Features சமூகம்

உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு

Written by Administrator

நிலைப்பாடுகள் பற்றிய பார்வை

“இளைஞர்கள் பிழையாக வழிநடாத்தப்படுவார்கள் என்ற அச்சத்திலேயே மக்களை தெளிவூட்டினோம்”
ஏ.ஜே. மர்சூக் மௌலவி – செயலாளர், அகுரணை ஜம்மிய்யதுல் உலமா

எமது ஜம்இய்யாவைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட 36 பேர் ஷூறாவில் உள்ளனர். அதில் 8 பேர் நிறைவேற்றுக் குழுவில் உள்ளனர். எந்த முடிவை எடுப் பதாக இருந்தாலும் இதற்குள்ளும் 4 பேர் கொண்ட மேல் சபை உள்ளது. நீண்ட காலமாக புகைந்து புகைந்து வந்த இந்தப் பிரச்சினையை நாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கும் இந்தக் காலத்தில் நாமும் அவர்களும் கவனமாக கருத்துச்  சொல்ல வேண்டும்.

ஜம்இய்யதுல் உலமா என்பது ஒரு சமூகம். அதாவது இது மக்களுடைய சபை. கிட்டத்தட்ட 350க்கு மேல் உலமாக்கள் அங்கம் வகிக்கும் சபை. 63 மஹல்லாக்களில் ஒரு உறுப்பினரே அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி. இப்படியிருக்கும் போது உஸ்தாத் மன்ஸூர் (நளீமி) என்பவர் ஒரு நபர். இந்தப் பிரச்சினையை இரண்டு சாரார் என்று பேச முடியாது. ஏனெனில் முழுக் கருத்தையும் வெளியிட்டதில் கருத்துக்குச் சொந்தக்காரர் அவர். ஜம்இய்யா வெளியிடுவது 350 பேர் சார்பில் வெளியிட்ட கருத்தாக இருக்கும். அதனால் கவனமாகவும் தெளிவாகவும் கருத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

நீண்டகாலமாகப் புரையோடிப் போயிருந்த இந்தப் பிரச்சினையை எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பதென்கின்ற பிரச்சினை உள்ளது. அவர் ஒரு ஆலிம். நாம் அவரைப் பாதுகாத்தே எமது விடயங்களைப் பேச வேண்டும். மொத்தமாக அவரது கருத்தை, சிந்தனையை, ஆளுமையை, குரலை நசுக்கி விடுவதல்ல. இரண்டு கருத்துக்கும் இடையிலுள்ள இடைவெளியை சமநிலைப்படுத்துவதற்கான பல முயற்சிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்த நேரம் அதற்கான வழியை அவர் திறந்து தரவில்லை. காரணம் அவராகவும் இருக்கலாம், அவரைச் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்.

அப்படியே இந்தப் பிரச்சினை புகைந்து புகைந்து காலவோட்டத்தில் பூதாகரமானது. உலமாக்கள் என்பவர்கள் சமூகத்திற்காக இருப்பவர்கள். சமூகம் என்று வரும்போது சாதாரண பாமர மக்கள்  முதல் புத்திஜீவிகள் வரையில் எல்லோருக்கும், எல்லா இயக்கங்களுக்கும் வழிகாட்டக் கூடிய பாரிய பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளது. அந்த வகையில் இவரது கடந்த கால தஃவாப் பணி எப்படியிருந்ததென்றால் கல்விசார் சமூகத்தை மாத்திரம் கவரக் கூடியதாக இருந்தது. அவர்களுக்கும் உலமாக்களுக்கும் மத்தியில் சில விடயங்களில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியது.

இதன் விளைவுகளில் ஒன்றாக உலமாக்களுக்கு ஒன்றும் தெரியாது, அவருக்கு (உஸ்தாத் மன்ஸூருக்கு) மாத்திரம் தான் எல்லாம் தெரியும் என்ற அளவுக்கு இளைஞர்களில் சிலர் ஊடகங்களில் பிழையான ரவுடிசத்தைப் பின்பற்றினார்கள். இனி எப்படி உலமாக்கள் இந்நாட்டில் வேலை செய்வது. 4500 இற்கு மேற்பட்ட உலமாக்கள் இருக்கிறார்கள், 350 இற்கு மேற்பட்ட மத்ரஸாக்கள் உள்ளன. இதில் எத்தனையோ தொழில்வல்லுனர்கள் உள்ளார்கள். இவர்கள் எல்லோரையும் கொச்சைப்படுத்தும் வகையிலேயே கடந்த கால வரலாறு அமைந்தது.

அதுவொரு கறைபடிந்த வரலாறு. இது இன்னும் காலம் செல்லச் செல்ல இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுமோ என அஞ்சினோம். எல்லாவற்றையும் சிந்தித்தோம். இதற்கு மூன்று வகையான சந்தர்ப்பங்களில் பேச முனைந்தோம். அது சாத்தியப்படவில்லை. அவரும் நாங்களும் நேரடியாகப் பேசி எங்களுக்குள் முடித்துக் கொள்ளும் நிலை ஏற்படவில்லை. பிரச்சினை ஒரு பக்கம் இருக்க சாதாரணமாக அவரது வகுப்புகளில் அவரைப் பின்பற்றக்கூடியவர்கள் அளவு கடந்த அன்பு வைத்ததனால் எங்களை அவர்களுக்கு விளங்கவில்லை.  எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதெல்லாம் மீறி தாறுமாறாகப் பேசினார்கள். இது எமக்கு ஒரு தாக்கமும் கூட.

மறுபக்கத்தில் எம்மைக் குற்றஞ்சாட்டினார்கள். நீங்கள் பகிரங்கமாக மக்கள் மத்தியில் பள்ளியில் வைப்பதை விட குறிப்பிட்ட சாராரை வைத்து செய்திருக்கலாமே என்று. மன்ஸூர் (நளீமி) அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்து அப்படியானதொரு போக்கைக் கடைப்பிடித்திருந்தால் நாம் நூறு வீதம் அதைச் செய்திருப்போம். அவரது பாட வகுப்புக்களுக்கு வந்தவர்களில் சாதாரணமாக படித்தவர்கள் மாத்திரமல்லாமல் வர்த்தகர்களும் இருக்கிறார்கள். சாதாரண சராசரி மட்டத்திலுள்ளவர்கள் போயிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் அந்தச் செய்தி போகிறது.

சாதாரணமாக ஒருவர் எப்படி அழைக்கப்படுகிறார் என்றால் நீங்கள் வாருங்கள் புதிய இஸ்லாத்தைப் படிக்க, இஸ்லாம் பாடத்தை பரீட்சைகளில் எழுதியிருந்தாலும் கூட அதைக் கூட மீள திரும்ப எழுத வேண்டிய நிலையும் வரும் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு இருந்தது. அளவுக்கு அதிகமாக பேசிய இடங்களும் உள்ளன. தற்போது இந்த விடயங்கள் களத்திற்கு விட்டவுடன் விடயங்களை இன்னும் ஒவ்வொன்றாக வந்துகொண்டுள்ளது. எமக்கும் அவருக்கும் இடையில் தனிப்பட்ட எவ்வித பிரச்சினைகளும் இல்லை. அவர் நல்ல மனிதர்.

