Features நேர்காணல்

நாட்டு நடப்புகளை சரியாகக் கணிக்க முடியுமான ஒரு சிவில் சமூகம் வேண்டும்

Written by Administrator

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் முன்னாள் அமீர், இலங்கை ஜமாஅதே இஸ்லாமி

நேர்காணல்: ஹெட்டி ரம்சி

இன்றைய அரசியல் நெருக்கடியை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

இன்றைய அரசியல் நெருக்கடி திடீரென தோன்றியதொரு விடயமல்ல. எப்பொழுதும் ஒரு விடயம் படிப்படியாக விருத்தியடைந்தே ஒரு கட்டத்தை அடைகின்றது. அது பிரச்சினையாக மாறும் நேரம் அப்பிரச்சினை எல்லோருக்கும் விளங்கும். ஆனால் அதன் பின்னணி, அது எங்கிருந்து உருப்பெற்றது, வளர்ந்தது என்ற விடயங்கள் மக்களின் சிந்தனையில் இருக்காது.

இன்றைய அரசியல் நெருக்கடி உடனடியாக தீர்க்கப்பட வேண்டியதொரு நெருக்கடி. அது ஜனாதிபதிக்கும் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமருக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கும் இடையிலான பிரச்சினை என்று பார்த்தாலும் உண்மை அதுவல்ல. அது ஒரு பிரச்சினையின் வளர்ச்சிக் கட்டமாகும். பிரச்சினை எங்கு ஆரம்பிக்கின்றதென்றால் இந்த நாட்டில் கடந்த 3 தசாப்த காலமாக நிலவி வந்த இனப்பிரச்சினையின் தாக்கம் இன்னும் உள்ளது. இன்னொரு வகையில் சுதந்திரத்திற்கு பிறகு இந்த நாட்டை ஆட்சிசெய்த கட்சிகள் மாறி மாறி நாட்டை ஆட்சிசெய்தாலும் ஆட்சியாளர்கள் மாறினார்கள், கட்சிகள் மாறின என்கின்ற விடயங்களைத் தவிர இந்த நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை.

சுதந்திரம் கிடைத்த வேளையில் அக்காலப் பகுதியில் சிங்கப்பூர் போன்ற நாடுகள் எம்மைப் போன்று வர வேண்டும் என நினைத்தன. இன்று அந்நாடுகள் எங்கேயோ போயுள்ளன. நாமெங்கோ போய்க் கொண்டிருக்கிறோம். எமது அரசியல் தலைமைகளின் வழிகாட்டலில் நாடு அடைந்துள்ள நிலையே இது. இப்படியே இந்த விடயம் பார்க்கப்பட வேண்டும். எப்பவும் ஒன்று வளர்ச்சிப் பாதையில் செல்கின்றதென்றால் அங்கு திடீரென நெருக்கடிகள் வர முடியாது. வீழ்ச்சிப் பாதையில் போகின்றதொரு நாட்டிலேயே நெருக்கடிகள் இடம்பெற முடியும்.

உலகில் இன்று நாம் எத்தனையோ அமைப்புக்களைப் பார்க்கின்றோம். வீழ்ச்சிக் கட்டத்திலிருந்து ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டு வளர்ந்து செல்லும் நாடுகள் உள்ளன. அங்கு பிரச்சினைகளை அவர்கள் வெற்றிகரமாக சமாளிக்கிறார்கள். பிரச்சினைகளை வென்று சாதிக்கிறார்கள். உதாரணமாக துருக்கியில் எத்தனையோ பிரச்சினைகள் வந்தன. அது வளர்ந்து கொண்டு போகும் நாடென இன்று உலகில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பிரச்சினைக்குள் விழுதல் என்பது வளர்தல் என்ற கருத்தைத் தராது. அதாவது படிப்படியாக வீழ்ச்சியடைந்து செல்லும் போது அதல பாதாளத்தில் விழ நேரிடுகிறது. அந்தப் பார்வை இந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிடமோ மக்களிடமோ இல்லை. எமக்கு நல்லதொரு சந்தர்ப்பம் இந்நாட்டில் கிடைத்தது. முப்பது வருடங்களாக நிலவிய உள்நாட்டு யுத்தம் தவிர்க்கப்பட்டு ஒரு யுத்தமற்ற பூமியாக இலங்கை மாறியது. இதுவொரு நல்ல விடயம். இதற்குப் பங்களிப்பு செய்தவர்கள் வரலாற்றில் இடம்பெற வேண்டியவர்கள்.

