Features சமூகம்

 தேசிய மீலாத்? | எழுவாய் பயமிலை

Written by Administrator

– அபூ ஷாமில் –

பல்வேறு கருத்தாடல்களுடன் மீலாத் நிகழ்வுகள் மங்கி வருகின்றன. சிலருக்கு தொடர்ந்து ஒரு மாதமாக நபிகளாரின் பேரில்  கிடைத்து வந்த அன்னதானம் முடிந்து விட்டதே என்கின்ற கவலை. அடுத்த தரப்புக்கு ஆக்ரோஷமாகப் பேசி மீலாதின் பெயரில் சமூகத்தில் சலசலப்பை உண்டாக்குவதற்கான வாய்ப்பு இழந்து விட்டதே என்ற கவலை. அடுத்தவர்களில் பலருக்கும் மீலாதுன் நபி வந்துவிட்டுப் போன சுவடும் கூடத் தெரியவில்லை.

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். பிரதமர்கள் வாழ்த்துரை வெளியிட்டார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டிருந்தார்கள். ஏதோ ஓர் அரசியல்வாதியின் பிறந்த தின வாழ்த்துச் செய்திகள் போல அரசியல் பிரமுகர்களே இந்த விடயத்தில் கூடுதல் கரிசனை காட்டியிருந்தார்கள்.

முஸ்லிம் சமூகத்துக்கு நபிகளார் எப்படி அந்நியமாகிப் போனார்கள்? ரஸூலுல்லாஹ்வுடைய வாழ்க்கை வழிமுறை பூரா உலகுக்கும் சென்றடைய வேண்டும் என்று சொல்லுகின்ற ஜம்இய்யதுல் உலமா இதனை எப்படிப் பயன்படுத்திக் கொண்டது? இயக்கங்கள் ஜமாஅத்துக்கள் இதனை எப்படிப் பயன்படுத்திக் கொண்டன? தௌஹீதும் ஸூபிகளும் தமது வழமையான நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றினார்கள். இது தவிர இலங்கைச் சமூகத்துக்கு நபிகளார் கொண்டு வந்த தூதை முன்வைப்பதற்கு யாரும் இந்தத் தினத்தைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.

குறித்த மீலாத் விடுமுறை தினம் தொடர்பில் ஒரு வேலைத் திட்டத்தை வரைந்து செயற்படுத்தக் கூடிய தேசிய அமைப்பு எதுவுமே ஏன் எம்மிடத்தில் இல்லை. டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி வரக்கூடிய யேசுநாதரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் மாத ஆரம்பத்திலிருந்தே இலத்திரனியல் ஊடகங்களில் நிகழ்ச்சி முன்னோட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இருக்கின்ற ஊடகங் களை முஸ்லிம் சமூகம் எப்படிப் பயன்படுத்திக் கொண்டது? இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன முஸ்லிம் சேவை தான் இலங்கையில் தேசிய முஸ்லிம் சேவையாகச் செயற்படுகிறது. இவர்களும் கூட இந்த மீலாத் விடுமுறை நாளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அடுத்த நாளில் மாணவர்கள் பாடசாலைக்கும் ஏனையவர்கள் அலுவல்களுக்கும் சென்று அடுத்தவர்கள் அன்றாட காரியங்களில் மூழ்கிப் போன வேளையில் தான் முஸ்லிம் சேவை மீலாத் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியது. தொலைக்காட்சி சேவையும் இப்படித்தான். விசாரித்துப் பார்த்தால் பிறைக் கணக்குப் படி நபிகளார் பிறந்தது அரசாங்க விடுமுறை தினத்தில் இல்லையாம் என்கிறார்கள்.

நபிகளார் பிறந்த தினம் எது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். அது பிறந்த தினமா அல்லது நபிகளார் மறைந்த தினமா என்பதிலும் கூட சிலரிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எது எப்படிப் போனாலும் இந்த நாட்டில் நபிகளாரை நினைவு படுத்துவதற்கெனக் குறித்தொதுக்கப்பட்டுள்ள நாளை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம்?