கருத்து வேறுபாடு என்றொரு விம்பத்தை வெளியில் விடுகிறார்கள். கருத்து வேறுபாடு என்கின்ற சொல் வந்து ஆழ்கடலில் உள்ள சிப்பியில் இருக்கும் முத்துக்கள் போன்றது. இமாம்கள் திருமணம் முடிக்காமலும் இருந்து இரவு பகலாக நீண்ட ஆய்வுகளையும் தேடல்களையும் செய்த விடயம் அது. அதை சாதாரண மனிதர்களின் கரங்களில் அவசரமாகக் கொடுத்து விட முடியாது. நடந்த பிரச்சினை கருத்து வேறுபாடு (இஹ்திலாபுல் மஸாஇல்) சார்ந்த விடயமல்ல. அவர் வெளியிட்ட கருத்துக்களில் உள்ள முரண்பாடு. அதாவது சென்ற வருடம் ஒரு கருத்தைச் சொன்னால் அதே கருத்தை மாற்றமாக அடுத்த வருடங்களில் பேசியிருப்பார். அல்லது ஒரு கிதாபில் ஒரு பகுதியில் ஒரு இமாம் மேற்கோள் காட்டிப் பேசியிருந்தால் அவருக்குத் தேவையான பகுதியை எடுத்துவிட்டு அதிகமான பகுதிகளை அப்படியே தணிக்கை செய்திருப்பார்.

இப்படியாக கிட்டத்தட்ட ஒரு Slide எம்மிடம் உள்ளது. இதை Presentation வடிவில் செய்வதாக இருந்தால் எமக்கு 12 மணித்தியாலங்கள் தேவைப்படும். மறுபுறத்தில் இதனை நாங்களாக வரிந்து கட்டிக்கொண்டு செய்யவில்லை. ஜம்இய்யதுல் உலமா என்கின்ற பொதுச்சபையிலுள்ள பலராலும் அனுப்பப்பட்ட கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள் மூலம் ஏன் நீங்கள் வாய்மூடி மௌனமாக இருக்கிறீர்கள்? என்ற கருத்துச்           சொல்லப்பட்டது. உங்களுக்கு சக்தியில்லையா இதைத் தட்டிக் கேட்க? என்றெல்லாம் கேட்கப்பட்டது.

ஏனென்றால் பள்ளி நிர்வாகிகள், புத்தி ஜீவிகள் என்று சொல்பவர்கள் கூட  இதைப் பார்த்து நகைச்சுவை கொள்ளக் கூடியவர்களாகவே இருந்தார்கள். கருத்துக் களுக்கு உள்ள இடைவெளிகளை நீக்கி அதை சமநிலைப்படுத்துவதற்கான முயற்சிகளை யாரும் செய்யவில்லை. நாளுக்கு நாள் இளைஞர்கள் இன்னும் பிழையாக வழிநடாத்தப்படுவார்கள் என்ற அச்சத்திலேயே இதை இன்னும் மக்களுக்கு தெளிவூட்ட முற்பட்டோம். அவருடைய வகுப்புக்களில் அல்லாஹ்வைப் பயந்து  ஹக்கானதைச் சொல்ல வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதேநேரம் அவர் மற்றுமொரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். என்னை ஒரு சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனது ஆய்வை கருத்துக்களை, ஆழமான வாசிப்புக்களை. இதை சரியான வழியில் நின்று ஆய்வு செய்து சரியான கருத்துக்களை மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.

பொதுமக்கள் என்பவர்கள் குருடர்களைப் போல. அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை அல்லாஹ் எங்களுக்கு தந்துள்ளான். இது ஒரு அமானிதம். இந்த அமானிதத்தை சரியாக சமூகத்திற்கு முன்வைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். அவரது குரலை நசுக்குவது எமது நோக்கமல்ல. அவர் ஒரு ஆலிம். அவரது திறமையை நாம் பாராட்ட வேண்டும். எங்களுக்குள் காழ்புணர்ச்சியோ பொறாமையோ கிடையாது.

உலமாக்கள் இணைக்கும் பாலமாகவே செயற்பட வேண்டும் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் (தலைவர், ஜமாஅதுஸ் ஸலாமா)

அகுரணை ஜம்இய்யதுல் உலமா, உஸ்தாத் மன்ஸூர் விடயத்தில் கூறிய கருத்துக்கள் பல சர்ச்சைகளையும் வாதப் பிரதிவாதங்களையும் பலருக்கு மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் எனது சில கருத்துக்களை இங்கு கூறுவது பொருத்தம் எனக் கருதுகின்றேன்.

உலமாக்களுக்கு மத்தியில் இத்தகைய சர்ச்சைகள் வரலாற்றில் நடந்திருப்பதை நாம் அறிகின்றோம். இதற்கு காரணம் உலமாக்களின் வேறுபட்ட சிந்தனை முகாம்களாகும். அனைத்து அறிஞர்களும் ஒரே தரத்தில் இல்லாதிருப்பது போன்று அனைவரும் ஒரே அமைப்பில் சிந்திக்காமையும் விடயங்களை பல்வேறு கோணங்களில் பார்க்கின்ற பார்வையும் ஆகும்.

இதன் காரணமாக கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. நான்கு மத்ஹப்கள் தோற்றம் பெற்றன. ஏன் மத்ஹப்களைச் சாராது இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற சிந்தனைகூட காணப்படுகின்றது. இவை அனைத்தும் இஸ்லாத்தின் பரந்த சிந்தனை வட்டத்திற்குள் உட்பட்டவை. இவை எதுவும் ஷரீஆவுக்கு முரணானதல்ல. ஆனால் அறிஞர்களுக்கு மத்தியில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை எப்படிப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதில் உலமாக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய சிந்தனை காணப்படுமாயின் கருத்து வேறுபாடுகளின் மூலமாக ஆரோக்கியமான விளைவுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த இடத்தில் மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கும் மனோநிலை உலமாக்களிடம் உயர்ந்து இருக்க வேண்டும். தனது கருத்து அல்லது நிலைப்பாடு மாத்திரமே சரியானது என்பது பரந்த ஷரீஆவின் பார்வைக்கு முரணானது. ஆரம்பகால இமாம்களுக்கு மத்தியில் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளை அவர்கள் இவ்வாறு கையாளவில்லை.

கருத்து வேறுபாடுகள் உலமாக்களுக்கு மத்தியில் ஏற்படுவது இயல்பானது. ஆனால் அது பற்றி மாற்றுக் கருத்துக்களை தெரிவிக்கும் போது கௌரவமான கற்புள்ள வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். தரக்குறைவான சொற்களைக் கையாண்டு பிழையான முன்மாதிரியை உலமாக்கள், புத்திஜீவிகள் சமூகத்திற்கு காட்டக்கூடாது. உலமாக்களுக்கு மத்தியில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை மையப்படுத்தி சமூகத்தில் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படாமலும், உள்ளங்களுக்கு மத்தியில் தூரங்கள் தோன்றாமல் இருப்பதிலும் சமூகத் தலைமைகள் கவனம் எடுக்க வேண்டும்.

எந்தளவுக்கு அகுரணை ஜம்மிய்யதுல் உலமா உஸ்தாத் மன்சூரின் ஆற்றல்களை இனங்கண்டு பயன்படுத்தியுள்ளது? உஸ்தாத் மன்சூர் குறிப்பாக அகுரணை ஜம்இய்யாவை பலப்படுத்துவதற்கு எவ்வளவு பிரயத்தனம் எடுத்தார் என்பது தொடர்பில் இருசாராரும் சிந்திப்பது பொருத்தம் என நான் கருதுகிறேன். ஒதுக்குவதன் மூலமும் ஒதுங்குவதன் மூலமும் நல்ல விளைவுகளை எதிர்பார்க்க முடியாது.

உலமாக்கள் சமூகத்தை இணைக்கும் பாலமாக செயற்பட வேண்டும். ஒரு தரப்பு கருத்துக்களுக்கு நியாயங்கள் இருந்தாலும், அவற்றின் மூலமாக பயனற்ற பிரச்சினைகள் ஏற்படுமாயின் அவற்றை விட்டுக் கொடுப்பதே ஷரீஆவின் சட்ட விதிகளுக்கு உடன்படக்கூடியது. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

“கூட்டம் நடத்த வேண்டாம் என்று கூறினோம்”
அஷ்ஷெய்க் முபாரக் மௌலவி (பொதுச் செயலாளர் – அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா)

