Features கல்வி சமூகம்

ரமழானில் பாடசாலை: வேண்டுமா? வேண்டாமா ?

Written by Administrator

ஆசாத் சாலியின் கருத்திற்கு கல்விமான்களின் பதில் என்ன?

“60 வீதம் சிறந்தது, 40 வீதம் சிறந்ததல்ல”

எச்.எல்.எம். ஜெஸீன் – உதவிக் கல்விப் பணிப்பாளர், கம்பஹா கல்வி வலயம்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் இது விடயம் தொடர்பில் எஸ்.எச்.எம் ஜெமீல் தலைமையில் கல்வியமைச்சில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அப்போது நான் அல்முபாரக் தேசிய பாடசா லையின் அதிபராக இருந்தேன். நானும் அக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தேன். எமது குழு சார்பில் நோன்பு காலத்தில் பாடசாலை நடாத்தப்பட்டால் சிறந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. எனினும் கலந்துரையாடலின் முடிவில் இவ்விடயம் எமது உரிமை சம்பந்தப்பட் டது என்றபடியாலும் இவ்வளவு காலமாக அனுபவித்து வந்த விடயம் என்பதனாலும் அது அப்படியே தொடர்ந்திருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பில் உள்ள முன்னணிப் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் கற்கிறார்கள். நோன்பு விடுமுறையிலும் சில முஸ்லிம் மாணவர்கள்  தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலை களுக்குச் செல்கிறார்கள்.  இப்படிப் பார்க்கும் போது நோன்பு விடுமுறையில் பாடசாலை நடாத்துவது சிறந்தது. மற்றொரு புறத்தில் நோன்பு விடுமுறையில் பிள்ளைகள் சோம்பேறியாகின்றனர். படிக்கின்ற வீதமும் குறைவு. நோன்பு முடிவடைந்து பாடசாலை வரும் போது அந்தப் பிள்ளைகளின் கல்வியறிவு வீதம் வீழ்ச்சியடைந்திருக்கும். ஆண் பிள்ளைகள் தராவீஹ் என்ற பெயரில் வீதிகளில் சுற்றுவதால் இரவு நேரங்களிலும் அவர்கள் படிப்பதும் குறைவு.

எனவே இப்படியான விடயங்களை கருத்திற் கொள்ளும் போது நோன்பில் பாடசாலை வைப்பது நல்லது. இன்னுமொரு புறத்தில் இந்த விடுமுறையை சேர் ராசிக் பரீத் போன்றவர்கள் போராடிப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் போராடிப் பெற்ற உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் சொல்கிறார்கள். அந்த வகையில் பார்க்கப் போனால் அதுவும் நியாயமான விடயம்தான். நோன்பு விடுமுறையில் பிள்ளைகளும் ஆசிரியர்களும் காலத்தை வேறு விடயங்களில் பயன்படுத்துவதில் பிரயோசனப்படுத்துகிறார்கள். பொதுவாக நோக்கினால் நோன்பு விடுமுறையில் பாட சாலையை நடாத்துவது 60 வீதம் சிறந்த தென்றும் 40 வீதம் சிறந்ததல்ல என்றும் குறிப்பிட முடியும்.

“அரசாங்கமே இந்தத் திட்டத்தை அமுல்படுத்தாத போது நாங்கள் ஏன் இதற்கு அவசரப்பட வேண்டும்”

கஸ்ஸாலி அஸ்ஸம்ஸ் – அதிபர், அல் பலாஹ் மஹா வித்தியாலயம், நீர்கொழும்பு

ஆளுநர் சில நேரம் கல்விப் பகுதியைப் பார்த்து அப்படிச் சொல்லியிருப்பார். ஆனால் ரமழான் மாதமென்பது புனித மானதொரு மாதம். வணக்க வழிபாடுகளுக்குரிய மாதம். இந்த அடிப்படையில் எமது முன்னோர்கள் பெற்றுத்தந்த உரிமையே ரமழான் விடுமுறை. படிப்படியாக எமது உரிமைகளில் கைவைத்துக் கொண்டு வரும் எமது நாட்டில் இருக்கும் உரிமை களை நாங்களே பறிகொடுப்பதா? இது மாத்திரமல்லாமல் இவ்வுரிமையை நாங்கள் விட்டுக் கொடுத்தால் ஏனைய மாகாணங்களுக்கும் இந்த நோய் தொற்றி விடும். அதுமாத்திரமல்லாமல், தற்பொழுது பாடசாலை விடுமுறையை பிடிப்பார்கள். இன்னும் கொஞ்ச நாளில் மற்றைய விடயங்களிலும் கைவைப்பார்கள்.

