Features நாடுவது நலம்

முன்மாதிரிகளைப் படிப்பினையாகக் கொள்வோம்

Written by Administrator

நாடுவது நலம் | இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

தேசிய நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை தொடர்பில் பேசப்பட்டு வருகின்ற இக்காலப்பகுதியில் அதற்காக வேண்டி சிறந்த முன்மாதிரியை வழங்கிய பௌத்தப் பிக்கு ஒருவரது மரணச் சடங்கில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் கடந்த தினம் எனக்குக் கிடைத்தது. அவர் பேருவலை பிரதேசத்திலுள்ள கந்தே விகாரையின் விகாராதிபதியாகக் கடமையாற்றிய படுவன்ஹேனே புத்தரக்கித தேரர் ஆவார். இவர் பௌத்த சமயத்திற்காக வேண்டியும் மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்காக வேண்டியும் நல்லிணக்கத்திற்காக வேண்டியும் அரும்பாடுபட்டவராவார்.

பேருவலையிலுள்ள மிகப் பழமை வாய்ந்த கந்தே விகாரையுடன் இப்பகுதி முஸ்லிம் மக்களுக்கு சிறந்ததொரு உறவுள்ளது. எனது தந்தையாருக்கும் குறித்த தேரருக்கும் இடையில் மிகச் சிறந்த நட்பு காணப்பட்டது. நான் இந்த விகாரைக்கு வரும்போது “உமது தந்தை அடிக்கடி இங்கு வருவார், ஆனால் நீங்கள் இங்கு வருவது குறைவு” என அவர் குறிப்பிடுவார். இதிலிருந்து விளங்குவது என்னவெனில் முன்னைய காலத்தில் முஸ்லிம்களுக்கும் இந்த விகாரைக்கும் இடையில் நல்லதொரு தொடர்பு காணப்பட்டு வந்துள்ளது என்பதாகும்.

இது மாத்திரமல்லாமல் தர்காநகரைச் சேர்ந்த மர்ஹூம் நிஸாம் என்பவரே கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இந்தத் தேரருக்கு உணவு, தேனீர் போன்றவற்றை தயாரித்துக் கொடுத்திருக்கிறார். எனக்கு நினைவிருக்கிறது நான் ஒரு முறை புத்தரக்கித தேரரரை பார்வையிடச் சென்ற போது நிஸாம் அவர்கள் விகாரைக்குள் சத்தமாக சலாம் சொல்லிக் கொண்டு எனக்குத் தேனீர் கொண்டு வந்து தருவார். அவ் வேளையில் புத்தரக்கித தேரர் இதைப் பார்த்துப் புன்னகைப்பார். விகாரைக்குள் இவர் சத்தமாக எனக்கு சலாம் சொல்லும் போது அந்தத் தேரர் இதனைப் புன்னகையோடே நோக்கினார்.

எனவே இந்தப் பல்வகைமையை அவர் விளங்கியிருந்தார். அதற்கு மதிப்பளித்தார். ஒரு நாட்டை நல்லிணக்கத்தால் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் பல்வகைமையை மதிக்க வேண்டும். அதனை புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பண்பு குறித்த தேரரிடம் காணப்பட்டது.

முஸ்லிம் ஒருவரை தனது விகாரையின் சமயற்காரராக நியமித்ததன் மூலம் அவர் எந்தளவுக்கு முஸ்லிம்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பது புலப்படுகிறது.  இன்றும் கூட கந்தே விகாரைக்கு தேவையான உணவுப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட பொருட்களை தர்காநகரிலுள்ள கடையொன்றிலிருந்தே கொள்வனவு செய்கிறார்கள். அதிக பிரச்சினைகள் ஏற்பட்ட காலப்பகுதிகள் இருந்தும் இதில் வேறுபாடுகளோ வித்தியாசங்களோ ஏற்படவில்லை.