ஆனால் யுத்தம் முடிந்தாலும் இனப்பிரச்சினை முடியவில்லை. ஏனெனில் யுத்தத்தை முடிக்கும் திறமை இருந்தும் இனப்பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை சரியான அமைதி எல்லைக்குக் கொண்டு வந்து சேர்க்க முடியாமல் போயுள்ளது. யுத்தமில்லாமல்  போவது ஒரு அமைதிதான். ஆனால் இனங்களுக்கிடையில் காணப்பட்ட பிரச்சினையும் இல்லாமல் போகின்ற போதே சரியான அமைதி வரும். அந்த இடத்தை நோக்கி வழிகாட்டப்படவில்லை. இன்றைய நெருக்கடிக்குள் இனப் பிரச்சினைக்கு ஒரு பெரிய பங்குள்ளது. அதாவது நாடு அழிந்து போகின்றது என ஒரு சாராரும் நாட்டில் எல்லா இனங்களும் சரி சமமாக வாழ வேண்டும் என்று இன்னொரு சாராரும் இந்தப் பிரச்சினைக்குள் இரு தரப்பாக இருப்பதை காண்கின்றோம்.

அது ஒவ்வொருவருடையதும் அரசியல் வாழ்க்கைக்குத் தேவையான விடயமாக மாறியிருக்கிறது. நாடு பிளவுபடக்கூடாது, நாட்டை விற்று விடக்கூடாது என ஒரு தரப்பு கருதுகிறது. இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஒரு சுமுகமான சூழல் உருவாக வேண்டும். உலக அரங்கில் நாட்டிற்கு நல்லதொரு பெயர் வர வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். நன்மதிப்பு பெற்றதொரு ஜனநாயக நாடாக எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதனால் உலகத்திலிருந்து கிடைக்கின்ற நிறைய இலாபங்களை இங்கு கொண்டு வரலாம் என்பது ஒரு பார்வை.

இப்படி இரண்டு கருத்துக்கள் மோதும் விடயமாகவே இதனைப் பார்க்க வேண்டும். வெறுமனே தலைகளை மாற்றியதால் ஒரு நெருக்கடி வந்ததாக வெளித்தோற்றத்தில் இருந்தாலும் இந்த நாட்டைப் பற்றிய தீவிரப் பார்வைகள் இரண்டே இங்கு மோதுகின்றன. அந்த மோதலின் விளைவே இது. இம்மோதல் தொடர்ந்து இருந்து வருகிறது. அதன் வளர்ச்சிக் கட்டமே இது.

எனவே இந்நெருக்கடிக்கு ஒரு செயல் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது எல்லோரும் உண்மையான நெருக்கடியின் ஆணிவேரை விட்டு விட்டு அதைப் பற்றி பேசிக்கொண்டுள்ளனர். இந்தப் பார்வை சமூகத்திற்கு வர வேண்டும்.

இச்சந்தர்ப்பத்தில் பெரும்பாலான முஸ்லிம் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி ரணில் தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பிட்ட சில அமைப்புக்களே மஹிந்தவுக்கு ஆதரவு நல்கியுள்ளது. இது முஸ்லிம்களுக்கு எவ்வாறான பின்விளைவுகளை ஏற்படுத்தும்?

அதாவது முஸ்லிம்கள் இங்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்பதை ஒரு இன ரீதியான விடயமாகப் பார்க்காமல் தெளிவானதொரு நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டியதொரு தேவையுள்ளது. அரசியல்வாதிகள் அப்படித்தான் பேச வேண்டும். இது ரணிலுக்கு ஆதரவளித்து மஹிந்தவுக்கும் ஜனாதிபதிக்கும் நாங்கள் எதிராக உள்ளோம் என்ற நிலைப்பாட்டில் நாம் இவ்விடத்திற்கு வரவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.

