Features சிந்தனையாளர்கள் நேர்காணல்

மக்களை விழிப்புணர்வூட்டக் கூடிய சிவில் சமூக அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்

Written by Administrator

அஷ்ஷெய்க் ரிசாட் நஜிமுதீன் (சிரேஷ்ட விரிவுரையாளர் – ஜாமியா நளீமியா கலாபீடம்) 

அஷ்ஷெய்க் ரிசாட் நஜிமுதீன் அவர்கள் கண்டி மாவட்டத்திலுள்ள அக்குரணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.  இவர் தனது ஆரம்பக் கல்வியை அக்குரணை, குருந்துகஹஎல முஸ்லிம் வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக் கல்வியை பேராதனை, ரணபிம ரோயல் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை பேருவலை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்திலும்  கற்றுள்ளார். பேராத னைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டத்தையும் (B.A.) மலேசியாவின் Universiti Teknologi Petronas பல்கலைக்கழகத்தில் தத்துவ இளமானி (M.phil) பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக விரிவுரையாளராக கடமையாற்றி வரும் இவர், ஆரம்பத்தில் அல்குர்ஆன் திறந்த கல்லூரியில் பணியாற்றி தற்போது ஜாமியா நளீமிய்யா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். மகாஸிதுஷ் ஷரீஆ மற்றும் அரசியல் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொன்டுள்ள விரிவுரையாளர் ரிசாட் நஜிமுதீன் அவர்கள் தனது ஆய்வு மற்றும் சமகால அரசியல் நிலவரம் குறித்து மீள்பார்வை பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

உங்களது நூல்கள், ஆக்கங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்..

இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறேன். இவற்றுள் மொழி பெயர்ப்பு நூல்களும் உள்ளடங்கும். ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தில் நான் 5 ஆம் வருடத்  தில் கற்றுக்கொண்டிருக்கும் போது அஷ்ஷெய்க் அஷ்கர் அரூஸுடன் இணைந்து யூசுப் அல் கர்ளாவி எழுதிய ‘அல் ஹஸாஇசுல் ஆம்மா லில் இஸ்லாம்’ என்ற நூலின் ‘அல் வசதிய்யா’ என்ற பகுதியை மொழிபெயர்த்து ‘இஸ்லாத்தில் நடு நிலமை’ எனும் பெயரில் நூலுருப்படுத்தினேன். கலாநிதி ஜாஸிர் அவ்தா எழுதிய ‘அல்-மர்ஆ வல் மஸ்ஜித்’ எனும் நூலை ‘பெண்களும் மஸ்ஜிதும்’ என்ற பெயரில் மொழிபெயர்த்து நூலாக வெளி யிட்டேன். யூசுப் அல் கர்ளாவி எழுதிய நூலொ ன்றை ‘இறைத்தூதரும் கல்வியும்’ எனும் பெய ரில் உஸ்தாத் மன்ஸூர் மற்றும் கலாநிதி மஸா ஹிருடன் இணைந்து மொழிபெயர்த்து வெளியிட்டேன். இவை தவிர,  அல்குர்ஆனின் இலக் குகள், அஸ்காருஸ் ஸலாத், நவீன இஸ்லாமிய சிந்தனையாளர் யூஸுப் அல்கர்ளாவி போன்ற  நூல்களையும் எழுதியுள்ளேன்.

‘அல்குர்ஆனை புரிந்துகொள்ளல் சில நுழை வாயில்கள்’ என்ற நூலை இறுதியாக வெளியிட்டேன். அத்துடன் உஸ்தாத் மன்ஸூருடன் இணைந்து ஜுஸ்உ அம்ம தப்ஸீருக்கான பாடத் திட்டமொன்றை (Syllabus) எழுதியிருக்கிறேன். இவை தவிர மீள்பார்வை, அல்ஹஸனாத், இஸ்லாமிய சிந்தனை போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளுக்கும் பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.

இன்னும் பல நூல்களுக்கும் கட்டுரைகளுக்குமான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக அல்குர்ஆனின் கடைசி 3 ஜுஸ்உக்களுக்குமான விளக்கத்தை சூறாக்களின் மையக் கருத்தை முதன்மைப்படுத்தி விளங்கிக் கொள்ளும் முறைமையை பின்பற்றி எழுதி வருகிறேன். இன்ஷா அல்லாஹ் இவ்வருட ரமழானில் வெளி யிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முஹ்தார் ஷன்கீதி எழுதிய ஸஹாபாக்கள் மத்தியில் நிலவிய அரசியல் கருத்து வேறுபாடு கள் எனும் புத்தகத்தையும் தமிழில் எழுதி வரு கிறேன்.