இதே கருத்தை கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் முன்வைத்தால் ஒரே தடவையில் இதனை மறுத்துவிடுவார் என நான் நினைக்கிறேன். எமது கரங்களால் எமது கண்ணைக் குத்திக்கொள்ளும் முயற்சியாகவே நான் இதனைக் காண்கிறேன். ஆளுநரின் கனவு நனவானால் நிச்சயமாக ரமழான் விடுமுறையில் ஆசிரியர் மாணவர்களின் வரவு குறையும். பாடத் திட்டத்தை ஒழுங்கான முறையில் அமுல்படுத்த முடியாத நிலையேற்படும். ரமழான் கால இரவு நேர வணக்கத்தில் ஈடுபடும் பிள்ளைகள் களைப்பில் அப்படியே தூங்கி விடுவார்கள். அரசாங்கமே இந்தத் திட்டத்தை அமுல்படுத்தாத போது நாங்கள் ஏன் இதற்கு அவசரப்பட வேண்டும்?

இஸ்லாமிய விரோத அமைப்புக்கள் இதன் பின்னணியில் இருக்கின்றதோ என்று நாங்கள் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் எமது கையாலேயே எம்மைத் தாக்கும் திட்டம் கனகச்சிதமாக அரங்கேற்றப்படுகிறது. அதன் ஓர் அங்கமாக இது அமைந்துவிடக்கூடாது. முஸ்லிம் பாடசாலைகளில் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய அதிகமான விடயங்கள் உள்ளன. ஒன்று வளப்பற்றாக்குறை, ஆசிரியர் வலுவூட்டல் இல்லை, ஆசிரியர்களுக்கான பயிற்சிகளின்மை, ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் நடைபெறாமை, மேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு பொதுவான பரீட்சைத் திட்டத்தை கொண்டுவந்தால் பரீட்சைகள் சிறந்த முறையில் நடைபெறும். இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியிருக்கிறது. காலா காலமாக புரையோடிப்போயிருக்கும் இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையில் எமக்கென வழங்கப்பட்டிருக்கும் உரிமையில் கைவைப்பது ஆரோக்கியமான விடயமாக அமையாது.

“நோன்பில் பிரத்தியேக வகுப்புக்களுக்குச் சமுகளிக்க முடியும் என்றிருந்தால் பாசாலைக்கு ஏன் வர முடியாது”

எம்.ஆர்.எம். ரிஸ்கி –

அதிபர், அல் ஹூமைஸரா தேசிய பாடசாலை, பேருவலை

முஸ்லிம் பாடசாலைகள் ஏனைய பாட சாலைகளுடன் சேர்ந்தே இயங்குகின்றன. மேல் மாகாணத்தை எடுத்துக் கொண்டால் முஸ்லிம் பாடசாலைகளைப் போன்று கணிசமான அளவு தமிழ் பாடசாலைகளும் உள்ளன. நோன்பு காலத்தில் நாம் விடுமுறையை தனியாக எடுப்பதால் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படுகிறது. கல்வி அமைச்சு முஸ்லிம் பாடசாலைகளுக்கென்று தவணைகளை திட்டமிடும் போது விஷேடமாக நோன்பு காலத்தில் வருகின்ற பரீட்சையில் எமது பிள்ளைகளுக்கு பாதிப்பேற்படுகிறது. உதாரணமாக ஜூலை 15ஆம் திகதி ஏனைய பாடசாலைகளின் தவணையும் ஜூன் 15ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளின் தவணையும் முடிவதாக வைத்துக் கொள்வோம். எனவே ஜூன் 15ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சையை நடாத்தி முடிப்பார்கள்.

