Features நேர்காணல்

காலாகாலமாக புரையோடிப் போன பிரச்சினைகளின் அறிகுறிகளில் ஒன்றே இந்த அரசியல் நெருக்கடி

Written by Administrator

காமினி நந்த குணவர்தன
 – தலைவர், ஒன்றிணைந்த தொழில்வல்லுனர்கள் இயக்கம் (UPM)

ஒன்றிணைந்த தொழில்வல்லுனர்கள் இயக்கம் (United Professionals Movement)  உருவாக்கப்பட்டதன் நோக்கமும் பின்னணியும் என்ன?

இந்நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு தொழில்வல்லுனர்களின் பங்களிப்பை எவ்வ கையில் பெற்றுக்கொடுப்பது என்கின்ற நோக் கிலேயே இவ்வமைப்பு தாபிக்கப்பட்டது. இங்கு தொழில்வல்லுனர்கள் எனும் போது ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபட்டு வருவோரையே குறிக்கும். உதாரணமாக கல்வித் தகைமையுள்ள பொறியியலாளரையும் கல்வியும் நடைமுறை அறிவும் உள்ள குழாய் பொருத்துனரையும் நாம் தொழில்வல்லுனர்களாகவே கருதுகின்றோம்.

ஒன்றிணைந்த தொழில்வல்லுனர்களின் இயக்கத்தில் பலதரப்பட்ட தொழில்வல்லுனர்கள் தன்னார்வத் தொண்டர்களாக இணைந்து பணியாற்றி வருகின்றார்கள். பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், சூழலியலாளர்கள், பொருளியலாளர்கள், கல்வியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், விவசாயி கள், கைவினைஞர்கள், கலைஞர்கள், அரச அதிகாரிகள், வியாபாரிகள், அரச நிர்வாகிகள், கம்பனி நிறைவேற்று அதிகாரிகள், விஞ்ஞானிகள், ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படை உத்தியோகத்தர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், ஆய்வாளர்கள், மகளிர் சங்கத் தலைவிகள், சமூகப் புரட்சியாளர்கள் போன்றோரை உள்ளடக்கியதாக இவ்வமைப்பு தாபிக்கப்பட்டிருக்கின்றது. அறிவு, அதிகாரம், சக்தி என்னும் மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றது. 

ஒன்றிணைந்த தொழில்வல்லுனர்கள் இயக்கத்தினால் (UPM)  தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் என்ன?

மூன்று வருட காலமாக பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வந்தோம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத் திட இருந்த ‘சீபா’ இரு தரப்பு உடன்படிக்கை தொடர்பில் தொழில்வல்லுனர்கள் என்ற அடிப்படையில் நாம் முதற்கட்டமாக ஒரு கருத்தை கட்டியெழுப்பினோம். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்பட்டாலும் பொருத்தமான விதிமுறைகளைப் பின்பற்றாது இந்தியாவுடனான ‘சீபா’ உடன்படிக்கையிலும் ஏனைய சில சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களிலும் அரசு கைச்சாத்திடு வதை எதிர்த்து முதற்கட்டமாக 2016 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான தொழில்முறையாளர்களை விகாரமகாதேவிப் பூங்காவில் ஒன்று திரட்டினோம். அதனைத் தொடர்ந்து ஒன்றிணைந்த தொழில்வல்லுனர்கள் இயக்கம் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் ஓரளவுக்கு நாம் அங்கத்தவர்களின் வலைப்பின்னலொன்றைக் கட்டியெழுப்பியுள்ளோம். இது பௌதிக ரீதியிலான வலையமைப்பல்ல.

எமது இயக்கம் ஒன்றிணையும் வகையில் ஓரமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது போன்று நாம் இந்நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய வேண்டுமெனில், எவ்வகையான கொள்கைத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். உதாரணமாக கல்வி,  சுகாதாரம் போன்ற துறைகளுக்கான கொள்கைத் திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த ஆய்வுகளைச் செய்துள்ளோம்.