முஸ்லிம்களின் அரசியல் குறித்த சில ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள். அதில் மகாஸிதுஷ் ஷரீஆ மற்றும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பங்கேற்பு குறித்த ஆய்வொன்றை தத்துவ இளமானிப் பட்டத்திற்கு (M.phil) சமர்ப்பித்துள்ளதாக அறிகிறோம். அவ்வாய்வு பற்றி சற்றுக் குறிப்பிட முடியுமா?

எனது ஆய்வு முழுமையாக முஸ்லிம் அரசியல் சார்ந்ததாகவே உள்ளது. எனது தத்துவ இளமானிப் பட்டத்துக்காக ‘Application of Maqasid Approach into political participation systems of sri lankan muslims’ குறித்து ஒரு ஆய்வினை செய்திருந்தேன். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கை போன்ற நாட்டிற்கு இவ்வாய்வு மிக முக்கியமானது.

இதில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று, மகாஸிதுஷ் ஷரீஆ. இரண்டாவது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பங்கேற்பு. மகாஸிதுஷ் ஷரீஆவின் அரசியல் சொற்பதமே மகாஸித் அணுகுமுறையாகும். சுருக்கமாகச் சொல்வதானால் ஆரம்ப காலத்தில் மகாஸிதுஷ் ஷரீஆ ஒரு கோட்பாடாகக் கருதப்பட்டது. அதன் பிறகு நவீன கால இமாம்கள் அதற்கு நடைமுறை வடிவத்தைக் கொடுத்தார்கள்.

உதாரணமாக தூனீசியாவைச் சேர்ந்த ராஷித் அல் கன்னூஷி, துருக்கியைச் சேர்ந்த அர்தூகான், மலேஷியாவின் அன்வர் இப்றாஹீம் போன்றவர்கள் இதற்குப் புது வடிவம் கொடுத்தார்கள். இவர்களது அண்மைக்கால அரசியல் செயற்பாடுகள் மகாஸிதுஷ் ஷரீஆவுக்கு நடைமுறைப் பிரயோகத்தை கொடுப்பதாகக் காணப்பட்டது.

இதனை இன்னொரு முறையில் சொல்வதானால் ஒரு காலத்தில் இஸ்லாமிய உலகில் ஹாகிமிய்யத் சிந்தனை வலுப்பெற்றது. உதாரணமாக மௌதூதி (ரஹ்) போன்றவர்களின் காலத்தைக் குறிப்பிடலாம். பின் ஹாகிமிய்யத் சிந்தனைக்கு முரணானதாக மகாஸித் ஷரீஆவின் இலக்குகளை மையப்படுத்தியதாக அரசியல் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கருத்து உதயமானது.

உதாரணமாக மலேஷியாவில் PAS போன்ற கட்சிகள் ஹாகிமிய்யத் சிந்தனையை மையப்படுத்தி செயற்படுகிறது. மலேஷியாவில் அன்வர் இப்றாஹீம், தூனீசியாவின் கன்னூஷி, துருக்கியின் அர்தூகான் போன்றவர்களது அரசியல் அணுகுமுறைகளை ஆய்வாளர்கள் மகாஸிதிய அணுகுமுறை என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தப் பின்னணியில் மகாஸிதிய அணுகுமுறைக்கு இலங்கையில் ஒரு நடைமுறை வடிவத்தைக் கொடுப்பதற்காக வேண்டி இலங்கையின் அரசியல் கட்சிகளை ஆராய்ந்தேன். இதனை இரண்டு வழிகளில் நோக்கினேன். ஒன்று, தேசிய கட்சிகளில் முஸ்லிம்களது ஈடுபாடு. உதாரணமாக ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகளில் உள்ளவர்கள். இதேபோன்று அஷ்ரப் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் போன்ற இன மைய அரசியல் போக்கு.

