Features உலக செய்திகள் சர்வதேசம்

கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி

Written by Administrator
  • றவூப் ஸெய்ன்

அமெரிக்காவின் செனட் சபை கடந்த வாரம் கஷூகியின் படுகொலை மற்றும் யெமனில் சவூதி நடத்தி வரும் போர் குறித்த தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 49 பேரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 7 பேரும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். குடியரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஒக்டோபர் 02 இல் ஸ்தன்பூலிலுள்ள சவூதிஅறேபியாவின் துணைத் தூதரகத்தில் கொடூரமான முறையில் கொல்லப் பட்ட கஷூகியின் படுகொலைக்கு அரச ஆணை பிறப்பித்தவர் முஹம்மத் பின்  சல்மானே என்றும், யெமனில் சவூதி நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போருக்கு டொனால்ட் ட்ரம்ப் அளித்து வரும் ஆதரவை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளது.

இத்தீர்மானம் சவூதி அறேபியாவின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் அதன் பிராந்திய பங்கேற்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜமால் கஷூகியின் படுகொலை தொடர்பில் தொடக்கத்தில் ஒன்றுக்கொன்று முரண்பாடான அறிக்கைகளை சவூதியின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டு வந்தது. கஷூகி துணைத் தூதரகத்திலிருந்து வெளியேறி விட்டதாகத் தெரிவித்திருந்த சவூதி ஆட்சியாளர்கள், பின்னர் அவர் படுகொலை செய்யப்படவில்லை என்று கூறிவந்தது.

துருக்கிய புலனாய்வு அதிகாரிகளின் ஆதரங்கள் திரண்டு வருவதைக் கண்டு விழி பிதுங்கிய முஹம்மத் பின் சல்மான், தூதரகத்தின் உள்ளே அவர் கொல்லப்பட்டார் என்று ஏற்றுக்கொண்டிருந்தார். துருக்கிய ஊடகங்களிலும் Middleasteye எனும் இணையத்தளத்திலும் பின்னர் CNN இலும் கஷூகியின் படுகொலைக் கும் சவூதியின் உயர் மட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இறுதியாக உலகிலேயே மிகப் பலம் வாய்ந்த உளவு ஸ்தாபனம் என அறியப்படும் அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனம் (CIA) முஹம்மத் பின் சல்மானே கஷூகியை படுகொலை செய்வதற்கு உத்தவிட்டார் என்று அதன் உளவறிக்கையை நிறைவு செய்தபோது, சவூதி ஆட்சியாளர்கள் அதிர்ந்து போனார்கள்.

முஹம்மத் பின் சல்மானுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்து வரும் இஸ்ரேலின் சேவகன் டொனால்ட் ட்ரம்பிற்கும் CIA இன் அறிக்கை மிகப் பெரிய தலையிடியாக மாறியது. மத்திய உளவு நிறுவனத்தின் அறிக்கை சற்று அவசரமான முயற்சி என்றும், முஹம்மத் பின் சல்மானுக்கும் இப்படுகொலைக்கும் இடையில் தொடர்பில்லை எனவும் ட்ரம்ப் அறிவித்தார்.

ஆயினும், அமெரிக்காவின் செனட்  சபையில் ட்ரம்பின் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் ட்ரம்பின் இந்தக் குருட்டுத் தனமான சவூதி விசுவாசத்தையும் ஆதரவையும் கடந்த வாரம் கேள்விக்குள்ளாக்கினர். ட்ரம்பின் நிருவாகத்திற்கு செனட் சபையின் தீர்மானம் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. 10 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பட்டினியால் இறக்கும் யெமன் போருக்கு சவூதி மன்னர்களுக்கு ஆயுதம் வழங்குவதை ட்ரம்ப் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், முஹம்மத் பின் சல்மானே கஷூகியின் படுகொலைக்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் செனட் சபை சவூதி ஆட்சியாளர்களைக் குற்றம் சுமத்தியுள்ளது. ட்ரம்பின் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள சவூதியின் வெளிவிவகார அமைச்சு வழமை போன்று செயற்கையாகவும் நம்புவதற்கரிய வார்த்தையாடல்களிலும் அமெரிக்க செனட் சபையின் நிலைப்பாட்டை மறுத்துள்ளது. சர்வதேச ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் முக்கிய பங்காற்றி வருகின்ற சவூதி அறேபியா குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலம் எமது சாம்ராஜ்யத்தின் உள்விவகாரங்களில் செனட் அனாவசியமாகத் தலையீடு செய்வதாக சவூதி வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 02 இல் வொஷிங் டன் போஸ்ட் கட்டுரையாளரும் சவூதி அறேபியாவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளருமான ஜமால் கஷூகி ஸ்தன்பூலிலுள்ள துணைத் தூதரகத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். “என்னால் மூச்சு விட முடியாதுள்ளது” என்பதே அவரது இறுதி மரண ஓலமாக இருந்தது என்று துருக்கிய புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

கஷூகி கடும் சித்திரவதைகளுக்குப் பின்னரே கொல்லப்பட்டுள்ளார். அதன் போது முஹம்மத் பின் சல்மானுடன்      சித்தரவதைக் கும்பல் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் தம் வசம் உள்ளது என்று துருக்கியின் புலனாய்வுத் துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி துருக்கிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டது.

சித்தரவதைக்குள்ளான கஷூகியின் அவலக் குரல்கள் வெளியே கேட்காமல் தூதரகத்தினுள்ளே  இசையை சப்தமாக ஒலிபரப்பியுள்ளனர். இவற்றுக்கான ஆதாரங்களை துருக்கிய பத்திரிகை மட்டுமன்றி, middleastmonitor, CNN என்பனவும் வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலை யிலேயே சவூதி ஆட்சியாளர்கள் மீது சர்வதேச நாடுகள் தமது கண்டனங்களையும் எதிர்வினைகளையும் ஆற்றி வருகின்றன. சுவீடன், கனடா போன்ற நாடுகள் சவூதி அறேபியாவுக்கான ஆயுத இறக்குமதியை நிறுத்தியுள்ளன.

2015 மார்ச் மாதம் யெமன் மீது சவூதி அறேபியா தொடங்கிய பிரமாண்டமான வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 60,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 85,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. இவ்விரு விடயங்களையும் முன்னிறுத்தியே அமெரிக்க செனட் சபை முஹம்மத் பின் சல்மானுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

ஐ.நா. பொதுச் செயலாளர் என்ட் ரோனியோ, கஷூகியின் படுகொலை குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். செனட் சபையின் தீர்மானத்தை சவூதி ஆட்சியாளர்கள் நிராகரிக்கின்றபோதும், சவூதி அறேபியாவின் சர்வதேச பிரதிமைக்கு இதனால் பெரும் இழுக்கு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் முஹம்மத் பின் சல்மானை பல நாட்டுத் தலைவர்கள் சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர். சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் இவ்விடயம் குறித்து தொடர்ந்தும் குரலெழுப்பி வருகின்றன. ஜமால் கஷூகி ஒரு கருதுகோளல்ல. ஒரு அரசியல் யதார்த்தம் என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித் துள்ளது.

செனட் சபை தீர்மானத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எவ்வாறு எதிர்வினை ஆற்றப் போகிறார். எதிர்வினை ஆற்றுவாரா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால், கடந்த சில தசாப்த காலமாக வொஷிங்டன் – ரியாத் ராஜதந்திர உறவில் இந்தத் தீர்மானம் குறிப்பிடத்தக்க அரசியல் உராய்வை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்னொரு புறம் சவூதி அறேபியா குறித்த  சர்வதேச சமூகத்தின் பிரதிமையில் இதற்கொரு தாக்கம் உள்ளது என்பதையும் நாம் இலகுவில் தட்டிக் கழிக்க முடியாது.

About the author

Administrator

1 Comment

  • துருக்கியை மாட்டிவிட சல்மான் நடத்திய நாடகம் பழிக்க வில்லை ……சதாம் கடாபி…நேர்ததை சல்மானுக்கு படிப்பினையாகட்டும்

Leave a Comment