Features நேர்காணல்

பெண்கள் பங்களிப்பு? சமூகத்தில் 51 வீதமான வளம் பயன்படுத்தாமல் இருக்கிறது

Written by Administrator

முஹம்மத் ரியாஸ் | மனிதாபிமான உதவிகளுக்கான முகாமையாளர்- ஒக்ஸ்பாம்

எது உங்களை இந்தத் துறையில் ஈடுபாடு கொள்ளத் தூண்டியது?

பாடசாலை நாட்களில் கலை இலக்கிய விடயங்களில் இருந்த ஈடுபாடும் விவாதப் போட்டிகளுக்கு தகவல் திரட்டுவதற்காக நிறைய வாசிக்க நேர்ந்ததும்தான் என்னை இத்துறையில் கொண்டு வந்து சேர்த்தது.

நீங்கள் பணியாற்றும் துறை பற்றி இப்போது எப்படி உணர்கிறீர்கள்?

நான் தவறுதலான ஒரு துறைக்கு வந்ததாக எந்த சந்தர்ப்பத்திலும் நினைக்கவில்லை. இந்தப் பணியில் நூறு வீத திருப்தியுடன் நான் பணியாற்றுகின்றேன். இந்தத் துறையில் எனது மனதின் அடியாழத்தில் பதிந்துள்ள நினைவுகளே என்னை முன்னோக்கித் தள்ளுகின்றன.

சமீபத்தில் எதியோப்பியாவில் மிர்கலீபா என்ற இடத்தில் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இந்தக் கிராமத்து மக்கள் தண்ணீருக்காக ஒரு நாளைக்கு 60 கிலோமீட்டர் நடக்கின்றனர். 8 கோடி ரூபா செலவில் 500  மீட்டர் ஆழத்திற்கு ஒரு ஆழ் கிணறு அமைத்தோம். நீர் வருவதைக் கண்டு ஒரு பெரியவர் மிகுந்த மகிழ்ச்சியில், கடந்த 4 வருடங்களாக எந்த ஜனாஸாவையும் குளிப் பாட்டாமல்தான் அடக்கம் செய்கிறோம். இனி நாங்கள் குளிப்பாட்டி அடக்கம் செய்யலாம் என்றார். இந்த ஒரு திருப்தி எனக்குப் போதும். இது போல நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

இலங்கையில் இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் நீங்கள் வடக்கில் பணியாற்றிக் கொண்டிருந்தீர்கள். அந்த அனுபவத்தைச்  சொல்லுங்கள்.

ஒவ்வொரு யுத்தத்திற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். உலகமெங்கும் யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. யாருக்காக இந்த யுத்தங்கள் நடைபெறுகின்றன? யுத்த நிலமைகளின் போது நாங்கள் மனிதாபிமான தேவை எவ்வளவு இருக்கிறது என்பதையே பார்க்கிறோம். யுத்தத்தின் போது பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தனர். யுத்தத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்கள், ஏன் இந்த யுத்தம் நடைபெறுகிறது என்பதை அறியாதவர்கள் கூட மிகவுமே பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

மனிதாபிமான நிறுவனங்களுக்கு அக் காலத்தில் நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக எங்களால் உதவ முடியவில்லை.

யுத்தம் அல்லது அனர்த்தங்களின் போது  இலகுவில் பாதிக்கப்படக் கூடிய ஒரு குழு இருக்கிறது. வசதியுள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் நிலமையைக் கையாள்கின்றனர். ஆனால் இந்தத் தரப்பினர்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

காணாமல் போனவர்களுக்கான நியாயம் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும். இத்தனை வருடம் ஏன் காத்திருக்க வேண்டியிருக்கிறது? யுத்தம் ஒன்று முடிவடைந்தால் நல்லிணக்கத்தை நோக்கி அந்த நாடு நகர வேண்டும். இல்லாத போது யுத்தம் முடிந்திருக்குமே தவிர யுத்தத்திற்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கும். போர் முடிந்த பிறகு அதற்கான காரணத்தை இல்லாமல் செய்வது அரசின் கடமையாகும். ஆனால் இலங்கையில் அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

இதற்கான உதாரணங்கள் எமக்கு முன்னால் இருக்கின்றன. வடக்கு அயர்லாந்து, தென்னாபிரிக்கா, ருவாண்டா போன்ற நாடுகள் மிகச் சிறந்த முறையில் யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கத்தை முன்னெடுத்தன. இதில் எமக்கும் நிறையப் பாடங்கள் இருக்கின்றன.

அனர்த்தங்களின் போதான தயார் நிலை பற்றி என்ன சொல்கிறீர்கள்?