சுதந்திரத்திலிருந்து இன்று வரையில் இந் நாட்டை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே ஆட்சிசெய்கிறார். எனவே ஒவ்வொரு சிறுபான்மை சமூகமும் தனக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் சாத்வீகமாகச் செல்வதென்பது புறக்கணிக்க முடியாததொரு விடயம். ஆனால் இந்தப் பிரச்சினையில் நாம் அவர்களுடன் நிற்பதா? அல்லது இவர்களுடன் நிற்பதா? என்கின்ற நோக்கில் இதனைப் பார்க்கக் கூடாது. இங்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்ற கொள்கையிலேயே செயற்பட வேண்டும்.

இன்று நீதிமன்றத்திலும் பிரச்சினை, பாராளுமன்றிலும் பிரச்சினை அதாவது ஜனநாயக மரபுகள் கருத்திற் கொள்ளப்பட்டு இம்மாற்றம் நடந்ததா இல்லையா என்று பார்க்கப்பட வேண்டும். இது யாப்பனர்த்தம் (Constitutional Crisis)  என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினைகள் சட்டம், யாப்பு, ஜனநாயகம் போன்றவற்றை மையப்படுத்தியே பேசப்படுகின்றது. எனவே நாம் இத்தகைய விழுமியங்களுக்கு முன்னுரிமையளித்தே இத்தகைய நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். இந்த அடிப்படையிலேயே எமது சமூகத்தை அறிவூட்டும் விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில் மஹிந்த ஜனாதிபதியாக இருந்த நேரம் நாட்டில் எமக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்தது. எனவே நாம் அவர் பக்கம் சேரக் கூடாது என்கின்ற நிலைப்பாட்டில் முஸ்லிம்கள் இப்பிரச்சினையில் தலையிடக்கூடாது. இது வேறொரு விடயம். இது முக்கியமல்ல. இந்நாட்டில் யாரோ ஆட்சி செய்வார்கள்.

இது ஜனநாயகத்தோடு தொடர்பான பிரச்சினை. எனவே எல்லோரது குரலும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அமைப்பிலேயே ஒலிக்க வேண்டும். முஸ்லிம்கள் இந்த நிலைப்பாட்டிலேயே இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். இது தான் எங்களது நிலைப்பாடு என முஸ்லிம்கள் இதை அழுத்திச் சொல்வார்கள் என்றால் அதுவே இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற கௌரவமாகும்.

தற்போது நாம் நாட்டுக்காகப் பேசுகிறோம். சமூகத்துக்காக அல்ல. இது நாட்டிற்காகப் பேசுகின்ற நேரம். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்களுக்கு எதைச் சாதித்துக்கொள்ள முடியும் என்று நினைக்கக் கூடாது. இதற்கு முன்னர் இடம்பெற்ற பிரச்சினைகளை விட இந்த விடயத்தில் முஸ்லிம் கட்சிகள் நல்லதொரு நிலைப்பாட்டில் இருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டில்  சட்டம், ஒழுங்கு ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவொரு ஜனநாயக நாடு. இந் நாட்டிற்கு உலகில் தனியான அந்தஸ்துள்ளது. இதைப் பாதுகாக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். இப்படியொரு நிலைப்பாட்டையே முஸ்லிம்கள் எடுக்க வேண்டும்.

பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டிலும் நம்பிக்கை இழந்தவர்கள் மூன்றாவது சக்தி யொன்றின் தேவை குறித்து கலந்துரையாடி வருகின்றனர். இது எப்படி அமைய வேண்டுமென்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

சுதந்திரத்திற்கு பின்னர் தொட்டு நீண்டகால மாக உருவாகி வரும் பிரச்சினையின் வளர்ச்சிக் கட்டத்தை வைத்தே மூன்றாவது அரசியல் சக்தி யொன்று இந்நாட்டில் உருவாகி வர வேண்டும் என்று சிலர் கதைத்து வருகின்றனர். இவர்கள் அண்மைக்காலமாக இடம்பெறும் பிரச்சினை களை மாத்திரம் கவனத்திற் கொண்டு மாற்று சக்தி (Alternative Force)  தேவை எனக் கூற வரவில்லை. சுதந்திரத்திற்கு பின்னர் இந்நாடு சரியான பாதையில் செல்லவில்லை. மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பிரதான கட்சிகளும் நாட்டிற்கு சரியான தீர்வுகளைத் தரவில்லை. தங்களது அரசியல் நலனுக்காக மாத்திரமே செயற்பட்டுள் ளார்கள் என்பதே மாற்று சக்தி தேவை எனக் குறிப்பிடுபவர்களின் வாதமாக காணப்படுகிறது. இது நல்லதொரு விடயம். இதை எப்படி சாதித் துக் கொள்வார்கள் என்பது மற்றொரு விடயம். அதாவது இதைச் சாதிக்க வேண்டும் என்றால் இன்னுமொரு கட்டத்திற்குச் செல்ல வேண்டும். இந்த கவலையை பிரஸ்தாபிப்பவர்கள் பல குழுக்களாக உள்ளனர்.

அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூடி இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். இணைந்து பணியாற்ற முடியுமா என்றெல்லாம் சிந்திக்கிறார்கள். இது நல்ல விடயம். ஆனால் இவர்கள் வெற்றிபெறுவார்களா என்பதில் சந்தேகமுள்ளது. ஏனெனில் பிரச்சினைகளின் பின்னணியை விளங்கியவர்களே இப்படி யோசிக்கின்றனர்.  நாட்டிலுள்ள எல்லோ ரும் பிரச்சினைகளை மாத்திரமே பார்க்கிறார்கள். அவற்றின் பின்னணியை பார்க்கிறார்கள் இல்லை. பின்னணியை பார்ப்பவர்களுக்கே மூன்றாம் சக்தியின் தேவை உணருகிறது.

பிரச்சினையை பார்ப்பவர்கள் இதில் யார் வெற்றி பெறவேண்டும். யார் தோற்க வேண்டும் என்றே பார்க்கிறார்கள். பிரச்சினையை பார்ப்பவர்கள் பக்கச் சார்பாக உள்ளனர். ஒரு சாராருக்கு ரணில் வெல்ல வேண்டும். இன்னொரு சாராருக்கு மஹிந்த வெல்ல வேண்டும். ஜனாதிபதி தான் தனிப்பட்டு விடுவேனோ என்கின்ற அச்ச நிலைக்கு ஆளாகியுள்ளார். இது இயல்பு. தன் னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற தேவை அவருக்குள்ளது. இப்படி பலரும் அவரவர் தரப்பிலிருந்தே இந்தப் பிரச்சினையை பார்க்கின்றனரே ஒழிய வரலாற்று ரீதியில் அதனை பார்க்கின்றார்கள் இல்லை.

அப்படிப் பார்க்கின்ற ஒரு சிலரால் மாத்திரம் இந்நாட்டை மாற்றி விட இயலாது. அதற்கு அரசியல் பிரக்ஞையுள்ள நாட்டு நடப்புகளை சரியாகக் கணிக்க முடியுமான ஒரு சிவில் சமூகம் வேண்டும். அத்தகைய சமூகம் உருவாகாத வரையில் இவர்களால் எதையும் சாதிக்க முடியாது.

தற்போதைய சிவில் சமூகத்தின் மன நிலை ஏதோ ஒரு புறத்திற்கு திசைதிருப்பப்பட்டுள்ளது. இலங்கை என்னும் எண்ணம் அவர்களிடமில்லை. இலங்கை யைப் பற்றி யோசிக்கும் சிவில் சமூக மொன்று நீண்டகாலமாக இந்நாட்டில் அரசியல்வாதிகளால் உருவாக்கப்படவில்லை. அரசியல்வாதிகள் தங்களது இருப்புக்காக சமூகத்தை தங்களுக்கென பிரித்துக் கொண்டு வித்தியாசமானதொரு மனநிலையை அவர்களுக்கு மத்தியில் ஊட்டிவிட்டுள்ளனர்.

