Features நாடுவது நலம்

அரசாட்சியும் இலக்கியமும்

Written by Administrator

 – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் –

சிறு பராயத்திலிருந்தே என் வாழ்வில் அரசியல் தாக்கங்கள் அதிகம் காணப்பட்டன. எனது தந்தை வாசிப்பதற்காக வேண்டி வீட்டுக்கு கொண்டு வருகின்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் புத்தகங்களை சகோதரர்களோடு போட்டி போட்டுக் கொண்டு வாசிக்கும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. எனது தந்தை ஓர் அரசியல்வாதி என்பதால் அவர் வாசிப்பதற்குக் கொண்டு வரும் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளோடு பரிச்சயமாகும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது.

சிறுவயது முதல் என்னிடம் வாசிப்பின் மீது ஆர்வம் காணப்பட்டது. அது பரம்பரை மரபணுக்களோடு கலந்து வரும் பண்பா என்பது எனக்குத் தெரியாது. சோவியத் யூனியனில் ஸ்டாலினின் கருத்துக்கு மாற்றுக் கருத்து கொண்டோர்களை சித்திரவதை செய்வது தொடர்பாகவும் சித்திரவதை முகாம்கள், அடக்குமுறை மற்றும் ஏகாதிபத்தியம் தொடர்பாக நோபல் பரிசு பெற்ற கொண்ஸ்டினென்டின், கெகரோ போன்றவர்கள் எழுதிய நூல்களை மாணவர் பருவத்திலேயே வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

இவ்வரசியல் இலக்கியங்கள் அன்று Underground Literature என்பதாகக் கருதப்பட்டது. காரணம் இப்புத்தகங்களை வாசிப்பது அல்லது தன்வசம் வைத்துக்கொண்டிருப்பது சிறைக் குற்றம் என்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாரிஸ் போன்ற மேற்கு நாடுகளிலேயே இப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அதுபோன்று 1960ஆம் ஆண்டு தசாப்தத்தில் யூகோஸ்லேவியாவில் தங்களுக்குக் கிடைக்காமல் போன சுதந்திரம் தொடர்பில் உலகிற்குச்    சொல்வதற்கு தம் உயிரை மாய்த்துக் கொண்ட யொஹான் பராக் என்னும் இளம் மாணவன் தொடர்பில் எழுதப்பட்ட புத்தகங்களையும் வாசிப்பதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நான் பல்கலைக்கழகம் செல்லும் போது கம்யூனிஸ்ட் விருத்தி, சமூக நீதி, வகுப்புவாதப் பேராட்டம் போன்ற விடயங்களுக்கு அதிக கவர்ச்சி காணப்பட்டது. பல்கலைக்கழகம் இடதுசாரிகளின் கோட்டையாகக் காணப்பட்டது.

சோவியத் ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் தொடர்பில் எதிர்க் கருத்துக்கள் கொண்ட அரசியல் இலக்கிய நூல்களின் ஆதிக்கம் காரணமாக எனது சிந்தனைகள் வித்தியாசமான பின்னணியில் காணப்பட்டது. அதனால் பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட இடதுசாரிக் கொள்கை அலையில் அள்ளுண்டு செல்லாமல் மாற்றுத் திசையில் பயணிப்பதற்கான தீர்மானத்தை எடுத்து ஜனநாயக மாணவர் இயக்கம் என்பதாக ஓர் அமைப்பை உருவாக்கி, கம்யூனிஸ்ட் மாணவர் இயக்கத்துடன் போட்டியிடத் தீர்மானித்தோம்.

இந்தத் தீர்மானத்தை எடுப்பது பல்கலைக்கழகத்திற்குள் இலகுவான காரியமல்ல. இங்கு சுவாரஷ்யமான சூடான பல அரசியல் வாதவிவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டன. சம வாய்ப்புக்கள் உள்ள சமூகத்தை நோக்காகக் கொண்டு காலப்போக்கில் ஜனநாயக மாணவர் இயக்கத்தினை சமவுடமை மாணவர் இயக்கமாக பெயர் மாற்றினோம். சூடான வாதப் பிரதிவாதங்களுடனான மூன்று வருடப் போராட்டங்களின் பின்பு பல்கலைக்கழகத்தில் பொது மாணவர் சங்கத்தின் அதிகாரத்தைப் பெற்றோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்பான மாணவர் இயக்கமொன்று பல்கலைக்கழகத்தில் பொது மாணவர் சங்கத்தின் தலைமை அதிகாரங்களை பெற்றது வரலாற்றில் முதலாவது சந்தர்ப்பமாகும். எனினும் நான் பாராளுமன்றத்திற்குச் செல்கையில் சூடான, சுவாரஷ்யமான அரசியல் வாதப்பிரதிவாதங்களுக்குப் பதிலாக வித்தியாசமானதொரு அரசியல் சூழலையே கண்டேன்.

