Features நாடுவது நலம்

பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பெற்றோரின் வகிபங்கு

Written by Administrator

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் | நாடுவது நலம்

பிள்ளைகளுக்குக் கல்வியை வழங்கும் போது பெற்றோரின் பொறுப்பை எடுத்துக் காட்டும் மிகவும் பெறுமதியான கட்டுரையொன்றை பத்திரிகையில் வாசிக்கக் கிடைத்தது. அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் வசிக்கும் பென்ஜமின் காஸன் என்கின்ற சிறு பிள்ளை, ஒருநாள் தனது தாயிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கிறது. தாயே! எனக்கு இந்தச் சொல் விளங்கவில்லை, அதன் அர்த்தத்தைச் சொல்லித் தாருங்கள் என்றது. அதற்கு அந்தத் தாய் பார்ப்பம் மகனே! எனக்குச் சரியாக விளங்கவில்லை, கண்ணாடியைக் கொஞ்சம் எடுங்கள் என்றார். நீங்கள் எதற்கும் கொஞ்சம் வாசியுங்கள் என்று தாய் கூறினாள்.

தனக்கு வாசிக்க முடியாமல் இருப்பது கண்ணாடியில்லாததால் அல்ல. தான் கற்றிருக்காவிட்டாலும் அப்புத்திசாலித் தாய் தனது பிள்ளைக்கு அந்தக் குறையை காட்டிக்கொள்ளவில்லை. கறுப்பின அமெரிக்கப் பெண்ணான அவள் திருமணம் முடிக்கும்போது 13 வயது. ஒரு சில வருடங்கள் மாத்திரமே அவளுடன் வாழ்ந்த அவளது கணவர், இரண்டு பிள்ளைகளையும் அவளையும் விட்டு விட்டுச் சென்றுவிட்டார்.

அவள் கவலைப்படவில்லை, சளைக்கவில்லை. இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய சுமையை அவள் தன் தோள்மீது சுமந்தாள். வீடு வீடாகச் சென்று வேலைக்காரியாக  சேவை செய்யத் தீர்மானித்தாள். அவளிடம் திருமணம் முடிக்கும் எண்ணம் காணப்படவில்லை. இரண்டு பிள்ளைகளுக்கும்  சிறந்த கல்வியைக் கொடுக்கத் தீர்மானித்தாள். கல்வியின்  மூலமே இக்கொடுமையான வாழ்விலிருந்து கரைசேர முடியும் என நம்பினாள். அதற்காக வேண்டி அவள் தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்தாள்.

தனது இளைய மகனான பென் காசன் பிறப்பிலிருந்தே முட்டாளாகக் காணப்பட்டான். எப்பொழுதும் வகுப்பில் கடைசிப் பிள்ளையாகவே சித்தியடைவான். மதிப்பீட்டு அறிக்கையில் சகல பாடங்களுக்கு முன்னாலும் பூச்சியமே பதியப்பட்டிருக்கும். ஆனால் அவனது முழு வாழ்வும் ஒரு நாள் மாற்றமடைய ஆரம்பித்தது. அவனது வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவனுக்கு மூக்கில் ஐந்து தையல் விழும் அளவுக்கு பென் காசன் அவனை நையப்புடைத்தான். அவனது தாயார் பாடசாலைக்கு அழைக்கப்பட்டாள்.

காசனின் வகுப்பாசிரியர் அவனது தாயாரிடம் “தாயே இதுவே உங்களுக்கு வழங்கப்படும் இறுதிச் சந்தர்ப்பம். காசன் அந்தப் பிள்ளையை தாக்கியிருக்கிறான். மடையன் என்று கூறியதால் தாக்கியிருக்கிறான். ஆனால் அதில் உண்மையுள்ளது. உமது பிள்ளை வருட இறுதிப் பரீட்சையில் 25 வினாக்களில்  ஒரு வினாவுக்கேனும் பதிலளிக்கவில்லை. இதனால் உமது பிள்ளையை இந்த வருட இறுதியில் பாடசாலையை விட்டு விலக்க நேரிடும்.” அவள் அழுதுகொண்டே தனது மகனை வீதியில் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