இதனால் பிள்ளைகளுக்கு கற்பிக்காமல் எமக்கு பரீட்சையை நடாத்த வேண்டியேற்படுகிறது. நோன்பு காலம் மாறி மாறி வருவதால் மாணவர்களின் நேரம் விரையமாவதுடன் கல்வி ரீதியில் அவர்களுக்கு பாதிப்பாகவும் அமைகிறது. தமிழ்த் தினப் போட்டிகளிலும் வலய மட்ட விளையாட் டுப் போட்டிகளிலும் இந்தக் காலப்பகுதியில் மாணவர்களுக்கு உரிய முறையில் பங்குபற்ற முடியாமல் போகின்றது. இது தவிர நோன்பு காலத்தில் விடுமுறை வழங்கப்படுதால் பெரும்பாலான மாணவர்கள் அந்த விடுமுறையை சிறந்த முறையில் பயன்படுத்துகிறார்களில்லை. இரவு நேரங்களில் நண்பர்களுடன் கூடி அரட்டை அடிப்பதிலும் வீணான விடயங்களிலுமே காலத்தைக் கழித்துவிடுகிறார்கள். நேரத்தை வீணாகக் கழித்து விடுகிறார்கள்.

எனவே நோன்பு காலத்தில் பாடசாலை நடைபெறுமாக இருந்தால் இந்த விடயம் ஓரளவுக்கு ஒழுங்குபடுத்தப்படும் என நான் நினைக்கின்றேன். அத்தோடு நோன்பு காலத்தில் நாம் உத்தியோகபூர்வமற்ற சில வகுப்புக்களையும் பாடசாலையில் நடாத்துகிறோம். அதில் பெரும்பாலான மாணவர்கள் வந்து கலந்துகொள்கின்றனர். எனவே அதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லா விட்டால் மாணவர்களுக்கு பாடசாலை வருவதில் பிரச்சினை ஏற்படப்போவ தில்லை. ஆனால் பாடசாலை துவங்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரத்தில் சிறிய மாற்றத்தை கொண்டுவந்தால் அது நன்றாக இருக்கும். இருந்தாலும் முஸ்லிம் பாடசாலைகளில் பணியாற்றும் மாற்று மதத்தை சேர்ந்த கல்விசாரா ஊழியர்கள் காணப்படுகின்றனர். அவர்களும் சேவைக்கு சமுகமளிப்பதில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாமல் இவ்விடயத்தை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

சில நேரம் நோன்பு காலம் கோடை காலமாக இருந்தால் மாணவர்கள்களைப் படையவும் வாய்ப்பு இருக்கிறது. அதையும் கவனத்திற்கொள்ள வேண்டியிருக்கிறது. பரீட்சார்த்தமாக இந்த விடயத்தை செய்து பார்ப்பதில் எவ்வித பிழைகளும் இல்லை. எல்லாமே உரிமை உரிமை என்று எதிர்த்துக் கொண்டு போய் எமது தலையில் நாமே மண்ணை வாரிப்போட்டுக் கொள்ள வேண்டிய தேவையில்லை. இது அளுநர் அசாத் சாலியின் கருத்து. இந்த விடயத்தில் நாம் அவரது கருத்தை எதிர்த்துத் தட்டி விடுவதை விட ஒரு குழு முன்னிறங்கி அவருக்கான வாய்ப்பை வழங்கி மேல் மாகாணத்தில் விஷேடமாக கொழும்பில் முஸ்லிம்களுக்கு பாடசாலைகள் இல்லாத பிரச்சினை உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஹமீட் அல் ஹுஸைனியில் மேன்முறையீட்டுச் சபைக்கு என்னைத் தலைவராக நியமித்திருந்தார்கள். அங்கு நிறையப் பெற்றோர் சிங்கள மொழி மூலம் கற்க வேண்டும் என்றும் அவர்களுடைய கலாசாரத்தை முஸ்லிம் பாடசாலைகளில் கற்க வேண்டும் என்றும் கூறினர்.

அதிகமானோருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என்று முறையிட்டனர். இந்த விடயத்தில் ஆளுனருக்கு ஒத்துழைப்பு வழங்கி அவரது மனதை வென்று அவர் மூலமாக பாடசாலைகள் இல்லாத இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கொண்டு வரப்பட வேண்டும். இருக்கின்ற பாடசாலைகளை வளப்படுத்தும் அதேநேரம் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது. உதாரணமாக கொலன்னாவை பகுதியில் சனத்தொகை அதிகரித்து ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு அங்கு பாடசாலையொன்றில்லை. எனவே இவரது காலப்பகுதியில் இந்த விடயத்தை நுணுக்கமாக அணுகி புதிதாக முஸ்லிம் பாடசாலைகளை உருவாக்க வேண்டியிருக்கிறது.