அவரவர் சமூகத்தைப் பற்றி மாத்திரம் சிந்திக்கும் சமுதாயமொன்றே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தகைய சிந்தனைக்குள் இந்நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய மூன்றாம் சக்தி உருவாக வேண்டும் என்கின்ற விடயம் எடுபடாது. இது வெறும் கற்பனாவாதமாகவே இருக்கும். ஆரோக்கியமானதொரு சிவில் சமூகம் என்பது மிக முக்கியம். விக்டர் ஐவன் போன்ற ஒரு சிலர் இந்தக் கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்கின்றனர்.

இந்நாட்டின் அரசியல் தலைவர்கள் செய்த மிகப்பெரும் பிழை இந்த நாட்டின் சிவில் சமூகத்தை அரசியல் பிரக்ஞை யுள்ள சமூகமாக மாற்றாமையாகும். அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப் பைப் பாதுகாப்பதற்கான சிவில் சமூகத் தைப் பற்றி யோசித்தார்களே ஒழிய இந்நாட்டிற்கான சிவில் சமூகத்தை உரு வாக்கவில்லை. இந்நிலையில் மூன்றாம் சக்திகள் எவற்றைச் சாதிக்கப் போகிறது? அவர்களது செயற்பாடுகள் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் எடுபடும் என்பது கேள்விக்குறியாகும்.

பலமானதொரு சிவில் சமூகத்தை கட்டியெழுப்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

மூன்றாம் சக்தி தேவையெனக் கூறுபவர்கள் அவர்களுக்குள்ளால் மாத்திரம் இவ்விடயத்தை கலந்துரையாடிக் கலைவதில் அர்த்தமில்லை.  முதலில் அவர்கள் மக்களிடம் செல்ல வேண்டும். நீங்கள் இந்த நாட்டில் மக்களாக இல்லை, நீங்கள் கட்சிசார்பானவர்கள் என்பதாகவே உங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளீர்கள். எனவே இந்த நாடு உருப்படாது என்று கூற வேண்டும்.

இலங்கை வளர்ச்சிக்குரிய காரணிகளை கொண்டுள்ளதா? வீழ்ச்சிக்குரிய காரணிகளைக் கொண்டுள்ளதா? அது எப்படி உங்களுக்கு விளங்காமல் மூடி மறைக்கப்படுகிறது. உங்களது கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இந்நாட்டின் அரசியல் தலைவர்கள் என்ன செய்து கொண்டுள்ளார்கள் என்கின்ற விளக்கத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். மக்களைத் திசை முகப்படுத்த வேண்டும். மக்கள் உள்ளங்களில் இதனை பரவலாக ஏற்படுத்தும் போதே ஆரோக்கியமானதொரு சிவில் சமூகம் உருவாகும். அதுவரைக்கும் 3ஆம் சக்தி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூற முடியாது.

இந்த விடயங்களில் இளைஞர்களின் செயற்பாடுகளை எவ்வாறு ஒருமுகப்படுத்தலாம்? 

இன்று பாராளுமன்றத்தை எடுத்துக் கொண்டால் படிக்காதவர்களின் தொகை யே அதிகம். இந்நாட்டில் எத்தனையோ படித்த இளைஞர்கள் உள்ளார்கள். இந் நாட்டின் அரசியல் கட்டமைப்புக்குள் படித்த இளைஞர்களை உள்வாங்கும் முறையொன்று இல்லை. அரசியலமைப்பில் இது இடம்பெற வேண்டும். அரசியலமைப்பின் ஏற்பாடே இளைஞர்களின் பங்களிப்பைத் தீர்மானிக்கிறது. அரசியலமைப்பில் சில விடயங்கள் வரக்கூடாது என்றுள்ளது. உதாரணமாக கட்சி மாறி னால் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழப்பார் என்று ஒரு ஏற்பாட்டை கொண்டு வரப்பார்த்தார்கள். அதற்கு ஒரு வரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. காரணம், இன்று எம்மை விட்டுப் போகிறவன் நாளை எம்மோடு வந்து சேர இடமிருக்க வேண்டுமல்லவா? இந்த ஏற்பாட்டைக் கொண்டு வந்து கதவை மூடிவிட்டால் எங்களுக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போகும் என்று நினைத்துள்ளார்கள்.

