Features நாடுவது நலம்

வெனிசுவேலா: அமெரிக்காவின் அடுத்த குறியா?

Written by Administrator

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் | நாடுவது நலம்

இன்று முழு உலகினதும் அவதானம் வெனிசுவேலாவின் அரசியல் நெருக்கடி மீது குவிந்துள்ளது. இந்நெருக்கடியில் பல்வேறு தரப்புகள் சம்பந்தப்படுகின்றனர். ஒன்று வெனிசுவேலாவை ஆளும் இடதுசாரி முகாமுடன் தொடர்புபட்ட ஜனாதிபதி மதுரோ. மறு பக்கத்தில் வெனிசுவேலாவின் பொருளாதாரப் பிரச்சினை உள்ளிட்ட இதர பிரச்சினைகளை மையமாகக் கொண்டு ஆட்சியை மாற்றுவதற்கு மக்கள் மத்தியில் உருப்பெற்றிருக்கும் ஆட்சிபீடத்திற்கு எதிரான எதிர்ப்புகளை சாதகமாகப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா.

வெனிசுவேலாவில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்க வேண்டும் எனக் கூறி அமெரிக்கா சகல மக்களிடமும் ஒத்துழைப்பை வேண்டி அறைகூவல் விடுத்திருக்கிறது. அமெரிக்கா ஈராக் லிபியா தொடர்பிலும் இவ்வாறு தான் தலையிட்டிருந்தது. ஈராக் மற்றும் லிபியா எண்ணெய் வளம் கொண்ட நாடுகளாகும். வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்கே அமெரிக்கா முயற்சிக்கிறது என அந்நாட்டின் ஜனாதிபதி மதுரோ தெரிவித்துள்ளார். வெனிசுவேலாவின் ஆட்சியை மாற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அமெரிக்கா அந்நாட்டு இராணுவத்திடமும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது தவிர இந்நாட்டு அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கும் வர்த்தகத் தடங்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது அமெரிக்கா.

எண்ணெய் வர்த்தகத்தில் இதுவரை வெனிசுவேலாவிற்கு 11 பில்லியன் டொலர் நஷ்டத்தை ஏற்பத்தியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள வெனிசுவேலாவின் வங்கிச் சொத்துக்களை பயன்படுத்த அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. வெனிசுலாவின் எதிர்கட்சித் தலைவரே தற்போதைய ஜனாதிபதியென அமெரிக்கா கூறுகிறது. இதற்கிடையில் வெனிசுவேலாவின் சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதை தடைசெய்துள்ளது. அத்துடன் அவரது வங்கிக் கணக்கை பயன்படுத்துவதும் அவருக்கு தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா தங்களது வங்கிக் கணக்கை பயன்படுத்தும் அனுமதி எதிர்க்கட்சித் தலைவரான ஜனாதிக்கு மாத்திரமே உள்ளதென தெரிவிக்கின்றது. ஆச்சரியமிக்க நெருக்கடியில் இன்று வெனிசுவேலா சிக்கித்தவிக்கின்றது.

தற்பொழுது வெனிசுவேலாவில் 40இற்கும் அதிகமான உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன. ஒருநாளைக்கு 3 இலட்சம் மசகு எண்ணெய் கொள்கலன் உற்பத்தி குறைந்திருக்கிறது. அமெரிக்க அழுத்தங்களின் காரணமாக வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தி 1990ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வீழ்ச்சி கண்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்காவின் சட்டரீதியற்ற செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் சட்டத்தினால் மேற்கொள்ள முடியுமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் அமெரிக்கா தங்களது எண்ணெய் வளங்களை சூறையாடவே பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கிறது என்றும் வெனிசுவேலாவின் ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஜோன் ரீடோவிற்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அமெரிக்க ஆதரவு மேற்கு நாடுகளும் இதற்கு ஆதரவாக உள்ளன என்றும் அமெரிக்கா தெரிவிக்கிறது. இது மிக ஆச்சரியமானதொரு நிலை. இது விடயம் குறித்து முழு உலகமும் சிந்திக்க வேண்டிய காலம் உருவாகியிருக்கிறது.

 இன்று அமெரிக்கா ஜனநாயகத்தை வழங்குவதற்காக சகல வளங்களும் உள்ள நாடுகளிலேயே மூக்கு நுழைக்கிறது. எகிப்து போன்ற இராணுவ ஆட்சி நிலவுகின்ற நாட்டிற்குள் ஏன் அமெரிக்கா நுழைவதில்லை? தீவிர மன்னராட்சி நிலவுகின்ற நாடுகளுக்கு ஏன் அமெரிக்கா செல்வதில்லை? ஒன்றில் அமெரிக்காவிற்கு கட்டுப்பட வேண்டும். அவர்களது பொருளாதார வளங்களை கொடுத்து அமெரிக்காவை செழிப்பாக்க வேண்டும்.

இல்லாவிட்டால் ஈராக், லிபியா போன்ற நிலையே அந்த நாடுகளுக்கு உருவாகும். உலகில் அமைதியை நிலைநாட்டுவதாகக் கூறியே ஐநா சபை உருவாக்கப்பட் டது. ஆனால் ஐநா சபையில் அதிக வீட்டோ அதிகார முள்ள நாடுகளே அதிக ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றன. பிரச்சினைகளை உருவாக்க முனைவது அவர்கள் தான். இது குறித்து பொறுமையாக நோக்கி நீதி நியாயமான உலகை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டிய காலம் எழுந்துள்ளது.

About the author

Administrator

Leave a Comment