“இது ஆளுநரின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விடயம்”

அஷ்ஷெய்க் மன்சூர் (நளீமி) – அதிபர், அல் கஸ்ஸாலி மத்திய கல்லூரி, அட்டுளுகம, களுத்துறை.

இதுவொரு தேசிய கொள்கைத் திட்டம். இது விடயத்தில் ஆளுநர் ஒருவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அரசாங்கம் ஒருபோதும் இவ்விடயத்தில் கைவைக்கப் போவதில்லை. இது எவ்வகையிலும் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத அவருடைய அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விடயம். மத்திய அரசாங்க அமைச்சு தேசிய கொள்கைத் திட்டம் என்பதாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தேசிய கொள்கைத் திட்டமொன்றை ஒரு மாகாணத்திற்கு மாற்ற முடியாது. மாகாண ஆளுனருக்கும் இதை மாற்ற முடியாது. சாத்தியமானதொரு விடயம் என்றால் மாத்திரமே நாம் அதற்கு எதிரிடையொன்றை கொண்டு வர முடியும்.

பாடசாலை நிர்வாகத்துக்கான கொள்கைகளை வகுப்பது மத்திய அரசாங்கமாகும். சில போது தொழில்நுட்ப விடயங்களை மாற்ற முடியுமே அல்லாமல் மாகாண அமைச்சினால் தேசிய கொள்கைகளை மாற்றிவிட முடியாது. உதாரணமாக பாடத்திட்டத்தை எடுத்துக் கொள்வோம். அதைத் தீர்மானிப்பது மத்திய அரசாங்கம். அது விடயத்தில் மாகாணத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. அதுபோன்று பரீட்சை. பரீட்சைப் பத்திரங்களை தயாரிப்பதும் மத்திய அரசாங்கம். ஆசிரியர்களுக்கான நியமனங்களும் அவ்வாறுதான்.

இது முக்கியத்துவம் கொடுத்துப் பேசும் அளவுக்கு பெரிய விடயமொன்றல்ல. ரமழான் விடுமுறையில் பாடசாலை நடாத்துவதென்பது உண்மையில் கடினமான விடயம். உலகில் எங்காவது நாட்டில் நோன்பு விடுமுறையில் பாடசாலை நடாத்தப்படுமாக இருந்தால் அங்கும் பாடசாலை நடாத்தப்படக் கூடாதென்பதே எனது கருத்து. ரமழான் விடுமுறை என்பது எமக்கான சிறந்ததொரு வாய்ப்பு. இந்த மாதம் முழுவதையும் நாம் ஆன்மீக விடயங்களுக்காகப் பயன்படுத்துகிறோம். இதற்கான கூலியும் அல்லாஹ்விடத்தில் மிக அதிகம். நோன்பு கால விடுமுறை வழங்கப்படுவதால் பாடசாலை நடத்தப்படும் நாட்களிலோ பாடத்திட்டங்களை நடாத்தி முடிப்பதிலோ எவ்வித பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை.

“நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகள் இயங்குவது நல்லது”

ஷிஹானா அஸ்லம் – பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு – 12

நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகள் இயங்குவது நல்லது. ஏனெனில் எமது பாடசாலையில் மிக முக்கிய பிரச்சினையாக ஆசியர் பற்றாக்குறை நிலவுகிறது. தமிழ், சிங்கள ஆசிரியர்கள் ரமழான் விடுமுறை வித்தியாசத்தில் எமது பாடசாலைகளில் வந்து கடமையாற்ற விரும்புவதில்லை. அவர்களது பிள்ளைகள் விடுமுறையில் வீட்டில் இருக்கும் போது அவர்கள் இங்கு வந்து சேவைபுரிய விரும்புவதில்லை.

