Features அரசியல்

சூனியப் பிரதேசமாக மாறும் இலங்கை தேசம்

Written by Administrator

 – பி.எம். முஜீபுர் ரஹ்மான் –

அண்மைக் காலமாகத் தொடர்கின்ற பரபரப்பான அரசியல் நெருக்கடிக்கு முடிவேற்படுமா, எத்தகைய முடிவேற்படும் என்பதை அறிய, நாட்டு மக்களும், ஐ.நா உள்ளிட்ட சர்வதேசமும், ஜனநாயகத்தின் மீது பற்றுள்ள பலதரப்பினரும் ஆவலாக இருக்கின்றார்கள்.

உண்மையில் இவ்வளவு பரபரப்பான அரசியல் நெருக்கடிக்கு இலங்கை செல்வதற்கான பிரதான மற்றும் உடனடிக் காரணிகள் எதுவாக இருக்கும்? ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கான முயற்சியா? கொழும்புத் துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்குவதற்கான செயற்திட்டமா?

அப்படியாயின் ஏன் ஒக்டோபர் 26 ஆம் திகதி இம்மாற்றம் ஏற்பட்டது? அதனை ஒரு மாதத்திற்கு முன்னர் மேற்கொண்டிருக்கலாமே? அல்லது நவம்பர் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்த வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் மேற் கொண்டிருக்கலாமே? அவ்வாறு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பித்ததன் பின்னர் இவ்வாறான அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்தால் மக்கள் இப்போது எதிர்நோக்குகின்ற பொருளாதாரப் பிரச்சினை ஓரளவு குறைந்திருக்குமே. எனவே, இவ்வரசியல் நெருக்கடிக்கும் இலங்கை பொருளாதாரத்திற்கும் எங்கோ ஒரு சம்பந்தம் இருப்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது.

ஏனெனில், நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது.  2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 5800 மில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேசக் கடனாக செலுத்த வேண்டியுள்ளது. 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் தான் இலங்கையை நெருக்கும் மிகவும் முக்கிய மான ஆண்டுகளாகும். இதனைக் கையாள அரசாங்கம் என்ன திட்டம் வைத்துள்ளது? இவை இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா? இவ்வாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் எங்கே? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில், அரச ஊழியர்களின் குறிப்பாக அரச வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவைகள்  சார்ந்த ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகள் (ஓவர் டைம்) நிறுத்தப்பட்டிருக்கின்றன. திறைசேரியில் இதற்குரிய நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதே இதற்குரிய காரணம் என்கின்றனர். மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்கப்படாததை எதிர்த்து அரச வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் எக்ஸ்ரே மற்றும் CT ஸ்கேன் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வகை யிலான பணி புரிவதன் ஊடாகத் தமது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

ரணில் – மஹிந்த = மைத்திரி

நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ரணில், மஹிந்த, மைத்திரி ஆகியோர் என்ன வழிமுறைகளைப் பின்பற்றினார்கள்? அதற்கு அவர்கள் உலக வங்கியை அணுகிய போது, உலக வங்கி என்ன ஆலோசனையை வழங்கியது? உலக வங்கியிடம் மேலும் கடன் கேட்டதற்கு உலக வங்கி என்ன பதிலைக் கூறியது என ஆராய்கின்றபோது, மிகப் பெரிய ஆபத்து எம்மை நோக்கி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இங்கு, உலக வங்கி கடன் கொடுப்பதற்கு மறுத்துவிட்டது. மறுத்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், சில ஆலோசனைகளையும் கூறியுள்ளது. அதாவது, தொழிலாளர்களின் EPF மற்றும் ETF சேமிப்புக் கணக்கில் உள்ள சுமார் 2 டிரில்லியன் நிதியை இலங்கை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள். எனவே, அந்நிதியை நாட்டின் கடனைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்துமாறு ஆலோசனை கூறியுள்ளது. அந்நிதியைப் பயன்படுத்த முடியவில்லையாயின், நாட்டிலுள்ள முக்கிய சில வளங்களை பிற நாடுகளுக்கு வழங்குமாறு கூறியுள்ளது.