தேசிய மீலாத் விழா கூட குறித்த தினத்தில் நடைபெறவில்லை. நாட்டில் தேசிய ரீதியாகக் கொண்டாடப்படுகின்ற வெசாக் தினமோ, நத்தாரோ, தீபாவளியோ குறித்த தினத்தைத் தவிர்ந்த வேறு நாட்களில் விழா எடுத்துக் கொண்டாடப்படுவதில்லை. நபிகளாரின் பிறந்த தினம் மட்டும் தான் குறித்த தினத்தில் அன்றி வேறு தினத்தில் கொண்டாடப்படும் தேசிய நிகழ்வாக இந்த நாட்டில் அமைந்திருக்கிறது. தற்போதைய அரசியல் கலவரங்களை இதற்குக் காரணமாகச் சொல்ல முடிந்தாலும், ஏனைய சாதாரண கண்காட்சிகள் கூட குறித்த தினத்தில் நடக்கும் போது ஏன் நமக்கு மட்டும்……? அரசியல் கலவரத்தில் ஜனாதிபதி மாறவில்லையே. ஆகவே பிரதம அதிதிதியாக ஏன் மாறாத பதவிநிலையில் உள்ள ஒருவரான ஜனாதிபதியை அழைத்து தேசிய நிகழ்ச்சியை நடத்தியிருக்கக் கூடாது ?

இது ஜனாதிபதிக்கு முஸ்லிம்களின் நிகழ்ச்சிகளில் இருந்து நழுவுவதற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பாகவும் அமைய முடியும். முஸ்லிம்களின் எந்தத் தேசிய நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்? கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழா நடந்தபோது கூட ஆளில்லாத இடத்தில் ஏன் விழா எடுக்கிறீர்கள் எனக் கேட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்திருக்கிறார். மீலாத் தினத்தை முஸ்லிம்களே அக்கறையுடன் கொண்டாடாத போது எனக்கெதற்கு என அவர் நினைத்திருக்கலாம்.

நடந்து முடிந்த தேசிய மீலாத் விழாவும் கூட பல நாட்கள் சிர மத்தின் பின்னர், பலரது தியாகத்தின் முடிவில் அரங்கேற்றப் பட்டிருந்தாலும், அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்ததன் படி தேசிய விழாவாக அது நடைபெற்றதா என்ற கேள்வி எழுகிறது. தேசியம் என்பது நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்களைக் குறிப்பதா அல்லது நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களைக் குறிப்பதா? தேசிய மீலாத் விழாவையொட்டி பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகள் எல்லாம் முஸ்லிம் பாடசாலைகளை மையப் படுத்தியே நடத்தப்பட்டு, தேசிய மீலாத் விழாவின் போது பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். தேசியம் என்பது முஸ்லிம் தேசியமா? ஏன் நாட்டு மக்கள் அனைவரையும் தழுவியதாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்க முடியாது? குறித்த தினமொன்றை வைத்து போட்டிகள் நடத்தப்படுவது குறித்த தினத்திலான விஷேடங்கள் குறித்து பொதுமக்களை அறிவூட்டுவ தற்குத் தானே? எனில், ஏன் நாட்டு மக்கள் அனைவருக்குமான போட்டிகளாக இதனை நடத்தக் கூடாது?

நாட்டிலே முஸ்லிம்கள் முறையாக வாழவும் தமது நிலைப்பாடுகளை வெளிக்காட்டவும், தமது தூதை முன்வைத்து நாட்டுக்கு வழிகாட்டவும் முன்னின்று தலைமை வகிக்கக் கூடிய ஒரு முறைமை முஸ்லிம் சமூகத்திடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

நபிகளாரின் அழகையும் உணவையும் உறக்கத்தையும் புராணம் பாடிக் கொண்டிருப்பதை விட்டு உலகுக்கு நபிகளார் வழங்கிய தலைமையை இந்த நாட்டுக்கு எடுத்துச் சொல்லாதவரை நபிகளாரும் அவர் கொண்டு வந்த தீனும் இந்த நாட்டில் அநாதரவாகவே இருந்து விட்டுப் போவது தவிர்க்க முடியாதது.

About the author

Administrator

Leave a Comment