மேல் மாகாணத்தில் 2ஆம் தவணைப் பரீட்சைக்கு தமிழ், சிங்களப் பாடசாலைகளுக்கு கொடுக்கப்படுகின்ற வினாப் பத்திரங்களே எமக்கும் வழங்கப்படுகின்றது.  1 மாத கால விடுறைக்குப் பிறகு எல்லாவற்றையும் மறந்த நிலையிலேயே குறுகிய காலத்தில் கற்று பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள். நோன்பு விடுமுறையின் பின்னர் ஓரிரு வாரங்களில் 2ஆம் தவணை ஆரம்பிக்கிறது. இதனால் மாணவர்களுக்கு பாரிய அளவில் பாடத்திட்ட இடைவெளியொன்று ஏற்படுகிறது.

நோன்பு காலங்களில் பிள்ளைகள் வீட்டில் படிப்பதும் குறைவு. கொழும்பைப் பொறுத்தவரையில் நோன்பில் பிள்ளைகள் காலை 10 மணி வரையில் தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதனால் கல்விக்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கிறது. கொழும்பைப் பொறுத்தவரையில் கொழும்பிலுள்ள பிள்ளைகளுக்கு நோன்பு காலத்தில் பாடசாலைக்கு வருவது அவ்வளவு பெரிய பிரச்சினையாக அமையாது. வெளியிடப் பிள்ளைகளுக்கே பிரயாணம் செய்வதில் பிரச்சினையிருக்கும். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கடந்த காலப்பகுதியில் எட்டு மணி முதல் 12.30 வரை பாடசாலையை நடத்தினார்கள். ஆனால் கடந்த வருடம் அதை விட்டு விட்டார்கள். சவூதி அரேபியாவில் கூட நோன்புக்கு விடுமுறை கொடுப்பதில்லை. ஏனைய பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்ற விடுமுறை எங்களுக்கும் வழங்கப்படுமாயின் அதில் எமக்கு அதிக பிரயோசனங்களை அடைய முடிகிறது.

“சாதக பாதக நிலைகளை சமநிலைப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தால் நல்லது”

எம். இல்யாஸ் – உதவிக் கல்விப் பணிப்பாளர், தமிழ் மொழி மூலம் – களுத்துறை

இதில் சாதக பாதகங்கள் இரண்டும் உள்ளன. முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ், சிங்கள ஆசிரியர்களும் உள்ளனர். இது தவிர கல்விசாரா ஊழியர்களும் பணியாற்றுகிறார்கள். இந்தப் பிரச்சினையால் முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்ற விருப்பமில்லாத ஆசிரியர்களும் உள்ளனர். தமிழ், சிங்களப் பாடசாலைகளில் விடுமுறை வழங்கப்படும் நாட்களில் முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ்,  சிங்கள ஆசிரியர்களுக்கு ஒரு பயணம் செல்லவோ வீட்டில் பிள்ளைகளுடன் இருக்கவோ முடிவதில்லை. இப்படியான பிரச்சினையொன்று உள்ளது.

மறுபுறத்தில் நோன்பில் பாடசாலை இயங்குமாயின் எமது சமூகத்தில் பிள்ளைகள் நோன்பு காலங்களில் இரவு நேரங்களில் கேலிக்கை, விளையாட்டுக்களில் ஈடுபடுவது குறையும் என்றொரு அபிப்ராயம் உள்ளது. முஸ்லிம்களுக்கான நோன்புகால விடுமுறை என்பது எமது மூதாதையர்கள் பெற்றுத்தந்த உரிமை. நோன்பு மாதத்தில் பாடசாலை நடத்தப்பட்டால் அந்த உரிமையை நாம் விட்டுக்கொடுப்பதற்கு சமனாகிறது. எனது கருத்தின் படி, நோன்பு காலங்களில் பாடசாலை நடாத்தப்பட்டால் நிறைய மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க மாட்டார்கள். பாடசாலைக்குச் சென்று வந்து தூங்குவதால் அமல் இபாதத்களில் உரிய முறையில் ஈடுபாடு  கொள்ள முடியாமல் போகின்றது. ஆளுநர் சிங்கள பாடசாலைகளை மையமாக வைத்து இந்தக் கருத்தை கூறியிருப்பார். ஆனால் இரண்டு பக்கத்தை சமநிலைப் படுத்தும் வகையில் ஏதாவதொரு வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறந்தது.

About the author

Administrator

Leave a Comment