இலங்கையைப் பொறுத்தவரை இயற்கை அனர்த்தங்களை கணிப்பிடக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அனர்த்த அபாய முன்குறைப்பானது சர்வதேச மட்டத்திலும் இலங்கையிலும் குறைவாகவே உள்ளது.

அனர்த்தத்திற்குப் பிறகு 5 டொலர் செலவளிக்க நேரிடுகிற போது அனர்த்தத்திற்கு முன் 1 டொலர் செலவளிப்பது 4 டொலர்களை மிச்சப்படுத்தும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் அனர்த்தங்களின் பின்னர்தான் நாம் பணம் சேகரிக்கிறோம்.

அனர்த்தங்களின் ஆபத்தைக் குறைக்க நாம் மக்களை அறிவூட்ட வேண்டும். மத வழிபாட்டுத் தலங்கள் இதில் பங்களிப்புச் செய்யலாம். எல்லோருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.

சமூக சேவை நிறுவனங்கள் குறித்த உங்கள் அவதானம்?

ஒவ்வொரு நிறுவனமும் தமது வேலையை வரையறுத்திருக்கின்றன. அந்த வரையறைக்குள்ளேயே வேலை செய்கின்றன.வறுமை இல்லாத ஒரு உலகத்தைப் பார்ப்பதுதான் எல்லோரினதும் கனவு.

ஆனால் கொள்கை ரீதியாக மாற்றங்கள் வர வேண்டும் என நினைக்கிறேன். வேலைத்திட்டம் என்பது கிராமத்திலிருந்து தான் வர வேண்டும். நாங்கள் கொழும்பிலிருந்து அதைத் தீர்மானிக்க முடியாது. கிராம மட்டத்தில் என்ன தேவை இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்தே இந்த நாட்டுக்கான எமது மொத்த வேலைப் பரப்பு தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஒரு கிராமத்திற்கு 50 தேவைகள் இருக்கும். எங்களிடம் இரண்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான காசு இருக்கும். மிக அடிப்படையான அந்த இரண்டு தேவைகளையும் நாம் எப்படிக் கண்டுபிடிப்பது? மக்களுடைய பங்களிப்புடன் வேலையை எப்படிச் செய்வது? பணத்தை எப்படிச் செலவு செய்வது? போன்றன குறித்து நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அத்தோடு எமது நிறுவனங்கள் பெண்களது பங்களிப்பையும்  பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களது பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கி றோம் என்றால் சமூகத்தில் 51 வீதமான வளத்தை பயன்படுத்தாமல் வைத்திருக்கிறோம் என்று அர்த்தம்.

மியன்மார் முஸ்லிம்களால் நிரம்பியுள்ள ஒரு முகாமில் மனிதாபிமான நடவடிக்கைக்குப் பொறுப்பாகப் பணியாற்றிய அனுபவம் எப்படி யானது?

மியன்மாரிலிருந்து வந்த சுமார் 10 இலட்சம் மக்கள் அகதிகளாக பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர். டெக்னாப், உகியா ஆகிய பிரதேசங்களில் இரண்டு முகாம்கள் இருக்கின்றன.

இம்மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளை அனுபவித்து விட்டு வந்திருக்கின்றனர். அவர்களது கதைகளைக் கேட்கும்போது அழாமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் துயர் மிகுந்த அனுபவங்களால் நிரம்பியிருக்கின்றனர்.

கணவரை, பிள்ளைகளை, உறவினர்களை இழந்தவர்கள் அல்லது அவர்கள் தாக்கப்படுவதை கண்களால் பார்த்தவர்கள்.அல்லது அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதை அறியாதவர்கள்தான் முகாம்களில் இருக்கின்றனர். எமது ஆய்வின் படி 6 குடும்பத்திற்கு ஒரு குடும்பம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பமாக இருக்கிறது.

10 இலட்சம் பேர் ஒரு முகாமில்  இருப்பது எத்தனை துயர் மிகுந்தது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. இவர்கள் ஆரோக்கியமான சூழலில் இல்லை. நிறைய சமூகப் பிரச்சினைகள் இவர்களுக்கு இருக்கின்றன. போதிய அடிப்படை வசதிகள் இல்லை. பாதுகாப்பான தங்குமிடங்கள் இல்லை. முறையான மலசலகூட, குளியலறை வசதிகள் இல்லை. மின்சாரம் இல்லை. சிறுவர்கள் பெண்களுடைய பிரச்சினை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