ஆரோக்கியமான சிவில் சமூகத்தை உருவாக்குவதில் எப்படி இவர்கள் வேண்டுமென்றே ஒரு கவனயீனத்தில் உள்ளார்களோ அதேபோன்று இளைஞர்களின் பங்களிப்பையும் இந்நாட்டில் சரியான முறையில் எடுத்துக் கொள்வதற்கு ஒரு ஆக்கபூர்வமான ஏற்பாடு இந்த நாட்டின் கட்டமைப்பிற்குள் இல்லையென்றே கூற வேண்டும். இளைஞர்களுக்கான அமைச்சு உள்ளது. இளைஞர்களின் பிரச்சினைகளை ஆராயும் வேலைத்திட்டங்கள் உள்ளன. ஐ.நா.வின் இளைஞர் அபிவிருத்தி நிகழ் ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்படு கின்றன. ஆனால் இவை ஒரு அமைச்சுடன் தொடர்புபட்ட விடயமாக மாத்திரமே காணப்படுகிறதே ஒழிய இந்த நாட்டின் மிக முக்கிய கட்டமைப்பில் இளைஞர் களுக்கான இடம் கொடுக்கப்படவில்லை.

பெண்களை அரசியலுக்குள் கொண்டு வரப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு முன்னர் இளைஞர்களே உள்வாங்கப்பட வேண்டும். சர்வதேசத்தின் அழுத்தங்களின் காரணமாகவே பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது பற்றி யோசிக்கிறார்கள்.  நாட்டு நலனுக்காக யோசிப்பதாக இருந்தால் இளைஞர்களுக்கான ஒதுக்கீடு என்ன? எப்படிப்பட்ட இளைஞர்கள் என்னென்ன தகுதிகளோடு பாராளுமன்றத்திற்கு வர வேண்டும்?

இவற்றை சட்டத்திற்குள் கொண்டு வருவது ஒன்றும் பெரிய விடயமல்ல. சட்டத்திற்குள் கொண்டுவரப்படும் போது அடுத்த சந்ததியிலிருந்து படித்ததொரு இளைஞர் கூட்டம் பாராளுமன்றம் செல்லும். இதற்குரிய வழியமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். இலங்கை அரசியலில் மிகக்கவனமாக தங்களுக்கு எதுவெல் லாம் பாதிப்பெனக் கருதுகிறார்களோ அதை எல்லோரும் சேர்ந்து அமைதியான அங்கீகாரத்துடன் எழுதப்படாத ஒப்பந்தத்துடன் செய்துகொண்டுள்ளனர். இப்படித் தந்திரங்களால் நாட்டை ஆள முயற்சிப்பது இந்த நாட்டை நல்லதொரு இடத் திற்கு கொண்டுவர மாட்டாது.

முஸ்லிம்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கையிலுள்ள இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டாகச் சேர்ந்து பணியாற்ற வேண்டியதன் தேவை குறித்து உங்களது அவதானங்களை தெளிவுபடுத்த முடியுமா?