இவற்றில் எதனைப் பின்பற்றுதல் என ஜனாதிபதி உட்பட முக்கிய பிரமுகர்கள் மந்திர ஆலோசனை நடத்தியுள்ளார்கள். இதற்கு ரணில் விக்ரமசிங்க நாட்டிலுள்ள முக்கிய வளங்கள் மற்றும் முக்கிய தொழிற்சாலைகளை தனியார் மயப்படுத்துவதோடு, பிற நாடுகளுக்கு வழங்குவதற்கு முடிவெடுத்து அதற்காக முயற்சித்துள்ளார். அதேநேரம், மஹிந்த ராஜபக்ஷ EPF மற்றும் ETF சேமிப்புக் கணக்கில் உள்ள சுமார் 2 டிரில்லியன் நிதியை பயன்படுத்தினால் சில தீர்வினைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இவ்வாறு நாடு சுமார் 5800 மில்லியன் கடன் சுமையில் இருக்கின்றபோது எவ்வாறு நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பது. அது மாத்திரமல்ல இக்கடன் தொகையை நவம்பர் மாதத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது இன்னுமொரு பிரச்சினை. இந்நிலையிலேயே இவ்வரசியல் நெருக்கடி தோற்றுவிக்கப்பட்டது என சில ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஏனெனில், இப்போது நாட்டின் முக்கிய வருமானங்கள் யாவும் வீழ்ச்சி கண்டுள்ளன. நாடு எண்ணையினால் கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டே இயங்குகின்றது. ஏனைய அனைத்துத் துறையிலுமான வருமானங்கள் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளன.

அதாவது, இலங்கையின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்திய தேயிலை, தெங்கு, இறப்பர் போன்றன சர்வதேச சந்தையில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ளது. அத்தோடு, ஒரு காலத்தில் சீனி, டயர், கடதாசி, சீமெந்து என்பன இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டது. அவைகளின் உற்பத்தியும் பாரிய அளவில் குறைந்துள்ளது. அத்தோடு அதிகரித்துள்ள சனத்தொகைக்கு ஏற்ப நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற உற்பத்திகள் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்குப் போதாமல் இருக்கின்றது. அதேநேரம் அரசாங்கமும் இலங்கை உற்பத்திகளை மேம்படுத்துவ தற்குப் பதிலாக வெளிநாட்டு உற்பத்திகளை இறக்குமதி செய்வதன் மூலம் அமைச்சர்கள் மற்றும் அவர்களைச் சூழ உள்ளவர்கள் இலாபம் அடையும் நோக்கமும் இதில் தங்கியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் சுமார் 14 இலட்சம் முச்சக்கர வண்டிகளும், 30 இலட்சம் வாகனங்களும் (கார், வேன் வகைகள்), 26 ஆயிரம் தனியார் பஸ்களும், 5 ஆயிரம் அரசாங்க பஸ்களும் இருக்கின்றன. அத்தோடு, 2 இலட்சம் கடல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகின்ற இயந்திரங்கள் இருக்கின்றன. அத்தோடு, மின்சார வசதி இன்றி வறிய நிலையிலுள்ள குடும்பங்கள் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணையைப் பயன்படுத்துகிறார்கள்.

இவைகளை நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எவ்வாறு பயன்படுத்தலாம் என நோக்கியதால்தான், சர்வதேச சந்தையிலுள்ள எண்ணையின் விலையை விட சுமார் 70 ரூபா அதிகமாக இங்கு விற்பனை செய்யப்படுகின்றது. அவ் வாறாயின் ஒரு நாளைக்குக் குறைந்தது 200 இலட்சம் லீட்டர் பெற்றோலும் 100 இலட்சம் லீட்டர் டீசலும் குறைந்தது 300 இலட்சம் லீட்டர் மண்ணெண்ணையும் தேவைப்படுகின்றன.

