உலக செய்திகள் சர்வதேசம்

சூடானில் தொடர்ந்தும் மக்கள் ஆர்ப்பரிப்பு

Written by Administrator

சூடானில் தொழிற்சங்கங்கள் தமது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. மருத்துவ சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதோடு, தேசிய மின்சக்திக் கூட்டுத் தாபனம் நாடு தழுவிய பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அந்நிறுவனத்தின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் தொடர்ந்தும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதால் பல இடங்களில் மின்சாரப் பழுது பார்க்கும் வேலைகள் ஸ்தம்பித்துள்ளன.

சில பகுதிகளில் மின்சாரம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 இல் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று தொடக்கத்தில் கூறப்பட்டுள்ளபோதும் தேசிய மின்சக்திக் கூட்டுத்தாபன ஊழியர்களின் திட்டமிட்ட ஒரு வெள்ளோட்டமே இது என்று பின்னர் அறியக் கிடைத்தது.

தற்போது அமுலில் உள்ள அமெரிக்கப் பொருளாதாரத் தடையினால் புதிய மின்சக்தி ஆலைகளை உருவாக்குவதில் சூடான் மிகப் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. டிசம்பர் 19 ஆம் திகதியிலிருந்து நாடு தழுவிய ரீதியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டங்கள், வீதி மறியல் பேரணிகள் உள்ளடங்குகின்றன.

சூடானின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளதோடு, இதுவரை இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

எகிப்தின் அறபு வசந்தத்தை சூடானில் சிலர் பிரதி செய்கின்றனர் என ஜனாதிபதி உமர் பஷீர் எதிர்க்கட்சிகளையும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரையும் குற்றம் சுமத்தியுள்ளார். ஆயினும், நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அரசியல் நிலவரங்கள் காட்டி நிற்கின்றன.

About the author

Administrator

Leave a Comment