இப்படியானதொரு முன்னெடுப்பு இல் லையென்பது கவலையான விடயம். ஒரு அனர்த்தம் வரும் போதே இயக்கங்கள் பொதுவாக இணைந்து வேலைசெய்யும் தோற்றப்பாடு வருகின்றது. பாதிப்பொன்று வந்தால் நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து விட வேண்டும் என்கின்ற மனநிலையே இயக்கங்களிடம் காணப்படுகிறது. தற்போதைய அரசியல் நெருக்கடியை நாம் பேரின சமூகத்தவர்களின் அதிகாரப் போராட்டம் என்பதாக மாத்திரமே நோக்குகிறோம். நாட்டை முன்னிலைப்படுத்தி அந்தப் பிரச்சினையை பார்ப்பதில்லை. நாட்டை மையப்படுத்தி யோசிப்பவர்களுக்கே இந் தப் பிரச்சினையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்ற மனப்பாங்கு வருகிறது. தமிழர்கள் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாகவும் உரிமை அரசியல் குறித் தும் பேசுகிறார்கள். முஸ்லிம்கள் காலா காலமாக தனித்துவ அரசியல் என்று முஸ்லிம் அரசியல் ஒன்றை வளர்த்துள்ளார். இயக்கங்கள் தங்களுக்கென இஸ்லாம் சார்ந்த நலன்கனை வகுத்துச் செயற்படும் போக்கை காண்கிறோம். இதற் கிடையில் அனர்த்தம் என்று வரும் போது இணைந்து செயற்படுவது பற்றி யோசிக்கிறோம். இங்கு சமூகத்திற்கு ஒரு பிரச்சினை வருகிறது என்கின்ற பார்வையின் விளைவாகவே இந்த இணைவு தொடர்பில் யோசிக்கிறோம். சாதாரண நிலைமைகளில் இயக்கங்கள் அவையவை வகுத்துக் கொண்ட இஸ்லாமிய நலன்களை மையப்படுத்தியே செயற்படுகின்றன.

அனர்த்தம் வராதவரையில் இயக்கங்கள் நாட்டில் இடம்பெறும் பிரச்சினைகள் குறித்து சிந்திப்பது குறைவு. எனவே எமக்கு மத்தியில் மனநிலை மாற்றம் இடம்பெற வேண்டும். நபிமார்களின் பணிகளில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று நாட்டு மக்களின் நலன்களை கவனித்துள்ளார்கள். இரண்டாவது அவர்களு டைய தஃவாவை மேற்கொண்டுள்ளார்கள். நபிமார்களின் ஒரு பக்கத்தையே நாம் எடுத்துக்கொண்டுள்ளோம். நபிமார்கள் தமது தேசத்தின் இயற்கை வளர்ச்சி, பாதுகாப்பு குறித்து சிந்தித்தவை எமது மனங்களில் இல்லை. அது இஸ்லாமாகப் படுவதில்லை. அனர்த்தங்களின் போது மாத்திரம் இணைந்து செயற்பட்டு விட்டு அதனை தொடர்ந்து நாம் எமது இடங்களுக்கு வருகின்றோம். இதனால் எமக்கு தொடர்ந்து வேலைசெய்ய முடியாமல் உள்ளது. தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென்றால் அந்த வேலைக்குப் பின்னால் இப்படியொரு பார்வை வர வேண்டும். அதாவது, எமது நாட்டு நலன்கள், மக்க ளின் விடயங்களை கவனிப்பது இஸ்லாமிய பணிகளில் ஒன்று, இது நபிமார்களின் பணி என்பதை சிந்திக்க வேண்டும்.

சூரா மும்தஹினாவின் 8ஆவது வசனத்தில் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். “மார்க்கத்தை காரணமாக வைத்து உங்களுடன் போராடாதவர்கள், அதைக் காரணமாக வைத்து வாழ்விடங்களில் இருந்து உங்களை வெளியேற்றாத வர்களுடன் நீங்கள் எவ்வளவு நன்றாக நடக்க முடியுமோ அவ்வளவு நன்றாக நடந்து கொள்ளுங்கள், அவர்களுடன் நீதியாகவே உங்களுடைய விடயங்களை கையாளுங்கள்” யூசுப் அல்கர்ளாவி முஸ்லிமல்லாதவர்களுடனான உறவுக்கோர் சாசனம் என இந்த வசனத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த மனநிலை இல்லாததால் இயக்கங்களுக்கு இடையில் இணைந்த போக்கு இல்லை.

About the author

Administrator

Leave a Comment