ளப்பட மாட்டாது. உலகத்தின் சமாதானத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் அளப்பரிய சேவையை யாராலும் மறக்க முடியாது.

எனினும் ஐ.நா. சபைஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்றவல்லரசு நாடுகளின் விருப்பத்திற்கு உட்பட்டவையாக இருக்கிறதே தவிர அப்பாவிமக்களை பாதுகாப்பதாகவோ, சிறிய நாடுகளின் இறையாண்மைக்கு உத்திரவாதம் அளிப்பதாகவோ இல்லை என்றகுற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ஐ.நா.சபையின் சாதனைகள்:
உலக நாடுகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை அமைதியான முறையில் கையாண்டு சுமுகமான தீர்வுகளை கண்டு உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டி வருகிறது. ஐ.நா.சபையில் உள்ள பாதுகாப்பு மன்றம் நீதிமன்றம் போன்ற பல்வேறு அமைப்புகள் மூலம் தீர்வுகள் கண்டு வருகிறது. அணு ஆயுத சட்டத்தை 1963ம் ஆண்டு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு தொடர் அணு ஆயுத சோதனை சட்டத்தை நிறைவேற்றியது.
இயற்கை சூழலை பாதுகாக்க 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி அனைத்து நாடுகளையும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி வெற்றி கண்டது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நாடுகளில் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தி பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்டது. சூயஸ் கால்வாயை எகிப்து அரசர் நாசர் நாட்டுடமையாக்கிய போது பிரிட்டன் பிரான்சு இஸ்ரேல் போன்ற நாடுகள் எதிர்த்த போது ஐ.நா.சபையின் அமைதிப்படை எகிப்துக்கு சென்று சூயஸ் கால்வாய் பிரச்னையை சரியான முறையில் கையாண்டு அதற்கு சரியான தீர்வை வழங்கி அமைதியை பாதுகாத்தது ஐ.நா.சபையின் முக்கிய சாதனை ஆகும்.

இந்த ஐ.நா.தினத்தில் உலக நாடுகளில் அமைதி, சமாதானம் நிலவ நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்.

-AJM Rikas

About the author

Web Writer

Leave a Comment