Features நேர்காணல்

தனிமனிதனை நம்பி அரசாங்கம் நடாத்துவது பயங்கரமானது – சட்டத்தரணி ஜாவித் யூஸுப்

Written by Administrator

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

ஜாவித் யூஸுப் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பு ரோயல் மற்றும் ஸாஹிரா கல்லூரிகளின் பழைய மாணவர்களுள் ஒருவர், ஒரு சட்டத்தரணி. கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபர், சவூதி அரேபியாவுக்கான முன்னாள் தூதுவர், முஸ்லிம் சமாதான செயலகத்தின் (MPS) முன்னாள் பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிறிது காலம் பணியாற்றியவர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் சிரேஷ்ட ஆலோசகராக செயற்பட்டவர், மனித உரிமை ஆணைக்குழுவிலும் அங்கம் வகித்தவர், தற்போது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து மீள்பார்வை பத்திரிகைக்கு அவர் வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்கின்ற விடயம் மீளவும் பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் தற்பொழுது எவ்வாறு இடம்பெற்று வருகின்றன?

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அரசியலமைப்பு தொடர்பில் கருத்தறியும் குழுவின் இடைக்கால அறிக்கையையும் அரசியலமைப்புக்கான உபகுழுக்களின் ஐந்து அறிக்கைகளை யும் முன்வைத்து பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களாக இந்த விவாதம் நடத்தப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். இந்த விவாதத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொகுக்கப்பட்டு அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்ட குழு ஒரு அறிக்கையைத் தயார் செய்து தற்பொழுது பாராளுமன்றில் முன்வைத்துள்ளது.

இந்த அறிக்கையில் அரசியலமைப்பு விதிமுறைகள் (Constitutional Provisions) சில உள்ளடக்கப்பட்டுள்ளன. ‘இது அரசியலமைப்பு வரைவொன்றல்ல என்றும் கலந்துரையாடலுக் கான முன்வைப்பே இதுவென்றும்’ இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடை பெறும். அதற்குப் பின்னர் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்ததன் பிறகே அடுத்த கட்ட நட வடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பது புலப் படும்.

ஆரம்பத்தில் அரசியலமைப்புச் சபையை (Constitutional Assembly) உருவாக்கும்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பாராளுமன்ற விவாதத்திற்குப் பிறகு மீண்டும் கருத்தறியும் குழுவுக்கு அனுப்பப்படும். அந்தக் குழு ஒரு வரைவைத் தயாரிக்கும். அந்த வரைவு அரசி யலமைப்புச் சபைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டால் மீண்டும் அது அமைச்சரவைக்கு விடப்படும். அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். அங்கு அரசியலமைப்பு வரைவு ஆராயப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதா மக்கள் கருத்துக்கு விடுவதா என்பது தீர்மானிக்கப்படும்.

தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள அறிக் கையில் சில விடயங்கள் தொடர்பாக இரு கருத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக பௌத்த சமயத்தைப் பற்றி தற்பொழுதுள்ள 19 ஆவது திருத்தத்தில் ஒரு கண்ணோட்டமும் மாற்றுப் பார்வை (Alternative View) என்று மற்றொரு விடயமும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இவ்வாறு விவாதங்களின் போது  கட்சிகளும் பிரதிநிதிகளும் முன்வைத்த முன்மொழிவுகளை உள்ளடக்கிய மாற்றுக் கருத்துக் களும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. மேலதிக கலந்துரையாடலுக்காகவே இது விடப்பட்டுள்ளது. இதுவொரு திட்டவட்ட மானதொரு மசோதாவல்ல. சாதாரண மசோதா.

தற்போதைய சூழ்நிலையில் அரசியலமைப்பு உருவாக்கம் என்கின்ற விடயத்தைக் கொண்டு வருவது எவ்வளவு தூரம் பொருத்தம் என நீங்கள் கருதுகிறீர்கள்?

இது திடீரென கொண்டுவரப்பட்ட விடயமொன்றல்ல. 2015 இல் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிறகு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையைக் கொண்டு வந்தது. அதன்படி பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டது. பிரமதர் தலைமையில் 7 உப குழுக்களையும் 21 உறுப்பினர்களையும் கொண்ட அரசியலமைப்பு வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் மக்களிடம் கருத்தறிவதற்காக வேண்டி லால் விஜேநாயக்க தலைமையில் மக்கள் கருத்தறியும் குழு நியமிக்கப்பட்டது. எனவே அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடு இன்று நேற்று ஆரம்பிக்கப்படவில்லை.

