இலங்கையின் விளையாட்டுத் துறையில் சாதனை வருடம்: 2018

0
2

இலங்கையின் விளையாட்டுத் துறையில் 2018 ஆம் ஆண்டு பல சாதனைகளையும் வெற்றிகளையும் ஈட்டிய ஆண்டாக அமைந்திருந்தது. தேசிய, சர்வதேசப் போட்டிகளில் அதிகமான பதக்கங்களை வென்ற ஆண்டாகவும் 2018 பதிவாகியது.

அவஸ்திரேலியாவில் நடைபெற்ற 2018 கோல்ட் கோஸ்ட் பொதுநலவாய நாடுகள் போட்டியில் இலங்கை 05 வெண்கலப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது. ஆண்களுக்கான 69 கிலோ கிராம் பாரம் தூக்கல் போட்டியிலேயே இலங்கை வெள்ளிப்பதக்கம் வென்றது. இலங்கையின் 4×100 மீட்டர் அஞ்சலோட்ட அணி பதக்கங்களை வெல்ல முடியவில்லை என்றாலும், 39.08 செக்கனில் போட்டியை முடித்து 06 ஆவது இடத்துக்கு வந்து சாதனை படைத்தது. 39.38 செக்கனே இதற்கு முன்னர் இருந்த சாதனையாகும். இது 2015 இல் நிகழ்த்தப்பட்டிருந்தது.

03 வது தெற்காசிய இளையோர் சம்பியன்ஷிப் போட்டிகளில் (SAJAC) இலங்கை இந்தியாவுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதில் 12 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்களுடன் இலங்கை 41 பதக்கங்களை வென்றது. இந்தப் போட்டிகளில் 08 புதிய சாதனைகளை இலங்கை வீரர்கள் நிலைநாட்டினர்.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய இளையோர் சம்பியன்ஷிப் போட்டிகளில் (AJAC) இலங்கை வீரர்கள் 09 பதக்கங்களை வென்றனர். 03 தங்கம், 04 வெள்ளி, 02 வெண்கலம் என்ற அடிப்படையில் இந்தப் பதக்கங்கள் வெல்லப்பட்டன. ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய அருண தர்ஷன, 45.79 செக்கனில் ஓட்டத்தை முடித்து புதிய ஆசிய சாதனை படைத்தார்.

20 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கிடையிலான உலக IAAF  சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கையின் 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டி வீரர்கள் சாதனை படைத்தனர். பின்லாந்தில் நடந்த இந்தப் போட்டிகளில், உலக அளவிலான சம்பியன்ஷிப் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இதன் மூலம் இலங்கை பெற்றது. குறித்த போட்டிகளில் ஆசிய அளவில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான ஒரே அணியாக இலங்கை பெயர் பெற்றது.

இந்தோனேஷியாவில் நடைபெற்ற 18 ஆவது ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகள் இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 172 வீரர்களும் 72 அதிகாரிகளும் இந்தோனேஷியா சென்ற போதும் இலங்கை பதக்கங்கள் ஏதுமின்றி வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருந்தது. இலங்கையின் 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டி வீரர்கள் நிகழ்த்தியிருந்த தேசிய சாதனையையும் விட 0.03 செக்கன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியினர் இந்தப் போட்டிகளில் 04 ஆம் இடத்தைப் பெற்றனர்.

பாரமி வஸந்தி மரிஸ்டெல்லா இலங்கைக்காக சர்வதேச விருதொன்றைப் பெற்றுக் கொடுத்து சாதனை புரிந்தார்.  2007 உலக IAAF சம்பியன்ஷிப் போட்டிகளில் சுசந்திகா ஜயசிங்க பெற்ற வெண்கலப் பதக்கத்துக்கு அடுத்ததாகப் பெறப்பட்ட சர்வதேச தரத்திலான விருதாக இது கணிக்கப்படுகிறது. 17 வயதான பாரமி, 2000 மீட்டர் தடைதாண்டி ஓட்டப் போட்டியிலேயே தனது வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இந்த வருடத்தின் முதலாவது விளையாட்டுப் போட்டியாக 3 ஆவது ஆசிய இளையோர் சம்பியன்ஷிப் போட்டிகள் மார்ச் 15 முதல் 17 வரை ஹொங்கொங்கில் நடக்கவிருக்கின்றன. இலங்கை சார்பில் 12 பேர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here