Features ஆசிரியர் கருத்து

உண்மையான சுதந்திரம்

Written by Administrator
  • Editorial: MP 412

இலங்கைத் தாய்த் திருநாடு 443 வருட கால காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டு 71 வருடங்கள் ஆகின்றன. கடைசியாக ஆங்கிலேயருடைய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று நம்மை நாமே ஆளுகின்ற சுதந்திரம்  பெப்ரவரி 04 ஆம் திகதி எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

ஆனால் இந்தச் சுதந்திரத்தை நாங்கள் எப்படிப் பயன்படுத்தியிருக்கிறோம் என்பது இந்த ஏழு தசாப்த காலத்தில் மீளாய்வு செய்யப்பட வேண்டியிருக்கிறது. பொருளாதார ரீதியாக இலங்கை இன்னும் அடிமை நாடாகவே இருக்கி றது. சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாகப் பெற்றுக் கொண்ட கடன்கள் அடைக்கப்பட முடியாமல் இலங்கை பெரும் கடன் பொறியில் சிக்கியிருக்கிறது. இதனூடாக இலங்கை பல்வேறு கடப்பாடுகளுக்குத் தலைசாய்க்க வேண்டியிருக்கிறது. சுதந்திரமாக ஒரு நீதிமன்றத்தைக்  கூட நடத்திச் செல்ல முடியாத அளவுக்கு சர்வதேச தலையீடுகள் அதிகரித்திருக்கின்றன.

மனித நேயம், அகிம்சைகளுக்கெல்லாம் முன்னுரிமை வழங்கிய நாடு, இன்று சர்வதேசத்தின் அழுத்தங்களின் காரணமாக இவை எல்லாவற்றையும் கைவிட வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது. உலகின் பல நாடுகள் பலஸ் தீனப் பிரச்சினையை மனிதாபிமான ரீதியில் அணுகும் பொழுது இலங்கை அதற்கு மாற்றமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அளவுக்கு இலங்கை அதன் சுயாதீனத்தை இழந்திருக்கிறது. மனிதாபிமானத்தைக் கூட யாரிடமும் அனுமதி கேட்டுத்தான் வெளிக்காட்ட வேண்டிய இழிநிலைக்கு இலங்கை வந்தடைந்திருக்கிறது.

ஜீஎஸ்பி சலுகைகளின் மூலமும் ஐரோப்பிய யூனியனு டைய உதவிகள் மூலமும் இலங்கை ஏற்றுக் கொண்டுள்ள கடமைப்பாடுகள் இலங்கையின் சுயாதீனத்தை அடகு வைத்திருக்கின்றன. யுத்தக் குற்றங்கள் என்ற போர்வையில் இலங்கை மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கை நவ காலனித்துவத்துக்கு உட்பட்டுள்ளமைக்கான தெளிவான அடையாளங்கள் பொதுவெளியில் தெரிகின்றன. அது முன்னர் போல ஒரு நாட்டின் ஆக்கிரமிப்பாகவன்றி பல்வேறு நாடுகளும் தனியாகவும் கூட்டாகவும் இலங்கையை ஆக்கிரமித்துள்ள நிலையையே சுதந்திரம் கிடைத்து 71 வருடங்களாகும் போது இலங்கை பெற்றிருக்கிறது.

இலங்கை எப்படிச் சீனாவாக மாறியது என்று ஆய்வொன்றே செய்ய முடியுமான அளவுக்கு சீனாவின் ஆதிக்கம் நாட்டில் அதிகரித்திருக்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு விடுதலை பெற முடியாத அளவுக்கு சீனாவின் கடன் பொறி இலங்கையை அழுத்திக் கொண்டி ருக்கிறது. அம்பாந்தோட்டைத் துறைமுகம், அதனைச் சுற்றியுள்ள துறைமுக நகரம், கொழும்புத் துறைமுக நகரம் என நாட்டின் நிலம் துண்டாடப்பட்டு இந்த நிலங்களில் நாட்டின் சுயாதிக்கம் இழக்கப்பட்டிருக்கிறது.

மறுபுறத்தில் இலவசம் என்ற பெயரில் இந்திய உதவித் திட்டங்களின் ஊடாக இலங்கை இந்திய ஆக்கிரமிப்புக்கு ட்படுத்தப்பட்டிருக்கிறது. நாட்டில் யாரொல்லாம் பயங்கரவாதிகள் என்பதைக் கூட இந்தியா சொல்லிக் காட்டித் தான் அறிந்து கொள்ள வேண்டிய நிலைக்கு இலங்கை மாறிப் போயிருக்கிறது. இனி நாட்டில் எதனைச் செய்தாலும் யாரிடமாவது அனுமதி பெற்றுத் தான் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறது.

இந்த நிலை இலங்கை சுதந்திரமாகச் செயற்படுவதற் கான சூழலை இலங்கை இழக்கச் செய்திருக்கிறது. ஆகவே புதியதொரு சுதந்திரப் போராட்டம் புதிய தலைமுறையின் முன்னால் சுமத்தப்பட்டிருக்கிறது. பல்வேறுவிதமான ஆக்கிரமிப்புக்களில் இருந்தும் நாட்டை விடுதலை பெறச் செய்தாலே ஒழிய அடுத்த தலைமுறைக்கு சுதந்திர நாடொன்று கிட்டுவதற்கு வாய்ப்பில்லை.

About the author

Administrator

Leave a Comment