2015 இற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட செயற்பாடே இடைக்கிடை தடங்கலுக்கு உள்ளாகி முன்னெடுக்கப்படுகிறது. தற்போது இந்தப் பணி மிகவும் தாமதமடைந்துள்ளது. இது 2015 இற்குப் பிறகு கிடைத்த நல்லாட்சிக் காலப் பகுதியில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். தற்போது இதை மீளக்கொண்டு வந்தாலும் இந்த அரசாங்கத்திற்கு இதை சமர்ப்பிக்க நேரம் போதாமல் உள்ளது. 1970 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் 1 ஆம் குடியரசு யாப்பை இரண்டே வருடங்களில் நிறைவேற்றியது. 1977இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஓரிரு வருடங்களில் 2ஆம் குடியரசு யாப்பை நிறைவேற்றியது.

1994 இல் சந்திரிகா கொண்டுவந்த அரசியலமைப்புக்கு 1995 இல் யோசனைகள் முன்வைக்கப்பட்டு, பல தடவைகளில் கலந்தாலோசித்து, அது 1997 இல் மீள முன்வைக்கப்பட்டு,  நீண்ட உரையாடலுக்குப் பின்னர் 2002 இல் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தார்கள். இதற்கு 5 வருடங்கள் எடுத்தது. இந்தக் காலப் பகுதியில் நாட்டின் சூழ்நிலையும் மாறி மக்கள் யாப்பு மீது கொண்ட ஆர்வமும் வேறு விடயங்களில் குவிய ஆரம்பித்தது. இதனால் இந்த யாப்பை நிறைவேற்ற முடியாமல் போனது.

எனவே ஆரம்ப இரண்டு வருடங்களில் யாப்புக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்பட்டால் அதனை விரைவில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கின்ற கருத்தையே இந்த உதாரணங்கள் எமக்குச் சொல்கின்றன. தற்போதைய செயற்பாடும் அப்படித்தான் காலம் கடத்தப்பட்டு வருகின்றது. இந்த அரசாங்கத்திற்கு அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள் வதற்கான காலம் போதாமல் உள்ளது.

எனது கருத்தின்படி, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான சில விடயங்களில் உடனடி மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு, பாராளுமன்ற ஜனநாயக முறை ஸ்தாபிக்கப்பட வேண்டும். தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கு  சிறந்ததொரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். இவை மிக முக்கியமான விடயங்கள்.

தற்போதைய சூழலில் இனவாத சக்திகள், நாட்டைத் துண்டாடப் பார்க்கிறார்கள் எனக் கூறி இந்த விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரி வித்து வருகின்றனர். இந்த விடயத்தில் அரசாங்கத்திடமும் குறைபாடுள்ளது. அவர்களிடம் தொடர்பாடல் உத்திகள் (Communication Strategy) இல்லை. இனவாதச் சாயம் பூசப்பட்டி ருக்கும் அரசியலமைப்பு தொடர்பான பிழை யான வாதங்களை களைய வேண்டுமெனில் மக்களிடம் சென்று சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

இதை எப்படிச் செய்வதென்ற நுணுக்கமோ அறிவோ இந்த அரசாங்கத்திடம் இல்லை. இனவாதக் கருத்துக்களால் அரசியலமைப்பு தோற்கடிக்கப்பட்டால் நாம் இன்னும் ஆறேழு வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டி யிருக்கும். அதனால் இந்தக் காலத்துக்கு பொருத்தமாக உள்ள 20 ஆம் திருத்தத்தை மாத்திரமாவது நிறைவேற்ற வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிக்க வேண்டும். இது பெரிய விடயமல்ல. அடுத்த கட்டமாக தேர்த லுக்குப் பிறகு இனப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வை முன்வைக்க முடியும். அவற்றை விட்டு விட்டு அரசியலமைப்பு உருவாக்கம் என்கின்ற விடயத்தை தற்போது கையில் எடுத்தால் ஒன்றையாவது செய்துகொள்ள முடியாமல் போகும்.

உங்கள் அவதானத்தின் படி புதிய அரசி யலமைப்புக்குள் முன்வைக்கப்பட்டி ருக்கும் விடயங்கள் எல்லா சமூகத்தை யும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறதா?

இறுதி வரைவு வந்ததன் பிறகே இது குறித் துக் கருத்துச் சொல்ல முடியும். ஆனால் இது வரையில் நடந்த விடயங்களை அவதானிக்கும் போது எல்லா சமூகங்களுக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக முயற் சிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

அவர்களது முதல் விருப்பம் பெடரல் முறை. ஆனால் பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து நல்ல முடிவுக்கு வந்தால் பெடரல் முறையை விட்டு விடத் தயார் என்று கூறுகின்றனர். அத்துடன் இரண்டு பிரதான கட்சிகளும் கொண்டு வரும் விடயங் கள் எல்லா சமூகத்தையும் திருப்திப்படுத்துவ தாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஒரு சமூகத்தை மட்டும் திருப்திப்படுத்தினால் அது வெகுகாலம் நீடிக்காது. இந்த வழியில் செல்ல எல்லோரும் தயாராக உள்ளனர். எல்லோருக்கும் கருத்துக்களை முன்வைக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. இதற்காக வேண்டியே அதிக காலம் எடுத்தது.

முஸ்லிம் சமூகமும் இன்று இனவாதப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகிறது. எனவே முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக உத்தேச அரசியலமைப்பில் ஏதும் மிக முக்கிய ஏற்பாடுகள் சொல்லப்பட்டுள்ளதா?

பாதுகாப்பு என்பது எல்லா மக்களையும் திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஐந்தாறு விடயங்களால் மாத்திரம் பாதுகாப்பு உருவாகாது. ஆங்கிலத்தில் Rule of Law என்பார்கள். அதை ஏற்படுத்தினால் பாதுகாப்பு கட்டாயம் உருவாகும். இதற்கு பல்வேறு அம்  சங்கள் உள்ளன. இந்த அரசாங்கம் வந்தவுடன் சில விடயங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு 19ஆவது திருத்தத்தில் அரசிய லமைப்புச் சபை மூலமாக பொலிஸ் ஆணைக் குழு, மனித உரிமை ஆணைக்குழு, தகவல் அறியும் ஆணைக்குழு மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை அரசியல் தலையீடின்றி முன்னெடுப்பதற்கான ஒரு சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு என்கின்ற விடயத்தில் பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடு மிக முக்கியமானது. இதில் கூட அரசியல்வாதிகளின் தலையீடு குறைந்துள்ளது. இவற்றை இன்னும் அதிகம் வலுப்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டினால் எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

உதாரணமாக ஏதேனும் ஒரு இடத் தில் இனப்பிரச்சினையொன்று ஏற்பட் டது என வைத்துக்கொள்வோம். அரசி யல்வாதிகளை தேடிச் செல்லாமல் பொலிஸார் தங்களால் செய்யப்பட வேண்டிய வேலையைச் செய்ய வேண் டும். இது முதலாவது விடயம். அடுத் தது பொலிஸார் எல்லோருக்கும் சமமாக வேலை செய்கிறார்கள் என்கின்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாக வேண்டும். இது தற்பொழுது உருப்பெற்று வருகிறது.

கடந்த ஒக்டோபர் 26 இற்கு பிறகு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக் கப்பட்டவுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவரை மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  ரவீ விஜேகுணவர்தன என்பவரின் கைதை இடைநிறுத்துவதற்கு ஐபி நிஷாந்த என்கின்ற சிறந்த பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்தார்கள். ஆனால் பொலிஸ் ஆணைக்குழு அதனை இடைநிறுத்தியது.

நீதித்துறையும் இன்று சுயாதீனமாக இயங்குகிறது. அமைச்சர்களின் பின்னால் சென்று தீர்வு காணும் முறை இல்லாமல் செய்யப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பிலும் மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களுக்கு அதி காரம் வழங்கப்படவுள்ளது. அவர்கள் சுயாதீனமாக இயங்கும் போது பாதுகாப்பு இயல்பாகவே உருவாகும்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு நடைமுறையிலுள்ள அரசியலமைப்புக் கூடாக தீர்வுகளை காணமுடியாதா? புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலமா அவற்றுக்கு தீர்வுகாணப்பட வேண்டியிருக்கிறது?

தற்போதைய யாப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது. அதிகாரங்கள் தனிமனித னொருவரிடம் குவிக்கப்பட்டுள்ளன. 19ஆவது திருத்தத்தின் மூலம் சில குறைக்கப்பட்டாலும் ஒன்று குவிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மீதான அச்சம் இன்னும் நிலவிக் கொண்டுள்ளது.

அமெரிக்கப் பாராளுமன்றத்தில் நிதி நடவடிக்கை நிறைவேற்றப்படாமையினால் சில அரசாங்கத் திணைக்களங்கள் 100 நாட்களுக்கும் அதிக காலம் சேவையில் ஈடுபடவில்லை. ஏனெனில் ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் மோதல் காணப்பட்டு வருகிறது. இந்த விடயத்தை கொல்வினும் என்.எம். பெரேராவும் 1978 இல் கூறினார்கள். அமெரிக்காவில் இப்படி நடந்தால் அவர்களால் அதனை தாங்கிக்கொள்ள முடியும். எமது நாட்டில் நடந்தால் அதைத் தாங்க முடியாது.

கடந்த டிசம்பரில் இந்தப் பிரச்சினை முடிந்திருக்காவிட்டால் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை செலுத்த பணமில்லாமல் போயிருக்கும். மற்றையது, இந்த யாப்பு கொண்டுவரப்பட்ட 41 வருட காலத்திலேயே சிறுபான்மை மக்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். யுத்தம் உள்ளிட்ட எத்தனையோ பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி யிருந்தது.

புதிய யாப்புக்கூடாக பாராளுமன்ற முறை ஏற்படுத்தப்பட்டால் சிறுபான் மையினரின் பிரச்சினைகள் தொடர்பில் அழுத்தங்களைப் பிரயோகிக்க எத்தனையோ வழிகள் உள்ளன. புதிய தேர்தல் முறையில் அநுராதபுரம் தொகுதியில் ஐந்தாயிரம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஐயாயிரம் மக்களின் வாக்குகளுக்காக ஒரு சிங்களப் பிரதிநிதி அதிகமாக முயற்சிப்பார். அந்த வாக்குகளில் தான் அவர்களின் வெற்றி தோல்வி உள்ளடங்கியுள்ளது. அவர்கள் இம்மக்களின் பிரச்சினை களைப் பேசுவார்கள். எம்.பிக்களைத் தெரிவுசெய்யும் தற்போதைய தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும். நன்கு படித்தவர்கள் பாராளுமன்றம் அனுப் பப்பட வேண்டும். அப்போது தான் அராஜகம் ஒழிந்து நாட்டில் ஜனநாயகம் ஸ்திரமடையும்.

நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதாகக் கூறியே மைத்திரிபால ஆட்சிக்கு வந்தார். உண்மையில் அதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் அவ ரிடம் இருந்தது. அவர் ஆட்சிக்கு வந்த தும் தனது 6 வருட பதவிக் காலத்தை 4 வருடங்களாகக் குறைக்க வேண்டும் என்றார். 4 வருடமாகக் குறைக்க வேண்டாம் ஐந்து வருடமாகக் குறையுங்கள் என்று ஏனையவர்கள் ஆலோசனை             சொன்னதற்கு அமைய 5 வருடமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த வருடம் அவர் தனக்கு 6 வருடங்கள் பதவியில் இருக்க முடியுமா என்று உயர் நீதிமன்றத்திடம் கேள்வி கேட்டிருந்தார்.

தற்போது அவரது மனது மாறியுள்ளது. எந்த மனிதனும் நிறைவேற்று அதிகாரம் என்ற இந்த ஆசனத்தில் அமர்ந்தால் அவரது மனம் இயல்பாகவே மாற்றப்படும். மீளவும் அவர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் சாத்திய முள்ளது. ஆரம்பத்தில் முதலாவது பதவிக் காலம் முடிந்ததும் பொலன்னறுவைக்கு சென்றுவிடுவேன் என்று கூறி னார். ஒரு தனி மனிதனை நம்பி அரசாங்கத்தை நடாத்துவது மிகப் பயங்கரமானது.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பிந்திய நாட்டு நிலைமைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

19 ஆவது திருத்தத்தின்படி பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது. தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் மூலம் எல்லாவற்றையும் செய்துவிட முடியும் என்ற உணர்வே இதற்குக் காரணம். அதாவது நிறைவேற்று அதிகாரம். இது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். கடந்த இரண்டு மாதத்தில் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்படைந்தது. எத்தனையோ முதலீட்டு வாய்ப்புகள் நாட்டிற்கு இல்லாமல் போனது. ரூபாவின் வீழ்ச்சி அதிகரிப்பை காட்டியது. அதன் விளைவால் அரசாங்கத்திற்கு இந்த மாதம் மிகப்பெரும் கடனொன்றை நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்த நாட்டில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

டிசம்பரில் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் நாடு அழிவிலிருந்து மீட்டெக்கப்பட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment