Features நாடுவது நலம்

மாவனெல்லை சம்பவம் கண்டிக்கத்தக்கது, துரதிஷ்டமானது

Written by Administrator

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் | நாடுவது நலம்

கடந்த தினம் மாவனெல்லையில் இடம்பெற்ற சம்பவம் மிகவும் துரதிஷ்டமானது. இந்த சம்பவத்தை கேள்விப் பட்டவுடன் நான் மிகுந்த மனவேதனையடைந்தேன். முன் னேற்றகரமானதொரு சமுதாயத்தில் இது போன்ற சம்ப வங்கள் அரங்கேற்றப்பட்டால் இதை யார் செய்கிறார்கள்? அவர்களது பின்னணி என்ன? என்பதைப் பார்க்காமல் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இச்சம்பவம் செய்தவர்களை கைது செய்யவும், சட்டத்தின் முன் நிறுத்தவும் முடியும். ஆனால் இத்தோடு இந்தப் பிரச்சினை தீர்ந்துபோவதில்லை. இது போன்ற சம்பவங்கள் இன்னும் பல இடங்களில் நிகழ்த்தப்படலாம்.

 மாவனெல்லை சம்பவத்தைப் பற்றி குறிப்பிடும்போது இலங்கையிலும் உலகளவிலும் அவ்வப்போது அரங்கேற்றப்பட்ட, அரங்கேற்றப்படுகின்ற சம்பவங்களே என் நினைவுக்கு வருகின்றன. இதுபோன்று ஆப்கானிஸ்தானிலும் பாமியன்  சிலைகள் உடைக்கப்பட்டன. ஈராக்கில் ஷீஆ பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன. மியன்மாரிலும் முஸ்லிம்களது வழிபாட்டிடங்கள், கலாசார நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது, இவை தவிர பொஸ்னியா, மத்திய ஆபிரிக்க நாடுகளிலும் மத வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தகைய தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு இன, மத வேறுபாடுகள் கிடையாது.

எல்லா சமூகத்திலும் தீவிரவாத எண்ணம் படைத்த ஒரு சிலர் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். எல்லா இடங்களிலும் எல்லா இனத்தவர்களினதும் மதவழிபாட்டிடங்கள் தகர்க்கப்படுகின்றன. இது விடயம் தொடர்பில் சமூகத்திற்கு மிகப்பெரும் பொறுப்புள்ளது. சம்பந்தப்பட்டவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவது மாத்திரமல்ல ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவரை ஒருவர் மதித்து செயற்பட வேண்டியதும் சமூகத்தின் பொறுப்பாக உள்ளது.

இதுபோன்ற சம்பவங்களை நாம் கண்டிப்பதற்கு அப்பால் சென்று அவற்றை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆழமாக ஆராயப்பட வேண்டியுள்ளது. குறுகியகால மற்றும் நீண்டகால அடிப்படையில் இவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. பல் வகைமை மற்றும் வேறுபாடுகளை புரிந்துகொள்வது மிக முக்கியமான செயற்பாடாகும். கல்வி நிலையங்களில் இவற்றை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்படுவது குறித்து எமது ஆழமான அவதானம் குவிக்கப்பட வேண்டியுள்ளது.

வரலாற்றில் 9, 10ஆம் நூற்றாண்டுகள் இஸ்லாமிய கலாசாரத்தின் மிகச் சிறந்த நூற்றாண்டாக நோக்கப்படுகிறது. அதிலிருந்து எமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். ஸ்பெய்னில் முஸ்லிம், கிறிஸ்தவ, யூத வழிபாட்டு நிலையங்களுக்கு மத்தியில் காணப்பட்ட நல்லுறவு, ஐக்கியம், சகவாழ்வு உலகிற்கு முன்மாதிரியாய் அமைந்தது. ஸ்பெய்னின் இஸ்லாமிய உலகு குறித்து இன்றளவும் பேசப்பட்டு வருகின்றது. அக்பர் மன்னன் சீக்கியர்களின் வழிபாட்டிடத்தை அமைப்பதற்கு காணிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அக்பர் மன்னனின் சாம்ராஜ்யத்தின் கீழ் சகல சமயத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்த சரித்திரம் எமக்கு சிறந்த முன்மாதிரியாகும். இதுபோன்ற வரலாறே எமக்குள்ளது. எனவே இவ்வரலாற்றின் சாராம்சத்தை புரிந்துசெயற்பட வேண்டும்.

வரலாற்றை நுனிப்புல் மேய்ந்து செயல்படுபவர்களாலேயே எமக்கு இதுபோன்ற துரதிஷ்ட நிகழ்வுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. மாவனெல்லை சம்பவத்திற்கு பின்னர் நடைபெற்ற கூட்டமொன்றில் கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்த கருத்தொன்று இங்கு நோக்கத்தக்கது. அதாவது பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்னும் விதிமுறை அமுல்படுத்தப்படுமாயின் எமது பிள்ளைகளுக்கு பல்லில்லாத, கண்களில்லாத மனிதர்கள் நிரம்பப்பெற்ற சமுதாயத்தையே உரிமைப்படுத்த நேர்ந்திருக்கும் என்றார்.

நபியவர்களின் காலத்தில் எல்லா சமூகங்களையும் இணைத்து அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமையை நிலவச் செய்த செயற்பாடுகள் எமக்கு சிறந்த முன்மாதிரியாகும். மாவனெல்லை சம்பவத்தை போன்ற பிரச்சினைகள் எப்படி உருவாகின்றன? என்பது தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதிருக்க நாம் ஒவ்வொருவரும் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும்.

நாம் அடுத்த சமயத்தவர்களை புண்படுத்தாத வகையில் எமது மார்க்க விடயங்களை முன்னெடுக்க வேண்டிய அதேவேளை, அவர்களை இழிவுபடுத்தி, மானபங்கப்படுத்தும் வகையில் மார்க்க விடயங்களை கலந்துரையாடவும் கூடாது. இதனை இஸ்லாம் ஒருபோதும் அனுமதித்ததும் கிடையாது. 

About the author

Administrator

Leave a Comment