இதுவே முக்கியமானது. இப்படியொரு பிணைப்பு பேருவலை முஸ்லிம்களுக்கும் கந்தே விகாரைக்கும் இடையில் காணப்பட்டது. எனது தாயார் ஒரு முறை என்னிடம் கூறிய விடயமொன்று நினைவுக்கு வருகிறது. எனது தாயாரின் தந்தையின் தந்தை அதாவது எனது பூட்டனுக்கும் மாலேவன விகாரையின் தேரருக்கும் இடையில் சிறந்த உறவு காணப்பட்டுள்ளது. மாலேவன ஞானீஸ்ஸர தேரருக்கு முன்பு மாலேவன பஞ்சாசேகர என்னும் தேரர் ஒருவர் இருந்தார். எனது பூட்டனுக்கு அவரோடு நெருங்கிய உறவுகள் காணப் பட்டு வந்துள்ளது. அதுபோன்று எனது தாயாரின் தந்  தைக்கு மாலேவன ஞானீஸ்ஸர தேரருடன் நல்ல உறவு காணப்பட்டு வந்துள்ளது.

மாலேவன ஞானீஸ்ஸர தேரரின் காலத்தில் பேருவலை சீனங்கோட்டைக்கு பக்கத்திலுள்ள சைலபிம்பாராம விகாரையின் தங்கப் பேழைக்கு எனது பாட்டன் உள்ளிட்ட சீனங்கோட்டை தனவந்தர்கள் பெறுமதியான மாணிக்கக் கற்களை நன்கொடையாக கொடுத்த நிகழ்வையும் என் தாயார் எனக்கு ஞாபகப்படுத்தியுள்ளார். இது எமக்கு மத்தியிலான நெருக்கத்தையும் ஒற்றுமையையும் பறைசாற்றிய தருணம். மக்கொனை இளம் பௌத்த மத்திய நிலையத்தின் தலைமை தேரர் மக்கொனை பள்ளிவாசலில் கஞ்சி காய்ப்பதற்கு இடமில்லாமல் போன போது தனது விகாரையின் ஒரு பகுதியை அதற்காக வேண்டி கொடுத்து உதவியிருக்கிறார். இவையனைத்து நிகழ்வுகளும் எமக்கு மத்தியிலான பிணைப்பையே எடுத்துக் காட்டுகின்றன.

இன்று ஐக்கியம், சகவாழ்வு குறித்துப் பேசுபவர்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை எமது வரலாற்றை மீள ஆராய்ந்து பார்த்தால் கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. பௌத்த சமயத்தின் உள்ளர்த்தத்தை சிறந்த முறையில் விளங்கியமையினாலேயே இந்தத் தேரர்கள் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்காக வேண்டி பாடுபட்டுள்ளார்கள். 500 தேரர்களுக்கும் அதிகமானவர்கள் பங்குபற்றிய புத்தரக்கித தேரரின் இறுதிச் சடங்கில் முஸ்லிம்கள் சார்பில் உரையாற்றும் வாய்ப்பினை குறித்த விகாரையின் நிர்வாக சபை எனக்கு வழங்கியது. இதன்போது நான் ‘புத்தரக்கித தேரரை பார்வையிடுவதற்கு சகல கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் வந்திருக்கிறார்கள், எனினும் அவர் எந்தவொரு கட்சிக்கும் கூஜா தூக்கவில்லை. அடிவருடியாக செயற்படவில்லை’ என்றேன்.

எனவே நாம் எந்த இனத்தை சேர்ந்தவராயினும் இவரிட மிருந்து கற்றுக்கொள்ள எமக்கு நிறைய விடயங்கள் உள் ளன. இவரது வாழ்க்கைப் பாடங்களை கற்று எமது மார்க் கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாக கொண்டு ஒருவரை ஒருவர் மதித்து வாழக்கூடிய நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் எமக்கு முன்னால் உள்ளது.

About the author

Administrator

Leave a Comment