இந்த இரண்டு வகையான போக்குகளிலும் ஐந்து விடயங்களை அடையாளப்படுத்தினேன். ஒன்று சுதந்திரமும் சுய ஆட்சியும் (Freedom and Autonomy)  குறிப்பாக தாஹிர் இப்னு ஆஷூர் போன்றவர்கள் கூடுதலாக இதைப் பேசியுள்ளனர். இதை இலங்கையில் உபயோகப்படுத்துவது எப்படியெனில், வடகிழக்கு இணைப்பு தொடர்பில் மிகப்பெரும் கருத்தாடல் கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்தது. வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்து பலமாக முன்வைக்கப்பட்டது. வடகிழக்கு இணைக்கப்பட்டால் பெரும்பாலான கிழக்கு முஸ்லிம்களின் சுதந்திரம் அங்கு துறக்கப்படும். நாட்டின் மத்திய அரசாங்கத்திற்கு கீழ் அல்லாமல் அது இன்னொரு தரப்புக்கு கீழ் வருகின்றதொரு நிலை வடகிழக்கு இணைப்பில் காணப்படுகிறது. எனவே முஸ்லிம்கள் அந்த இடத்தில் சுதந்திரத்தையும் சுய ஆட்சியையும் இழக்கிறார்கள். அந்தப் பிரச்சினைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தேசியக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், இனரீதியான கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அவர்களுடைய பங்களிப்பு என்ன என்பதை ஆராய்ந்துள்ளேன்.

இரண்டாவது, ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நீதிக்குப் புறம்பான அநீதியான வன்முறைகள், தாக்குதல்களின் போது முஸ்லிம் அரசியல்வாதிகள் எந்தளவு தூரம் அவற்றுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் பங்களித்துள்ளனர் என்பது ஆராயப்பட்டுள்ளது.  நீதி எனும் மகாஸித் கருத்தாக்கத்தின் பின்னணியிலேயே இப்பிரச்சினை எடுக்கப்பட்டது. மூன்றாவது வாழ்வுக்கான உரிமையும் வாழ்க்கையை மீளக் கட்டியமைத்தலும் (Right to life Rehabilitation). குறிப்பாக, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் தங்கினார்கள்.

முஸ்லிம்களது மீள்குடியேற்றம் என்ற விடயத்தில் அரசியல்வாதிகளின் பங்களிப்பு எந்தளவு தூரம் இருந்தது என்பது ஆராயப்பட்டுள்ளது. நான்காவது, கல்வி. ஐந்தாவது, பொருளாதாரம் (Education and Economy). இவை மகாஸிதின் பின்னணியில் எடுக்கப்பட்டு முதன்மைப்படுத்தப்பட்ட தலைப்புக்களாகும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு முப்பது வருடங்களுக்கும் மேலாகின்றன. இந்த 3 தசாப்த காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அதாவது தேசிய கட்சிகளில் உள்ளோரும் முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவோரும் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்தளவு தூரம் பாடுபட்டுள்ளார்கள். அவர்களது பங்களிப்பு எத்தகையது? என்பதே எனது ஆய்வின் சுருக்கமாகும்.

மேற்படி ஐந்து அம்சங்கள் தொடர்பாகவும் உங்களது ஆய்வுக்கூடாக அவதானிக்கப்பட்ட விடயங்களை சற்றுத் தெளிவுபடுத்த முடியுமா?

இப்படிப் பார்க்கும் நான் அவதானித்த விடயம் என்னவெனில், கல்வியும் பொருளாதாரமும் என்கின்ற பகுதியில் முஸ்லிம் அரசியல்வாதிகள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி (Infrastructural Development)  வேலைகளை ஓரளவு செய்துள்ளார்கள். உதாரணமாக கல்வித் துறையுடன் தொடர்பான நூலகங்கள், பொருளாதாரத் துறையுடன் சம்பந்தப்பட்ட வர்த்தக கட்டிடத் தொகுதிகளை கட்டிக் கொடுத்துள்ளதை குறிப்பிட முடியும். ஆனால் சர்ச்சைக்குரிய விடயங்கள் என்று வருகின்ற போது அவற்றுக்கு அவர்களால் அழகான தீர்வுகள் முன்வைக்கப்படுவதில்லை. அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் இரு கட்சி சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் தோல்வி கண்டுள்ளனர்.

அதேநேரம் சுதந்திரமும் சுய ஆட்சியும், வன்முறைகள், தாக்குதல்களின் போதான அரசியல்வாதிகளின் பங்களிப்பு, வாழ்வுக்கான உரிமையும் வாழ்க்கையை மீளக்கட்டியமைத்தலும் என்கின்ற மூன்று அம்சங்கள் தொடர்பாக ஆராய்கின்ற போது தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளை சார்ந்த அரசியல்வாதிகளால் எந்தவித தீர்க்கமான பங்களிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்கு இணைப்பு தொடர்பாக ஒரு சில இடங்களில் பேசியுள்ளது. முஸ்லிம்களது மீள்குடியேற்ற விடயத்திலும் சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது. ஆனால் இவற்றுக்குத் தீர்க்கமான, நிலைபேறான தீர்வொன்றை அவர்களால் முன்வைக்க முடியாமல் போயுள்ளது. உதாரணமாக வடகிழக்கு இணைப்பு சம்பந்தமாக ஒவ்வொரு இடத்திலும் கருத்துக்களை தெரிவித்து வந்தார்களே ஒழிய, தீர்க்கமான முடிவுகளை முன்வைக்கவில்லை. இப்படிப் பார்க்கும்போது புவியியல் ரீதியில் முஸ்லிம்களது சிதறிய வாழ்வமைப்பு இதில் தாக்கம் செலுத்துகிறது. முஸ்லிம் தனிக்கட்சிகள் கிட்டத்தட்ட முஸ்லிம்கள் செறிவாக வாழும் கிழக்குப் பகுதிகளில் அவர்களது பிரச்சினைகளை ஓரளவு பேசியிருக்கின்றன.

எனவே கிழக்குப் பகுதி முஸ்லிம்கள் தங்களுடைய உரிமைகளையும் அபிவிருத்திகளையும் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் முஸ்லிம் இன மைய அரசியல் ஒன்றில் தங்கியிருப்பது இன்று தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தமாகவே உள்ளது. ஆனால் மக்கள் அழுத்தக் குழுக்களாக செயற்பட்டு அதனை அழுத்தம் கொடுத்து நெறிப்படுத்தும் வேலைகளில் ஈடுபட வேண்டும் என்கின்ற முடிவுக்கு வரமுடியும். இதன் மூலம் தங்களது உரிமைகளையும் அபிவிருத்தியையையும் பெற்றுக்கொள்ள முடியும்.

கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தமிழ் சிங்கள மக்களுடன் சிதறி வாழ்கின்ற முஸ்லிம்கள் இன மைய அரசியலில் ஈடுபடுவதனாலும் தேசிய கட்சிகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பிரதிநிதிகளுக்கு வால்பிடித்ததனாலும் எந்தவித பிரயோசனத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. எனவே இவர்கள் இனமைய அரசியலிலிருந்து விழுமிய அரசியலை நோக்கி நகர வேண்டும். இதன் கருத்து, அவர்கள் தங்களது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து அனுப்பும் போது முஸ்லிம்களுக்கு என்று பார்க்காமல் நல்லவர்களையும் தகுதியானவர்களையும் தெரிவுசெய்து அனுப்ப வேண்டும். இது சிங்களவராகவோ, தமிழராகவோ இருக்கலாம். இவர்களுக்கூடாக தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

முஸ்லிம் சமூக நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களது தேசத்திற்கான பங்களிப்பும் செயற்பாடுகளும் எவ்வாறு அமைய வேண்டும் என நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?

எமது முஸ்லிம் சமூகத்தின் சிவில் சமூகமும் சிவில் நிறுவனங்களும் பலவீனமான நிலையில் உள்ளதை காணமுடிகிறது. எனவே மக்களை விழிப்புணர்வூட்டக் கூடிய சிவில் சமூக அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அதனூடாக மக்கள் அறிவூட்டப்பட வேண்டும் என்ற முடிவுக்கு எனது ஆய்வுக்கூடாக வந்துள்ளேன். அதுவே உரையாடலுக்கான ஆரம்பப் புள்ளியாகும். இதிலிருந்து அடுத்த கட்ட ஆய்வுகளை நோக்கி நகர வேண்டும்.

விக்டர் ஐவன் போன்ற செயற்பாட்டாளர்கள், ஜயதேவ உயன்கொட போன்ற கல்விமான்கள் செயற்பட்டு வரக்கூடிய பொதுவான சில சிவில் சமூக அமைப்புகளும் காணப்படுகின்றன. முஸ்லிம்கள் இரண்டு அமைப்புக்களில் பணியாற்ற வேண்டும். ஒன்று, இது போன்றவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். தமிழ் சிங்கள மக்களுடன் சேர்ந்து வேலைசெய்ய வேண்டும். எங்களுடைய பிரச்சினைகளை மாத்திரமல்லாமல் அடுத்த சமூகத்தவர்களது பிரச்சினைகள் மற்றும் நாட்டின் முன்னாலுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக பேசவும் பங்களிப்பு செய்யவும் வேண்டும். அவற்றுக்காக இந்த அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

இரண்டாவது விடயம் என்னவெனில், முஸ்லிம் சமூகத்தினுள் சில அடிப்படையான விடயங்களை செய்யவும் வேண்டும். தேசிய ஷூறா சபை, ஜம்மிய்யதுல் உலமா சபை போன்றவற்றின் செயற்பாடுகள் முக்கியம் பெறுகின்றன. ஜம்மிய்யதுல் உலமா என்பது மார்க்க ரீதியானதொரு தலைமைத்துவம். எனது கருத்தின் படி, மார்க்க நிறுவனங்களின் தொடர்பு என்கின்ற பின்னணியில் பார்க்கும் போது அரசியலில் எவ்விதத்திலும் எக்கட்டத்திலும் தலையிடாமல் இருப்பதே பாதுகாப்பாகும். எந்தவிதத்திலும் அரசியலைப் பேசாமல், அரசியல்வாதிகளுடன் தொடர்புகளைப் பேணாமல் இருப்பதே அவர்களுக்கு மிகவும் நல்லது.

