பலஸ்தீன

நிக்கொலஸ் மதுரோவுக்கு ஆதரவாக காஸாவில் மக்கள் பேரணி

Written by Administrator

தற்போது சதிப் புரட்சியொன்றை எதிர்கொண்டுள்ள வெனிசுவேலா ஜனாதிபதி நிகலொஸ் மதுரோவுக்கு ஆதரவாக காஸா பள்ளத்தாக்கில் பலஸ்தீனர்கள் ஆதரவுப் பேரணியொன்றை நிகழ்த்தியுள்ளனர். பலஸ்தீன் விடுதலைக்கான ஜனநாயக முன்னணி ஏற்பாடு செய்த ஆதரவுப் பேரணி காஸாவிலுள்ள ஐ.நா. கட்டடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

பேரணியில் கலந்துகொண்ட முன்னணி உறுப்பினர் தலால் அபூ ஸரீபா, “நாம் வெனிசுவேலாவுக்கும் அதன் அரசாங்கத்திற்கும் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மதுரோவுக்கும் எமது முழு அளவிலான ஆதரவைத் தெரிவிக்கின்றோம். வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல் மற்றும் குரோதத்திற்கு எதிராக வெனிசுவேலா மக்களின் கண்ணியத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நாம் மதிப்பளிக்கின்றோம் எனத் தெரிவித்த அபூ ஸரீபா, வெனிசு வேலாவில் அமெரிக்கத் தலையீட்டை நிராகரிக்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.

இவ்வருடம் ஜனவரி 10 ஆம் திகதியிலிருந்து வெனிசுவேலாவில் மிகப் பெரும் அரசியல் குழப்பம் நீடிக்கின்றது. நடைபெற்ற தேர்தலை அடுத்து இரண்டாம் தவணைக்காக மதுரோ சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜுவான் குய்டோ தானே ஜனாதிபதி என்று சுய பிரகடனம் செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குய் டோவை இடைக்காலத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை, பொலிவியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் மதுரோவே அரசாங்கத்தின் தலைவர் என்று வலியுறுத்தியுள்ளன. ஆனால் ஆஜன்டினா, சிலி, கொலம்பியா, ஈகுவ டோர், குவாட்டமாலா, பனாமா, பராகுவே, கொஸ்டாரிகா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் பக்கம் சாய்ந்துள்ளன.

வெனிசுவேலாவில் அமெரிக்கத் தலையீடு கண்டிக்கத்தக்கது என்று ரஷ்யாவும் சீனாவும் அறிவித்துள்ளன.

About the author

Administrator

Leave a Comment