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா, அஸ்னா பள்ளியில் கூட்டம் கூட்டுவதை நிறுத்துவதற்கு எத்தனையோ வழிமுறைகளைக் கையாண்டது. தனிப்பட்ட முறையிலும் சிலரைத் தொடர்பு கொண்டும் கூட்டம் நடத்த வேண்டாம் என்று சொல்லியிருந்தோம். தெரிந்த வழிகளில் இதனை நடத்த வேண்டாம், விட்டு விடுங்கள் என்று கூறினோம். உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி, பொதுச் செயலாளர் ஆகிய நான் உள்ளிட்ட பலர் அங்குள்ள உலமாக்களைத் தொடர்பு கொண்டு கூட்டம் நடத்த வேண்டாம் எனக் கூறியிருந்தோம். ஆனால் அகுரணை உலமா சபை எமது ஊரிலுள்ள பிரச்சினை எமக்குத்தான் தெரியும், அதற்காக வேண்டி சில விளக்கங்களை கொடுக்க வேண்டியுள்ளோம். அதற்காக வேண்டி நாம் அவரை (உஸ்தாத் மன்ஸூரை) ஏசவோ, காபிர் என்றோர கூற மாட்டோம் என்றனர்.

அவர்கள் நடத்திய கூட்டத்தின் வீடியோவைப் பார்த்தாலும் கூட அதில் ஏசியதாக இல்லை. தற்போது இந்த விடயம் முடிவடைந்துள்ளது. மீண்டும் கருத்துச் சொல்லப் போனால் விடயம் இன்னும் பெரிதாகும். இன்று ஜம்மிய்யதுல் உலமாவுக்கும் நிர்வாக சபைக்கும் ஏசுகிறார்கள். நாம் பொறுமையோடும் மனவருத்தத்துடனும் உள்ளோம். இந்தச் சம்பவம் நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு தரப்பும் அவரவர் கருத்துக்களை சொல்லியுள்ளனர். இந்த விடயத்தை பூதாகரப்படுத்த வேண்டாம். மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மக்கள் சத்தியத்தின் பக்கம் இருக்க வேண்டும்.

“நாம் பிளவுபடுவதும், கடுமையாக முரண்படுவதும் எம்மையே பலவீனப்படுத்தும்” உஸ்தாத் மன்சூர் (நளீமி) (பணிப்பாளர், அல்குர்ஆன் திறந்த கல்லூரி)

நாம் ஓர் உயர்ந்த சிந்தனைக்காக உழைப்பவர்கள், பாடுபடுபவர்கள். எனவே, வார்த்தைகளிலும், நடத்தைகளிலும் எம்மிடம் ஆழ்ந்த கண்ணியம் காணப்பட வேண்டும். இந்தப் பின்னணியில் அஸ்னாப் பள்ளியில் நடந்த கூட்டத்தை எதிராளிகளின் கூட்டமாக நாம் பார்க்கத் தேவையில்லை. அது ஒரு விமர்சனம். அதனை நாம் சமூகப் பிளவுகள் ஏற்படாமல், பாரிய மனக் கசப்புகள் ஏற்படாமல், எந்தவித வன்முறைகளும் இல்லாமல் எப்படி எதிர்கொள்வது என்பதைத் திட்டமிடுவோம்.

எமக்கு அவர்கள் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லும் உரிமை எமக்குள்ளது. அது பகிரங்கமாக முன்வைக்கப்பட்டமையால் பகிரங்கமாகவே எம் பதிலை முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் உட்படுகிறோம்.

ஆனால், நாம் அதனை மிகவும் கண்ணியத்தோடும் மோசமான வார்த்தைகள் கடுமையான பிரயோகங்களைத் தவிர்த்தும் வெளியிடுவோம். அறிவுபூர்வமான வாதத்தையே முன்வைப்போம். எம்மிடம் தவறுகளிருந்தால் அதனை ஏற்றுக் கொள்வோம்.