இவைகள் மூலம் நாட்டிற்கு கிடைக்கின்ற வருமானங்களுக்கு என்ன நடக்கின்றது? என்பது குறித்து மக்கள் ஏன் கேள்வி எழுப்புகிறார்களில்லை? அதேநேரம் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இவ்வருடத்திற்குள் சுமார் 5800 மில்லியன் கடனை செலுத்த வேண்டும் என்கின்றனர்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றபோது, அதிகரிக்கப்பட்டிருந்த எரிபொருளின் விலை திடீரெனக் குறைக்கப்பட்டது. பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலையை  7 ரூபாவினாலும் குறைத்ததாக புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அத்துடன் பருப்பு மற்றும் கடலை என்பவற்றின் ஒரு கிலோவுக்கான விசேட வர்த்தக வரி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டிருக்கின்றது. உழுந்து ஒரு கிலோவுக்கான வர்த்தக வரி 25 ரூபாயினாலும் சீனி மீதான வரி 10 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் மீது மக்களை ஆர்வம் கொள்ளச் செய்வதுடன், அவர்களுடைய ஆதரவைப் பற்றி இழுப்பதையுமே இந்த உத்தி நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. அத்துடன் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டதும் நடத்தப்படவுள்ள தேர்தல்களிலும் மக்களுடைய ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான அரசியல் தந்திரோபாயமும் இதில் அடங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

நாட்டில் ஸ்திரமற்ற அரசாங்கம் ஒன்று இல் லாத நிலையில் நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டு வருகிறது. நவம்பர் மாதம் என்பது இலங்கையின் சுற்றுலாத்துறை பலமடையும் மாதமாகும். ஆனால், இன்று நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. அது மட்டு மல்ல நவம்பர் மாதத்தில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கப்பட வேண்டும். ஆனால், அவையும் இன்னும் வழங்கப்படவில்லை.

மஹிந்த அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கின்றபோது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. எம்மிடம் ஒப்படையுங்கள் ஒரு நாளைக்குள் அதனை தீர்த்து வைப்போம் என்றார்கள். ஆனால் இன்று, ஐக்கிய தேசியக் கட்சி செய்த சிங்கப்பூர் உடன்படிக்கையை நியாயப்படுத்தி முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.

அத்தோடு, கடந்த காலத்தில் உருவாக்க இருந்த கசினோ, விபசாரம், போதைப்பொருள் காலாசாரத்தையே மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

வெளிநாட்டு முதலீடுகள் எம்மை விட்டு விலகிச் செல்கின்றன. பிணைமுறிகள் கைவிட்டுச் செல்கின்றன. இந்நிலையில் 2020 இல் நாம் செலுத்த வேண்டிய கடன் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எவ்வாறு அமைச்சர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் நடைபெறப் போகின்றன. அத்தோடு, கடனுக்கான, அபிவிருத்திக்கான, மக்களுக்கான சேவை நிதிகள் எவ்வாறு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப் போகின்றனர்.

ஒட்டு மொத்தத்தில் இந்த ஆட்சியாளர்களுக்கு நாட்டை கடனிலிருந்து மீட்டெடுத்து, பாதுகாக் கும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக தமது ஆட்சியைத் தக்கவைத்து நாட்டை முடியுமான வழிகளில் பயன்படுத்தலாகும். அதற்கு மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்குகிறார்கள்.

ஆகவே, மக்கள் விழிப்படைந்து, மாற்று வழிகளை நோக்கிச் சிந்திப்பதே சிறந்த வழியாகும். இவர்களே தொடர்ந்தும் ஆட்சி பீடங்களிலிருந்தால் நிச்சயமாக நாடு பாரிய ஆபத்தைச் சந்திக்கும். மக்கள் இக்கட்டான இத்தருணத்தில் நியாயமாக சிந்தித்துப் பதிலளிக்கவில்லையாயின் எதிர்காலத்தில் இலங்கை சூனியப் பிரதேசமாகவே காட்சிதரும். மிக அவதானமாக சிந்தித்துச் செயற்படும் காலத்திலேயே நாம் இருக்கிறோம்.

About the author

Administrator

Leave a Comment