வீட்டுக்குச் சென்று பிள்ளையின் காலில் விழுந்து “தங்க மகனே! உனது தாய் காலை 6 மணிக்கு எழுந்து மாலை 6 மணி வரை அடுத்தவர்களின் வீட்டில் கழிப்பறைகளை சுத்தப்படுத்துகிறேன். அவர்களது பிள்ளைகளை குளிப்பாட்டுகிறேன். வாகனங்களைக் கழுவுகிறேன். உனக்கும் அடுத்தவர்களின் கழிப்பறைகளை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கவா ஆசை! தேவையில்லாத பேச்சுக்களை கேட்கவா ஆசை? எனது மகனே நாளைய தினம் பெரியவனாகியும் மோசமான வார்த்தைகளைக் கேட்க விரும்புவாயா? அதை நீயே தீர்மானிக்க வேண்டும். அதை உனக்கு மாத்திரமே மாற்ற முடியும். இன்று முதல் எனது பிள்ளைகள் இருவருக்கும் தொலைக்காட்சி பார்ப்பது தடை.”

அவள் தனது மகனுக்கு மிகப்பெரும் சவாலை விடுத்தாள். அதன் பின்னர் அடுத்த வருட இறுதிப் பரீட்சையில் பென் 25 வினாக்களில் 10 வினாக்களுக்கு சரியான பதிலை எழுதினான். அடுத்த வருடம் 15 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதினான். மூன்றாம் வருடம் 25 வினாக்களுக்கும் சரியான விடையை எழுதி வருடத்தின் சிறந்த மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டான். சிறந்த மாணவனுக்கான பரிசில் வழங்கும் விழாவில் வெள்ளையின அதிபர் பின்வருமாறு கூறினார்: “பென் காசன் கருப்பினத்தவன். தந்தையில்லாத தாய் கழிப்பறை கழுவும் கறுப்பினப் பெண். பென் காசன் கஷ்டப்பட்டு திறமையாளனானான். இதன் அர்த்தம் நீங்கள் முயற்சிக்கவில்லை என்பது. வெள்ளையினத்தவர்களாகிய நீங்கள் கறுப்பினத்தவனிடம் தோற்றதற்கு வெட்கப்பட வேண்டும்”

சோன்யா மறுதினமே தனது பிள்ளைகளை அந்தப் பாடசாலையிலிருந்து விலக்கிக் கொண்டாள். மோசமான மனிதர்கள் வாழும் அந்தப் பகுதியிலிருந்து தப்பித்துச் சென்றாள். அதன் பிறகு அவள் வெள்ளையின கறுப்பின மாணவர்கள் ஒன்றாகப் படிக்கும் பாடசாலையில் அவர்களைச் சேர்த்தாள். அந்தத் தாய் இவ்வாறு கூறுகிறாள்: “நான் கறுப்பினத்தவள்தான். ஆனால் எமக்கும் சுயகௌரவம் உள்ளது. எனது பிள்ளைகளது கௌரவம் எனக்கு முன்னால் இழக்கப்படுவதை விட நான் இறப்பதே மேல்.” புதிய பாடசாலை பென் காசனை சிறந்த முறையில் வரவேற்றது. இறுதி வகுப்பில் சிறந்த பெறுபேறை பெற்று மிசிகன் கல்லூரியில் மருத்துவப் படிப்பைத் தொடரும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது. பென்ஜமின் காசன் என்பவர் தற்பொழுது மிசிகன் பல்கலைக்கழகத்தில் மூளை மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணராக மாறியிருக்கிறார். இவர் உலகில் முதன் முதலாக இரண்டு மூளைகள் ஒட்டிப் பிறந்த பிள்ளைகளை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்த முதலாவது வைத்தியராவார். இது ஜேர்மனியில் 1987ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்டது. 1988 முதல் அவர் ஜோன் ஹொப்ஸ்கின் மருத்துவமனையில் பணிப்பாளராக செயற்பட்டார். 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு அமெரிக்க ரிபப்லிகன் கட்சி சார்பில் அவரது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஒரு பிள்ளையின் தலைவிதியை மாற்றுவதில் பெற்றோருக்குள்ள வகிபாகம், பொறுப்பு எத்தகையது என்பது இந்த உதாரணத்தின் மூலம் விளங்குகிறது. இது பற்றி சிந்தித்து எமது பிள்ளைகளையும்      சிறந்த முறையில் வளர்த்தெடுப்போம்.

About the author

Administrator

Leave a Comment