Features கல்வி

பாடசாலை முகாமையும் அதிபர்களின் வகிபாகமும்

Written by Administrator

பரப்பளவிலும் உள்ளடக்கத்திலும் விரிவடைந்து செல்லும் கல்வி மனித வாழ்வின் சகல துறைகளிலும் ஊடுருவி நிற்கின்றது. இத்தகைய கல்வியின் முழுப் பயன்பாடுகளையும் மாணவர்கள் பெற்று உயர் அடைவுகளையும் ஒழுக்க சீலங்களையும் எட்ட வேண்டுமாயின், பாடசாலை முழுச் சமூகத்தையுமே எல்லையாகக் கொண்டு இயங்க வேண்டியுள்ளது.

பாடசாலையின் இத்தகைய இயங்கு நிலையை சிறப்பாக ஒழுங்கமைப்பதில் தீர்க்க தரிசனமான தலைமைத்துவம் பாடசாலைக்கு அவசியமாகின்றது. எந்தவொரு கல்வியினதும் அத்திவாரமாக இருப்பது பாடசாலைக் கல்வியே. பாடசாலை என்பது வினைத்திறனுள்ள ஒரு சமூக நிறுவனம். சமூகத்தின் சக்தி மிக்க வளமாகவும் குறிப்பிட்ட மக்கள் தொகுதியின் அதிகபட்ச எதிர்பார்ப்புக் களை நிறைவேற்றும் இடமாகவும் பாடசாலைகளே விளங்குகின்றன. இதன் காரணமாக, பல்வேறு சவால் களையும் நெருக்கடிகளையும் எதிர் கொள்ளும் களமாகவும் பாடசாலைகள் உள்ளதை மறுக்க முடியாது.

பாடசாலை எனும் சமூக நிறுவனம் தனது இலக்குகளை எட்டாத விடத்து, ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, கலாச்சார எதிர்பார்ப்புக்களை எட்டு வதும் சாத்தியமற்றது. பாடசாலையின் உயர் அடைவு மட்டத்தையும் உன்னதமான ஒழுக்கசீலங்களையும் அடைய வேண்டுமாயின், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், அரச கண்காணிப்பு முகாமை என கல்விப் பங்காளர்கள் ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரிவர நிறைவேற்ற வேண்டியுள்ளது.

ஒரு நிறுவனத்தின் தரமான வெளி யீடுகள் தரமான உள்ளீடுகள் மூலமே சாத்தியமாகின்றது. பாடசாலையும் ஒரு நிறுவனம் என்ற வகையில் தரமான உள்ளீடுகள் உறுதிசெய்யப்பட வேண்டும். அதேபோன்று பாடசாலை என்பது ஒரு நிறுவனம் எனும்போது அங்கு ஒரு சிறந்த முகாமையாளரும் தகுதியும் அர்ப்பணமும் கொண்ட ஊழியர் படையும் தேவைப்படுகின்றது. அவர்கள் மூலமே பாடசாலை எனும் நிறுவனத்தின் இலக்குகளை எட்ட முடியும்.

இந்த வகையில் பாடசாலைக் கல்வி யின் நடுநாயகமாக உள்ள அதிபர்கள் முகாமையாளர் என்ற வகையிலும், தலைவர்கள் என்ற வகையிலும் ஆற்ற வேண்டிய பணிகள் பல உள்ளன. இன்றைய கல்வியியலாளர்கள் இது குறித்து விரிவாக விவாதித்து வருகின்றனர்.

முதலில் மிகச் சிறந்த பாடசாலையொன்றின் பண்புகள் எவை என அடையாளம் கண்டு அத்தகைய சிறந்த பாட சாலையொன்றை உருவாக்குவதில் அதிபர் ஏற்க வேண்டிய வகிபாகம் குறித்து கலந்துரையாடுவது பொருத்தமாகும்.

ஒரு சிறந்த பாடசாலையின் பண்புகளாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்.

 • வினைத்திறன்மிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர் குழாம்.
 • கல்வி அபிவிருத்திக்குப் போதுமான வளங்கள்
 • ஆரோக்கியமான சமூகத் தொடர் பாடல்
 • மாணவர்களின் உயர் வருகை வீதம்
 • பெறுபேறுகளில் உயர் அடைவு மட்டம்
 • சிறந்த ஒழுங்குக் கட்டுப்பாடு
 • உயர்ந்த ஒழுக்க சீலங்கள்
 • மாணவர்களைக் கவர்ந்திழுக்கும் பௌதிக சூழல்
 • தெளிவான முகாமைத்துவக் கட்டமைப்பு
 • உயர்வான இணைப்பாடவிதான செயற்பாடுகள்
 • பாடசாலை மட்டத்தில் சமூகம் குறித்த தெளிந்த புலக்காட்சி
 • தொடர்ச்சியான கற்றல் செயற்பாடுகள்

இப்பண்புகளைக் கொண்டதாக ஒரு பாடசாலையை வளர்த்தெடுக்க வேண்டுமாயின், அங்கு பல்வகைத் திறன்கள் கொண்ட, கல்வியுலகம் பற்றிய ஆழ்ந்த அறிவுள்ள, நேர்ப்பாடான மனப்பாங்குள்ள ஓர் முகாமையாளர் அவசியம். முகாமைத்துவம் என்பது ஒரு நிறுவனத் தின் இலக்குகளை எட்டும் பொருட்டு அதன் வளங்களிலிருந்து உச்ச பயனைப் பெற்று வழிநடாத்தும் திறனைக் குறிக்கின்றது.

கல்வி என்பது பொருளாதாரம், தொழில்நுட்பம் மாத்திரமன்றி, மனித குலத்தின் வாழ்வுக்கான தடைகளை நீக்கி, விடுதலை செய்வதற்குமான ஆதாராமாக அமைதல் வேண்டும். இந்நிலையில், கல்விச் செயற்பாட்டின் அடிப்படைக் களமாக அமையும் பாடசாலைகளின் முகாமைத்துவம் புதிய சிந்தனைகளோடும் புதிய உத்திகளோடும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

உலகளாவிய கருத்துத் தெளிவும் தூர நோக்கும் நிறுவனம் தொடர்பான விளக்கமும் செயற் திறனும் கொண்ட தாக நாம் எதிர்பார்க்கும் பாடசாலை முகாமைத்துவம் அமைய வேண்டும். ஏனெனில், பாடசாலை சமூகத்தின் தேவைகளைப் பிரதிபலிக்கும் நிறுவனம். இன்றைய கல்வி சமூகத்தின் தேவை களுக்கு ஏற்ப விரிவடைந்து செல்கின்றது. விளைவாக, கடந்த காலங்களைப் போன்று இன்றைய பாடசாலைக் கல்வி இல்லை. அது பல்வேறு சவால்களை விடுக்கின்ற ஓர் களமாக மாற்றமடைந்துள்ள நிலையில், அச்சவால்களை ஏற்று, பாடசாலையை முன்னெடுக்கத் தகுதியான அதிபர்கள் தேவையாகின்றனர். இதற்கு திறன்கள் மாத்திரம் போதுமானதல்ல. தலைமைத்துவப் பண்புகள், அர்ப்பணம், ஆளுமைப் பண்புகள், கவர்ச்சியான தொடர்பாடல் திறன் என்பனவும் அவசியமாகும்.

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று அதிபர்கள் முகாமையாளராக மட்டுமன்றி, தலைவர்களாகவும் செயல்பட வேண்டியுள்ளது.

(தொடரும்)

About the author

Administrator

Leave a Comment