Features ஆசிரியர் கருத்து

மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் | Editorial

Written by Administrator

Editorial | MP 410

மாவனல்லை புத்தர் சிலை உடைப்புச் சம்பவம் பல புரளிகளைக் கிளப்பி விட்டுள்ளது போலவே, மீண்டும் பல கேள்விகளையும் கிளறிவிட்டுள்ளது. இது தொடர்பான புலன் விசாரணைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இறுதியில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படலாம், கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம். எதுவாக அமைந்த போதிலும் இந்தச் சம்பவம் ஆறாத வடுவினை ஏற்படுத்தி விட்டிருப்பது மட்டும் அழியாத உண்மை.

எந்த மனிதனதும் மத உணர்வுகளை மதிப்பது என்பது உலகப் பொது விழுமியங்களில் உள்ள முக்கியமான விடயம். அவரவர்க்கு அவரவரது மத நம்பிக்கைகள் உயர்வானதாகவே இருக்கின்றன. இந்தச் சுதந்திரத்தில் யாரும் தலையிடவும் முடியாது; தடுத்து நிறுத்தவும் முடியாது. அந்த வகையில் மத அடையாளங்களும் சின்னங்களும் எப்பொழுதும் எல்லோராலும் புனிதமாகவே போற்றப்படுகின்றன. இவற்றுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர்களின் ஈனச் செயலைக் கண்டிப்பது அனைவரதும் கடமையாகும். இந்த வகையில் மாவனல்லையில் இடம்பெற்ற    சிலை உடைப்புச் சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்  நிச்சயமாக சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மதச் சின்னங்களும் அடையாளங்களும் சேதப்படுத்தப்படுவது இலங்கையில் இதுதான் முதல் தடவையல்ல. ஆனால் இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் அரசாங்கம் காட்டுகின்ற பாரபட்சமும் சிலவேளை அரசாங்கம் இவர்களுக்கு வழங்கும் ஆதரவும் இது போன்ற ஈனச் செயல்களைத் தூண்டுவதற்கு வழிவகுக்கின்றன.

பௌத்தர்களின் மிகப் புனிதம் வாய்ந்த தலதா மாளிகையைத் தாக்கிச் சேதப்படுத்திய எல்டிடிஈ பயங்கரவாதிகளின் பிராந்தியத் தலைவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தது கடந்த அரசாங்கம். அதேபோல இன்று வரை எத்தனையோ பள்ளிவாசல்களைச் சேதப்படுத்தி தீக்கிரையாக்கியவர்களை இன்றைய அரசாங்கம் பாதுகாத்து அபயமளித்து வருகிறது. பாதையோரத்தில் இருந்த ஓரிரு  சிலைகளைச் சேதப்படுத்தியவர்களைக் கைது செய்வதில் அரசாங்கம் காட்டிய வேகத்தினை, நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களை கண்முன்னால் எரித்து நாசமாக்கிய நாசகாரிகளைக் கைதுசெய்வதில் அரசாங்கம் காட்டவில்லை.

சட்டத்தின் முன் சகல பிரஜைகளும் சமம், தமக்கு விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு என்றெல்லாம் யாப்பிலே எழுதி வைத்து விட்டு அரசாங்கமே ஓரினத்துக்கு மட்டும் சார்பாக நடந்து கொள்வது நாட்டின் அமைதி நிலையை நிச்சயம் பாதிக்கும் என்பதை அரசாங்கங்கள் உணர வேண்டும். பௌத்தச்  சின்னங்களைப் பாதுகாப்பது போலவே நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களையும், இந்துக் கோவில்களையும், முஸ்லிம்களது பள்ளிவாசல்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்ற பொறுப்புணர்ச்சி அரசாங்கத்துக்கு வர வேண்டும்.

அம்பாறைப் பள்ளிவாசலைத் தீக்கிரையாக்கிய சூத்திரதாரிகள் ICCPR சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவிருந்த நிலையில் உயர்மட்ட உத்தரவின் காரணமாக அவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதாக அப்போதைய தகவல்கள் தெரிவித்தன. ஆனால் மாவனல்லை சிலை உடைப்பில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படுபவர்களை ICCPR சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என அரசாங்கமே உத்தரவிடுவது அரசாங்கம் பொதுமக்கள் விடயத்தில் நீதியாக நடந்து கொள்வதில் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

மதங்களை அரசியலுக்குப் பாவிக்கும் கலாச்சாரம் இந்திய உப கண்டத்தில் வளர்ந்து வரும் நிலையில், இலங்கை அரசாங்கம் இதனையிட்டு அவதானமாக இருக்க வேண்டும். உலகின் நான்கு பெரிய மதங்களும் ஒன்றாக அமைதியாக வாழும் நாடாக இலங்கையை உலகுக்கு எடுத்துக் காட்டு வதற்கு நாட்டுத் தலைமைகள் முன்வர வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment