Features உலக செய்திகள் சர்வதேசம்

உடைப்பெடுக்கும் சவூதி-அமெரிக்க உறவுகள்

Written by Administrator
  • றவூப் ஸெய்ன்

2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். ஏனெனில், 50 ஆண்டுகளுக்கு முன்னர் 1969 இல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரிச்சட் நிக்சன் தனது வெளிநாட்டுக் கொள்கையை நிக்சன் கொள்கை என்ற பெயரில் பிரகடனம் செய்து 2019 உடன் சரியாக 50 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

நிக்சன் கொள்கையின் மூலோபாயம் என்னவெனில், அமெரிக்காவுடன் நேசம் பாராட்டும் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்களை அடைவதற்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்கும் என்பது தான். நிக்சனின் வெளிநாட்டுக் கொள்கையில் மத்திய கிழக்கிற்கான அவரது அணுகுமுறை இரட்டைத் தூண்கள் (Twin Pillers) எனப்பட்டது.

அதாவது வளைகுடாவின் பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் அமெரிக்க நலன்களைக் காப்பதற்கான வழி ஈரான், சவூதி அறேபியா ஆகிய இரண்டு நாடுகளையும் அமெரிக்காவின் நேச சக்திகளாக வைத்திருப்பதுதான் என நிக்சன் கருதினார். மிக எளிமையாகச் சொல்வதாயின், மத்திய கிழக்கில் அமெரிக்க நலன் ஈரான், சவூதி ஆகிய இரு தூண்களில் எழுந்து நிற்கும். நிக்சனின் இக்கொள்கையினால் இவ் விரு நாடுகளும் மத்திய கிழக்கின் பொலிஸ்காரர்களாக மாறின.

சோவியத் ஒன்றியத்தின் கீழ் வளைகுடா பிராந்தியம் வந்துவிடக் கூடாது என்பதிலும் உலகச் சந்தைக்கு வளைகுடாவின் எண்ணெய் வளம் தங்கு தடையின் வேண்டும் என்பதிலும் நிக்சனின் வெளிநாட்டுக் கொள்கை குறியாய் இருந்தது.

துரதிஷ்டவசமாக ஒரு தசாப்தம் கடந்து ஈரானில் நடந்த ‘இஸ்லாமியப் புரட்சி” ஷாவின் பாரம்பரிய அரசைக் கவிழ்த்தது. அதனால் அமெரிக்காவின் நேச நாடு என்ற வட்டத்திலிருந்து ஈரான் இடம் மாறியது. அமெரிக்காவின் கூலியாகவும் சர்வதிகாரியாகவும் வீற்றிருந்த ஷாறிஸா பஹ்லவி, கொமைனியின் புரட்சியினால் தூக்கியெறியப்பட்டதோடு ஈரானை அமெரிக்கா கைகழுவியது.  ஒரு தூண் உடைந்து நொறுங்கியது.

1979 இற்குப் பின்னர் வளைகுடாவில் அமெரிக்காவின் ஒற்றைத் தூணாகவும் பிராந்திய நலன் காக்கும் கருவியாகவும் சவூதி அறேபியா மாறியது. அடுத்து வந்த நான்கு தசாப்தங்களில் தொடர்ச்சியாக வளைகுடாப் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் பங்காளியாக சவூதி அறேபியா மாற்றப்பட்டது. 50 ஆண்டை நெருங்கிக் கொண்டி ருக்கும் இந்த உறவில் இப்போது ஒரு புதிய வெடிப்பு உருவாவதற்கான தருணம் பிறந்துள்ளது.

2018 இல் சவூதியின் பட்டத்துக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் பங்கு குறித்து மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் வளைகுடாவில் நிலவின. ஆனால், சவூதியின் வெளிநாட்டுக் கொள்கை பல பிழையான கட்டங்களைத் தாண்ட முயன்றபோது நிலைமை தலைகீழாய் மாறியது. அதில் வளைகுடாவிலேயே மிக வறிய நாடாகக் கருதப்படும் யெமன் மீது சவூதி தலைமை தாங்கி நடத்தி வரும் சர்ச்சைக்குரிய போர் மற்றும் கட்டார் மீதான பொருளாதார, ராஜதந்திரத் தடை, இவற்றின் விளைவாக வளைகுடா ஒப்பந்த நாடுகள் சபையில் ஏற்பட்டுள்ள சரிவு என்பனவெல்லாம் பின் சல்மானின் தூர நோக்கற்ற மூலோபாயத் தவறுகள் என்பதை அமெரிக்க காங்கிரஸ் வெகுவாக உணர்கிறது.

அதன் விளைவாகவே காங்கிரஸ் பின் சல்மானுக்கு எதிரான தீர்மானங்களை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டில் நிறைவேற்றியது. பின் சல்மான் தொடர்ந்தும் பதவியில் இருக்கத் தகுதியானவரா என்ற கேள்வியை இந்நகர்வுகள் எழுப்பியுள்ளன. அதிகாரத்தை மென்மேலும் மத்தியில் குவிப்பதற்கான அவரது முயற்சி அவர்களது மன்னராட்சிப் பாரம்பரியத்தையே உடைத்துப் போட்டுள்ளது. இளவரசர் களுக்கிடையிலான அதிகாரச் சமநிலையை ஆட்டம் காணச் செய்துள்ளது. அரண்மனைக்குள் உட்பூசல்களையும் வெறுப்பையும் உருவாக்கி விட்டுள்ளது. மன்னர் குடும்பத்தின் ஸ்திரப்பாட்டைக் குலைத்துள்ளது.

இறுதியில் இது 2030 ஆம் ஆண்டுக் கான தொலைநோக்கு மூலோபாயம் சவூதியின் பொருளாதார அபிவிருத்தியை எந்தளவுக்குச் சாத்தியமாக்கும் என்ற கேள்வியை பலமாக எழுப்பியுள்ளது. முற்கூட்டியே நன்கு திட்டமிட்டு சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷூகி ஸ்தன்பூல் துணைத் தூதரகத்தில் கொல்லப்பட்டமை பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நான்கு மாதங்கள் கடந்தும் அந்த அதிர்வலைகள் இன்னும் ஓய வில்லை.

கஷூகியின் படுகொலை குறித்த அமெரிக்கக் காங்கிரஸின் அக்கறை, அமெரிக்க-சவூதி உறவில் பாரிய விரிசலொன்றை உருவாக்கப் போவதற்கான ஆரம்பமாகும். காங்கிரஸின் நகர்வுகளை உன்னிப்பாக அவதானித்தால் இந்த உண்மையே நமக்குப் புலனாகின்றது. நிக்சன் அறிமுகப்படுத்தி கடந்த 50 ஆண்டு காலம் அமுலில் இருந்த வெளிநாட்டுக் கொள்கையின் மீது இதுவொரு பேரிடியாகும். காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் பலர் ரியாதுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பின் சல்மானே இப்படுகொலையின் சூத்திரதாரி என்றும் பகிரங்கமாகவே குரலெழுப்பினர்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் லின்ட்சே க்ரஹாம், “முஹம்மத் பின் சல்மானே இக் கொலைக்குக் காரணம். அவர் பதவி யிலிருந்து நீக்கப்பட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார். எனவே 2019 அமெரிக்க-சவூதி உறவில் ஒரு புதிய திசைவழியை உருவாக்கியுள்ளது. அமெரிக்கக் காங்கிரஸின் நிலைப்பாட்டைப் பொறுத்தே இந்த உறவின் எதிர்காலம் அமையப் போகின்றது.

அமெரிக்க அரசியலமைப்பின் படி வெளியுறவுக் கொள்கை வகுக்க வேண் டியது ஜனாதிபதியின் அதிகாரத்தின் பாற்பட்டது. எவ்வாறாயினும், அமெரிக்கக் காங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை தொடர்பான சட்டத்தில் தலையீடு செய்யும் இயற்றுவதற்கான அதிகாரம் கொண்டுள்ளது. காங்கிரஸ் மறைமுகமாகக் கொண்டு வரக் கூடிய சட்டங்களை ஜனாதிபதி ஏற்க வேண்டிய நிலையும் உள்ளது. அல்லது ஜனாதிபதியின் அதிகாரத்தில் தலையீடு செய்வதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது.

1990 இல் பில் கிளின்டன் நிருவாகம் ஈரானை அச்சுறுத்தி பல சட்டங்களைக் கொண்டு வந்தபோது காங்கிரஸ் அதில் தலையீடு செய்தது. ஈரான் மீதான கடும் பொருளாதாரத் தடைகளைத் தணிப்பதில் ஆதரித்து வாதிடும் குழுவாக (Advocacy Group) காங்கிரஸ் செயல்பட்டது. 1995 இல் ஈரான் வெளி நாட்டுத் தடைச் சட் டம் இயற்றப்பட்டது. 1996 இல் லிபியா வின் மீதான தடைச் சட்டம் அமுலுக்கு வந்தது.

ஈரான் மீதான சட்டம் பொருளாதார மற்றும் ஆயுத வணிகத் தடைகளை விதிப்பதற்குப் பிரயோகிக்கப்பட்டது. ஈரானின் சக்திவளத் துறையில் 20 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக மாக முதலீடு செய்த சர்வதேசக் கம் பனிகள் மீதான பொருளாதாரத் தடைக்கும் இது இட்டுச் சென்றது. பில் கிளின்டன் ஈரானுடன் பயன்பாட்டுவாதத்தின் அடிப்படையில் செயல்படவே விரும்பினார். தொடர்ந்து ஒபாமாவும் அதே வகையான கொள்கையையே கடைப்பிடித்தார். அதற்கு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி ஆதரவு கிடைத்தது.

கிளின்டன் இதற்குக் கையொப்பமிட்டார். காங்கிரஸ் இதனை கடுமையாக எதிர்த்தது. அதனால், கிளிண்டன் மாற்றுத் திட்டமொன்றை வரைவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். ஜனாதிபதிக்குள்ள ரத்து அதிகாரத்தை (Veto Power) காங்கிரஸ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் வெல்ல முடியும் என்பதே கடந்த கால வரலாறு. அதாவது, ஜனாதிபதியின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அவருக்குள்ள ரத்து அதிகாரத்தை காங்கிரஸ் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் தோற்கடிக்க முடியும். ஒபாமாவின் இரண்டாம் பதவிக் காலத்தில் இது நிகழ்ந்தது.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நிதிச் சட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவளித்தது. ஆனால், 9/11 தாக்குதலில் பலியானவர்களுக்கு சவூதியிடமிருந்து நஷ்டஈடு பெற முடியும் என்ற சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தபோது ஒபாமா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை இல்லாமலாக்க முயன்றார். காங்கிரஸ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் அவரது ரத்து அதிகாரத்தைத் தோற்கடித்து 9/11 பலியானவர்களுக்கு சவூதி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற சட்டத்தை உறுதியாக நிறைவேற்றியது.

அமெரிக்க ஜனாதிபதியை விட காங்கிரஸின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் நினைத்தால் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும் என்பதையே இது காட்டுகின்றது.

முன்னைய ஜனாதிபதிகள் போலவே டொனால்ட் ட்ரம்பும் தனக்கென்று சில கொள்கைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகின்றார். குறிப்பாக மத்திய கிழக்கு தொடர்பாக ட்ரம்பின் அணுகுமுறைகள் மிக அதிரடியானது. ஆனால், அவரது தீர்மானங்களை முடக்கவோ தடுக்கவோ காங்கிரஸினால் முடியும் என்பதை அவர் மறந்து போக வாய்ப்பில்லை.

சவூதி அறேபியாவிலிருந்து அமெரிக்கா அதிக பயன்பெற வேண்டும் என்பதில் ட்ரம்ப் மிகக் குறியாய் உள்ளார். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவிடமிருந்து ஆகக் கூடிய ஆயுதங்களைப் பெறும் நாடு சவூதி. இந்த கொடுக்கல்-வாங்கலை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இது அமெரிக்காவுக்குத் தேவை.

இரண்டாவது, இந்நூற்றாண்டின் கொடுக்கல்-வாங்கல் (Deal of the Century)  என அறியப்படும் திட்டத்திற்கு சவூதி முழு ஆதரவு வழங்கும் என்பது ட்ரம்பின் நம்பிக்கை. அதாவது, இஸ்ரேலை ஏக நாடாக ஏற்றுக் கொண்டு, பலஸ்தீன் அகதிகளுக்கு மத்திய கிழக்கில் மாற்று நிலங்களை வழங்குவதன் மூலம் அனைத்து அறபு நாடுகளுடனான இஸ்ரேலிய உறவை சுமுகமாக்குவதற்கு சவூதி ஆதரவைத் திட்டடும் என இந்த ஒப்பந்தம் கூறுகிறது.

மூன்றாவது பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிரான அறபு நேட்டோ ஒன்றை உரு வாக்குவதற்கு சவூதி முழு ஆதரவளிக்கும் என்பது ட்ரம்பின் நிலைப்பாடு. இதற்காக சவூதி அறேபியாவை சகல விதமான கொலைக் குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்களிலிருந்து விடுவிப்ப தற்கும் காப்பாற்றுவதற்கும் அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறார். ட்ரம்பின் இந்தக் கொள்கை 2019 இல் நீடிக்க முடியாது என்பதே பெரும்பான்மையான காங்கிரஸ் உறுப்பினர்களின் நிலைப்பாடாகும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஊடாக ட்ரம்பின் தீர்மானங்களை முடக்குவதற்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதனால் சவூதி-அமெரிக்க உறவுகளில் பெரும் வெடிப்பொன்று உருவாக்கப் போகின்றது.

ரிச்சட் நிக்சனின் மத்திய கிழக்கு தொடர்பான வெளிநாட்டுக் கொள்கை 2019 உடன் முடிவுக்கு வர வேண்டும் என்பதே காங்கிரஸில் உறுப்பினர்கள் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இது எவ்வளவு சாத்தியப்படும் என்பதை காங்கிரஸின் அடுத்த கட்ட நகர்வுகளை வைத்தே நாம் மதிப்பீடு செய்யலாம்.

அனைத்தையும் தாண்டி, அமெரிக்க- சவூதி வெளியுறவுக் கொள்கையில் ஒரு பேரிடி விழுந்துள்ளது என்பது மாத்திரம் கஷூகியின் படுகொலை மூலம் உறுதியாகி விட்டது.

About the author

Administrator

Leave a Comment