Features நேர்காணல்

சிவில் சமூக அமைப்புகள் ஏன் உருவாக்கப்படுகின்றன?

Written by Administrator

அருளானந்தம் அருண் | மனித உரிமைச் செயற்பாட்டாளர் மற்றும் ஏற்பாட்டாளர், சமூக நீதிக்கான இளைஞரணி

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

சமூக நீதிக்கான இளைஞர் அணியின் உருவாக்கமும் பின்னணியும் குறித்து சற்று தெளிவுபடுத்த முடியுமா?

சமூக நீதிக்கான இளைஞர் அணி உருவாக்கப்பட்டதொரு அமைப்பல்ல. 2009 ஆம்  ஆண்டு மே மாதம் யுத்தம் முடிந்த கையோடு ஜூன், ஜூலை மாதங்களில் இயல்பாகவே தோன்றியதொரு அமைப்பு. அன்று முதல் இன்று வரை யாழ்ப்பாணத்திலேயே வாழ்ந்து வருகின்றோம். எமது கண்ணுக்கு முன்னால் நாம் நிறைய துன்பங்களை அனுபவித்துள்ளோம்.

30 வருட காலமாக வன்முறையும் யுத்தமும் நிலவிய மண்ணிலேயே நாம் வாழ்ந்தோம். தற்பொழுது நடக்கும் அநீதிகள், அராஜகங்கள் அனைத்தும் எமக்குப் புதிய விடயங்களல்ல. இவை எமக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட விடயங்கள். எனவே பாதிக்கப்பட்ட நாம் அவற்றை எதிர்த்து இலங்கையின் அரசியலமைப்பின் மூலம் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளுக்கு உட்பட்டு இவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிசெய்தோம்.

காலப்போக்கில் பாதிக்கப்பட்ட இன்னும் சிலர் எம்மோடு வந்திணைந்து கொண்டார்கள். அவர்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆலோசனைகளை வழங்கி, அவர்களை வழிப்படுத்தி நீதியை எப்படிப் பெற்றுக்கொள்ள முடியும் என்கின்ற வழிகாட்டல்களைக் கொடுத்தோம். மனிதர்கள் தங்களுக்குள் ஒரு சக்தியை வைத்துள்ளார்கள். அந்தச் சக்தியையே நாம் பயன்படுத்துகின்றோம். ஒரு குடிமகனுக்கு யாப்பினூடாக வழங்கப்பட்டி ருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதே எமது பணி.

நாட்டின் சிவில் சமூக அமைப்புகள் குறித்த உங்களது பொதுவான பார்வை என்ன?

கடலில் பயணிப்பதற்கே கப்பல் தயாரிக்கப்படுகிறது. அதே போன்று சிவில் சமூகத்திலுள்ள அநீதிகளை குறைப்பதற்காகவே சிவில் சமூக அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஜனநாயக உரிமைகள், அரசியலமைப்பு உரிமைகள் போன்றன மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சிவில் சமூக அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

சிவில் சமூக அமைப்புக்கள் துறைவாரியாக பிரிந்து நின்று செயற்பட்டாலும் அவை குறிப்பிட்ட விடயங்களையே கையில் எடுத்துச் செயற்படுவதை காண முடிகிறது. உதாரணமாக டெங்குவை ஒழிக்கும் நோக்கில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்காக வேண்டி செயற்படுபவர்களுக்கான அலுவலகங்கள் மற்றும் வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதன் பின்னர் டெங்கு ஒழிக்கப்பட்டது என வைத்துக் கொள்வோம். டெங்கு ஒழிக்கப்பட்டால் அவ்வமைப்பில் செயற்பட்டவர்களுக்கு வேலையில்லாமல் போய்விடும். அதன் பிறகு அந்த அலுவலகங்கள் மூடப்பட வேண்டும்.

ஆனால் டெங்குவை ஒழிப்பதாகக் கூறி உருவாக்கப்படும் அமைப்பு டெங்குவை முற்றாக ஒழிக்காமல் டெங்கு நோயாளர்களையே பராமரிக்கின்றன. நோயாளர்களை இனங்கண்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வார்கள், மருந்து கொடுப்பார்கள், பிறகு அதைப் புகைப்படமெடுத்து பிரசாரத்துக்குப் பயன்படுத்துவார்கள். இவர்கள் முழுமையாக டெங்குவை ஒழிக்க மாட்டார்கள். டெங்கு இருந்தால்தான் அவர்களது வாழ்க்கை ஓடும்.

எனவே சிவில் சமூக அமைப்புகள் ஆரம்பத்தில் நல்ல நோக்கத்திற்காக வேண்டி ஆரம்பிக்கப்பட்டாலும் பிற்பட்ட காலத்தில் அவர்கள் தங்களது வாழ்வாதாரமாக அவற்றை மாற்றிக்கொள்ளும் போக்கையே இன்று காண முடிகின்றது. பெரும்பாலான சிவில் சமூக அமைப்புக்கள் இன்று களத்தில் இறங்கிச் செயற்படுவதில்லை. மேடைகளில் மாத்திரமே அவர்களது பணி தொடர்கிறது.

எல்லா சிவில் சமூக அமைப்புக்களும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும். அவற்றுக்கான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை வெளிப் படுத்த வேண்டும். அத்துடன் கடந்த காலங் களில் இவ்வமைப்புகள் எவற்றைச் செய்துள்ளன என்பதும் குறிப்பிடப்பட வேண்டும். இன்று ஊழல் என்பது உலகில் மிகப்பெரும் நோயாக மாறியிருக்கிறது. வெளிப்படைத் தன்மையே இதற்கான சிறந்த மருந்து. சிவில் சமூக அமைப்புக்களையும் அவற்றின் செயற்பாடுகளையும் கண்காணிக்கும் உரிமை பொது மக்களுக்கு உள்ளது.

நாம் புரட்சியாளர்கள் (Revolutionists)  அல்ல. மனிதன் பரிணாம வளர்ச்சியடைய வேண்டும் (Evolution)  என்பதற்காக வேண்டி உழைப்பவர்கள். மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்காகவே செயற்படுகிறோம். மனித குலம் காலத்திற்கு காலம் பரிணாமம் அடைய வேண்டும். நாம் சோசலிஸமோ வேறு சித்தாந்தங்களோ பேசவில்லை. சிவில் சமூக அமைப்புக்களும் NGO க்களும் இவ்வாறு இயங்கும் பட்சத்திலேயே அது உண்மையானதாக அமையும்.

சிவில் சமூக அமைப்புக்களின் உருவாக்கம் எப்படி அமைய வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

திருமணம் என்கின்ற விடயம் இல்லாமல் போனால் விவாகரத்து என்கின்ற விடயம் அங்கு வராது. சிவில் சமூக அமைப்புக்களின் விடய மும் இப்படித்தான். பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டே சிவில் சமூக அமைப்புகள் தோற்றம் பெறுகின்றன. பிரச்சினைகள் இல்லாவிட்டால் அவை உருவாவதில்லை. சிவில் சமூக அமைப்புக்களின் உருவாக்கத்தைப் பற்றி யோசிக்காமல் குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையே தேட வேண்டும். அப்போது சிவில் சமூக அமைப்புக்களின் உருவாக்கம் இயல்பாக நடைபெறும்.

சகோதர சிறுபான்மைச் சமூகம் என்னும் வகையில் முஸ்லிம் சமூக அமைப்புக்களோடு இணைந்து பணியாற்றுவது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன?

சிறுபான்மை என்ற வசனத்தையே நாம் எதிர்க்கின்றோம். மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்றே ஐக்கிய நாடுகள் தாபனம் தெரிவித்திருக்கிறது. உலகில் சிறுபான்மை, பெரும்பான்மை என்கின்ற வித்தியாசங்கள் கிடையாது. நாம் மனிதர்கள். முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்பவர்கள். அவர்கள் எமது சகோதரர்கள். எமக்கும் முஸ்லிம்களுக்கும் கலாசார ரீதியாகவும், உறவு முறையிலும் எவ்வளவோ நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன. எமது மார்க்கத்தில் எவையெவையெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றதோ அவற்றை நபி (ஸல்) அவர்களும் கூறியிருக்கிறார்கள். அவர் ஒரு தீர்க்கதரிசி. எனவே எமக்கு மத்தியில் வேறுபாடுகள் கிடையாது. மனிதத்துவத்தை மையப்படுத்தியதாகவே எமது செயற்பாடுகள் காணப்படுகின்றன.

நாட்டின் ஆட்சி முறையில் எவ்வாறான மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

நாட்டின் ஆட்சி முறையே பிழை என்று நாம் கூறுகின்றோம். சர்வதேச ரீதியில் இன்று பிழையான ஆட்சிமுறையே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆட்சி முறையால் வறுமையை ஒழிக்க முடியாதுள்ளது. விபச்சாரத்தை ஒழிக்க முடியாதுள்ளது. பாடசாலைக் கல்வி முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடியாதுள்ளது. இம்முறையால் எதையுமே செய்ய இயலாது. அவர்கள் இதனைக் கட்டமைத்து வைத்துள்ளார்கள். அவர்களது ஆட்சி கொண்டு நடத்தப்பட வேண்டும் என்றால் வறுமை தேவை, யுத்தம் தேவை, விபச்சாரம் தேவை, துன்பப்படுபவர்கள் தேவை. இவை மொத்தமாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள்.

மிக முக்கியமாக சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும் அனைத்து நாடுகளிலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும். இவர்களே ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் காரண கர்த்தாக்கள். ஐஸிஸிற்கு காரணம் இவர்கள், பின்லாடனுக்கு காரணமானவர்களும் இவர்கள், சதாம் ஹுஸைன் கொல்லப்படுவதற்கும் இவர்களே காரணம். இவர்கள் நிறையப் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். பிரச்சினைகளிலேயே வாழ்கிறார்கள். யுத்தங்களில் வாழ்கிறார்கள். எனவே இந்த அமைப்பு முறை மாற்றப்பட வேண்டும்.

சமூகங்களுக்கு மத்தியில் நிரந்தர சமாதானம் கட்டியெழுப்பப்பட வேண்டுமெனில் எவ்வாறான மாற்றம் நிகழ வேண்டும்?

சமூக செயற்பாட்டை இயல்பாகவே விட்டு விடும் போது அது தானாகவே ஏற்படும்.  சமூக அநீதிக்கு எதிராக கட்டாயமாக எதைச் செய்ய வேண்டும் என ஓசோவிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கவர், கட்டாயம் இதைச் செய்ய வேண்டும், கட்டாயம் இதைச் செய்யக் கூடாது என்ற விதிமுறை இருக்கக் கூடாது என்றார்.  அநீதிக்கு என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்ட போது உனக்கு அந்த நேரத்தில் என்ன தோன்றுதோ அதைச் செய் என்றார். இதற்கு வேறு விதத்தில் பொருள் கொள்ளக் கூடாது. மனிதன் ஒரு ஆபத்தில் இருக்கும் போதுதான் எதைச் செய்ய வேண்டும் என அவனுக்கு தோன்ற வேண்டும். அது இயல்பாக வர வேண்டும். இப்படிச் செய்ய விட்டாலே பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும்.

ஆனால் இப்படிச் செய்ய விடுகிறார்கள் இல்லை. எமது சமூகத்தில் கல்வியை கல்வி நிறுவனங்களே அழித்து வருகின்றன. நிதியை நிதி நிறுவனங்களே அழிக்கின்றன. இப்படி  பல விடயங்கள் உள்ளன. இப்படியான சமூகத்திலேயே நாம் வாழ்கின்றோம். இவையனைத்தும் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட வேண்டும். இதற்காக வேண்டியே நாம் போராடுகின்றோம்.

About the author

Administrator

Leave a Comment