நாம் அழுத்த சக்தியாக (Pressure Group) எவ்வாறு அரசுடன் கொடுக்கல் வாங்கல் புரிவது என்கின்ற சிந்தனையிலேயே இவற்றை முன்னெடுத்துச் சென்றோம். எனினும் இற்றைக்கு 6 மாதங்களுக்கு முன்னர் எமது இயக்கத்துக்குள்ளால் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதாவது, அழுத்த சக்தியாகச் செயற்படுவது அவ்வளவு நடைமுறைச் சாத்தியமானதல்ல என்பதால் நாம் ஓரளவுக்கேனும் அரசியல் பிரவாகத்துடன் தொடர்புபடும் அளவுக்கு பணியாற்ற வேண்டும் என்பதாகும்.

இதன் பிரகாரம் நாம் எதிர்வரும் தேர்தல் களில் எவ்வாறு நடுநிலையாக நின்று செயற் படுவது என்றும் அதற்கு சமூகத்திலுள்ள தொழில்வல்லுனர்களை இணைத்துக் கொள்வ தற்கு எவ்வாறு பின்னணியை உருவாக்குவது என்பது குறித்தும் சிந்தித்து வருகின்றோம். இதன் முதற்கட்டமாக நாம் தேசிய மக்கள் இயக்கத்தை (United Professionals Movement) கட்டியெழுப்பியுள்ளோம். இது தொடர்பாக நாம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி மக்களுக்கு அறியப்படுத்தியுள்ளோம்.

ஒன்றிணைந்த தொழில்வல்லுனர்கள் இயக்கத்திலிருந்து (UPM) தேசிய மக்கள் இயக்கத்திற்கு (NPM) மாறியமைக்கான காரணங்கள் என்ன?

ஒன்றிணைந்த தொழில்வல்லுனர்கள் இயக்கம் என்பது ஒரு சிறு குழுவாகும். ஒரு அழுத்த சக்தியாக செயற்படுவதற்கு இந்த அமைப்பு போதுமானது. ஆனால் அரசியல் அதிகாரத்தை நோக்கிய பயணத்திற்குச் செல்லும் போது எமக்கு வாக்குகள் வேண்டும். வாக்குகளைப் பெற வேண்டுமென்றால் இது போன்ற சிறு இயக்கத்தை வைத்து அதை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியாது. அதற்கு பரந்ததொரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதனால் நாம் சிவில் சமூக அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், தொழிலாளர் நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து பரந்ததொரு அணியாக முன்னகர்கிறோம். இந்த இயக்கம் தற்போதிருக்கும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் அங்கமாக செயற்படப் போவதில்லை. நாம் தனித்துவமானதொரு அடையாளத்துடன் எமக்கான அரசியல் நோக்கத்துடன் முன்னகர்கிறோம்.

இந்நாட்டில் மக்கள் ஏதாவதொரு அரசியல் கட்சிக்கு வாக்களித்து விட்டு வருகிறார்கள். வாக்களித்ததன் பின்னர் வேட்பாளர் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி நடக்க முற்படுவார். அவர் ஏதாவது தவறிழைத்தாலும் கூட எமக்கு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியே ஏற்படும். இதனாலேயே நாம் இவ்வமைப்பை வித்தியாசமான முறையில் அமைத்திருக்கிறோம். சிவில் சமூக அமைப்புக்கள் அப்படியே இருக்கும். இதைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவார்கள். அவர்கள் தவறு செய்யும்போது கட்டுப்படுத்தும் விடயமும் இவ்வமைப்புக்களுக்கூடாக நடைபெறும். அவர்கள் தவறிழைக்கும் போது அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் நாம் ஏற்படுத்தவுள்ளோம். இந்தப் பணி இத்தோடு முற்றுப் பெறுவதில்லை. எம்முடன் இன்னும் 20 இற்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் இணையவுள்ளன. இந்நாட்டிலுள்ள எந்தவொரு அமைப்பும் எமது தலைமையகத்திற்கு வந்து பணியாற்றக் கூடிய சூழலையே நாம் உருவாக்கி வருகின்றோம். அதற்காக வேண்டியே நாம் முயற்சிக்கிறோம்.

முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியிலும் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களும் இயக்கங்களும் செயற்பட்டு வருகின்றன. இவற்றையும் தேசிய மக்கள் இயக்கத்துடன் எவ்வாறு தொடர்புபடுத்த முடிகின்றது?

