Features உலக செய்திகள் சர்வதேசம்

பஹ்ரைன் பாராளுமன்றத் தேர்தல்

Written by Administrator

இறுக்கமான மன்னராட்சி நிலவி வரும் பஹ்ரைனில் கடந்த வாரம் பாராளுமன்ற மற்றும் மாநகரசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. 67 வீதமான வாக்காளர்கள் முதல் சுற்றில் கலந்து கொண்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2011 இல் பஹ்ரைனில் ஜனநாயக ஆதரவு சக்திகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கான தேர்தலை நடத்த மன்னர்கள் தீர்மானித்தனர். அந்த வகையில் 2011 இற்குப் பின்னர் இடம்பெறும் இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும்.

365,467 பேர் பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 40 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலே கடந்த வாரம் இடம்பெற்றது. அறபு வசந்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஜனநாயக மாற்றமாகவே இத்தேர்தல் பார்க்கப்படுகிறது. கடந்த வாரங்களில் கட்டார் மற்றும் ஈரான் ஆகிய பிராந்தியத்தின் பிற நாடுகளால் பஹ்ரைன் அரசாங்கம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது.

நடைபெற்ற தேர்தலில் 6 பெண்கள் தெரிவாகியுள்ளனர். பஹ்ரைன் பாராளுமன்றத்துக்கென 6 பெண்கள் தெரிவுசெய்யப்பட்டமை இதுவே முதன் முறையாகும். பஹ்ரைன் குடியாளர்கள் அமைப்பின் பேச்சாளர் முஹம்மத் செய்யித், அல் அறபிய்யா ஆங்கில செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில், “2018 பாராளுமன்றத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பாராளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் நாம் இன்னும் அதிகரிப்போம். அரசியலிலும் சமூகத்திலும் பஹ்ரைன் பெண்கள் ஆற்றி வரும் முக்கிய பங்களிப்பு மற்றும் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட நாம் அனைவரும் பாராளுமன்றத்திற்குப் பெண்கள் தெரிவுசெய்யப்பட்டமையை இட்டு பெருமையடைகின்றோம்.

பஹ்ரைன் பிரதிநிதிகள் சபையில் (பாராளுமன்றத்தில் மொத்தமாக உள்ள 40 உறுப்பினர்களில் 6 பெண்கள் இடம்பெறுகின்றனர். சவ்ஸான் கமால், ஸைனப் அப்துல் அமீர், மஸூமா அப்துல் ரஹீம், கல்தாம் அல் ஹைகி, பவ்ஸியா ஸெய்னல், பாத்திமா அல் கத்தாரி ஆகியோரே இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப் பட்டுள்ளனர்.

2002 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 31 பெண்கள் களமிறங்கியும் எவரும் தெரிவுசெய்யப்படவில்லை. 2006 இல் நடைபெற்ற தேர்தலில் லத்தீபா கஊத் எனும் ஒரேயொரு பெண்மணி தெரிவுசெய்யப்பட்டு 2010 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக நீடித்தார். 2014 தேர்தலில் 3 பெண்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகினர். பாராளுமன்ற ஜனநாயகமுறை பஹ்ரைனில் சமீபத்திலேயே அங்கீகரிக்கப்பட்டது. அதனால் பிரதிநிதித்துவக் கோட்டா முறை எதுவும் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. அதாவது இத்தனை ஆண்களும் இத்தனை பெண்களுமே பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று வரையறை செய்யப்படவில்லை. அவ்வாறு வரையறை செய்வது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஏனெனில், குடிமக்கள் அனைவரும் சமமானவர்கள் என்று அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக பஹ்ரைன் குடிமக்கள் அமைப்பின் பேச்சாளர் முஹம்மத் ஸையித் தெரிவிக்கின்றார்.

பஹ்ரைன் வணிகப் பெண்கள் சமூகத்தைச் சேர்ந்த அஹ்லாம் ஜனாஹி அரச தொலைக்காட்சி சேவைக்குக் கருத்துத் தெரிவித்த போது இந்தத் தேர்தல் இதுவரை பாராளுமன்றம் செல்ல பெண்களுக்கு இருந்த தடையை உடைத்தெறிந்துள்ளது. பஹ்ரைனியப் பெண்கள் தம்மைப் பாராளுமன்றப் பிரதிநிதிகளாக மாற்றிக் கொள்ளும் தகுதியுள்ளவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். எனவே, பெண்களுக்கு தனியான கோட்டா முறைமையொன்று அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

2014 தேர்தலில் வாக்களித்தோர் வீதாசாரம் 53 ஆகும். எவ்வாறாயினும் அல் கலீபா குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்துள்ள அந்நாட்டின் ஷீஆ சமூகம் இந்தத் தேர்தலை பகிஷ்கரித்துள்ளது.

பஹ்ரைன் சாம்ராஜ்யம்

மத்திய கிழக்கில் முதன் முதலாக எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்த நாடு பஹ்ரைன். ஆயினும், குவைத் அல்லது சவூதி அறேபியா போன்ற நாடுகளின் பெற்றோல் உற்பத்திக்குச் சமாதாந்திரமான அளவு பெற்றோலியத்தை பஹ்ரைன் இதுவரை உற்பத்தி செய்யவில்லை. அல் கலீபா குடும்பத்தின் மன்னராட்சி நிலவும் இந்நாட்டில் பிரதான அரசியல் மற்றும் இராணுவத் துறை பதவிகளை கலீபா குடும்பத்தினரே வகித்து வருகின்றனர்.

2000 இற்குப் பின்னர் பஹ்ரைனில் ஷீஆ-சுன்னி பதட்டம் கூர்மையடைந்தது. பஹ்ரைன் சவூதி அறேபியாவின் நட்பு நாடாக விளங்குவதோடு, எகிப்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சிக்கும் ஆதரவளித்த நாடாக விளங்குகிறது.

1999 ஆம் ஆண்டிலிருந்து ஷெய்க் ஹமாத் நாட்டின் மன்னராக இருந்து வருகின்றார். அமீர் என்ற பதவியை 2002 இல் அவர் மன்னர் பதவியாக அறிவித்தார். ஐக்கிய இராச்சியத்தின் கேம்பிரிஜ் நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற ஹமாத் 1950 இல் பிறந்தவர். 1783 ஆம் ஆண்டிலிருந்து பஹ்ரைனில் கலீபா குடும்பம் ஆட்சி செய்து வருகிறது.

பஹ்ரைன் ஆட்சி அரசியலமைப்புக்கு உட்பட்ட மன்னராட்சி எனப்படுகிறது.

மக்கள் தொகை 1.4 மில்லியன்

பரப்பு 717 சதுர கி.மீ.

பிரதான மொழி – அறபு

ஆயுட்கால எதிர்பார்ப்பு 75 வருடங்கள்

நாணயம் பஹ்ரைன் தீனார்

About the author

Administrator

Leave a Comment