நல்லாட்சியும் இலக்கியமும் பற்றிக் குறிப்பிடுகையில் இலங்கையராகிய எமக்கு சிறந்த வரலாறு உள்ளது. இலக்கியம் என்னும் போது புத்தகங்களில் வடிக்கப்படுபவை மாத்திரமல்லாமல் செப்பேடுகளில் எழுதப்பட்டுள்ளவற்றையும் எம்மால் மறந்துவிட முடியாது. இது ஆங்கிலத்தில் Calligraphy என அழைக்கப்படுகின்றது. பொலன்னறுவை யுகத்தில் நிஸ்ஸங்கமல்லனின் செப் பேடுகளையும், சிவனொளிபாத மலையில் உள்ள செப்பேடுகளையும் அவதானிக்கும் போது நல்லாட்சியின் அடிப்படைகள் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் அதிகாரிகள் மறுபிறவியில் நாய், காகங்களை போல் பிறப்பதாக ஒரு செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது.

இதுதவிர மற்றுமொரு செப்பேட்டில் ஆட்சியாளர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது குறித்து சொல்லப்பட்டுள்ளது. அதாவது ‘நொபோசத்து நொரஜீவத்வை’ நற்பணிவுள்ள, நன்னடத்தை மிக்கவர்களை தவிர வேறு யாருக்கும் அரசாள முடியாது என்பதே அதன் பொருளாகும். புனித நிலை யடைவது பெரு விருட்சம் என்றால் நற்பணிவு என்பது சிறிய செடியாகும். எனவே நன்னடத்தை, நற்குணமற்றோருக்கு நாடாள முடியாது என செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.

செப்பேட்டு இலக்கியத்தின் மூலம் அன்று சமூகத்திற்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை, உபதேசங்கள் சமகாலத்திற்கும் பொருந்தும் என நான் நினைக்கின்றேன். அசோக மன்னன் நல்லாட்சியின் அடிப்படைகளை குறிப்பிட்டு தனது இராசதானி முழுவதிலும் செப்பேடுகளை உருவாக்கியமை தொடர்பில் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொலை செய்ய வேண்டாம், களவுசெய்ய வேண்டாம், காம இச்சைகளை பிழையான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டாம், பெண்களை கௌரவமான முறையில் நடத்துங்கள் என்றவாறு செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டிருந்தமை தொடர்பில் வரலாறு பேசுகிறது.

அரசாட்சியும் இலக்கியமும் தொடர்பில் பேசுகின்ற போது அது செப்பேட்டு இலக்கியங்கள் வரையில் விரிந்துசென்று அதுதொடர்பாக இலங்கையின் மன்னராட்சிக் காலப்பகுதியில் குறிப்பிடப்பட்ட விடயங்களை காண முடிகின்றது. அண்மைக்காலமாக அடிக்கடி பேசப்படுகின்ற தலையங்கமாக நல்லாட்சி என்னும் சொல்லாடல் மாறியிருக்கிறது. குறிப்பாக அபிவிருத்தி இலக்கியத்தை (Development Literature) குறிப்பிட முடியும். நல்லதொரு ஆட்சி காணப்படாமை அல்லது மோசமானதொரு ஆட்சி காணப்படுவது எமது சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்குமான அடிப்படையாகும் என்பது சகல தரப்புக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொருளியல் விஞ்ஞானத் துறையில் நோபல் பரிசுபெற்ற அமிர்த்தியா சென் ஒரு தடவை ‘ஜனநாயகம் நிலவும் சமூகமொன்றுக்கு ஒருபோதும் வறுமைக்கு முகம்கொடுக்க நேரிடாது’ எனக் குறிப்பிட்டார். காரணம் ஜனநாயக சமூகத்தில் அத்தகைய பிரச்சினைகள் மற்றும் யதார்த்தங்கள் அடிக்கடி வெளியே வரும் என்பதாகும். இதனால் அவற்றுக்கான தீர்வுகள் சரியான முறையில் நடைபெறும் என்பதாகும்.