தற்பொழுது எம்முடன் பெரும்பாலான முஸ்லிம் சமூக அமைப்புகள் கைகோர்த்துள்ளன. அவற்றுடன் நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஜமாஅதுஸ் ஸலாமா, தேசிய ஷூறா சபை, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா போன்ற அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம். மௌலவி முஜீப் அவர்கள் இதற்குரிய வழிகளை அமைத்துக் கொடுத்தார். இவ்வமைப்புக்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் எமக்குச் சாதகமான பதில் கிடைத்தது. தற்போதைய அரசியலில் முஸ்லிம் தலைவர்கள் என்றாலும் தமிழ்த் தலைவர்கள் என்றாலும் எமக்கு இன்னின்ன பகுதிகள் வேண்டுமென்று பேரம் பேசும் அரசியலையே செய்கிறார்கள். ஆனால் நாம் இன மத பேதமில்லாமல் இந்நாட்டிற்கு பொருத்தமான சிறந்த மனிதர்களை ஆட்சி அதிகாரத்திற்கு அனுப்பும் பணியையே செய்யவுள்ளோம். இதற்கான தேவையும் நம்பிக்கையும் மேலெழுப்பப்பட்டிருக்கிறது.

எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தயார் நிலைகள் எப்படியுள்ளது?

நாம் மூன்றாம் சக்தியாக எம்மை சொல்லிக் கொள்வதில்லை. நாம் மாற்றுச் சக்தியாகவே தொழிற்படுவோம். அதிகாரத்தைக் கைப்பற்ற எம்மால் முடியுமாக இருக்க வேண்டும். அதுவே எமது குறிக்கோள். இங்கு அரசியல் நோக்கு இருந்தாலும் கூட சிவில் சமூகங்களின் கூட்டமைப்பையே நாம் இணைத்திருக்கிறோம். சிவில் சமூகக் கூட்டமைப்பின் மூலம் கட்டியெழுப்பப்படுகின்ற கட்சியொன்றின் மூலமே நாம் அரசியலில் குதிப்போம். இதன் போது எம்முடன் ஒத்துப்போகும் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கும் எம்முடன் இணைந்து கொள்ள முடியும்.

சிவில் சமூக அமைப்புக்களது கட்டமைப்பும் செயற்பாடும் எவ்வாறு அமையப் பெற வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

இங்கு எமது பொது எதிரி யார் என்பதை நாம் இனங்கண்டுகொள்ள வேண்டும். பொது எதிரியை இனங்காணாமல் எமது சுயவிருப்பின் பேரில் ஒரு அமைப்பை உருவாக்கிக் கொள்ளும் போது எமது வாக்குகளே சிதைந்து போகும். ஒரு சில அமைப்புக்கள் சில அரசியல் கட்சிகளுடன் மாத்திரமே இணைந்துகொண்டுள்ளன. ஆனால் எமக்கு ஒரு நோக்குள்ள, எதிர்காலம் குறித்து சிந்திக்கக் கூடியவர்களின் வாக்கு கிடைக்கிறது. சிறு சிறு குழுக்கள் எம்மை விட்டு உடையும் போது அது பாரிய அழிவை ஏற்படுத்தும்.

எமது கருத்தியலோடு ஒத்துப் போகுமாக இருந்தால் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தவும் தயாராக உள்ளோம். ஜேவிபிக்கு ஒரு பகுதி என்றும் இன்னுமொரு கட்சிக்கு ஒரு பகுதியென்றுமாக வாக்குகள் உடைந்து போவதற்குப் பதிலாக நாம் இணைந்து செயற்படும் போது வெற்றியை பதிவுசெய்ய முடிகிறது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) என்கின்ற முஸ்லிம் கட்சி எம்முடன் இணைந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எமக்கு தனிநபர்கள் முக்கியமல்ல. எமது இலக்கை நோக்கிச் செல்லப் பொருத்தமானவர்கள் யாரென்பதே முக்கியமானது. எமது பயணத்தில் பொருத்தமான நபர்கள் எம்மைச் சந்திப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

கடந்த 50 நாட்களுக்கு மேலாக நாட்டில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலையின் பின்னணி என்ன என நீங்கள் கருதுகிறீர்கள்?

இந்நெருக்கடி திடீரென ஏற்படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலப்பகுதியிலிருந்து இந்நெருக்கடிக்கான பின்னணி உருவாக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் இந்நெருக்கடி பிறிதொரு வகையில் வெளிக்கிளம்ப ஆரம்பித்தது. அதன் பின்னர் இந்நாட்டை ஆட்சிசெய்த தலைவர்களுக்கு இந்நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளது. அதாவது, தாக்கமான சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்தினால் மக்கள் அதிகாரத்தை ஏற்படுத்தும் உந்துசக்தி யாக அவர்கள் இருக்கவில்லை. சமத்துவம், நீதி, ஊழல் இல்லாத மரியாதை நிலவுகின்ற மக்கள் நட்பு கொண்ட நவீன திறனான நாடொன்றை கட்டியெழுப்ப முடியாமல் போயிருக்கிறது.

சமூக, பொருளாதார, அரசியல் சவால்களுக்கு பதில் தரக்கூடிய எல்லோரையும் உள்ளடக்கிய செயல்முறையை கொண்ட தேசிய செயற்திட்டமொன்றினை உருவாக்க முடியாமல் போயிருக்கிறது. பரவலான ஆலோசனை மற்றும் பங்கேற்புச் செயன்முறையின் மூலம் புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கிக்கொள்ள முடியாமல் போயுள்ளது.

 உள்நாட்டில் தொழில் வளர்வதற்கான நிலையான சூழல் ஏற்படுத்தப்படவில்லை. தேசிய ஒற்றுமை, இன மற்றும் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்க முடியாமல் போயிருக்கிறது. தேசத்தை கட்டியெழுப்ப புதிய அரசியல் தலைமையினையும் அரசியல் பண்பாட்டினையும் கட்டியெழுப்ப முடியாமல் போயிருக்கிறது. எனவே நாம் ஒன்றுபட்டு இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமையின் விளைவே சமகால அரசியல் நெருக்கடியாகும்.

காலம் காலமாக புரையோடிப் போன பிரச்சினையின் அறிகுறிகளில் ஒன்றே தற்போதைய அரசியல் நெருக்கடி. இதே முறைமைக்குள் நின்று இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்கின்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். இந்தப் பிரச்சினை தீர வேண்டுமெனில் இந்நாட்டில் இலங்கையர் என்ற அடையாளம் உருவாக்கப்பட வேண்டும். அதனைச் சூழ கட்டியெழுப்பப்பட்ட கலாசார ரீதியில் உயர்ந்த நிலையிலுள்ள மக்கள் கூட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

தற்போது நுகர்வுப் பொருளாதாரத்தை மையப்படுத்திய சமூக அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. மக்கள் எப்போதும் முதலீட்டவே ஆசைப்படுகின்றனர். எனவே இம்மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு பரந்ததொரு மாற்றம் உருவாக வேண்டும். நாளையே ஆட்சியைக் கைப்பற்றி ஒரே நாளில் தீர்த்து விடக்கூடிய பிரச்சினைகள் அல்ல இவை. எமக்கு உற்பத்திப் பொருளாதாரம் ஒன்றில்லை. எனவே இந்த விடயங்களில் அவதானம் செலுத்தாமல் இதற்குத் தீர்வு காண முடியாது.

சிவில் சமூக அமைப்பில் இளைஞர்களை இணைத்துக்கொள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

எமது இயக்கத்தில் இளைஞர்களையும் பெண்களையும் உள்ளடக்கிய இளையோர் முன்னணியொன்றுள்ளது. (Youth League) அவர்கள் எமது செயற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ளார்கள். இளைஞர்களுக்குச் சரியான இடத்தை அமைத்துக் கொடுக்கவே நாம் முயற்சிக்கிறோம். இது இளைஞர்களின் அமைப்பு. அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே நாம் இதனை முன்னெடுத்து வருகின்றோம்.

எதிர்வரும் காலத்தில் நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளின் போது இளைஞர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் சந்தர்ப்பத்தையும் உங்களால் கண்டுகொள்ள முடியும். எவருக்கும் எம்முடன் இணைந்து கொள்ள முடியும். எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும். அல்லது எமது இணையதளத்தில் பிரவேசித்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

About the author

Administrator

Leave a Comment