இது ஒரு இன அழிப்பு என்பதை ஐநா தெளிவாகச் சொல்லியுள்ளது. ஒரு இன அழிப்புக்கான புத்தக வடிவிலான உதாரணம் என ஐ.நா. அதனை விபரித்திருந்ததது. ருவாண்டாவிற்குப் பிறகு ஐ.நா. சபை மியன்மாருக்குத்தான் இந்த உதாரணத்தைப் பயன்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் ஒரு செல்வந்த நாடல்ல. செறிவான சனத்தொகை கொண்ட ஒரு நாடு. அதற்கு ஒரு மட்டத்திற்குத்தான் உதவ முடியும். ஆனால் எல்லையைத் திறந்து இந்த மக்களை உள்ளே எடுத்தது என்னைப் பொறுத்தவரையில் பங்களாதேஷ் செய்த மிகப் பெரிய உதவி என்பேன். அதேவேளை எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.

முஸ்லிம்களால் நிரம்பியுள்ள ஒரு அகதி முகாம். முஸ்லிம் நாடுகளின் பங்களிப்பு போதாமல் உள்ளது. மலேசியா ஒரு வைத்தியசாலையை ஆரம்பித்துள்ளது. திருப்திப்படும் நிலையில் முஸ்லிம் நாடுகளின் உதவி இல்லை. அறபு நாடுகளுக்கு முஸ்லிம் சமூகம் என்ற வகையில் பொறுப்பு இருக்கிறது.

மக்கள்  முகாம்களில்தான் இருக்கின்றனர். மனிதாபிமான உதவிகளில் தங்கியிருக்க வைக்காமல் சொந்தமாக உழைத்து வாழ வைக்க வேண்டிய தேவை உள்ளது.

பங்களாதேஷ் மீது பெரிய ஒரு சுமை சுமத்தப்பட்டிருக்கிறது. இதனைக் குறைக்கும் பொறுப்பு எல்லா நாடுகளுக்கும் இருக்கிறது மிக முக்கியமாக முஸ்லிம் நாடுகளுக்கு இருக்கிறது. அவர்கள் இங்கு வந்து அவர்களது நிலமையைப் பார்க்க வேண்டும்.

சமூகத்திடம் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புவது?

முஸ்லிம் சமூகத்தில்  பெண்கள் படித்த கல்வியைக் கொண்டு நாட்டுக்கு என்ன பங்களிப்பை வழங்குகிறார்கள்? என்ற கேள்வி என்னிடம் இருக்கிறது.

பெண்களை தைரியமானவர்களாக மாற்றுவது, சமூகப் பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கான சக்தியை வழங்குவது, சுயமாக முடிவெடுக்கின்ற நிலமையை ஏற்படுத்துவது பரீட்சை முடிந்தால் திருமணம் என்ற கலாசாரத்தை மாற்றுவது மற்றும் பெண்களின் அரசியல் பிரவேசம் குறித்தும் நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறோம்.பெண்களுக்குத் தேவையான பங்கை வழங்குவது ஆண்களின் பொறுப்பு. பெண்களுக்கான இடத்தை வழங்காமல் இருப்பது ஆண்கள் மீதுள்ள குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

பெண் என்றால் சமைப்பது. குழந்தை பராமரிப்பது என்பதோடு மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. இதனை சவாலுக்கு உட்படுத்த வேண்டிய தேவை யுவதிகளுக்கு இருக்கிறது. இது குறித்து பெற்றோருடன் அவர்களது வாழ்க்கைத் துணையுடன் அவர்கள் கதைக்க முன் வர வேண்டும்.இந்த உரையாடலை ஆரம்பியுங்கள். உங்களது தேவைகளை தெளிவாகச் சொல்லுங்கள்.

தனிநபர் சம்பாதிப்பு முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை எதிர்காலத்தில் பாரிய சிக்கலுக்கு முகம் கொடுக்கும். எனவே இளைஞர்களையும் யுவதிகளையும் இதற்காகத் தயார்படுத்த வேண்டும்.

ஒருவர் வெற்றி பெற்றவர் என்பதை அவரிடமுள்ள வசதி, வாகனம் என்பதை வைத்தே தீர்மானிக்கிறோம். அது பிழையல்ல, ஆனால் அதனுடன் நின்று விடுகிறோம். ஒருவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரால் எத்தனை பேர் தாக்கமடைகின்றர். வசதி இல்லாவிட்டாலும் அவர்கள் செய்கின்ற வேலையினால் எத்தனை பேர் பயனடைகின்றர். போன்றவற்றையெல்லாம் நாம் வெற்றியின் அளவீடுகளாகக் கொள்வதில்லை.

எனவே ஒவ்வொரு சமூகமும் தம் மீது சுய விமர்சனத்தை மேற்கொள்வதன் மூலம் புதிய திசைகளை நோக்கி நகர வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment