Features சமூகம்

மீலாதைச் சுமக்காத வாரிசுகள் | எழுவாய் பயமிலை

Written by Administrator

 – அபூ ஷாமில் –

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்துவதற்காக அவருடைய எதிரிகள் அவரை (அப்தர்) வாரிசில்லாதவர் என்று பழித்தார்கள். அவர்கள் தான் பின்னர் அவர்களுடைய எதிர்ப்பைக் கொண்டு செல்வதற்கான வாரிசு இல்லாதவர்களாக மாறினார்கள்.

நபிகளாரின் தூதை இறுதிவரைக்கும் எடுத்துச் செல்லக் கூடிய வாரிசுகளாக உலமாக்களை நபிகளார் அடையாளப்படுத்தினார்கள். நபிகளார் கொண்டு வந்த இஸ்லாம்தான் உலகம் இயங்க வேண்டிய ஒழுங்கு என்பதனை நடைமுறைப்படுத்திக் காட்டும் பணி இந்தவகையில் உலமாக்களைச் சாருகிறது. இஸ்லாம் தான் ஏனைய மார்க்கங்களை விஞ்சிய மார்க்கம் என்பதை உரத்துச் சொல்வதற்கு அந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களின் தலை வரை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டியிருக்கிறது.

நபிகளார் பிறந்த தினம் இலங்கையில் இம்மாதம் அனுஷ்டிக்கப்படவிருக்கிறது. இந்தத் தினத்தில் இந்த நாட்டு மக்களுக்கு நபிகளாரை அறிமுகப்படுத்துவதற்கு நபிகளாரின் வாரிசுகள் என்ன தயாரிப்பில் இருக்கிறார்கள்? ஸூபிகள் தரப்பிலிருந்து நபிகளாரை நமக்குள்ளே கட்டிக் காப்பதற்கான ஏற்பாடுகள் வழமையாக நடக் கின்றன. ஆனால் உலகத்தாருக்கு அருட்கொடை என்பதை உலகத்துக்கு எடுத்துச் சொல்வதற்கான எந்த ஏற்பாடாவது இந்த முறை நடைபெறுமா?

தானம் கொடுத்தல், கொடி கட்டுதல், பள்ளிவாசல்களுக்கு அலங்கார விளக்குகள் பொருத்துதல், புரியாத அரபு மொழியில் புகழ்பாடுதல் என்ற செயற்பாடுகளுக்கு அப்பால் இனங்களுக் கிடையே அமைதியை ஏற்படுத்தியவராக, இனவாதத்தை ஒழித்தவராக, போதைப்பொருள் பாவனையை துடைத்தெறிந்தவராக… இப்படியெல்லாம் நபிகளாரை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் வேலையை நபிகளாரின் வாரிசுகள் செய்வார்களா?

மதங்கள் அனைத்தும் மதம் பிடித்தவையாக உருவகப்படுத்தப் படும் இந்த நாட்டில் உலகுக்கே வழிகாட்டியாக வந்த நபிகளாரை அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் தேவையுள்ள காலமிது. இப்படியானதொரு நிலைமையில்தான் இலங்கையில் இஸ்லாமும் அதன் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களும் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் இழிவுகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். இனியும் நபிகளாரின் இந்த வாரிசுகள் நபிகளாரை இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை என்றால் இஸ்லாம் என்ற வாரிசுச் சொத்தை பாழ்படுத்தியவர்களாக இவர்களே இருக்கப் போகிறார்கள்.

அதனால் நபிகளாரின் வாரிசுகளாகிய உலமாக்கள் இம் முறைய மீலாத் விழாவை நபிகளாரை நபிகளாரின் போதனைகளை இந்த நாட்டில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நபிகளாரின் வாரிசுகளாகிய உலமாக்கள் இணைந்திருக்கின்ற சபையான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இம்முறைய மீலாத் விழாவை இதற்கெனப் பயன்படுத்துவதில் என்ன தயார் நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. எப்படியிருப்பினும் நபிகளாரை அறிமுகப்படுத்துவதற்குரிய இந்த அரிய சந்தர்ப்பத்தை அவர்கள் தவறவிடக் கூடாது.

முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் சபையாக இந்தச் சபையை இன்று நாடும் அரசாங்கமும் ஏற்றிருக்கிறது. அந்த வகையில் நபிகளார் பற்றிய அறிவை வழங்கக் கூடிய ஒரு நிகழ்வை அவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் கூட கொண்டு நடத்துவதற்குரிய அவகாசம் இருக்கிறது.

நபிகளாரின் பிறந்த தின நிகழ்வை நாட்டு மக்கள் அனைவரும் அனுஷ்டிப்பதற்காக அரசாங்கம் இந்த நாளை விடுமுறை தினமாக வழங்கியிருக்கிறது. இதற்கு மேலதிகமாக அரசாங்கமே நிதி ஒதுக்கி தேசிய மீலாத் தின நிகழ்வாக நபிகளாரின் பிறந்த தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறது. இந்தளவுக்கு அரசாங்கமே செய்கின்ற பொழுது நபிகளாரின் வாரிசுகளை உள்ளடக்கிய உலமா சபை என்ன நிகழ்வுகளை மீலாத் தினத்துக்கென ஒழுங்கு செய்திருக்கிறது?

புத்தபெருமானுடைய பிறந்த தினத்தில் தோரணங்கள் கட்டி அவருடைய வரலாறு எல்லோருக்கும் படைக்கப்படுகிறது. இயேசு பிரானுடைய பிறந்த நாளை ஊடகங்கள் அனைத்துமே ஆக்கிரமித்து நாடே கொண்டாடும் வகையில் கிறிஸ்தவ சபைகள் ஏற்பாடு செய்கின்றன. நபிகளார் பிறந்த தினம் மட்டும் முஸ்லிம்களின் மார்க்க சபைகளால் அம்போவென விடப்படுகிறது.

நாட்டில் நபிகளாருக்குள்ள இந்த அவலத்தை நபிகளாரின் வாரிசுகள் எனச் சொல்லிக் கொள்ளும் உலமாக்கள் மாற்ற வேண்டும். வேறு நாட்களில் நபிகளாரைப் பற்றி எடுத்துச் சொன்னால் வித்தியாசமாக நினைத்தாலும் குறித்த இந்த நாளில் நபிகளாரைப் பற்றிச் சொல்ல எதைச் செய்தாலும் அனைவருமே அதற்கு மதிப்பும் பெறுமானமும் கொடுக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பல செமினார்கள் நடத்தலாம். ஏனைய மதத் தலைவர்களுடன் உரையாடல்களை ஆரம்பிக்கலாம். ஒரு தேசிய நிகழ்வாக ஜனாதிபதி இல்லத்திலோ பிரதமர் இல்லத்திலோ இதனை நடத்தலாம். முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் நபி களாரின் போதனைகள் தொடர்பாக காலத்துக்கேற்ற தலைப்புக்களில் போட்டிகள் நடத்தலாம். அனைத்து ஊடகங்களிலும் இதற்கானதொரு வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதையெல்லாம் உலமாக்களின் சபை செய்யாமல் யார் செய்வது? அல்லது இதையெல்லாம் செய்யாமல் உலமா சபை என்ன செய்கிறது? இரண்டு கேள்விகளுமே நியாயமானதுதான். ரஸூலுல்லாஹ்வின் வாழ்க்கை வழிமுறை பூரா உலகுக்கும் சென்றடைய வேண்டும் என்று விரும்பினால் முதலில் அதனை நமது நாட்டில் இருந்து தொடங்க முடியும்.

நீங்கள் வாரிசு இல்லாதவர் அல்ல என்று நபியைப் பார்த்து அல்லாஹ்தஆலா சொன்னதை அவருடைய வாரிசுகள் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

About the author

Administrator

1 Comment

  • ஏன் மீழ்பார்வை ஆசிரிய வட்டத்திற்கு அல்லது ஜமாஅதுஸ் ஸலமாவிற்கு அல்லது சூறா சபையிற்காவது சிறிய அளவில் ஏனும் மேலே குறிப்பிட்ட கருப்பொருளில் குறைந்தது உங்கள் கிராமத்தில், நகரில் உள்ள பள்ளிவாசல்களை பயன்படுத்தியிருக்கலாமே!!
    எவ்வளவு செலவுகளையும் செய்ய தயங்க மாட்டார்கள் பொதுவாக எல்லா இயக்கங்கலும் அவர்களின் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்வதற்காக ஆனால் மேலே கட்டுரை சார்ந்த விடயங்கள் போன்றவை மட்டும் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாதவை போன்றும் அவற்றை மற்றவர்கள் செய்ய வேண்டும் அல்லது உலமா சபை தான் செய்தாக வேண்டும் என்று எதிர்பார்புக்களையும் அறிக்கைகளையும் வெளியிடுவதினால் மாத்திரம் சமூக விழிப்புணர்வு அடைந்து விடாது.
    களத்தில் நின்று களப் பணியாற்ற முன் வர வேண்டும் அல்லது தமது இயலாமையை மற்றவர்களின் குறையாக முன் வைத்து குளிர் காயக் கூடாது.

Leave a Comment