எம்மை விமர்சித்துக் கூட்டம் நடாத்தியவர்கள் எமது சகோதரர்களே. அவர்களை நாம் மதிப்போம். ஏற்றுக் கொள்வோம். நாம் சிறுபான்மை சமூகம். நாம் பிளவுபடுவதும், கடுமையாக முரண்படுவதும் எம்மையே பலவீனப்படுத்தும். உங்கள் எல்லோர் மீதும் எனக்கு அதிகாரம் கிடையாது. ஆயினும் உங்களிடம் நான் இதனை வினயமாகவும், பணிவோடும் கேட்டுக் கொள்கிறேன்.

அல்லாஹ் எம்மை நேர்வழி நடாத்தி எம்மைப் பலப்படுத்துவானாக.

உலமா சபையின் நம்பகத் தன்மையில் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது”உஸ்தாத் உஸைர் (இஸ்லாஹி) (அமீர் – இலங்கை ஜமாஅதே இஸ்லாமி)

இலங்கையில் ஜம்மிய்யதுல் உலமா சபை போன்ற பலமான அமைப்பு தேவை. ஆனால் ஜம்மிய்யதுல் உலமாவின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை உண்டாக்கின்ற பல நிகழ்ச்சிகள் தொடராக இடம்பெற்று வருகிறது. பொதுவாக இஸ்லாமிய சட்டத்துறையின் வளர்ச்சி கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை இஸ்லாம் தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளது. அந்த வகையில் இஸ்லாம் கருத்து வேறுபாடுகள் கொள்வதற்குரிய எல்லைகளை வகுத்து, அந்த எல்லையில் நின்று கருத்து வேறுபாடு கொள்வதற்குரிய உரிமையையும் உலமாக்களுக்குக் கொடுத்து, அதற்கு மாற்றுக் கருத்து சொல்பவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகளையும் சொல்லிக் கொடுத்து, அதனூடாக இஸ்லாமிய சட்டங்கள் வளர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.

இந்தப் பின்னணியில் வரலாற்றில் உலமாக்கள் எப்போதும் சமூகத்தில் இஸ்லாம் பற்றிய கேள்விகள் மற்றும் சமூகத்தில் தோன்றிய எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை சொல்லும் போது ஷரீஆ சட்டங்களைப் பேணி, குர்ஆன் ஹதீஸ் வழிமுறைகளுக்கமைய வாழும் நாடு, காலப் பகுதி மற்றும் தீர்மானம் எப்படியான விளைவுகளைக் கொண்டுவரும் என்பதைப் பார்த்து முடிவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இஸ்லாம் எல்லாக் காலத்திலும் உயிர்ப்புடன் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

வரலாற்றில் வித்தியாசமான கருத்துகள் வந்துள்ளன. இது சஹாபாக்களின் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. இதற்காக வேண்டி சஹாபாக்கள் மத்தியில் முரண்பாடு வராத அளவுக்கு இஸ்லாமிய தலைமைத்துவம் கருத்துரிமைகளைப் பாதுகாத்து வித்தியாசமான கருத்துக்களை சொல்வதற்கு அதற்கான ஆதாப்களையும் போட்டு இன்று வரையில் இஸ்லாம் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.

தற்பொழுது நாம் வாழும் இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் தாருஷ் ஷஹாதா சான்று பகர்கின்ற சமூகத்தில் வாழ்கின்ற கருத்தில் கவனம் செலுத்தப் பட வேண்டும். எமது ஒவ்வொரு கருத்தும் நடவடிக்கைகளும் இந்த நாட்டிலுள்ள எல்லோராலும் பார்க்கப்படுகின்றன என்கின்ற சிந்தனை இஸ்லாத்தைப் பற்றி பேசுகின்ற அறிஞர்களுக்கு இருக்க வேண்டும். அதேபோன்று நாம் உம்மது வஹ்தஹ் ஒரே உம்மத் என்று பாதுகாக்க வேண்டிய தேவையும், ஹைர உம்மத் என்று பாதுகாக்கப்பட வேண்டிய தேவையும் எங்களுக்கு உள்ளது. இதெல்லாம் பாதுகாப்பதற்கு இந்தச் சுதந்திரம், உரிமையைக் கொடுப்பது இந்த உரிமையுடன் உலமாக் கள் கருத்துச் சொல்வது அதற்கு மாற்றுக் கருத்து சொல்பவர்களும் அதற்குரிய ஆதாபுகளை பேணிப் பேசுவது தொடர்ந்து விளக்கப்படுத்தப்பட வேண்டும்.

இந்த உரிமைகளைக் கொடுத்தே ஜம்இய்யதுல் உலமாவின் ஒற்றுமைப் பிரகடனம் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் ஜம்இய்யதுல் உலமாவின் ஒற்றுமைப் பிரகடனம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம் சமூகத்திற்கு தலைமைத்துவத்தை கொடுக்கும் ஒரு நிறுவனம். ஆனால் ஜம்இய்யதுல் உலமாவின் ஒரு சில உலமாக்களின் செயற்பாடுகளும், அது தொடர்பில் உலமா சபை பேசாமல் இருக்கும் விடயங்களும் ஜம்இய்யதுல் உலமாவின் நம்பகத் தன்மையிலும் பக்கச் சார்பிலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது ஜம்இய்யதுல் உலமாவுக்கு அவ்வளவு நல்லதல்ல.

ஜம்இய்யதுல் உலமாவில் அங்கத்துவம் பெற்ற சில உலமாக்கள் நாட்டின் சுகாதாரத்துறைக்கு சவால் விடும் அளவுக்கு பெரும் கருத்துக்களைப் பேசினார்கள். இது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாத்திற்கும் அவப்பெயரை ஈட்டித் தரும் விடயமாக அமைந்தது. இது விடயம் தொடர்பில் உலமா சபைத் தலைமையகம் மற்றும் பிராந்திய உலமா சபை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆனால் தனது எல்லைக்குள் நின்று கருத்துச் சொல்லும் அறிஞருக்கு எதிராக பள்ளிவாசலில் மக்களைக் கூட்டி நடவடிக்கை எடுத்திருப்பது உலமா சபையின் நம்பகத்தன்மையில் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பக்கச் சார்பாக நடந்துகொண்டமையினால் அதன் நீதமான போக்கில் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று (ஜம்இய்யதுல் உலமா போன்ற அமைப்பு) நடுநிலையாக நிற்கக்கூடிய அறிஞர்களாலேயே இஸ்லாம் பாதுகாக்கப்படுகிறது என்ற கருத்துக்கு ஒப்பான வகையில் அமையப் பெற வேண்டும். இந்தப் பொறுப்பை ஜம்மிய்யதுல் உலமா எடுக்க வேண்டும். இப்படியான கருத்து வேறுபாடு வரும் போது இஸ்லாமிய வரையறைக்குள் பேசுகின்ற அறிஞர்களை ஒரு சபைக்கு அழைத்து அவர்களைப் பேச வைத்திருக்க வேண்டும். அந்த கருத்துகளில் மக்களை முடிவெடுக்கச் சொல்லியிருக்க வேண்டும். வரையறை பேணுவதன் நன்மையை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க முடியும்.

உஸ்தாத் மன்சூரின் கருத்தா மற்ற உலமாவின் கருத்தா என்பதை விட கருத்து சொல்லும் உரிமையை இஸ்லாம் வழங்கியிருக்கும் போது, இந்தக் கருத்துக்களுக்கான மாற்றுக் கருத்துச் சொல்லும் ஒழுங்குகளை இஸ்லாம் வழங்கியிருக்கும் போது, இவையனைத்தையும் ஏற்றுக் கொண்ட உலமா சபையின் ஒற்றுமைப் பிரகடனமும் இருக்கும்போது இதை மீறி நடப்பது ஆரோக்கியம் இல்லை. நாட் டில் இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று கருத்துச் சொல்லும் உரிமை வழங்கப்பட வேண்டும். இதுவே இலங்கையில் இஸ்லாத்தை பாதுகாக்கும் விடயமாகும்.

About the author

Administrator

1 Comment

Leave a Comment