ஆனால் சிவில் சமூகத்தை அறிவூட்டக் கூடிய நிறுவனங்கள் எங்களுக்குள்ளால் இன்னும் உருப்பெற வேண்டும். இருக்கின்ற நிறுவனங்களை பலப்படுத்தவும் வேண்டும். இடையில் சில நிறுவனங்கள் உருவாகின. சட்டத்தரணிகள் அவற்றை வழிநடாத்தினார்கள். ஆனால் இடைநடுவில் மறைந்துபோயின. காரணம் என்னவென்று தெரியாது. பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் காரணங்களும் இருக்கலாம்.

சமூகத்தில் நன்கு படித்தவர்களும், தொழில் முயற்சிகளில் ஈடுபடக்கூடியவர் களும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் அரசியல் ரீதியானதொரு விழிப்புணர் வுக்கு வர வேண்டும். இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்குள்ளால் இருந்தும் அடுத்த சமூகத்தவர்களுடன் இணைந்தும் பணியாற்றுவதினூடாக ஆரோக்கியமானதொரு வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி நகரலாம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்? உங்களது ஆய்வுக்கூடாக இது போன்ற சூழ்நிலைக்குரிய தீர்வுகள் முன் வைக்கப்பட்டுள்ளதா?

நிகழ்வுகளை ஒவ்வொன்றாகப் பார்ப்பதை விட அந்த நிகழ்வுக்குப் பின்னால் வேலைசெய்யக்கூடிய சிந்தனைகள் அல்லது நகர்வுகளை மிகக் கவனமாக நோக்குவதே சிறந்தது. அந்த வகையில் ஜனநாயகத்தை அச்சுறுத்தக் கூடிய நபர்கள் அல்லது நகர்வுகள் அல்லது கோஷங்கள் எதுவாக இருந்தாலும் முஸ்லிம் தரப்பு அதனை முறியடிப்பதில் ஏனைய சக்திகளுடன் ஒத்துழைக்க வேண்டும். அதற்காகப் பாடுபடுபவர்களோடு இணைந்து செயற்பட வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வேண்டி அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அதற்கு இனபேதம், கட்சி வித்தியாசங் கள் கிடையாது என்கின்ற கருத்திலேயே நான் உள்ளேன்.

அந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் விரும்பியோ நிர்ப்பந்தமாகவோ தற்போது எடுத்திருக்கும் முடிவுகள் சரியானது. வரவேற்கத்தக்கது. முஸ்லிம் கட்சிகளை மையப்படுத்தியதாக எனது ஆய்வு இருப்பதால் சமகாலத்தில் இடம்பெற்று வருகின்ற இந்தப் பிரச்சினை பற்றிய விடயங்கள் ஏதும் ஆய்வில் முன்வைக்கப்படவில்லை.

ஷரீஆ துறை சார்ந்த அறிஞர்கள் குறிப்பாக மகாஸிதுஷ் ஷரீஆ சிந்தனையை இலங்கையில் பேசக்கூடியவர்கள் அரசியலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது அதாவது, மகாஸிதுஷ் ஷரீஆவை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்தும்  போது நவீன உலக ஒழுங்கு, சர்வதேச அதிகாரப் போராட்டம், பொருளாதார ஒழுங்கு, தேசிய அரசியல் உரையாடல்கள் போன்ற பின்னணியில் இருந்துகொண்டு தான் இதனைப் பேச வேண்டும். இந்தப் பின்னணியிலேயே எமது உரையாடல் நகர வேண்டும். அப்போது தான் மகாஸிதுஷ் ஷரீஆவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் நடைமுறை வடிவம் கொடு க்கவும் முடியும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்காலங்களில் தப்ஸீர், நவீன இஸ்லாமிய சிந்தனை  ஆகிய பகுதிகளில் கூடிய கவனம் குவிக்க இருப்பதுடன் இலங்கை முஸ்லிம் அரசியல் சார்ந்த உரையாடல்களிலும் கலந்து கொள்ளலாம் என விரும்புகிறேன்.

About the author

Administrator

Leave a Comment