நல்லாட்சி மற்றும் பின்னடைவுக்கு இடையிலான வித்தியாசம் இதன் மூலம் விளங்குகிறது. இன்றைய உலகில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவி வழங்கும் போது பிரதான நிதி நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்கும் தரப்புக்கள் முன்வைக்கின்ற பிரதான நிபந்தனையாக இருப்பது ‘நல்லாட்சி’ என்கின்ற விடயமாகும். அதாவது ஒரு நாட்டிற்கு கடனுதவி கொடுக்கப்பட வேண்டுமென்றால் அங்கு சிறந்த ஆட்சி நிலவ வேண்டும் என்பது கொள்கையாகப் பார்க்கப்படுகின்றது. அந்நிறுவனங்களது சுற்றுநிரூபங்களின் மிக முக்கிய விடயமாக நல்லாட்சி என்கின்ற அம்சமே உள்ளது.

அதுதொடர்பில் ஒரு தடவை கொபி அனான் தெரிவித்த கருத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் ‘சிறந்த ஆட்சி என்னும் நல்லாட்சி (Good Governance) தொடர்பில் விளக்கம் அளிக்கும் போது அதை ஏற்றுக்கொள்வதற்கான சில அடையாளங்கள் உள்ளன.
ஒன்று ஜனநாயம், இரண்டாவது சட்டத்தின் ஆட்சி, மூன்றாவது பொறுப்புக்கூறல், நான்காவது வெளிப்படைத்தன்மை, ஐந்தாவது சமவுடமை, ஆறாவது எல்லோரையும் ஒன்றினைத்துக்கொள்ளல், ஏழாவது பங்குபற்றல், எட்டாவது சமூக நீதி, ஒன்பதாவது மனித உரிமைகள்’ ஆகும்.

நல்லாட்சி தொடர்பில் ஐநா சபையின் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலும் ஐநாவுடன் இணைந்த நிறுவனங்களுக்கிடையிலும் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் உள்ளது. அது தொடர்பில் ஐநா சபை அக்கறை செலுத்தி வருவதை காண முடிகின்றது. முஸ்லிம்களாகிய எமக்கு நபி (ஸல்) அவர்களின் பின் உருவான இஸ்லாமிய அரசாட்சி யுகத்தை இலக்கியங்கள் கிலாபா அல்ராஷிதா என்பதாக குறிப்பிட்டுள்ளது.

இங்கு கிலாபத் என்பது ஆட்சி என்ற அர்த்தத்தை வழங்குகிறது. ராஷிதா என்பது சிறந்த என்ற பொருளைக் கொடுக்கின்றது. கிலாபா ராஷிதா அதாவது குலபாஉர் ராஷிதூன்கள் எனப்படும் கலீபாக்களாக அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி), அலி (ரழி) ஆகியோரே இஸ்லாமிய கிலாபத்தை ஆட்சிசெய்தனர்.

குலபாஉர் ராஸிதூன்களின் ஆட்சிக்காலப்பகுதியில் காணப்பட்ட மிக முக்கிய விடயங்கள் நான்கினை இஸ்லாமிய இலக்கியங்கள் மேற்கோள்காட்டியுள்ளன. ஒன்று சூரா – கலந்துரையாடல், இரண்டாவது ஜமாஆ – கூட்டிணைப்பு, மூன்றாவது தாஆ – ஒழுக்கம்,கட்டுப்பாடு, நான்காவது – இமாராஹ். எனவே நல்லாட்சி தொடர்பில் இஸ்லாமிய இலக்கியத்தில் குலபாஉர் ராஷிதூன் காலப்பகுதியில் பின்பற்றிய அணுகுமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

எனவே நல்லாட்சி தொடர்பில் வரலாற்றிலிருந்தே பல இலக்கியங்கள் பேசியிருப்பதை குறிப்பிட முடியும். ஒவ்வொரு காலப்பகுதியிலும் நல்லாட்சி விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காக அந்தந்த காலத்து மன்னர்களால் செப்பேடுகளிலும், நல்லாட்சி நிலவிய காலப்பகுதியில் வாழ்ந்த இலக்கியவாதிகளாலும் இந்த விடயங்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதை காண முடிகின்றது.

About the author

Administrator

Leave a Comment